Wednesday 24 June 2009

இரு வாசகங்கள்

கடந்த சில வருடங்களில் என்னை மிகவும் பாதித்த அல்லது நான் நேசிக்கும் அல்லது நான் மிகவும் நம்புமும் இரு வாசகங்கள் பற்றி இந்த பதிவு. இந்த வாசகங்களுக்கு தத்துவத்துக்கு உரிய பண்புகள் இருக்கிறதா என்று தெரியவில்லை அதனால் இவைகளை நான் வாசகங்கள் என்றே குறிபிடுகிறேன்.

வாசகம் #1: "வாழ்கையில் கடைசி வரைக்கும் வேலை தேடியதாக யாரும் கிடையாது".
நான் படித்த கல்லூரியில் நாங்கள் தான் முதல் செட், எங்களுக்கு சீனியர் யாரும் இல்லை ஆகவே பல விஷயங்கள் நாங்களே செய்ய வேண்டியது இருந்தது. கல்லூரியின் கடைசி வருடத்தில் இருக்கும் போது வேலை தேடுவது குறித்து சில பல பயங்கள் இருந்தன, இந்நிலையில் என் அப்பா அவரின் நபரின் மகனை சந்திக்குமாறும் அவரிடம் என் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். நானும் விடுமுறையில் வீடு வந்திருந்த ஒரு ஞாயிற்று கிழமை அவரை சந்திக்க ஈரோடு சென்றேன். சரவணன் அவர் பெயர். அப்பாவின் நண்பர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா வந்து என்னை அழைத்து சென்றார். அவரின் இளைய மகன் செந்தில்நாதன் எங்கள் கல்லூரியில் தான் படித்து கொண்டிருந்தான். நான் சந்திக்க சென்ற சமயத்தில் சரவணன் அவர்கள் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு அவர்கள் கல்லூரி வளாக தேர்வில் வெற்றி பெற்று tcsஇல் வேலைக்கு தேர்வகியிருந்தார். ஆகவே அவரை சந்தித்தால் வேலை தேடுவதற்கு சிறு வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

அவர் என்னிடம் எந்த கம்ப ரகசியமும் சொல்லவில்லை, வேலை வாய்ப்பு தேர்வுக்கு எந்த புத்தகம் படிக்க வேண்டும் மற்றும் எந்த மாதிரி நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதெல்லாம் கூறிவிட்டு அவர் கடைசியாக கூறியதுதான் நான் மேல குறிபிட்ட வாசகம் #1. என்னை கொஞ்சம் அல்ல நிறையவே யோசிக்க வைத்தது. வீட்டுக்கு வந்து நான் யோசித்து பார்த்ததில் எனக்கு தெரிந்த யாரும் கடைசி வரை வேலை தேடியதாக தெரியவில்லை. எனக்கும் வேலை கிடைக்கும் என்று கொஞ்சம் தீவிரமாக நம்ப தொடங்கிய நாளது.பிறகு நான் கல்லூரி முடித்து ஒரு நம்பிக்கையுடன் வேலை தேட ஆரம்பித்தேன். பெங்களுருவில் மூன்று மாத தேடலுக்கு பிறகு சென்னை HCLஇல வேலை கிடைத்தது. நான் வேலை தேடிய அந்த மூன்று மாதமும் எனக்கு நம்பிக்கை அளித்த வாசகம் இது.நான் வெற்றிகரமாக வேலை தேட எனக்கு உதவிய வாசகம் இது. இப்போது வேலை தேடும் நண்பர்களுக்கு நான் நினைவில் வைத்துகொள்ள சொல்லும் வாசகம் இது.
அன்று நாங்கள் வேலை தேடல் பற்றி பேசியது மதிய உணவு வரைக்கும் தான், பிறகு நடந்தது அடுத்த பத்தியில்.

வாசகம் #2: "இவ்வுலகில் அடுத்த வினாடியில் ஒளித்து வைக்கப்படிருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம்."
இந்த வாசகத்துக்கு சொந்தகாரர் பத்திரிக்கையாளர் மதன், ஆம் அன்பே சிவம் திரை படத்தில் வரும் வசனம் இது. அன்பே சிவம் திரைப்படம் விரும்பி பார்த்தவர்களுக்கு இந்த வாசகம் கண்டிப்பாக நினைவில் இருக்கும். இந்த படம் பார்த்தது முதல் என் மனதில் இருக்கும் வாசகம் இது. மேல குறிப்பிட்ட சரவணன் அண்ணாவின் சந்திப்பின் மதிய உணவுக்கு பிறகு நடந்தது இது தான் நான் அவர்கள் வீட்டில் அன்பே சிவம் பார்த்தது.அந்த படம் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது நான் மிகவும் ரசித்து பார்த்த படம் அது. நான் வேலை தேடும் போதும் அதற்கு பிறகும் பல் வேறு சூழ்நிலைகளில் என்னை பாதித்தது.நான் வேலை தேடும் போது என்னை உற்சாகமாக இருக்க வாய்த்த இன்னொரு வாசகம் இது. நமக்கு வேலை கிடைத்த அடுத்த வினாடியில் நம் வாழ்க்கை மாறுகிறது இது மாதிரி நம் வாழ்கையில் பல விஷயங்கள் ஒரு வினாடியில் தீர்மானிக்கப்படுகின்றன அல்லது மாறுகின்றன.

ஒரு புத்தகத்தை வாசிப்பதை போன்றது வாழ்க்கை ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு நாள் மாதிரி. அடுத்த என்ன என்று தெரியாதவரை தான் ஒரு புத்தகம் சுவரஸ்யமாக இருக்கும் அது போல அடுத்து வினாடியில் என்ன நடக்கும் என்று தெரியாததனால் வாழ்கை ஓரளவுக்கு சுவரஸ்யமாக இருக்கிறது.இந்த பத்து வருடங்களில் தகவல் தொடர்பு எவ்வளவோ வளர்ந்துவிட்டது அதனால் நமக்கு பல நன்மைகள் எனறாலும் அதனால் நம் வாழ்வின் சிறு சிறு எதிர்பார்ப்புகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சில வருஷங்களுக்கு முன்பு வரை பொங்கல் வாழ்த்து அனுப்புவதும் பெறுவதும் வழக்கமாக இருந்தது ஆனால் இன்று அது ஒரு குருஞ்ச்செய்தியிலோ அல்லது ஒரு தொலைபேசி அழைப்பிலோ முடிந்து விடுகிறது. இப்பவெல்லாம் யாரும் உறவு முறைகள் வீட்டிற்கு அவ்வளவாக செல்வதில்லை. இப்பவெல்லாம் யாருக்காவது உறவினர்களிடம் இருந்து கடிதம் வருகிறதா என்று தெரியவில்லை. எங்கள் வீட்டுக்கு கடிதம் வருவது நின்று பல வருடம் ஆகிறது. எனக்கு தெரிஞ்சு எங்களுக்கு வருடா வருடம் வந்து கொண்டிருந்த ஒரே கடிதம் என் அப்பாவின் ஊரான பள்ளக்காட்டூர் கோவில் திருவிழாவுக்கான அழைப்பு மட்டுமே. கடிதங்கள் தந்த எதிர்பார்ப்பு மற்றும் ஆச்சர்யங்கள் ஏனோ குருஞ்ச்செய்தியிலோ மின்னலஞ்சளிலோ கிடைப்பதில்லை.

இத்தனைக்கும் நடுவில் நம் வாழ்க்கையில் கொஞ்சமாவது சுவாரஸ்யமும் ஆச்சரியமும் இருப்பதற்கு காரணம் "இவ்வுலகில் அடுத்த வினாடியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஆச்சரியங்களே".

Tuesday 16 June 2009

அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு பார்வை

சமீபத்தில் நான் படித்த நாவல் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு. 1976ல் எழுதப்பட்ட இந்த நாவல் 1977 ஆம் ஆண்டுக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றிருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு பல சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த நம் நாடு சர்தார் வல்லபாய் பட்டேல் போற்றவர்களின் முயற்சியில் ஒன்றிணைத்து தற்போதைய இந்தியாவாக ஆனது. இந்த சமஸ்தான இணைப்புகளில் பெரும் சிரமும் கொடுத்தது ஹைதராபாத் நிஜாம் சமசதானமும் காஷ்மீர் ராஜாவும். சுதந்திரம் கிடைத்து சில மாதங்களக்கு பிறகே நிஜாம் சமஸ்தானம் நம் நாட்டுடன் இணைந்தது. சுதந்தரத்திற்கு பிறகும் நம் நாடுடன் இணைவதுற்கு முன்புமும் இருந்த ஒரு கலவர சூழலை இந்த நாவல் படம் பிடித்து காட்டுகிறது.

நிஜாம் சமஸ்தானத்தில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தை சுற்றி இந்த நாவல் பின்னப்பட்டிருக்கிறது. அவர்கள் வாயிலாக அன்றைய கலவர சூழலை காட்சிபடுதுகிறார் அசோகமித்திரன். அந்த தமிழ் குடும்பத்தின் இளைஞனான சந்திரசேகரனின் பார்வையில் இந்த நாவல் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது. சந்திரசேகரனின் கல்லூரியில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அவன் வெளியிடங்களில் சந்திக்கும் சம்பவங்கள் வாயிலாக அந்த சமயத்தின் சூழ்நிலையை விவரிக்கிறார் ஆசிரியர். அந்த சமயத்தில் நிஜாம் ராஜா இந்திய அரசுக்கு எதிராக செயல் பட முயற்சிப்பதும் பாகிஸ்தானும் ஜின்னாவும் உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் பிறகு இந்திய படையிடம் தோற்பதும் குறிபிடபட்டிருகிறது.
நாவல் ஆரம்பிக்கும் போது நிஜாம் ராஜாங்கத்தை சேர்ந்த ராஜக்கர்கள் ஹீரோவாக திரிவதும் பிறகு கொஞ்சம் கொஞ்சமா அவர்கள் கெத்து கொறைவதும் பிறகு அடங்கி போவதும் விவரிக்கப்பட்டிருக்கிறது. நாவலின் முடிவில் ராஜாகர்கள் மீது ஏனோ ஒரு பரிதாபம் ஏற்படுகிறது. மகாத்மா காந்தி இறந்து போகும் சமயத்தில் அதை உறுதி செய்து கொள்ள போது படும் பாடும் அது உறுதி என தெரிந்ததும் போது படும் வேதனையும் படிக்கும் போது நாமே அந்த வேதனையை உணரமுடிகிறது.

நாவலின் சந்திரசேகரனின் வாலிப ஆசையையும் அங்கங்கே பதிவுசெய்து இருக்கிறார் ஆசிரியர். ஆனால் என்னை பெரிதும் பாதித்தது அந்த முடிவு. சற்றும் எதிர்பாராத அந்த முடிவு என்னை வெகுவாக பாதித்தது அதுவே இந்த நாவல் என் நினைவில் இருந்து நீங்காமல் இருக்க காரணமாக இருக்கிறது.
இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு மத நல்லிணக்க விருதும் கன்னட மொழிபெயர்ப்புக்கு சாகித்திய அகடமி விருதும் பெற்றது.

தமிழ்நாட்டில் சந்தித்திராத இந்த சூழலை தமிழில் எத்தனை பேர் நூலாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, அந்த வகையில் இந்த நாவல் ஒரு வரலாற்று சான்றாக விளங்குகிறது. இந்த நாவலை படித்த முடித்த போது ஒரு சிறந்த நூலை படித்த உணர்வு ஏற்ப்பட்டது.