Wednesday, 23 September 2009

உன்னைப்போல் ஒருவன் - திரைப்பார்வை


ஒரு சாமான்யன் இந்நாட்டில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்த்து போராட நினைத்தால் என்ன நடக்கும்? அதுதான் உன்னைப்போல் ஒருவன். உன்னைப்போல் ஒருவன் பற்றி பல பதிவுகள் வந்திருந்தாலும், என் வலைப்பூவில் இத்திரைப்படம் பற்றி ஒரு பதிவிட வேண்டும் என்ற ஆசையிலே இந்த திரைப்பார்வை.

இந்த பதிவு வரும் சமயத்தில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கதை தெரிந்திருக்கும். ஒரு சாமான்யன் நாலு செல்போன் கொஞ்சம் புத்திசாலித்தனம் வைத்துக்கொண்டு காவல் துறை கமிசனரை ஆட்டிவிக்கிறார். சாமான்யனாக கமல், கமிஷனராக மோகன்லால்.
இந்தியில் வெளிவந்த இந்த படத்தை தமிழில் தயாரித்து நடித்தற்கே கமலுக்கு ஒரு ஷொட்டு. தமிழாக்கத்தில் எந்த பெரிய மாற்றமும் இல்லை, சின்ன சின்ன மாறுதல்களே, கடைசியில் தான் செய்ததற்கு கமல் சொல்லும் காரணம் தவிர (இந்தியில் ஷா வேறு காரணம் சொல்லுவார்).200 பேர் கொண்ட ஒரு தீவிரவாத கும்பல் 100 கோடி பேரை மிரட்டுகிறார்கள், நம்மை காப்பாற்றிக்கொள்ள ஒன்றும் செய்ய இயலாமல் இருக்கிறோம் என்ற கோபத்தையும் அதே சமயம் தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதம் தான் வழி என்றும் கூறுகிறது இத்திரைப்படம்.

கமல் இருக்கும் இடம் ஒரு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தின் மாடி, மோகன்லாலுக்கு ஒரு அறை அவ்வளவுதான். இந்த இரு இடங்களில் இருந்து கொண்டு இருவரும் காட்டும் நடிப்பும் பாடம், நடிப்பு ராட்சசர்கள். இளம் நடிகர்கள் பார்த்துக் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. அதுவும் கமலின் உடல் மொழியும், மோகன்லாலின் நடிப்பு அபாரம், அவர் பேசும் மலையாளம் கலந்த தமிழும் அழகு. நிருபராக வரும் அனுஜா நன்றாக நடித்திருக்கிறார்.இளம் காவல் அதிகாரிகளாக வரும் கணேஷும், பரத்தும் சிறப்பாக நடித்திருகின்றனர், அதிலும் கணேஷ் துடிப்பான காவல் அதிகாரியாக மிக சிறப்பாக செய்திருக்கிறார், வரும் காலங்களில் சரியான படம் தேர்வு செய்து நடித்தால் அவருக்கு சிறப்பான இடம் காத்திருக்கிறது. தலைமை செயலாளராக லக்ஷ்மி நடித்திருக்கிறார், எடிட்டர் இவருடைய க்ளோஸ்-அப் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். முதல்வர் பாத்திரத்திற்கு கலைஞர் குரலே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு.

இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கும் இசைஅமைப்பாளர் ஸ்ருதி, வசனகர்த்தா இரா.முருகன் (நானும் இவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்றோம்) , இயக்குனர் சக்ரி என்று அனைவரும் மிக சிறப்பாக செயல்பட்டிருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இப்படம் ஒரு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது. இப்படத்தின் வசனகர்த்தா இரா.முருகன், இலக்கிய உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார், அவருடைய இலக்கிய பணி வெள்ளித்திரையிலும் தொடர வாழ்த்துகள். வசனத்தில் பல இடங்களில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்த்திருக்கலாம், அதிலும் கமல் மோகன்லாலிடம் "binaryயா பதில் சொல்லு" என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக இருக்கிறது, மற்றபடி வசனம் சிறப்பாக இருந்தது. ஒளிப்பதிவாளரும் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் குறைகள் என்று பெரிதாக ஒன்றும் இல்லை, படம் சொல்ல வருவதை நாம் சரியாக புரிந்து கொள்ளும் வரை.

இதன் இந்தி படத்தை இதுவரை பார்கதவர்கள் தமிழில் பார்க்கும் போது இப்படம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். பல வலைப்பூக்களில் இந்த படத்தை பற்றி பல விவாதங்கள் நடக்கின்றன, இது Hindutuva சார்ந்த படமென்றும், Anti-Muslim படமென்றும் சிலர் பரப்புகிறார்கள், இன்னும் சிலர் ஒரு படி மேல போய் படத்தை விட்டுவிட்டு கமலை ஒரு பிடிபிடிகின்றனர். விவாதம் அந்த படத்தை சுற்றி இருக்கும் வரையில் அரோக்கியமனதே, அதை மீறும் போதுதான் அசிங்கமாக இருக்கிறது, குறிப்பாக ஒரு தனி மனிதனை தாக்குவது. அவர் எடுக்கும் படத்தை விமர்சிக்க மட்டுமே நமக்கு உரிமை உண்டு, அவரையல்ல. இந்த விவாதங்களையெல்லாம் படிக்காமல் (அப்படியே படித்தாலும் தலைகேற்றாமல்) இப்படத்தை பாருங்கள், அப்படி பார்க்கும் போது அந்த கட்டிடத்தின் உச்சியில் நிற்ப்பது கமல் அல்ல நம்மை போல் ஒரு ஒருவன் என்று நினைத்து பாருங்கள் இப்படம் சொல்ல வரும் நியாயங்கள் புரியும்.

Sunday, 13 September 2009

ஈரம் - திரைப்பார்வை


இயக்குனர் சங்கரின் அடுத்த தயாரிப்பு ஈரம். அவருடன் பணியாற்றிய உதவி இயக்குனர் அறிவழகன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். மிருகம் படத்தில் நடித்த ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். தன்னுடைய ஒவ்வொரு தயாரிப்பும் எதாவது ஒரு வகையில் புதுமையாக அல்லது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக சங்கர் இருப்பார் போல, அந்த வகையில் ஈரம் படமும் ஒரு புதுமையான அனுபவம் கொடுக்கிறது. சங்கர் தயாரிப்பு என்பதால் கொஞ்சம் எதிர்ப்பபுடன் படத்துக்கு சென்றேன், படம் சிறப்பாக இருந்தது. தமிழில் திரில்லர் வகை படங்கள் மிக குறைவு, அந்த குறையை போக்க வைத்திருக்கிறது ஈரம்.

பெரிய அப்பார்ட்மென்டில் ஒரு பெண்ணின் மரணம் நிகழ்கிறது, அதை விசாரிக்கும் காவல் துறை, கிடைக்கும் ஆதாரங்களை வைத்து அது ஒரு தற்கொலை என்று வழக்கை மூட நினைக்கையில், ACP வாசுதேவன் அந்த வழக்கில் சில மர்மங்கள் இருப்பதாக தோன்றுவதால் தானே அந்த வழக்கை மேலும் விசாரிக்க விரும்புவதாக கூறி, அந்த வழக்கு விசாரணையை தொடங்குகிறார். இந்த வழக்கை விசாரிக்க அவர் ஆர்வம் காட்ட முக்கிய காரணம் இறந்த பெண்ணும் இவரும் பழைய காதலர்கள். முதல் கட்ட விசாரணையில் அந்த மரணம் ஒரு தற்கொலை போலவே தோன்றுகிறது, அந்த சமயத்தில் அடுத்தடுத்து அந்த அப்பார்ட்மென்டில் வசிக்கும் இருவர் இறக்க, விசாரணை சூடு பிடிக்கிறது. நான்காவதாக நடக்கும் கொலையை நேரில் பார்க்கும் ACPயால் அந்த கொலைகாரனை பிடிக்க முடியாமல் போகிறது. இடைவேளைக்குப் பிறகு இந்த தொடர் கொலைகளுக்கான காரணங்கள் தெரிய வரும் போது சில ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் காத்திருக்கிறது.

ACPயாக ஆதி, பிசினஸ் மேனாக நந்தா, அவர் மனைவியாக சிந்து நடித்திருக்கிறார்கள். ஒரு காவல் அதிகாரிக்கான கம்பீரம் மற்றும் மிடுக்குடன் குறையுமில்லாமல் மிகையுமில்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் ஆதி, நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் அவருக்கு சிறப்பான இடம் காத்திருக்கிறது, வாழ்த்துக்கள் ஆதி. கல்லூரி மாணவியாகவும், பின்னர் மனைவியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் சிந்து. நந்தாவும் தன் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். சரண்யா மோகன், ஸ்ரீ நாத் என்று துணை பாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று மிக சிறப்பாக நடித்திருக்கும் மற்றொரு நடிகர் தண்ணீர்.

படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஈரமாக இருக்கிறது, தண்ணீர் இடம் பெறாத காட்சிகள் மிக குறைவு. இந்த காட்சிகள் எதுவும் திணிக்கப்படாமல் இயல்பாக வந்து போகிறது. படத்தில் எனக்கு பிடித்த மற்றொரு அம்சம் பாடல், ஒரே ஒரு பாடல் தான் அதுவும் காட்சிகளுக்கு பின்னணியில் ஒலிக்கிறது, மழையே! மழையே! என்ற அந்த பாடல் சிறப்பாக இருந்தது. படத்திற்கு இசை தமன், பாய்ஸ் படம் பார்த்தீர்களா? அதில் குண்டாக வருவரே, அவரேதான். இசை நன்றாக இருந்தது, ஒரு திர்ல்லர் படத்திற்க்கான இசையை சிறப்பாக அமைத்திருக்கிறார் தமன், அவருக்கு ஒரு பூங்கொத்து. முதல் பாதியில் கொலை விசாரணயின் போது நடு நடுவே ஆதி சிந்து காதல் காட்சிகள் வந்து போகின்றன, இந்த காட்சிகளில் எடிட்டிங் சிறப்பாக இருந்தது. கேமரா மழையில் நனைந்தது போல் ஈரமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமகம்சா, காட்சிகள் அணைத்தும் அழகு + திரில், இவருக்கும் ஒரு பூங்கொத்து. மேல் குறிப்பிட்ட அனைத்தும் படத்திற்கு பக்க(கா) பலமாக அமைந்திருக்கிறது. இத்தனையும் சிறப்பாக அமைய முக்கிய காரணம் இயக்குனர் அறிவழகன், தன் குருவிடம் சிறப்பாக பாடம் பயின்று வந்திருக்கிறார், சங்கரின் எந்த சாயலும் தெரியாமல் ஒரு புதுவிதமான அனுபவமாக இந்த படத்தை இயகியிருகிறார். மனதில் ஈரமில்லாதவர்களை பற்றிய இப்படத்திற்கு ஈரம் என்ற தலைப்பிட்டதற்கு ஒரு பூங்கொத்து, . திரில்லர் படம் என்பதற்காக திடீர் இசை, க்ளோஸ் அப் சாட், கதாபாத்திரங்கள் அனைவரையும் திகிலாக பேசவைப்பது என்றில்லாமல் சிறப்பான திரைக்கதை அமைத்து திகிலூட்டியிருகிருக்கும் இயக்குனர்அறிவழகனுக்கு ஒரு பொக்கே.இந்த படத்தின் மூலம் நம்பிக்கையான இயக்குனர் என்று பெயர் பெற்றுவிடுவீர்கள், இனி எடுக்க போகும் படங்களும் இதே போல் அல்லது இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். தொடர்ந்து தனது தயாரிப்பில் புதுமையையும், புதியவர்களையும் அறிமுகப்படுத்தி சிறந்த தயாரிப்பாளராக வெற்றிநடை போடும் இயக்குனர் சங்கருக்கும் ஒரு பொக்கே.

இந்த வருடத்தின் சிறந்த படங்கள் வரிசையில் ஈரம் படத்திற்கும், சிறந்த இயக்குனர் வரிசையில் அறிவழகனுக்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு. இந்த விமர்சனம் எழுதிகொண்டிருக்கும் போது என் வீட்டு குளியல் அறையின் கதவிடுக்கிளிரிந்து ஈரம் கசிந்து கொண்டிருக்கிறது, அது போல் நம் மனங்களிலும் ஈரம் கசியட்டும்.

Thursday, 10 September 2009

எனது கிறுக்கல்கள்

கவிதை எழுதுவது என்பது பலருக்கும் பிடித்த விசயமாக இருக்கிறது, எனக்கும். முதல் கவிதை முயற்சி எனது பத்தாவது வகுப்பில் நடந்தது. எங்கள் பள்ளியில் கையெழுத்து புத்தகம் ஒன்று தொடங்கப்பட்டது, பெயர் candour. அதில் மாணவர்கள் தங்கள் இஷ்டப்பட்டத்தை எழுதினார்கள். நானும் அதில் எழுத ஆசைப்பட்டேன் விளைவு கவிதை எழுத ஆரம்பித்தேன். நான் எழுதுவதை யாராவது படித்து திருத்தி பின்னர் அது இதழில் வரும். அந்த இதழ் சில மாதங்களில் நிறுத்தப்பட்டது, நான் எழுதியதாலா? என்று தெரியவில்லை. எத்தனை கவிதைகள் எழுதினேன் என்று சரியாக நினைவில் இல்லை, ஒரு கவிதை இயேசு பற்றியும் மற்றொன்று பொங்கல் திருநாள் பற்றியும் எழுதியது நினைவில் இருக்கிறது. பிறகொரு முறை ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர் மாணவர்கள் பற்றி ஒரு கவிதை எழுதி வாசித்தேன். இந்த எல்லா முயற்சிக்கும் பாராட்டு கிடைத்தது. பிறகு கல்லூரியில் பெரிதாக எதுவும் எழுதவில்லை, கடைசித் தேர்வுக்கு முன் ஒரு கவிதை எழுதினேன், யாருக்கும் படிக்க கொடுத்தாக நினைவில் இல்லை.

வேலை கிடைத்த பிறகு புத்தகங்களின் மீது காதல் கொண்டேன், படிக்க ஆரம்பித்தேன், பிறகு தான் நான் இதுநாள் வரையில் எழுதியதெல்லாம் கவிதை இல்லை என்று. இனி மேல் கவிதை என்கிற பெயரில் யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்று சில ஆண்டுகள் எதுவும் எழுதவில்லை. இப்போது இந்த வலைப்பூவில் அதையும் எழுதிப்பாப்போம் என்று தோன்றியதால் உதயமானது எனது கிறுக்கல்கள். கிறுக்கல்கள் என்ற பெயரில் நடிகர் பார்த்திபன் ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார், நான் வேலைக்கு சேர்ந்து முதலில் வாங்கிய புத்தகம் அது. கிறுக்கல்கள் என்ற தலைப்பில் இதை வெளியிட கொஞ்சம் தயக்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது, ஆனாலும் அந்த பெயரிலேயே எழுதுகிறேன். திரு. பார்த்திபன் என்னை மன்னிப்பாராக. கிறுக்கல்கள் என்றவுடன் என் நினைவில் வருவது எங்கள் டியூஷன் இயற்பியல் ஆசிரியர் கூறுவது "நாமெல்லாம் கிறுக்கனுகட கிறுக்கிகிட்டே இருக்கணும் அப்பத்தான் நல்லா படிப்போம்" என்பார்.

எனக்கு தோன்றும் எண்ணங்களை மடித்து ஒடித்து ஒரு கவிதை வடிவில், குறித்து கொள்ளுங்கள் "கவிதை வடிவில்" எழுதுவேன் அவ்வளவுதான். நான் இங்கே எழுதப்போவதை கவிதை என்கிற நோக்கில் அணுக வேண்டாம் உங்களுக்கு பிடித்திருந்தால் ரசியுங்கள், இல்லையெனில் பொறுத்துக்கொள்ளுங்கள் . நான் எழுதுவதில் தப்பி தவறி எதாவது ஒன்று கவிதையாகவோ அல்லது அதற்கு அருகாமையிலோ வந்தால் மகிழ்ச்சியே. இந்த முயற்சியின் முன்னேற்றத்திற்கு உங்கள் பின்னூட்டங்கள் பெரிதாக உதவும், அகவே உங்கள் கருத்துக்களை அதில் தெரிவிக்கலாம்.

கிறுக்கல் - 1அழும் குழந்தை
உறங்கும் அம்மா
தாலாட்டும் ரயில்

கிறுக்கல் - 2


அழகான வாயில்
பிரமாண்டமான மதில்
கம்பீரமான கோட்டை
அதை சுற்றி அகண்ட அகழி
அதில் படகு பயணம்
பத்து ரூபாய்

Thursday, 3 September 2009

கிளிஞ்சல் 4 - ஆசிரியர் ராஜேந்திரன்

ஆசிரியர்கள், இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் கூட சிலர் இருக்கிறார்கள் ஆனால் ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப குறைவு, படிக்காதவர்களுக்கு கூட அவர்கள் செய்யும் தொழில் சம்பந்தமான ஆசிரியர்கள் இருப்பார்கள். இதுவரையான என் பயணத்தில் பல ஆசிரியர்களை கடந்து வந்திருக்கிறேன், அதில் எனக்கு பிடித்த ஆசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள். ஐந்தாவது வரை படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர், கணக்கு வாத்தியார் பரமேஸ்வரன், சரஸ்வதி மேடம், தமிழன்னை, விலங்கியல் ஆசிரியர் அர்த்தநாரி, வேதியியல் ஆசிரியர் சரவணன், டியூஷன் வேதியியல் ஆசிரியர் ராஜேந்திரன், கல்லூரி விரிவுரையாளர்கள் மகாலிங்கம், மகேஷ் மற்றும் குமார் போன்றோர்கள் மறக்க முடியாத ஆசிரியர்கள். இந்த வரிசையில் நான் புத்தகம் படிக்கவும், வலைப்பூவில் எழுதவும் ஆர்வத்தை தூண்டியவர் என்கிற முறையில் திரு. சுஜாதாவும் என் ஆசிரியரே. மேலே குறிப்பிட்ட பல ஆசிரியர்களையும் விட்டு நான் விலகி விட்டேன், ஒரு சிலருடன் தான் தொடர்பு இருக்கிறது. என்னுடைய ஆறாவது வகுப்பு முதல் இன்று வரை நான் விலகாமல் இருக்கும் ஒரே ஆசிரியர் என்னுடைய இயற்பியல் ஆசிரியர் திரு. ராஜேந்திரன், இந்த வார கிளிஞ்சல்.

நான் ஐந்தாவது வரை கவுந்தப்பாடி காந்தி கல்வி நிலையத்தில் படித்தேன், ஆறாவது முதல் பள்ளி மாற வேண்டிய நிலை, நான் ஆங்கில வழிக்கல்வியில் தான் படிப்பேன் என்று அடம் பண்ணியதால் நான் பெருந்துறை விவேகானந்த matriculation பள்ளியில் சேர்க்கப்பட்டேன், எங்கள் வீட்டிலிருந்து 15 கீ.மீ. தொலைவில் அமைந்திருந்தது இப்பள்ளி. நான் சேர்ந்ததில் இருந்த பள்ளி படிப்பை முடிக்கும் வரை இப்பள்ளியில் இருந்த ஆசிரியர்களில் ராஜேந்திரன் ஆசிரியரும் ஒருவர், இயற்பியல் ஆசிரியர். நான் படிப்பில் ஏழாவது வரை சுமார் தான், எட்டாவதில் இருந்துதான் ஓரளவு நன்றாக படித்தேன். ஆறு, ஏழு வகுப்புகளில் ஒரு ஆசிரியர் மாணவனாக தான் பழகினோம், எட்டவதில் இருந்து எங்கள் பிணைப்பு கொஞ்சம் அதிகமானது, நான் படிப்பில் சுமார் என்பதாலோ என்னவோ ஏழாவது வரை கொஞ்சம் பயத்துடன் ஆசிரியர்களை பார்த்துவந்தேன், எட்டவதில் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை எனக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது, கொஞ்சம் அக்கறையுடன், நேசத்துடன் என் படிப்பை அணுகினேன், கொஞ்சம் படிக்கவும் செய்தேன், அதனால் ஆசிரியர்களும் நண்பர்களாக தெரிந்தனர். முதல் ரேங்க் வாங்கவில்லை என்றாலும் நான்காவது ஐந்தாவது ரேங்க் வாங்கும் அளவுக்கு படித்தேன். எட்டவதில் இருந்து ஆசிரியர்களுடன் நன்றாக பழக ஆரம்பித்தேன் குறிப்பாக ராஜேந்திரன் ஆசிரியருடன்.

நான் காலை ஏழு மணி 17ஆம் என் பேருந்தில் பள்ளிக்கு செல்வேன், நான் ஏறும் நிறுத்தத்தில் இருந்து 15 நிமிடத்தில் வரும் கருங்கரடு நிறுத்தத்தில் ஆசிரியர் ஏறுவார், நான் ஏறும்போது எப்படியும் அமர்வதற்கு இடம் இருக்கும் அவர் ஏறும் போது எப்போதும் இடம் இருக்காது. நான் பேருந்தில் ஏறிய சில நிமிடங்களில் தூங்க ஆரம்பித்துவிடுவேன் நான் இறங்கும் நிறுத்தத்தில் தான் விழிப்பேன். அந்த நிறுத்தத்தில் இருந்து பள்ளிக்கு 10 நிமிடம் நடக்க வேண்டும், நானும் அவரும் பேசிக்கொண்டே நடந்து செல்வோம். ஆசிரியர் நல்ல உயரம், அவர் வேகமாக நடப்பார் நானும் அவருக்கு இணையாக நடக்க முயற்சிப்பேன், சில நாட்கள் நான் கிட்ட தட்ட ஓடுவேன். இந்த நடை பயணத்தின் போது நாங்கள் பொதுவாக விளையாட்டு சம்பந்தமாக எதாவது பேசுவோம், குறிப்பாக கிரிக்கெட் அல்லது டென்னிஸ். கிரிக்கெட் அவருக்கு மிகவும் பிடிக்கும். விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார், பூ பந்து, கிரிக்கெட் விளையாட்டுகளில் எங்களுடன் விளையாடியிருக்கிறார்.பள்ளி முடிந்த பிறகு மாலை வேளைகளில் அவர் பெரும்பாலும் பூ பந்து விளையாடுவார்.

எட்டாவதில் முதல் மாதத்துக்கு பிறகு அவர் மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஆனார். முதல் மாதம் terror. எட்டாவதில் முதல் பாடம் Vernier caliper நடத்தும் போது வகுப்பில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அனைவரும் அடி வாங்கினோம், அதன் பிறகு இரண்டாவது பாடம் நடத்தும் போது What is mass? என்ற கேள்விக்கு பயந்துகொண்டு நான் கூறிய பதில் அவர் காதில் விழுந்ததா இல்லையோ தெரியவில்லை அவர் இடது கையால் விட்ட அறை இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு அவரிடம் நான் அடிவாங்கவில்லை, சமத்து மாணவனாகிவிட்டேன். ஒன்பதாவது வரைக்கும் எங்களுக்கு பாடம் எடுத்தார், பள்ளியில் +1, +2 ஆரம்பித்த பிறகு அவர் அவர்களுக்கு பாடம் நடத்த போய்விட்டதால், பத்தாவதுக்கு மட்டும் ஆனந்த் என்ற ஆசிரியர் எங்களுக்கு இயற்பியல் பாடம் நடத்தினார். ராஜேந்திரன் சார் நன்றாக பாடம் நடத்துவார், அவர் பாடம் நடத்தியதில் புரியாதது என்று எதுவும் இருக்காது, வகுப்பில் புரியவில்லை என்று தனியாக கேட்டாலும் அழகாக சொல்லித்தருவார். அரைகுறையாக, அவசரமாக பாடம் நடத்துவதெல்லாம் இருக்காது, நிதானமாக ஆழமாக நடத்துவார். +2 படிக்கும் போது இயற்பியலை என் விருப்பாடமாக கருதியதற்கு முக்கிய காரணம் அவர் தான்.

என் படிப்பின் மேல் கொஞ்சம் தனி கவனம் செலுத்தினார் அவர், காரணம் என் அப்பா. அவர்கள் எப்படி அறிமுகமாகிகொன்டார்கள் என்று நினைவில் இல்லை, ஆனால் இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது, இருக்கிறது. அப்பா என் படிப்பை பற்றி அவரிடம் விசாரிப்பது உண்டு, ஆசிரியரும் நான் நன்றாக படிப்பதாகவும், நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவேன் என்றும் கூறுவார். சில சமயங்களில் அப்பா என்னை வீட்டிற்கு அழைத்து செல்லும் போது ஆசிரியரும் எங்களுடன் வருவார். என் படிப்பை தவிர அவர்கள் விவசாயம் குறித்தும் பேசிக்கொள்வதுண்டு. நான் +2 படிக்கும் போது "நீ நல்ல மார்க்கு வாங்க வேண்டும் அண்ணாமலை, உங்கப்பா உன்மேல நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்" என்று கூறுவார், நான் படித்தற்கு இதெல்லாம் எதோ ஒரு வகையில் மறைமுக காரணமாக இருந்திருக்கலாம். +2 இயற்பியல் பாடத் தேர்வு முடிந்தன்று நான் வீட்டிற்கு செல்ல அண்ணாசாலை நிறுத்தத்தில் நின்றுகொண்டிருதேன் அப்போது சற்று தள்ளி நின்றிருந்த ஆசிரியர் "பரீட்சை நல்ல எழுதியிருக்கிற இல்ல? 185 மார்க்காவது வாங்கணும் அண்ணாமலை, இல்லாட்டி உங்கப்பா மூஞ்சியில முழிக்க முடியாது" என்றார் நான் "கண்டிப்பா நல்ல மார்க் வாங்குவேன் சார்" என்றேன். இந்த காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது, சொன்னபடியே நல்ல மார்க் வாங்கினேன்.

நான் பள்ளியை விட்டு வந்த ஒன்றிரண்டு வருடங்களில் ராஜேந்திரன் சார், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிவிட்டார். நான் பள்ளி படிப்பு முடித்து கல்லூரி சேர்ந்த பின்னரும், வருடம் ஒரு முறையாவது பள்ளிக்கு செல்வதுண்டு, அங்கிருக்கும் என் ஆசிரியர்களிடம் பேசிவிட்டு வருவதுண்டு, அதே போல் அவரையும் தலைமை ஆசிரியர் அறையில் சந்தித்து பேசிவிட்டு வருவதுண்டு. எனக்கு பாடம் நடத்திய பலர் இன்று அந்தப்பள்ளியில் இல்லை அவர்களில் சிலருக்கு அரசு வேலை கிடைத்து, சிலர் வேறு பள்ளிகளுக்கு மாறிவிட்டனர். ராஜேந்திரன் சாரும் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்துவிட்டார். நான் ஒரு முறை அமெரிக்காவிலிருந்து அவரைத் தொலைபேசியில் அழைத்து பேசியிருந்தேன். பிறகொருமுறை சந்திக்கும் போது அந்த தொலைப்பேசி அழைப்பை குறிப்பிட்டு, தன்னுடைய மாணவன் ஒருவன் வளர்ந்து அமெரிக்காவிலிருந்து தனக்கு தொலைப்பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். என் வளர்ச்சியில் முக்கியப்பங்கு அவருக்கு இருக்கிறது அப்படிப்பட்ட ஆசிரியருக்கு என்னுடைய வணக்கங்களை எதாவது ஒரு முறையில் சொல்லிக்கொண்டிருகிறேன். நாங்கள் இப்போதும் சந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் தான் இருக்கிறோம். இன்று காலை கூட அவரை அழைத்து ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினேன். ஒரு வருடம் இடைவெளி விட்டு தொலைப்பேசினாலும், சந்தித்து கொண்டாலும் எந்த தயக்கமும் இன்றி கடந்த முறை சந்திப்பில் விட்ட இடத்தில இருந்து பேச முடிவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆசிரியர் என்பதைவிட அவரை ஒரு நண்பராகவே கருதுகிறேன்.

நான் இதுவரை என் வாழ்வில் அடைந்த முன்னேற்றத்தில் அவர் பங்கிருந்ததை போல, இன்னும் அடையப்போகும் முன்னேற்றத்திற்கும் அவருடைய வழிகாட்டலும் ஆசிர்வாதமும் எப்போதும் இருக்கும். இப்படி இவ்வுலகெங்கும் பல மாணவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றிகொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.