Wednesday, 28 October 2009

ஆலங்கட்டி மழை

எத்தனை வகையான மழை தெரியும் உங்களுக்கு? நானறிந்த வகையில் மொத்தத்தில் ஐந்து வகையான மழை (ஆசிட் மழையை தவிர்த்து) இருகின்றன
1. Normal Rain (மழை)
2. Snow Rain (பனி மழை)
3. Sleet or Ice pellets (சிறு பனி கட்டிகள் மழை)
4. Freezing Rain (உறையும் மழை)
5. Hail Stone rain (ஆலங்கட்டி மழை)

வடபழனி, வேளச்சேரி ரோடுகளில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் படகு ஓட்டி கொண்டிருப்பார்களே அதற்கு காரணமான மழையை பற்றி நன்கு தெரியும் என்பதால் நாம் பனி மழையில் இருந்து தொடங்குவோம்.

பனி மழை:
வானத்தில் வெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது மழை பனியாகிறது. அந்தப் பனி பூமி வரும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் மழை பனியாக பொழிகிறது. வெப்பநிலை, நீர் உறையும் அளவோ, அதைவிட குறைவாகவோ (மைனஸில்) இருந்தால் மழை பனியாக பொழிய வாய்ப்புண்டு, இந்த வெப்பநிலை Troposphere (இதற்கான தமிழ் பதம் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்) முழுவதும் நிலவ வேண்டும் . இந்தப்பனி பஞ்சு போல் இருக்கும், ஆரம்பத்தில் இதில் விளையாட உற்சாகமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் பனி பட்ட இடம் எல்லாம் எறிய ஆரம்பித்துவிடும்.சிறு ஐஸ் கட்டிகள் மழை:
மேலே சொன்ன அதேப்பனி காற்று மண்டலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றம் காரணமாக சிறு பனி கட்டி மழையாக பெய்யும். பனியாக ஆரம்பிக்கும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகி, நிலத்தை நெருங்கும் முன் மீண்டும் குறைந்த வெப்பம் காரணமாக சிறு ஐஸ் கட்டிகளாக விழும். இந்த கட்டிகள் சிறு கற்கண்டு அளவிலோ இல்லை அதை விட கொஞ்சம் பெரியதாகவோ இருக்கும்.உறையும் மழை:
பனியாக வரும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகிவிடுகிறது அல்லவா, அந்த நீர் பூமியை அடைந்து பின் உறைந்தால் அது உறையும் மழை. அதாவது பனி நீரான பின்பு மீண்டும் பனியாவதற்கு குறைந்த வெப்பம் தேவை, பூமியில் இருந்து மிக கொஞ்சம் உயரத்திற்கே குறைந்த வெப்பம் இருந்து நீர் பனியாக விழாமல், பூமியில் விழுந்த பின் நிலத்தின் குறைந்த வெப்பம் காரணமாக பனியானால் அது உறையும் மழை. இந்தப்பனி நிலத்தில் கண்ணாடி போல உறைந்திருக்கும். இது கொஞ்சம் ஆபத்தான மழை, நிலத்தில் நீர் உறைந்திருப்பதே தெரியாது, தரை வழுக்கும், வண்டிகள் ஓட்டுவதற்கு கடினமாக இருக்கும்.ஆலங்கட்டி மழை:
மேலே சொன்ன மழையெல்லாம் மழை மற்றும் பனி காலங்களில் வரும், ஆனால் ஆலங்கட்டி மழை வெய்யில் காலங்களில் வரும். இந்த காலங்களில் சில சமயம் உருவாகும் ஒரு வகை மேகங்களில் ஏற்படும் சிறு புயலில் நீர் துளிகள் ஒன்றாகி உருவாகுவது தான் இந்த பெரிய ஆலங்கட்டிகள், பெரிய பனி கட்டிகள். இந்த கட்டிகள் கற்கண்டு அளவில் இருந்து உள்ளங்கை அளவில் வரை இருக்கும். நம் மேல் விழுந்தால் வலிக்கும். இந்த கட்டிகள் கார் கண்ணாடியெல்லாம் உடைத்து விடும்.சரி, என்ன திடீர்னு மழை பற்றி எழுதுறேன் பாக்கறீங்களா? கடந்த செவ்வாயன்று இங்கு திடீரென்று பனி கட்டி மழை பெய்தது, அது ஆலங்கட்டி மழை என்று நினைத்து கொண்டோம், அது எப்படி உருவாகிறது என்று படித்த போது, பெய்தது ஆலங்கட்டி மழை இல்லை பனி கட்டி மழை என்று தெரிந்தது. நமக்கு தெரிந்தத நாலு பேருக்கு சொல்லலாம்னு இந்தப்பதிவு, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல தானே.

Sunday, 25 October 2009

The Shawshank Redemption (1994)


"வாழ்க்கையில் எந்த நிலமையிலும் சூழலிலும் நம்பிக்கை ஒன்று இருந்தால் வெற்றி பெறலாம்" என்று சொல்லும் படம் தான் The Shawshank Redemption. மார்கன் ஃப்ரீமன், டிம் ரபின்ஸ் நடித்து ஸ்டீபன் கிங்கின் கதையை அடிப்படையாக வைத்து ஃபிரான்க் டரபோன்ட் இயக்கியது. எனக்கு பிடித்தமான படங்களில் மிக முக்கியமான படம். வாழ்க்கையே முடிந்து போகும் என்ற புள்ளியிலிருந்து ஒருவன் எப்படி மீண்டும் தன் வாழ்க்கையை தொடங்குகிறான் என்பதே The Shawshank Redemption. IMDBல் டாப் 250 படங்களில் மக்கள் இப்படத்திற்கு முதல் இடத்ததை கொடுத்திருக்கிறார்கள்.

Andy - ஒரு நிதி நிறுவனத்தின் மேலதிகாரி, அவன் தன் மனைவியையும், அவளுடைய காதலனையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, நிருபிக்கப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை (மொத்தம் 40 வருடங்கள்) விதிக்கப்படுகிறான். அந்த தண்டனையை அனுபவிக்க அனுப்பப்படும் இடம் ஷஷாங் சிறைச்சாலை . அங்கு சிறையில் பலருக்கு தேவையான பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வரும் மற்றொரு கைதி ரெட், பிரபலமான கைதி. சிறைக்கு வந்து சில நாட்கள் கழித்து ரெட்டிடம் தனக்கு கற்களை வைத்து சிறு பொம்மைகள் செய்வதில் விருப்பம் என்றும் அதனால் ஒரு சுத்தியல் வேண்டுமென்று கேட்கிறான், ரெட்டும் வாங்கி தருகிறான். இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நட்பாகின்றனர், Andyயும் ரெட்டின் குழுவில் ஒருவனாகிறான். ஒரு முறை சிறை காவலதிகாரி தான் அதிக வருமான வரி கட்ட வேண்டியது குறித்து சக அதிகாரிகளிடம் கூறுவதை கேட்கும் Andy, அவருக்கு வரி கட்டாமல் சொத்தை எப்படி பாதுகாப்பது என்று வழி சொல்கிறான், அதில் பிரபலமாகும் Andy, சிறை அதிகாரி பலருக்கும் வருமான வரி ஆலோசகனாகிறான். இதற்கு பிறகு ரெட் குழுவில் அவன் மரியாதை ஏறுகிறது.

ஷஷாங் சிறையின் மேலதிகாரி நார்டன், சிறை கைதிகளை தனக்கு வருமானம் ஈட்டுவதற்கு உபயோகித்து கொள்கிறார், அதற்கு நிதி ஆலோசகராக Andyயை உபயோகித்து கொள்கிறார் நார்டன். இதனால் சிறை மேலதிகாரியுடனும் நெருக்கமாகிறான் Andy. சில வருடங்கள் கழித்து மற்றொரு கைதிகள் குழு அந்த சிறைக்கு வருகிறது, அதில் டாம் என்கிற ஒரு இளம் கைதி இவர்கள் குழுவில் ேர்கிறான். அவனுக்கு எழுதப் படிக்க கற்று கொடுக்கிறான் Andy. ஒரு நாள், Andy சிறைக்கு வந்த கதையை கேட்டு விட்டு, இதற்கு முன் தன்னுடன் சிறையிலிருந்தவன் இதே போல் கொலை செய்ததாகவும், அதற்கு ஒரு வங்கி அதிகாரி தண்டிக்கப்பட்டதாக கூறியதையும் டாம் கூறுகிறான். இதை சிறை மேலதிகாரியிடம் கூறி தன் வழக்கை மறு விசாரணை செய்யுமாறு கோருகிறான் Andy, அதை ஏற்காத அதிகாரி அவனை தனிமை சிறையில் தள்ளுகிறார், பிறகு டாமையும் கொலை செய்கிறார் . சில மாதங்கள் கழித்து தனிமை சிறையிலிருந்து வருகிறான் Andy, ஒரு நாள் ரெட்டிடம், விடுதலை ஆகி வந்தால் தன்னை சந்திக்க வேண்டுமென்றும், இருவரும் தொழில் செய்யலாம் என்றும் கூறுகிறான். அடுத்த நாள் சிறையில் இருந்து மாயமாகிறான் Andy. Andy எப்படி தப்பித்தான், ரெட் விடுதலை ஆனான? Andyயுடன் சேர்ந்தானா என்பது மீதிப்படம்.

சிறையும், சிறை சார்ந்த அனுபவங்களே படம் முழுவதும். சிறையில் பல வருடங்கள் இருப்பவர்கள் சிறைக்கு வெளியில் உள்ள உலகத்தை சந்திக்க தயங்குவதையும், அப்படி வெளியில் செல்வோரின் நிலைமையை ப்ரூக்ஸ் தாத்தா பாத்திரத்தின் வாயிலாக கூறியிருக்கிறார்கள். கதையை ரெட் narrate செய்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரெட்டாக மார்கன் ஃப்ரீமன், Andyயாக டிம் ரபின்ஸ் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். மார்கன் ஃப்ரீமனின் வசன உச்சரிப்பு அற்புதம், அவருடைய குரலே தனி கம்பீரம், அவர் செய்யும் narration மற்றொரு அற்புதம். படத்தில் எனக்கு பிடித்த மற்றொரு பாத்திரம் ப்ரூக்ஸ் தாத்தா. இருபது வருடங்களில் ஒருவன் மனம் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களை சிறப்பாக காட்சிபடுத்தியிருகின்றனர். படத்தில் பல காட்சிகள் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக நூலகத்தை பராமரிக்கும் ப்ரூக்ஸ் தாத்தா, பரோலில் விடுதலை செய்யப்படும் போது, சிறையை விட்டு போக மனமில்லாமல் அழும் காட்சியும், ரெட்டை பரோலில் விடுவிக்க நடக்கும் விவாத காட்சியும், பரோலில் விடுதலை செய்யப்படும் ரெட், தன் வேலை செய்யும் இடத்தில் ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கவும் அனுமதி கேட்கும் காட்சியும். படத்தில் எனக்கு பிடித்த வசனங்களில் சில...

"The funny thing is, on the outside, I was an honest man, straight as an arrow. I had to come to prison to be a crook."

"There are things in this world not carved out of gray stone. That there's a small place inside of us they can never lock away, and that place is called hope."

"You're right. It's down there, and I'm in here. I guess it comes down to a simple choice, really. Get busy living or get busy dying."

"Andy Dufresne , who crawled through the river of shit and came out clean on the other end"

ஒரு காட்சியில் ரெட்டிடம் இப்படி சொல்கிறான் Andy "Hope is never dangerous Red, Hope is always a good thing, hope keeps a man Alive". இந்தப்படம் சொல்வது ஒன்று தான் நம்பிக்கை, நம் நம்பிக்கையை யாரும் சிதைக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் அதற்காக உழைத்தால், வெற்றி நிச்சயம். ஆம், நம் வாழ்க்கை என்னும் சக்கரம் நம்பிக்கை என்னும் அச்சாணியில் தானே சுற்றிக்கொண்டிருக்கிறது.

Thursday, 22 October 2009

இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டை தெரு - ஒரு பார்வை


நெம்பர் 40 ரெட்டை தெரு சமீபத்தில் படித்த புத்தகம். இரா.முருகனின் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட நூல். சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள் (கதைகள்)" படித்து இருக்கிறீர்களா? அதைப்போல இது முருகனின் ரெட்டை தெரு தேவதைகள். அவர் வாழ்ந்த அந்த ரெட்டை தெருவில் தன்னுடைய இளம் (பள்ளி செல்லும்) வயது வரை பார்த்த மனிதர்களின், நடந்த சம்பவங்களின் அழகான தொகுப்பு தான் இந்த நூல். கிரேசி மோகனின் முன்னுரையே சிறப்பாக இருந்தது, அதில் முருகனை சுஜாதாவுடன் ஒப்பிடுகிறார். கிரேசி எழுதியது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றியது. இதற்கு முன் முருகனின் "மூன்று விரல்" நாவல் படித்திருக்கிறேன், அது மென்பொருள் துறையில் வேலை செய்யும் ஒருவனை பற்றியது, நன்றாக இருந்தது, அந்த நாவல் படிக்கும் போது சில நேரங்களில் எழுதியது முருகனா? சுஜாதாவா? என்று சிறு குழப்பம் ஏற்படும் அந்த அளவிற்கு சுஜாதா நடையை போல் இவர் நடையும் அற்புதம்.

இந்தப்புத்தகம் ஒரு நாவல் அல்ல, சிறுகதைகளும் அல்ல, முருகனின் பால்ய கால சம்பவங்களின் தொகுப்பு. சுஜாதாவின் ""ஸ்ரீரங்கத்துக்கும்" முருகனின் ரெட்டை தெருவுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் சுஜாதா அவர் நினைவுகளை (கொஞ்சம் கற்பனை கலந்து என்று நினைக்கிறேன்) "சற்றே பெரிய சிறுகதைகள்" ஆக்கியிருந்தார். முருகன் தொகுப்புகளாக, சம்பவங்களாக எழுதியிருக்கிறார். சில பகுதிகளுக்குள் தொடர்ச்சி இருக்கும் சிலதில் இருக்காது. இது ஒரு தீவிர வாசிப்பை எதிர்பார்க்காத நூல். ஆனால் படிக்க இனிமையான நூல். முருகனின் மூளையில் மடிப்புகள் அதிகமாக இருக்க வேண்டும். இல்லையேல் அவர் பதின் வயதிலும் அதற்கு முன்னரும் நடந்த சம்பவங்களை இவ்வளவு தெளிவாக ஞாபகம் வைத்து எழுதியிருக்க முடியாது.

ஒவ்வொரு அத்யாயமும் ஒரு மனிதரையோ அல்லது சம்பவத்தையோ குறித்து சொல்கிறது. யாரோ அருகில் அமர்ந்து கதை சொல்வது போல் இருக்கிறது நடை. இந்நூலை படித்த போது 1960லில் நம்ம ஊர் எப்படி இருந்திருக்கும் என்று எட்டி பார்த்து வந்ததுபோல் இருக்கிறது. பல சம்பவங்கள் நமக்குள் பல நினைவுகளை கிளறி விடுகிறது. இதில் வரும் சில மனிதர்கள் போல் நம் ஊரிலும் சிலர் இருப்பார்கள்/இருந்திருப்பார்கள். அவர் வீட்டு மனிதர்கள் ஒரு துணை கதப்பாதிரமாகவே வந்து போகின்றனர், சில அத்யாயங்கள் தவிர. அவர் ஊரில் வாழ்ந்த வக்கீல்கள், பால்காரர், கடைக்காரர், போஸ்ட் மேன், மேஸ்திரி, மளிகை கடைக்காரர், போலீஸ் ஏட்டு, பள்ளி ஆசிரியர்கள், ஊர் தெருவோரத்தில் வாழ்ந்த பாட்டிகள், உணவகம், சவுண்ட் சர்வீஸ், டைப்பிங் பயிற்சி பள்ளி என்று பலரையும்/பலவற்றையும் பற்றி சம்பவங்கள் நிறைந்திருகின்றன. அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த சில வழக்கங்கள், சட்டங்கள், அரசியல் பற்றியும் சில குறிப்புகள் இருகின்றன. நூல் முழுவதும் நகைச்சுவை நிரம்பியிருக்கிறது. சில அத்யாயங்கள் படித்து முடித்ததும் ஒரு புன்சிரிப்பும், சில அத்யாயங்கள் முடிக்கும் போது சிறு பாரமும் அழுத்துகிறது. அனேகமாக அந்த வீதியில் வாழ்ந்த அனைவரையும் பற்றி குறைந்தபட்சம் ஒரு வரியாவது எழுதியிருப்பார், அவர்கள் இதை படித்தால் வரும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது, குறிப்பாக அவருடைய சிறு வயது நண்பர்கள் படிக்கும் போது ஒரு குறுகுறுப்பும், படித்த பின் ஒரு அகமகிழ்ச்சியும் ஏற்படும்.

பயணம் செய்யும் போது படிப்பது பிடித்தமான ஒரு விசையம், இந்த புத்தகம் அப்படி படிக்கப்பட்டது. பெரும்பான்மையான பகுதிகளை காலையில் பேருந்தில் அலுவலகம் செல்லும் போது திரும்பி வரும் போதும் படித்து முடித்தேன். சியாட்டலில் ரெட்டை தெரு இல்லை என்றாலும் ஏதோ ரெட்டை தெரு வழியாக அலுவலகம் சென்று வந்தது போல் ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. எத்தனையோ கதைகள் எத்தனையோ தெருக்களில் இன்னும் எழுதப்படாமல் இருகின்றன, முருகன் எழுத்தில் ரெட்டை தெருவும் அதில் வாழ்ந்த மனிதர்களும் சாகா வரம் பெற்று இப்புத்தக வடிவில் உலவிக்கொண்டிருப்பார்கள்.

Sunday, 18 October 2009

கேக் வெட்டி கொண்டாடிய தீபாவளி

இந்த தீபாவளி நான் என் வீட்டில் கொண்டாடாத இரண்டாவது தீபாவளி. கல்லூரியில் ஒரு தீபாவளி, செமஸ்டர் தேர்வுக்கு இடையில் வந்ததால் கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் கொண்டாடப்பட்டது, இம்முறை ஊரில் இல்லாததால், அலுவலக நண்பர்களுடன் சியாட்டலில் கொண்டாடப்பட்டது. இந்திய நேரத்திலே கொண்டாடினோம். இங்கு 40 பேரு 15 அப்பார்ட்மென்டில் தங்கி இருக்கிறோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடியது, சிறப்பு விருந்தினராக அமெரிக்க அலுவலக நண்பர்கள் இருவர் கலந்துகொண்டனர். எங்கள் அப்பார்ட்மென்டில் உள்ள சமுதாய கூடத்தை (Community Hall) வண்ண காகிதங்களால் அலங்கரித்திருந்தார்கள் அங்கு அவரவர் வீட்டில் இருந்து உணவு செய்து எடுத்து வந்து ஒன்றாக உண்டு தீபாவளி கொண்டாடினோம். எங்கள் அறையில் இருந்து தோசை. தோசை, பிரியாணி முதல் கேரட் அல்வா, ரசமலாய் வரை எல்லாம் இருந்தன. எல்லா உணவும் நனறாக இருந்தன. முதலில் இரண்டு விளையாட்டுகள் நடந்தன, மியூசிக் சேர் போன்று ஒரு விளையாட்டும், Dumb Charades விளையாட்டும் நடந்தது. கொஞ்ச நேரம் நடனமும், சந்திரா, சபரி, பிரதாப், அமிர்தா (இரண்டு வயது) ஆகியோர் சிறப்பாக நடனமாடினர்.

முதல் முறையாக கேக் வெட்டி தீபாவளி கொண்டாடப்பட்டது, பிறந்த நாளையே கேக் வெட்டி கொண்டாடாத எனக்கு ரொம்ப அன்னியமாக தோன்றிய விசையமிது, ஆனாலும் வேறு விழியில்லை என்பதால் கேக் வெட்டுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. பிறகு அனைவரும் அவரவர் உணவை தவிர மற்ற உணவுகளை ஒரு பிடி பிடித்துவிட்டு கிளம்பினோம். சாப்பிட்ட பிறகு யாருடைய உணவு அதிகம் காலியாகியிருக்கிறது என்று போட்டி வேறு, எங்கள் தோசை ஓரளவு போனியாயிருந்தது, தேங்காய் சட்னியை தவிர. மிக வேகமா காலியானது ஜீவனின் தம் பிரியாணியும், ககன் வீட்டிலிருந்து வந்த ரசமலாயும்.

இப்ப கொஞ்சம் ஃபீலிங்க்ஸ் ...

சின்ன வயதில் தீபாவளி ஒரு பண்டிகை என்பதை விட ஒரு படி மேலானது. சில வாரங்களுக்கு முன்னே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும், புது உடை, பட்டாசு,முறுக்கு, குலோப் ஜாமுன் என்று ஓவ்வொன்றும் ஒரு சந்தோசம். அதிலும் வீட்டின் கடைசி பிள்ளை போல் பட்டாசுக்கு மவுசு அதிகம், பத்து நாட்களுக்கு முன் பட்டாசு வீட்டுக்கு வந்து விடும், தினம் பள்ளியில் இருந்து வந்ததும் அந்த பட்டாசுகளை எடுத்து பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி. தீபாவளியன்று அதிகாலை நாலு மணிக்கு எழுந்து, எண்ணெய் வைத்து குளித்து, புது உடை உடுத்தி, அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கி, குலோப் ஜாமுன் சாப்பிட்டு பிறகு பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால் மாலை வரை பாட்டாசு தான். நினைத்தாலே இனிக்கும் நாட்கள்.

கடந்த வருடம் தீபாவளியன்று இதையெல்லாம் என் அம்மாவிடம் சொல்லி இப்பவெல்லாம் நான் ஏன் இவ்வளவு உற்சாகமா கொண்டாடுவதில்லை என்று வருத்தப்பட்டேன், அதற்கு அப்பா "உன்னை யார் இதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொன்னது இப்பவும் நீ அதிகாலை எழுந்த உன் இஷ்டம் போல கொண்டாடவேண்டியது தானே" என்றார், நியாயம்தான், தவறு என் மேல். ஆனாலும் தீபாவளி என்று எப்போது கேட்டாலும் மனதிலே தோன்றும் மகிழ்ச்சி குறைவதே இல்லை. அதனாலேயே தீபாவளி ஒரு பண்டிகை என்பதைவிட மேலானது. ஒரு பிஜிலி வெடி கூட வெடிக்காமல், மத்தாப்பு கொளுத்தாமல், குலோப் ஜாமுன் சாபிடாமல், பட்டிமன்றம் பார்க்காமல் கேக் வெட்டி கொண்டாடினாலும் இந்த தீபாவளியும் மனதின் ஒரு ஓரத்தில் மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.

Sunday, 11 October 2009

சியாட்டல் - சிறு குறிப்பு

சியாட்டல், வாசிங்டன் மாநிலத்தின் ஒரு முக்கிய நகரம், பெரிய நகரம். கடலோரத்தில் அமைந்திருக்கும் அழகான நகரம். இது அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து மணிக்கு 96 மைல் வேகத்தில் சென்றால் ஒரு மணி நேரத்தில் கனடா வந்துவிடும். அமெரிக்க கனடா எல்லையில் அமைந்திருக்கிறது சியாட்டல். சியாட்டலுக்கு இருக்கும் பல பெயர்களில் மழை நகரம் (ரெயின் சிட்டி) பிரசித்தம். இங்கு எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் என்பார்கள். நான் முதன் முதல் சியாட்டல் ஒரு மே மாதம் வந்தேன், முதல் நாள் நான் அலுவலகம் சென்றது கொட்டும் மழையில். Sleepless in Seattle படம் பார்த்தீர்களா அதில் tom hanks வீட்டை காட்டும் போதெல்லாம் மழையில் தான் காட்டுவார்களாம். வாசிங்டன் மாநிலத்தை Evergreen state (பசுமை மாநிலம்) என்று அழைக்கிறார்கள், வாசிங்டன் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம். இலையுதிர் காலத்தில் கூட இங்கு பெரும்பான்மையான மரங்களில் இலை உதிர்வதில்லை, எப்போதும் பசுமையே. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் வாஷிங்டன் டி.சி (Washington District of Columbia) வேறு இந்த வாஷிங்டன் மாநிலம் வேறு. வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவின் தலைநகரம், வாஷிங்டன் மாநிலத்தின் தலைநகரம் ஒலிம்பியா.

இந்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் downtown என்று ஒரு இடம் உண்டு, அது தான் அந்த நகரத்தின் மையப்பகுதி, வர்த்தகப் பகுதி. சியாட்டலில் அனைத்து விதமான போக்குவரத்தும் உள்ளது. துறைமுகம், விமான நிலையம், தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளன. பொதுவாக பல அமெரிக்க நகரங்களில் பேருந்து வசதிகள் அவ்வளவு அதிகமா இருக்காது காரணம் இங்கு ஆளாளுக்கு குறைந்தது ஒரு car (மகிழுந்தி) வைத்திருக்கிறார்கள். நம்மூரில் தான் கார் மகிழுந்தி, இங்கு சாதா உந்தியாகத்தான் கருதப்படுகிறது. சியாட்டலில் பேருந்து வசதிகள் நன்றாகவே இருக்கிறது. நாலைந்து பேருந்து பிடித்தாவது தொலைவாக போக வேண்டிய இடத்துக்கு கூட போய் விடுகிறோம். இங்கு இணையத்தளத்தில் நாம் செல்லும் பேருந்தை track செய்ய வசதியுண்டு. பேருந்தில் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் ஒரே டிக்கெட் தான் , ஒரு டிக்கெட் மூன்று மணி நேரத்திற்கு செல்லும், அதற்குள் எந்த பேருந்திலும் ஏறி கொள்ளலாம். தற்போது ஒரு டிக்கெட்டின் விலை 1.75$. மாதம் மாதம் பஸ் பாஸ் விற்கிறார்கள், அதை வாங்கிக்கொண்டால், ஒரு மாதத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம்.

சியாட்டல் டெளன்டவுன் புகைப்படம் கீழே.


இங்கு ஃபெர்ரி (சின்ன கப்பல்) வசதியும் உண்டு, பக்கத்தில் உள்ள தீவுகளுக்கு செல்ல இதை பயன்படுத்துகிறார்கள். இங்கிருந்து கனடாவுக்கு செல்ல கப்பல் வசதி உள்ளது.

சியாட்டல் விமான நிலையத்தின் பெயர் சி-டக் (sea-tac) விமான நிலையம், அதில் சி -சியாட்டல், டக் - டகோமா. டகோமா என்பது சியாட்டலுக்கு பக்கத்தில் இருக்கும் நகரம்.

தொடர்வண்டி போக்குவரத்தும் ஓரளவுக்கு உபயோகப்படுதப்படுகிறது. புதிதாக சியாட்டல் டெளன்டவுனிலிரிந்து விமான நிலையத்திற்கு தொடர் வண்டி சேவை தொடங்கியிருகிறார்கள்.

வாஷிங்டன் மாநிலத்தில் வரி கொஞ்சம் அதிகம், 9%. செருப்பு வாங்கினாலும், லேப்டாப் வாங்கினாலும் இதே வரி தான், 100$க்கு ஒரு பொருள் வாங்கினால் 109$ பணம் செலுத்த வேண்டும். இந்த வரி வாஷிங்டன் மாநிலத்திற்கு மட்டும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரி வரி. பக்கத்தில் இருக்கும் போர்ட்லேண்டில் வரியே இல்லை. பல இடங்களில் நம்மவர்களை காணலாம் குறிப்பாக பெல்வியுவ், ரெண்டன் போன்ற பகுதிகளில் பலர் இருக்கிறார்கள். பல இந்திய உணவகங்களும், கடைகளும் உள்ளன, என்ன, ஒரு தோசைக்கு சுமாராக 5$ செலவாகும்.

சியாட்டளின் சிறப்பாக சில விசையங்கள் உள்ளன.
1. மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் சியாட்டல் பக்கத்தில் உள்ள ரெட்மண்டில் உள்ளது, பில் கேட்ஸ், ஸ்டீவ் பல்மோர் ஆகியோர் வீடுகள் கூட இங்கு தான் இருக்கிறது.

2. Starbucks Coffee தலைமையகம் இங்கு தான் இருக்கிறது. வாஷிங்டன் மாநிலம் காஃபி அதிகமாக குடிக்கும் மாநிலமாகும்.

3. போயிங் அலுவலகங்கள், தளங்கள் மற்றும் விமான assembly மையங்கள் இங்கு இருகின்றன. சியாட்டலை சுற்றி பல இடங்களில் போயிங் அலுவலகங்களும், தளங்களும் உள்ளன. எவரட்டில் உள்ள விமான assembly மையத்தில் போயிங் 747, 767, 777 மற்றும் 787 ரக விமானங்கள் assemble செய்யப்படுகின்றன (ஒன்றிணைக்கபடுகின்றன). பொது மக்கள் இந்த இடத்தை பார்க்க வாரத்தில் ஏழு நாளும் அனுமதி உண்டு. போயிங் இருப்பதால் இந்நகரத்திற்கு ஜெட் சிட்டி (Jet City) என்ற பெயரும் உண்டு.

4. Space Needle - சியாட்டளின் உயரமான டவர். 605 அடி, இதன் 520ஆவது அடியில் SkyCity என்ற ரெஸ்டாரெண்ட் உள்ளது, இதன் சிறப்பு, அவ்வளவு உயரத்தில் அந்த ரெஸ்டாரெண்ட் சுற்றிக் கொண்டிருக்கும். இரவில் Space Needle எப்படி இருக்குமென்று கீழே பாருங்கள்.


இது சியாட்டல் பற்றிய ஒரு மைக்ரோ குறிப்பு. இவை தவிர இங்கு சுற்றி பார்க்க அருவிகளும், பனி மலைகளும், ரெயின் பாரஸ்ட்களும், கடற்கரைகளும் பல இருக்கின்றன. இவை பற்றியும், சியாட்டளின் வாழ்க்கை முறை, வேலை போன்ற மற்ற விசையங்கள் பற்றியும் அடுத்த பதிவுகளில்.

Friday, 9 October 2009

நிலவில் தீபாவளி கொண்டாடும் நாசா!

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னே நிலவில் வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள் நாசா!. அக்டோபர் மாதம் 9ஆம் தேதி காலை ஒரு ஏவுகணையை (Rocket) செலுத்தி நிலவில் மோத விட போகிறார்கள். இந்த ஏவுகணையை ஒரு விண்கலம் மூலம் செலுத்துகிறார்கள். இந்த ஏவுகணை ஒரு தோட்டாவை விட இரண்டு மடங்கு வேகத்தில் செலுத்தி நிலவில் மோத விட போகிறார்கள், இந்த மோதலினால் ஏற்படும் விளைவை வைத்து நிலவில் நீர் அல்லது பனி கட்டி என்று நீர் சம்பந்தப்பட்ட எதாவது இருகிறதா என்று ஆராய்ச்சி செய்யப்போகிறார்கள். நிலவின் தென் துருவத்தின் அருகில் தண்ணீர் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த ஏவுகணையை செலுத்தும் விண்கலம் அதை பின்தொடர்ந்து, மோதலின் விளைவுகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பும் அதை வைத்து ஆராய்ச்சி செய்ய போகிறார்கள்.

எதச்சியாக இந்த செய்தியை படித்ததால், பகிர்ந்து கொள்ள தோன்றியதால் இந்தப்பதிவு. இந்த செய்தியை படித்த பின் எனக்கு இரண்டு வருத்தம்.

1. பல வருடங்களாக நம் தமிழ் குழந்தைகளுக்காக வடை சுட்டு கொண்டிருக்கும் பாட்டி நனையாமல் இருந்தால் சரி.
2. இன்னும் பல ஆண்டுகளுக்கு பாட்டி வடை சுடவும், நிலா சோறு சாம்பிடவும் இந்த நிலவு நமக்கு வேண்டும். ஆராய்ச்சி என்ற பெயரில் நிலவை கெடுக்காமல் இருந்தால் நல்லது.

அப்படியே நிலவில் தண்ணீர் இருந்தால் அதை பூமிக்கு எடுத்து வருவார்களா? இல்லை இதை வைத்து நிலவை பட்டா போட்டு நல்ல விலைக்கு விற்று விடுவார்களா? அப்படியே விற்க நிலவு யாருக்கு சொந்தம்? நாசாவுக்கா? அமெரிக்காவுக்கா? மஞ்சள், பாஸ்மதி அரிசியை போல் நிலவையும் சொந்த கொண்டாட முயர்ச்சிப்பார்களோ?

Sunday, 4 October 2009

கிளிஞ்சல் 5 - கே பழனிச்சாமி (K P)

உங்களுக்கு உங்கள் ஊரில் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? நான் சொல்வது பார்த்தால் ஹலோ மட்டும் சொல்லும் நண்பர்கள் அல்ல, அதையும் தாண்டிய நெருங்கிய நண்பர்கள்? ஒரு ஐந்து பேர் இருப்பார்களா அல்லது மூன்று பேர் குறைந்தபட்சம் ஒருத்தராவது இருப்பார்கள் என்று நினைகிறேன், எனக்கு இருந்த ஒரே ஊர் நண்பன் கே பழனிச்சாமி. இருந்தான் என்று படித்தவுடன் பயந்து விடாதீர்கள், அவன் இன்னும் இருக்கிறான் ஆனால் இன்று எங்களுக்குள் நட்பு இருப்பதாக தோன்றவில்லை அவ்வளவு தான். இனி அவனை பற்றி...

எங்கள் ஊரில் என் வயது பையன்கள் என்று பார்த்தால் பழனிச்சாமி, முகிலன், பாலன் அவ்வளவுதான். இதில் பழனிச்சாமிக்கும் எனக்கும் ஒரே வயது, முகிலன் என்னை விட ஒரு வயதும், பாலன் என்னை விட மூன்று வயதும் சிறியவர்கள். இதில் நானும் முகிலனும் ஒரே ஆங்கிலப் பள்ளியில் படித்தோம், பழனிச்சாமியும் பாலனும் அரசு பள்ளியில் படித்தனர். பழனிச்சாமி சுமாருக்கும் நன்றுக்கும் இடையில் படித்தான், முகிலன் சுமாராக படித்தான், பாலன் நன்றாக விளையாடுவான், படிப்பை தவிர மற்ற வேலைகள் நன்றாக செய்வான். இந்தப்பதிவு பழனிச்சாமி பற்றியதால் இவர்கள் இனி தேவையில்லை தேவைப்பட்டால் அழைத்துக்கொள்ளலாம். பழனிச்சாமி ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன், அவனுக்கு ஒரு அக்கா ஒரு தங்கை, அப்பா பெயர் காளி, அம்மா பெயர் சரசா. அவனை ஊரில் பெரும்பாலும் காளி பையன் என்றே அழைப்பார்கள், நாங்கள் K P என்று. எங்கள் ஊரில் ஒரு ஓரத்தில் அவர்கள் வீடு இருக்கிறது. இத்துடன் மணிபுரம் எல்லை முடிவு என்று கோடு போட்டது போல் வரிசையாக சில வீடுகள் இருக்கும், அதில் கடைசி வீடு தான் பழனிச்சாமியின் வீடு. அவனுடைய அப்பா ஒரு அரிசி மில்லில் வேலை செய்தார், இன்னும் செய்கிறார் என்று நினைக்கிறேன். பழனிச்சாமி வீடு இருந்த அந்த வரிசை முழுவதும் அவர்கள் உறவினர்கள் வீடே.

எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகம் எப்போது நிகழ்ந்தது என்று நினைவில் இல்லை. ஆனால் நினைவு தெரிந்த நாளில் இருந்து ஊரில் என்னோடு சுற்றிய ஒரே நண்பன் அவன் தான். நாங்கள் இணைந்து ஐஸ் நம்பெரிலிருந்து கிரிக்கெட் கபடி வரைக்கும் விளையாடியிருக்கிறோம். கிரிக்கெட்டை பொறுத்தவரை அப்போது எங்கள் ஊரில் இருந்த நட்சத்திர ஆட்டக்காரர்கள் பாலன், K P மற்றும் நான் (அப்போது). எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் இருப்பவர்களை இரு அணிகளாக பிரித்து நான் ஒரு அணிக்கும், பழனிச்சாமி ஒரு அணிக்கும் கேப்டனாக இருப்போம், சில சமயங்களில் இருவரும் ஒரு அணியில் இருந்தும் ஆடுவோம். எங்கள் ஊர் கிரிக்கெட்டில் அப்போது continuous ஓவரெல்லாம் உண்டு, அதாவது ஒருவரே தொடர்ந்து மூன்று ஓவர் போடலாம். பக்கத்து ஊரில் எல்லாம் போய் விளையாடி இருக்கிறோம். அவனுடைய அக்காவும் என் அக்காவும் நண்பர்கள். அவனுடைய அக்கா என்னை எங்கள் ஊரின் G T நாய்டு என்று அழைப்பார், நான் அவ்வளவு புத்திசாலியாம். அவன் வீட்டில் எப்போதும் எதாவது ஒரு புத்தகம் படிக்க கிடைக்கும் ராணி காமிக்ஸ், ராணி முத்து, ராஜேஷ்குமார் கிரைம் நாவல் மற்றும் சில மாத வார இதழ்கள். இதெல்லாம் அவன் வாங்கியிருப்பான் அல்லது மற்றவர்களிடமிருந்து வாங்கி வந்திருப்பான், எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் வர இதெல்லாம் ஒரு காரணமா அமைந்தது. நான் முதலில் படித்தது, காமிக்ஸ் புத்தகம், அது அவனுடைய வீட்டில் இருந்துதான்.

அவனுடைய வீட்டில் எனக்கு எல்லா உரிமையும் இருந்தது, என் மேல் அவர்களுக்கு ஒரு மரியாதை, அவன் அதிக மதிப்பெண்கள் வாங்கா விட்டால் அவன் நல்ல படிக்க வேண்டும் என்று என்னை சொல்ல சொல்வார்கள். அவரவர் பள்ளியில் நடப்பதை பகிரிந்து கொள்வோம். வெவ்வேறு மீடியம்களில் படித்ததால் இருவரும் சேர்ந்து படித்ததில்லை, இருவரும் ஓரளவு படித்தோம். அவனுடைய பள்ளி நாட்களில் நான் விடுப்பில் இருக்கும் சமயங்களில் அவனுடைய பள்ளிக்கு சென்றிருக்கிறேன், அங்கு அவனுடன் பள்ளியில் கொடுக்கும் உணவை உண்டுவிட்டு, அவனுடைய பள்ளி நண்பர்களுடன் விளையாடிவிட்டு வந்திருக்கிறேன். அப்போது வருடா வருடம் எங்கள் ஊரில் விளையாட்டு போட்டி நடக்கும், அதற்கு பரிசு வாங்க ஊர் மக்களிடம் பணம் வசூலிக்க நானும் அவனும் போவோம், வருடா வருடம் மின்னொளியில் நடந்த கபடி போட்டிகளை விடிய விடிய பார்த்திருக்கிறோம், அவ்வப்போது ஊரில் பொதுவில் டிவி டெக் வைத்து ஒளிபரப்பப்படும் படங்களை ஒன்றாக பார்த்திருக்கிறோம். இப்போது விளையாட்டு போட்டியும் இல்லை, கபடி போட்டியும் நடத்தப்படுவதில்லை, யாரும் டெக்கில் படம் போடுவதும் இல்லை.

நாங்கள் இருவர் மட்டும் இருக்கும் சமயங்களில், எங்கள் வீடு வாசலில் நாங்கள் மட்டும் கிரிக்கெட் விளையாடுவோம். கால், அரை பரீட்ச்சை சமயங்களில், தேர்வு இல்லாத மதிய வேளைகளில் என் வீட்டு வாசலில் பிளாஸ்டிக் பந்தில் பேசிகொண்டே கிரிக்கெட் விளையாடியது இன்னும் நினைவில் இருக்கிறது. பத்தாவதில் 350 மதிப்பெண்களே அவன் வாங்கியிருந்தான், ஆனாலும் கவுந்தப்பாடி அரசு பள்ளியில் முதல் குரூப் கிடைக்குமென்றும் அதை தேர்வு செய்யுமாறும் கூறியிருந்தேன், அவனும் சரி என்றான். +1 முதல் நாள் பள்ளி சென்று வந்த நான், அவனுடைய வீடிற்கு போனேன் அவன் வீட்டில் இல்லை, சரி என்று அவன் புத்தக பையை பார்த்த போது தான் அவன் மூன்றாவது குரூப் எடுத்தது தெரிந்தது, எனக்கு பெரும் கோபம் வந்தது. ஏதோ அவன் பெரும் தவறு செய்தது போல் தோன்றியது. அவனிடம் மிகவும் வருத்தப்பட்டுவிட்டு வந்தேன், அவன் தனக்கு இதே போதுமென்றான்.

+2 படிக்கும் போது கொஞ்ச நாள் பள்ளி விடுதியில் தங்கி இருந்ததாலும் தீவிரமாக படித்து கொண்டிருந்ததாலும் அவனுடன் அதிகம் பேச முடியவில்லை, எங்களுகிடையில் சின்ன இடைவெளி விழுந்தது. மேலும் இச்சமயத்தில் அவனுக்கு சில புது நட்பு கிடைத்திருக்கலாம். +2 முடித்த பின் நான் பொறியியல் சேர்க்கைக்கு காத்திருந்தேன், அவன் மேல் படிப்பிற்கு எதுவும் முயற்சி செய்ததாக தெரியவில்லை. மேலே எதுவும் படித்தானா என்று நினைவில் இல்லை. நான் பொறியியல் கல்லூரி சேர்ந்த புதிதில் ஊருக்கு வரும் போது அவன் அவர்கள் உறவினர் ஒருவரிடம் முடி திருத்தல் தொழில் கற்றுக்கொண்டிருப்பதாக கூறினர். பிறகு சில மாதங்கள் கழித்து நான் கவுந்தப்பாடி சென்ற போது அங்கு அவன் கடை வைந்திருந்தது தெரிந்தது, கொஞ்ச நேரம் பேசி விட்டு வந்தேன் எங்களுக்கிடையில் ஒரு இடைவெளி இருந்தது தெரிந்தது. அதன் பிறகு செமஸ்டர் விடுப்புகளில் ஊருக்கு வரும் சமயங்களில் சாலையில் சந்திக்கும் போது பேசிக்கொள்வோம். சில காலம் கழித்து அவன் செய்து வந்த தொழிலையும் விட்டுவிட்டு கரூரில் ஏதோ ஒரு மகளிர் குழுவிலோ அமைப்பிலோ வேலை செய்வதாக கேள்விப்பட்டேன். சமீபகாலங்களில் நான் அவனை பற்றி கேள்விப்பட்டதெல்லாம் கெட்ட விசையங்களே (என்னுடைய இரு சம்பவங்கள் பதிவில் முதல் சமபாவம் இவனை பற்றியதே).

ஒரு ஏழ்மையான படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் இருந்த இவன், நன்றாக படித்து நல்ல நிலைக்கு வருவான் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எல்லாம் வேறு மாதிரி ஆகிவிட்டது. அவனுடைய இந்த தலைகீழ் மாற்றத்திற்கு காரணம் +1, +2விலோ அல்லது அதற்கு பிறகோ அவனுக்கு ஏற்பட்ட கெட்ட சகவாசங்களே. நான் அவனை பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது, இனி எப்போது அவனை பார்த்தாலும் அந்த பழைய நட்பு எட்டி பார்க்குமா என்பது சந்தேகமே, மீண்டும் அந்த நட்பு துளிர்க்க வேண்டும் என்பதே என் ஆவல். இந்த மாதிரி எத்தனையோ பழனிச்சாமிகள் பல ஊர்களில் வழி தவறி போய் ஊர் சுற்றிகொண்டிருகிறார்கள், நாமெல்லாம் தப்பி பிழைத்து உலகம் சுற்றிகொண்டிருகிறோம்.

Thursday, 1 October 2009

சியாட்டல் - காலத்தை துரத்தும் பயணம்


அதோ இதோ என்றிருந்த என் சியாட்டில் பயணம் ஒரு வழியாய் உறுதியாகி 29 செப்டம்பர் இரவு கிளம்பி 30 அன்று காலை 10 மணியளவில் சியாட்டில் வந்தடைந்து மதியம் இரண்டு மணியளவில் இந்த பதிவை எழுதி கொண்டிருக்கிறேன். சியாட்டலில் இருந்து என் முதல் பதிவு. அலுவல் காரணமாக வெளிநாடு செல்வது மென்பொருள் துறையில் அன்றாடம் நிகழ்வது, அந்த வகையிலே இந்த பயணமும். இதற்கு முன்னரும் சியாட்டில் வந்திருக்கிறேன்.

சென்னையில் செப்டம்பர் 30 ௦௦:25AM மணிக்கு விமானம் ஏறி செப்டம்பர் 30 9:45AM மணிக்கு சியாட்டலில் வந்திறங்கினேன். தாய்லாந்து, ஜப்பான் வழியாக பயணம் செய்தோம், செய்தோம்? இதே ப்ரொஜெக்டில் என்னுடன் இணைந்து (அல்லது நான் அவருடன் இணைந்து) செயல் பட இன்னொருவரும் வந்தார். தாய்லாந்து சுவர்ணபூமி விமான நிலையத்தை வந்தடைந்த போது தாய்லாந்தில் மணி செப்டம்பர் 30 05:30AM. அங்கிருந்து டோக்கியோவுக்கு 07:00AM மணிக்கு கிளம்பிய விமானம் ஐந்தரை மணி நேர பயணத்துக்கு பிறகு டோக்கியோ நரிட்டா விமான நிலையம் வந்தடைந்த போது மணி 03:40PM. தாய்லாந்திலிருந்து டோக்கியோ வந்த விமானத்தில் ஒரு பனி பெண் (பாட்டி) வாயில், டிரகுலவிற்கு இருக்கும் பல் போல ஏதோ கட்டியிருந்தார், பார்ப்பதற்கே பயமாக இருந்தது. அங்கிருந்து 05:30PM மணிக்கு சியாட்டில் விமானம், எட்டு மணி நேர பயணத்துக்கு பிறகு சியாட்டில் அடைந்த போது மணி செப்டம்பர் 30 09:45AM. ஜப்பானில் 30ஆம் தேதி மாலை கிளம்பி சியாட்டலை 30ஆம் தேதி காலை வந்தடைந்தோம், என்ன ஒரு விந்தையான பயணம்? காலத்தை துரத்தி பிடிக்கும் பயணம். இந்தியாவுக்கும் சியாட்டளுக்கும் 11:30 மணி நேர வித்தியாசம், இந்தியாவில் செப்டம்பர் 30 இரவு 10 மணி என்றால், சியாட்டலில் செப்டம்பர் 30 காலை 9:30 மணி. இன்னும் கொஞ்ச நாளைக்கு இதுவரை வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் தூங்கவும், தூங்கிய நேரத்தில் வேலை செய்யவும் வேண்டும்.

பயண சமயத்தில் அதிகமாக தூங்கினேன், மிக கொஞ்சம் நேரம் படித்தேன் (இரா.முருகனின் "நெம்பர் 40 ரெட்டை தெரு") The Proposal ஆங்கிலப்படம் பார்த்தேன் நள தமயந்தி மாதிரியான படம், கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தது, இரண்டு மணி நேரம் போனது. அவ்வப்போது அவர்கள் எழுப்பி கொடுத்த இலை, தழைகளை மென்ற நேரம் தவிர பெரும்பாலான நேரம் தூங்கியே கழிந்தது.

கிளம்புவதற்கு முன் என் நண்பர்களிடம் சியாட்டில் நாட்கள் என்று என் வலைப்பூவில் எழுதுவேன் என்று கூறியிருந்தேன், வேலை அதிகமாக இருக்கும் உன்னால் அதெல்லாம் முடியாது என்று கூறினர். இங்கு வேலை பளு எப்படி இருக்கும் என்று இன்னும் தெரியவில்லை, எப்படி இருந்தாலும் குறைந்த பட்சம் வாரம் ஒரு பதிவாவது சியாட்டல் நாட்களின் கீழ் வெளியிட வேண்டும் நினைத்திருக்கிறேன், பார்க்கலாம்.