Sunday, 24 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - திரைப்பார்வை


இந்த சனிக்கிழமை சத்யம்மில் பார்த்தேன். முடிந்த அளவு எந்த விமர்சனமும் படிக்காமல் பார்க்க நினைத்தேன், ஆனால் பலதரப்பட்ட செய்திகள் வந்த வண்ணம் இருந்ததால் (பட தலைப்பில் ஒருவன் என்று வந்தாலே இப்படிதானா?) சில விமர்சனங்களை மேலோட்டமாக படித்து விட்டு தான் படம் பார்க்க போனேன். இனி படத்தை பற்றிய என் பார்வை.

இதுவரை இந்திய சினிமாவில் யாரும் தொடாத களத்தை தொட்டிருகிறார் இயக்குனர், Fantasy and Adventure. 12ஆம் நூற்றான்டின் இறுதியில் கடைசி சோழ இளவரசனை பாண்டியர்களிடமிருந்து காப்பாற்ற எங்கோ அழைத்து சென்று மறைத்து வைக்கப்படுகிறார், அந்த கடைசி மன்னன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த சோழனை அல்லது அவன் கடைசியாக வாழ்ந்த இடத்தை கண்டுபிடிக்க பாண்டியர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாண்டியர்களால் கண்டுபிடிக்க முடியாத சோழர்களை 2010ல் தேடி ஒரு குழு விரைகிறது. இந்த தேடலும் அதன் முடிவுமே ஆயிரத்தில் ஒருவன்.

இத்தேடலின் தலைவி ரீமா, இவருக்கு உதவியாக வருபவர்கள் கார்த்தி, ஆண்டிரியா மற்றும் இந்திய ராணுவப்படை. சென்னையிலிருந்து வியட்நாம் அருகில் ஒரு தீவில் சோழன் கடைசியாக வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு கிளம்புகிறார்கள், அந்த இடத்தை நோக்கிய பயணமும் அந்தப்பயணத்தில் அவர்கள் சந்திக்கும் இன்னல்களும், இழப்புகளும், அதிர்ச்சிகளும் முதல் பாதி. அழிந்ததாக கருதப்படும் சோழர்கள் என்ன ஆனார்கள், ரீமா, கார்த்தி குழுவினர் சென்ற காரியம் முடித்து திரும்பினார்களா என்பது இரண்டாம் பாதி.

Fantasy, Adventure படத்துக்கு தேவையான அனைத்தும் படத்தில் இருக்கிறது, கப்பல் பயணம், அடர் காட்டுவழி பயணம், காட்டுவாசிகள், பாம்புகள், பாலைவனம் மற்றும் சோழர்கள் என அனைத்தும் தமிழ் படத்திற்கு புதுசு. ரீமா, கார்த்தி, பார்த்திபன் மற்றும் பல துணை நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். அதிக தைரியம் கொஞ்சம் திமிர் கலந்த பாத்திரத்தை மிக இயல்பாக செய்திருக்கிறார் ரீமா, மற்ற படங்களை விட இந்தப்படத்தில் கூடுதல் அழகாவே இருந்தார் ரீமா. பருத்திவீரனில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திருக்கிறார் கார்த்தி, ஆனால் அவர் பாத்திரம் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது, தனது இரண்டாவது படத்திலேயே இந்த மாதிரி ஒரு படம் பண்ணியதற்கு பாராட்டுகள் கார்த்தி. surprise கதாபாத்திரம் பார்த்திபன், சிறப்பாக செய்திருக்கிறார், அவருடைய கேலி கிண்டல் மட்டும் இல்லாமல் இந்த மாதிரி வித்தியாசமான பத்திரங்களில் பார்த்திபனை பார்ப்பதும் மகிழ்வாக இருக்கிறது. படம் நெடுக பெருமளவில் பங்களித்திருக்கும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இப்படத்தின் கதாநாயகன் இயக்குனர் செல்வராகவன், தான் நினைத்ததை திரையில் கொண்டுவர அவரின் உழைப்பு தெரிகிறது, இவருக்கு பக்க(கா) பலமாக கை கொடுத்து படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றிருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் கலை இயக்குனர் சந்தானம். படத்தின் ஒளி அமைப்பு மிக சிறப்பாக இருந்தது, குகை காட்சிகள் அருமையாக படம் பிடித்திருக்கிறார், அடர் காடாகட்டும், பாலைவனமாகட்டும் மிக அழகாக, சிந்தாமல் சிதறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராம்ஜி, சோழ ராஜ்ஜியத்தை ஒரு குகைக்குள் நிறுவியிருக்கிறார் கலை இயக்குனர். ஜீவியின் இசை படத்திற்கு இன்னொரு பலம். இவர்கள் அனைவருக்கும் ஒரு பொக்கே. படத்தின் மற்றொரு முக்கியஸ்தர் CG, பல இடங்களில் CG என்பதே தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது, சில இடங்களில் CG துருத்தி கொண்டிருந்தாலும் இந்த பட்ஜெட்டில் அவ்வளவுதான் முடிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. படத்தில் மற்றொரு சிறப்பு அம்சம் சோழர் தமிழ், எனக்கு மிகவும் பிடித்தது, எப்படி இருந்த தமிழ், இப்படி ஆகியிருக்கிறது, அந்த தமிழை கேக்கும் போதே பேஜாராக்கீதுப்பா ச்சே, வருத்தமாக இருக்கிறது.

இப்படத்தை பற்றி பல வகையாக பல விமர்சனங்கள், அப்படிப்பட்ட சில விமர்சனங்களுக்கு என் கருத்துகள்
1. படத்தின் கதை புரியவில்லை?- என்ன புரியவில்லை என்று எனக்கு புரியவில்லை, படத்தை கவனமாக பாருங்கள், ஒவ்வொரு வசனத்தையும் கவனியுங்கள், அப்போதுதான் புரியும், நடுவில் யாரிடமாவது பேசிக்கொண்டும், comment அடித்துக்கொண்டும் பார்த்தால் புரியாது. நம்முடன் ஆயிரம் பேர் படம் பார்க்கிறார்கள் என்ற உணர்வில்லாமல் கத்திகொண்டிருப்பவர்களும், அவர்கள் பேசும் தமிழ் புரியவில்லை (லிங்க தரிசனம் தவிர) என்று கமெண்ட் அடிப்பவர்களுக்கும், அலைபேசியை நொண்டி கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் புரியாது.

2. சோழர்கள் பற்றி எடுக்கும் முன் இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்திருக்கலாம், சிலது வரலாற்றுடன் ஒட்டவில்லை - எதற்கு ஒட்டவேண்டும், அதுதான் படத்தின் தொடக்கத்திலேயே ஒரு disclaimar போடுகிறார்களே இப்படத்திற்கும் சோழர்கள் வரலாற்றுக்கும் தொடர்பில்லை, முற்றிலும் கற்பனையே என்று, பின் எதற்கு இந்த கேள்வி?

3. CG சில இடங்களில் தனியாக தெரிகிறது, இது ஒன்றும் $237 மில்லியனில் எடுக்கப்பட்ட அவதார் அல்ல, 32 கோடியில் எடுக்கப்பட்ட படம், இந்த பட்ஜெட்டிற்கு ஒரு எல்லை இருக்கிறது, இந்த மாதிரி முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்குமாயின் CG போன்றவைகளுக்கு நம் தயாரிப்பாளர்கள் செலவு செய்ய முன்வருவார்கள், இல்லையேல் பல கைகள் கொண்ட அம்மனையும், சட்டை போட்டு நடனமாடும் யானையும், CGயில் பார்த்துகொண்டிருக்க வேண்டியதுதான்.

4. ஒரு வலைத்தளத்தில் சோழர்களை Zombiக்களாக காட்டியிருப்பதாக குறிப்பிடிருந்தனர், இவர்கள் என்ன லட்சணத்தில் படம் பார்த்தார்கள் என்று தெரியவில்லை.

5. தி ஹிந்து விமர்சனத்தில், அந்த ராஜாவும் மக்களும் பேசும் தமிழ் புரியவில்லை என்கிறார் - என்ன செய்யலாம்? ஒரு வேலை சோழர்களை "இன்ன ராஜா, நாஸ்டா கூட தர மாட்டீன்ர , உன்னோடு ஒரு பேஜாரூப்பா," என்று பேசியிருந்தால் புரிந்திருக்குமோ?. தமிழ் புரியவில்லை என்பது நமக்கு தான் அசிங்கம், வேண்டுமென்றால் subtitle போட்டு இன்னும் அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கலாம். இவ்விமர்சனத்தை பற்றி என் நண்பனின் பதிவு இது.

6. படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாது என்று ஒரு குறை - அதற்கு தான் தணிக்கை குழு ஒவ்வொரு படத்தையும் பார்த்து விட்டு சான்றிதழ் வழங்குகின்றது, அதை கொஞ்சம் மதித்து கவனித்தால் எந்த படத்திற்கு யாரை அழைத்து செல்லலாம் என்று புரியும்.

7. படத்தை விமர்சிக்கவே கூடாதா? - விமர்சிக்கலாம், படத்தை புரிந்துகொண்டு, அது ஆரோக்கியமான விமர்சனமாக இருந்தால், ஒரு கலைஞனை உற்சாகபடுத்துவதாக இருந்தால் நன்மையே, முற்றிலும் தாழ்த்தி விமர்சனம் செய்வது யாருக்கும் நன்மையில்லை.

படத்தில் குறைகளே இல்லையா?, இருக்கிறது, அதீத வன்முறை, ரத்தம் (குறிப்பாக ராஜா முன் பலியிடப்படும் காட்சி மற்றும் சில சண்டை காட்சிகள்). மனதை பதைபதைக்க வைக்கும் சில காட்சிகள் உண்டு. இதை தவிர்த்து விட்டு பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் ஒரு சிறப்பான படம், தமிழில் இப்படியான ஒரு படம் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது ஒரு மிக முக்கியமான படமா என்றால்? ஆம், தவழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை தத்தி தத்தி நடக்க எடுத்து வைக்கும் முதல் அடிகளில் இதுவும் ஒன்று, தள்ளாட்டத்துடன் தான் இருக்கும், கொஞ்சம் ஆதரவு தாருங்கள், உற்சாகமூட்டுங்கள், நம்பிக்கையிழக்க செய்யாதீர்கள், நம் அடுத்த தலைமுறைக்குள் நடக்க பழகிவிடும், இல்லையேல் இன்னும் பல காலத்திற்கும் நாம் யாருக்கு "என்ன தளபதி" பட்டம் கொடுக்கலாம் என்று யோசித்துகொண்டே இருக்கவேண்டியதுதான்.

Sunday, 3 January 2010

பெயின்பிரிட்ஜ் தீவு

சியாட்டல் பசிபிக் கடலின் அருகில் அமைந்திருப்பதால், அதை சுற்றி பல தீவுகள் உள்ளன. இவற்றில் ஒரு பிரபலமான தீவு பெயின்பிரிட்ஜ் தீவு. 8 கிமீ அகலமும், 10 கிமீ நீளமும் உள்ள இந்த தீவில் ஆரம்ப காலங்களில் கப்பல் கட்டுமான பணிகள் நடந்திருக்கின்றன, இங்கு அதற்கு தேவையான மரங்கள் அதிகம் கிடைக்கும். 2005ஆம் ஆண்டு CNN Money அமெரிக்காவில் வாழ்வதற்கான சிறந்த இடங்களில் இத்தீவுக்கு இரண்டாவது இடம் அளித்துள்ளனர்.

இந்த தீவிற்கு சியாட்டல் downtownலிருந்து ஃபெர்ரியில் செல்லலாம். 30 நிமிட பயணம்.ஃபெர்ரி பயணத்தின் போது சியாட்டல் downtown முழுவதும் நம் பார்வைக்கு கிடைக்கும். அப்படி ஒரு பயணத்தில் தான் நாங்கள் ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாளை களித்தோம். பயணத்தின் போது மேல் தளத்தில் நின்று ரசித்துக்கொண்டும், புகைப்படங்கள் எடுத்துகொண்டும் சென்றோம். நாங்கள் சென்ற போது மிக அழகான வானவில் ஒன்று தோன்றியிருந்தது. அது தண்ணீரின் நடுவில் முளைத்து நின்றது போல் அழகாக இருந்தது. தீவை நாங்கள் சென்றடைந்த போது மழை பெய்ய தொடங்கிவிட்டது, மழையில் நனைந்து கொண்ட கொஞ்ச நேரம் சுற்றினோம், விடுமுறை தினம் என்பதால், ஜன நடமாட்டமும் இல்லை, கடைகளும் இல்லை. அதிகம் சுற்ற முடியவில்லை. அங்கிருந்து மீண்டும் ஃபெர்ரியில் கிளம்பி வீடு வந்தடைந்தோம். ஃபெர்ரி பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே.

ஃபெர்ரி (இது நாங்கள் எடுத்ததல்ல)


ஃபெர்ரியிலிருந்து Downtownஅழகான வானவில்
பெயின்பிரிட்ஜ் தீவு

Friday, 1 January 2010

பூக்களிலிருந்து புத்தகங்களில் என் படைப்பு

இந்த வருட புத்தகத் திருவிழாவில், திரு. மாதவராஜ் அவர்கள் முயற்சியில் பவா.செல்லதுரை அவர்களின் ஒத்துழைப்பில் வலைப்பூக்களில் இருந்து சில சிறந்த படைப்புகளை நான்கு புத்தகங்களாக தொகுத்து வம்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தகங்கள் பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக்கவும். இதில் ஒரு புத்தகம், வலைப்பதிவர்களின் அனுபவங்களின் தொகுப்பான "பெருவெளிச் சலனங்கள்". இத்தொகுப்பில் அடியேனின் இந்தப்பதிவு தேர்வு செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. என் எழுத்தை தேர்வு செய்த மாதவராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். என் படைப்பை புத்தகத்தில் பார்ப்பதற்கு நான் இன்னும் சில வாரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது, என் நண்பர்களை வாங்க சொல்லியிருக்கிறேன். சென்னை சென்றவுடன் பெருவெளிச் சலனங்களை படித்துவிட்டுத்தான் அடுத்தவேலை.

நான் இந்த வலைப்பூ முகவரியை பதித்து மூன்று வருடம் ஆனாலும், நான் எழுத ஆரம்பித்தது 2008 டிசம்பரில், இந்த டிசம்பருடன் ஒரு வருடம் ஆகிறது. முதல் மூன்று பதிவு எழுதியபின் பின்னூட்டம் ஏதும் இல்லாததால் யாரும் என் பதிவை படிப்பதில்லை என்று கருதி தொடர்ந்து எழுதவில்லை (இருந்தும் இவ்வளவு ஆசை இருந்திருக்ககூடாதுன்னு இப்ப புரியுது). பிறகொருநாள் எதச்சையாக என் வலைப்பூவை பார்த்த போது மகேஸ்வரன் என்பவர் பின்னூட்டம் இட்டிருந்தார் (மார்ச்சில் இட்டிருந்த பின்னூட்டத்தை ஜூனில் தான் பார்த்தேன்) , முகம் தெரியாத ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டது மகிழ்ச்சியை தந்தது, அது ஒரு வகையில் யாரோ நாம் எழுதியதைகூட படிக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியது. எழுதுவதில் ஆர்வத்தை அதிகப்படுத்தினேன், இனி தொடர்ச்சியாக எழுதவேண்டும் என்று முடிவு செய்தேன், என்னால் முடிந்தளவு அதை நிறைவு செய்தேன். நான் படித்த புத்தகம் பற்றி, பார்த்த திரைப்படம் பற்றி, பொது விசையங்கள், மனிதர்கள் என எல்லாம் எழுதினேன். கிளிஞ்சல்கள் என்ற தலைப்பில் என்னை பாதித்த மனிதர்களை பற்றி எழுதிக்கொண்டிருப்பது அதில் முக்கியமானது. பெருவெளிச் சலனங்கள் புத்தகத்தில் வந்திருப்பதும் கிளிஞ்சல்களில் எழுதிய மாரி என்கிற மொட்ட தாத்தா என்ற பதிவு தான். இப்போது என் வலைப்பூவில் 41 பதிவுகள் இருக்கிறன, எண்ணிக்கை அதிகமில்லை என்றாலும், சில நேரங்களில் இவ்வளவு எப்படி எழுதினேன் என்று ஆச்சர்யமாகவும் இருக்கிறது. இதை ஒரு ஆரம்பமாகவே எண்ணுகிறேன். இந்த வருடம் என் வலையுலக வாழ்க்கையை பொறுத்தவரை சோம்பலாக ஆரம்பித்தாலும் மிக பிரகாசமாக முடிந்திருக்கிறது, இதை அடுத்த வருடத்திற்கு அச்சாரமாக வைத்துகொள்ளலாம் என்றே கருதுகிறேன்.

நான் எழுதுகிறேன் என்று சொன்னதும் என் அப்பா, அம்மா இருவரும் மகிழ்ந்து உற்சாகமூட்டினர். தன் அலுவலக நண்பர்களுக்கு என் வலைப்பூ முகவரியெல்லாம் கொடுத்து படிக்க சொன்ன என் அப்பா, எங்கள் ஊரில் இருந்த அந்தியூர் அண்ணனை பற்றி எழுதியதை படித்து கண் கலங்கியதாக கூறிய என் அம்மா, பின்னூட்டம் மூலம் தொடர்புகொண்டு பிறகு நேரில் சந்தித்து பேசி, நான் எழுதுவதை உற்சாகப்படுத்தி, அவருடைய வலையில் என் வலைப்பூவை பற்றியும் எழுதிய மகேஸ்வரன் (இவர் வலையில் என் வலைப்பூவை பற்றி குறிப்பிட்டிருந்த அடுத்தநாள் என் வலைப்பூவின் ஹிட் கவுன்ட் 300-400 என்று எகிறியது, தலை கால் புரியவில்லை அன்று, இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கம்போல் ஒற்றை படைக்கும் இரட்டை படைக்கும் நடுவில் திண்டாடிய போதுதான் சகஜமானேன்), நான் எழுதுவதையெல்லாம் படித்துவிட்டு "ரொம்ப நல்ல இருக்கு" என்று ஊக்கப்படுத்திய என் கல்லூரி, அலுவலக, வலைப்பூ மற்றும் என் அறை நண்பர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

புது வருடத்தில் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.