Tuesday 31 August 2010

கதம்பம்- 31/08/2010

கதம்பம் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் நிகழும் அரசியல் மாற்றம், விளையாட்டு (குறிப்பாக கிரிக்கெட்),  பார்த்த திரைப்படம் ,  படித்த புத்தகம் ஆகியவற்றை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

தமிழக அரசியல்:
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது, கூட்டணிகள் மாறுமா? இல்லை தொடருமா? என பல மர்மங்கள் விலகத் தொடங்குகிறது. இப்போது இருக்கும் நிலையை இப்படி கூறலாம்.

காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் இருக்கவே விரும்புகிறது, ஆனால்  அவர்கள் விரும்பும் தொகுதிகள், மற்றும் ஆட்சியில் பங்கு கிடைக்க கடைசி வரை இளங்கோவன், ப.சிதம்பரம் என்று யாராவது சீண்டிகொண்டே இருப்பார்கள் போல. 


அ.தி.மு.க - இவர்கள் நடத்தும் கூட்டங்களில் கூடும் கூட்டத்தை காட்டி முடிந்தவரை கட்சிகளை இழுக்க முயற்சிக்கிறது.

பா.ம.கதான் இப்போது நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது. "தி.மு.க அழைத்தால் பேச ஒரு குழு அமைக்கப் பட்டிருகிறது", "நாங்கள் இருக்கும்  கூட்டணியில் விஜயகாந்த் இருந்தால் எங்களுக்கு கவலை இல்லை", "காங்கிரஸ் தலைமையில் புது கூட்டணி அமைந்தால் சேருவோம்", "தேவைப்பட்டால் நாங்களே ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்குவோம்"," தனித்து 100 தொகுதிகளில் போட்டியிடுவோம்" என அனைத்து சாத்தியங்கள் குறித்தும் பேசியிருக்கிறார் மருத்துவர். இதெல்லாம் இல்லாமல் ஒரு புது மாதிரியாக முடிவு இருக்குமோ? பார்க்கலாம்.

தே.மு.தி.க முதல் முறையாக  கூட்டணி குறித்து பேச ஆரம்பித்திருகிறது,  புதுக் கூட்டணி ஆரம்பித்தால் கொஞ்சம் தொகுதிகள் வெற்றி பெற்று பெயரையும் காப்பாற்றி கொள்ளலாம், அ.தி.மு.க, தி.மு.க என்று யாருடன் கூட்டணி வைத்தாலும் விஜயகாந்தின் செல்'வாக்கு' குறையும் என்றே தோன்றுகிறது.

இவையனைத்தும் தற்போதைய நிலவரம், கா(க)ட்சிகள் எப்படி மாறுகின்றன என்று போக போக பார்க்கலாம்.

இந்த வார விளையாட்டு:
முத்தரப்பு போட்டியில் இந்தியா ஆடிய விதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக பேட்டிங்கில், சச்சின் இடத்தை நிரப்பும் அறிகுறி ஏதும் தெரியவில்லை. ஹர்பஜனுக்கு பிறகு நல்ல சுழற்பந்து வீச்சாளர் என்று யாரும் இல்லை என்பது கூடுதல் வருத்தம்.அஷ்வினையும், திவாரியையும் பெஞ்சிலேயே வைத்திருந்தது ஒரு ஏமாற்றம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு மற்றொரு பள்ளத்தில் விழுந்திருக்கிறது, மறுபடியும் ஃபிக்சிங், இந்த முறை ஸ்பாட் ஃபிக்சிங் (Spot Fixing). PCB கொஞ்ச காலம் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டு இந்த ஃபிக்சிங் சர்ச்சைகளை fix செய்து பிறகு மறுபடியும் ஆட வரலாம் அதுதான் அவர்கள் கிரிக்கெட்டுக்கு செய்யும் பேருதவி, இல்லையேல் அவர்கள் ஆடும்/ஆடிய எந்த ஆட்டத்தையும் சந்தேகத்துடனே பார்க்க தூண்டும், அப்படி செய்வார்களா? பார்க்கலாம். இந்த சர்ச்சையில், முஹம்மத் ஆமீரும் சம்பந்த்தப்பட்டதாக வரும் செய்திகள் வருத்தம் அளிக்கிறது. அதுவும் கடந்த 6 மாதங்களாக என்னம்மா பந்து வீசுகிறார் ஆமீர்.

இந்த வார திரைப்படம்:
கடந்த ஞாயிறு அன்று புதிதாக தொடங்கப்பட்டிருக்கம் Express Avenueவில் உள்ள escapeல் "நான் மகான் அல்ல" நானும் என்  மனைவியும் பார்த்தோம். படம் பிடித்திருந்தது.

நிறைகள்:
கலகல முதல் பாதி, விறு விறு இரண்டாவது பாதி
நல்ல பாத்திர தேர்வு, அவர்களின் நிறைவான நடிப்பு.
திரைக்கதையின் வேகத்தை பாதிக்காத பாடல்கள், சிறந்த பின்னணி இசை.

குறைகள்:
சில மனதை நெருடும் வன்முறை காட்சிகள்
கிளைமாக்சின் நீளம் 

படம் முடிந்த பின்பு, அங்கிருக்கும் food courtக்கு  சென்றோம். இந்த மாதிரி பெரு வணிக இடங்களில் ஸ்மார்ட் கார்டில் முன்பே பணம் போட்டு கொண்டு, அந்த அட்டையை தான் உபயோகித்து எதுவும் வாங்க முடியும் (சில கடைகளை தவிர). இந்த அட்டையை நாம் பணமாக கொடுத்து வாங்கினால் போகும்போது அட்டையை கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளலாம், ஆனால் வங்கி (டெபிட்) அல்லது கடன்(கிரெடிட்) அட்டை உபயோகித்து இந்த அட்டையை வாங்கினால், போகும் போது மீதிப்பணத்தை திருப்பி தரமாட்டார்களாம், அனைத்து பணத்திற்க்கும் சாப்பிட்டே ஆக வேண்டும், எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த வார மென்பொருள்:
கடந்த வாரம் என் அலுவலக நண்பர் மூலம் BS.Player என்று ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தினார். படம் பார்ப்பதற்கான மென்பொருள், இதன் சிறப்பு, படம் இம் மென்பொருளில் ஓட ஆரம்பித்ததும், இணையத்தில் அப்படத்திற்கான subtitleகளை தேடிக் காட்டுகிறது, அதில் நமக்கு தேவையான subtitleகளை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதிக வேற்று மொழி படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு உபயோகமான மென்பொருள்.

சிதறிய முத்துக்கள்:
நேற்று Express Avenueவை திறந்து வைத்து பேசிய முதல்வர் கலைஞர், இவ்வணிக வளாகத்தை கட்டியிருக்கும் கோயங்கா குடும்பத்தினரை (இக்குடும்பத்தை சேர்ந்த ராம்நாத் கோயங்கா  தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் நிறுவுனர்)  பற்றி இப்படி குறிபிடுகிறார் "வசதியும் வாய்ப்பும் இருந்தாலுங்கூட, இதைச் செய்ய வேண்டுமே என்கிற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடாது. பொது நல நோக்கிலே யாருக்கு கவனம் இருக்கிறதோ, யாருக்கு பொது நலச் சிந்தனை இருக்கிறதோ அவர்களால் தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும்."
ஏதோ இவர்கள் தொண்டு இல்லம் ஆரம்பித்த மாதிரி பேசியிருக்கிறார் முதலவர், ஆண்டவா.

Saturday 28 August 2010

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - 1 ஓர் எளிய முறை - பெ.முத்துசாமி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு அதிகாரிய இருந்து ஓய்வு பெற்று, தற்போது பவானி லட்சமி நகரில் வசித்து வரும் திரு பெ.முத்துசாமி அவர்கள் எழுதிய நூல் தான் "தமிழ் எழுத்து சீர்திருத்தம் -1 ஓர் எளிய முறை". சமீபத்தில் என் தந்தை  மூலம் இப்புத்தகம் எனக்கு கிடைத்தது. இவருடைய உண்மையான தமிழ் பற்றிற்கு தலை வணங்குகிறேன்.

இந்நூலை ஆசிரியரே பதிப்பித்து இருக்கிறார், கண்டிப்பாக கடைகளில் கிடைக்க வாய்ப்பில்லை, அதனால் இந்நூலில்  திரு பெ.முத்துசாமி அவர்கள் குறிப்பிடும் தமிழ் எழுத்து சீர்திருத்தம் என்ன என்பது பற்றியே இந்தப் பதிவு.

அவசியம் என்ன?
தமிழ் எழுத்துகளின் சீர்திருத்தற்கு அவர் கூறும் காரணங்கள்
1. சில எழுத்துக்கள்  குழந்தைகள் எழுதி பழகுவதற்கு கடினமாக இருக்கிறது.
2. தட்டெழுத்துப் பொறிக்கும், அச்சுப் பொறிக்கும் ஏற்ற வகையில் சிறிது மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் எழுத்துகளின் சீர்திருத்தம் குறித்து டாக்டர் மு.வ. இப்படி குறிப்பிடுகிறார் 
"தட்டெழுத்துப் பொறிக்கும், அச்சுப் பொறிக்கும் ஏற்ற வகையில் அவற்றைச் சிறிது மாற்றியமைக்கு வேண்டும். இந்த வகையான மாற்றம் கருதிய சீர்திருத்தம் செய்யும்போது கண் மூடித்தனமாக பழமைப்பற்று, மொழிப்பற்று என்ற பெயராலும் குறுக்கிடலாகாது"

இந்நூலில் அவர் முதலில் குறிப்பிடும் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து நூலில் உள்ளபடியே கீழே.

'உ' கர மற்றும் 'ஊ' கார  எழுத்து குறியீடுகள் மாற்றப்படவேண்டும்

இப்போது 'கு' என்ற எழுதுவதை 'க' மட்டும் எழுதிப் பக்கத்தில் 'கு'வில் உள்ள வளைவில் பாதியைப் பிறை சந்திரன் வடிவில் ()) சேர்த்துவிடலாம், அதாவது 'கு'விற்கு பதில் 'க)'. இது எழுதுவதற்கும் மற்ற அச்சுப் பொறிகளுக்கும் இது எளிதாகவே இருக்கும். 'க' முதல் 'ன' வரை உள்ள எல்லா எழுத்துக்களுக்கும் இந்த ஒரே மாதிரியான குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

கூ வரிசையான நெடில் எழுத்துக்களுக்கு இதே கொம்பை திருப்பி போட்டு (() நெடில் ஆக்கி விடலாம். அதாவது 'கூ'விற்கு பதில் 'க('.

கீழ் மேல் உள்ள கொம்புகளை பக்கவாட்டில் சேர்த்தல்:

ஆ, இ, கு, சூ, ஞு, டு, ணு, ரு, லு, னு போன்ற கீழ் வளைவுகள் தட்டச்சுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தவிர்க்க உகர ஊகாரப் புதிய குறியீடுகள் ), ( இரண்டையும், ஏற்றுக் கொண்டால் உயிர் மெய் எழுத்துக்கள் அனைத்துக்கும் இச்சிக்கல் தீர்ந்து விடும். மீதம் இருப்பது ஆ மற்றும் இ. 'ஆ'வை இப்படியும்   இ யை இப்படியும்
எழுதலாம் என்கிறார்.

ஊ, ஐ, ஒ, ஓ, ஒள

உயிர்மெய் உகர  ஊகார வரிசைகளைப் போலவே ஊ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளையும் குழந்தைகள் எழுதிப் பழக நீண்ட நாட்களாகின்றன. அவற்றையும் சற்று எளிமைப்படுத்தினால் குழந்தைகளுக்கு மனப்பாரம் குறையும், கைப்பழக்கமும் விரைவாக வரும்.
கி.பி. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-ம் நூற்றாண்டு முடிய (அ) 3 என்பதை 'இ' என்ற எழுத்தாக இருந்துள்ளது. இப்போது இது பழகத்தில் இல்லை, அதனால் 3 என்பதை 'ஒ' வாகவும்  என்பதை 'ஓ' நெடிலாகவும் என்பதை 'ஒள' என்பதாகவும் இப்போது ஏற்றுக் கொண்டால் குழந்தைகளும், தமிழ் எழுத்தை புதிதாக கற்பவர்களும் எளிதாக கற்றுக் கொள்வார்கள். உருவத்திலும் ஓரளவு பழைய எழுத்துக்களைப் போலவே இருக்கும். அடுத்து ஊ என்பது 2 எழுத்துகளாக உள்ளதுடன் பெரியதாகவும் உள்ளது, இதனைச் சுலபமாக்க 'எ' குறிளின் அடியில் ஒரு சாய்வு கோடு சேர்த்து 'ஏ' நெடில் ஆக்குவது போல் 'உ' குறிலின் கடைசியில் அதே போல் ஒரு சாய்வு கோடு சேர்த்து நெடில் ஆக்கிவிடலாம். 

முடிவில் எழுத்து சீர்திருத்தம் குறித்து இப்படி குறிப்பிடுகிறார்.
தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்து ஆராய்வதற்காகத் தமிழ் அறிஞர்களும், உலகத் தமிழ் அமைப்புகளும் கூடிக் கலந்து பேசிப் பல மாநாடுகளை நடத்தி அரசுக்குப் பரிந்துரைத்து நடைமுறைப்படுத்தி வழி காண்பது மிகவும் அவசியமும் அவசரமும் ஆனதாகும்.

இது கணினி யுகம், தொலைக்காட்சி யுகம். எனவே மாறுதல்களை ஏற்றுக் கொள்வதில் வேகம் இருக்கும். மாறுதல்களை வலியுறுத்துவோர் தான் இப்போது தேவை.

திரு முத்துசாமி தன் கட்டுரையை முதலவருக்கு அனுப்பியிருக்கிறார், பரீசீலிப்பதாக பதில் அனுப்பியிருக்கிறது  தமிழ் வளர்ச்சித் துறை.

Tuesday 17 August 2010

கிறுக்கல்கள் 2 - வேண்டுதல்


ஐந்து மணி நேர பயணம்
நீண்ட வரிசை
இரண்டு மணி நேர காத்திருத்தல்
நீண்ட வேண்டுதல் பட்டியல்
இரண்டு விநாடி தரிசனம்
அறைக்கு வரும் வழியில்
மொழி தெரியாமல் கதறி அழுதுகொண்டிருந்த பாட்டி
பார்த்த கணம் மனம் கனத்தது
கூட்டத்தில் யாரோ (யாரையோ?) தொலைத்த பாட்டி
நல்ல படியாக வீடு போய் சேர வேண்டி
மலையிலிருந்து நடந்து இறங்கினேன்

Saturday 14 August 2010

வாசனை - 55 வார்த்தை கதை

"சிறு சிறு கதைகள்" என்ற புத்தகத்தில், சுஜாதா பல வகையான கதைகளை பற்றி எழுதியிருக்கிறார் இரண்டு வார்த்தை கதைகள், 55 வார்த்தை கதைகள், சி.சி. கதைகள் மற்றும் பல வகையான கதைகளை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்.

இனி 55 வார்த்தை கதைக்கான விதிமுறைகள்.
மொத்தம் 55- வார்த்தைகளில் கதை இருக்க வேண்டும். இது தான் முக்கிய விதி!
மற்ற விதிமுறைகள்:

1. கதையின் தலைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் அதுவும் ஏழு வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. எண்களும் கணக்கில் உண்டு 45, 500, 3458 போன்றவையெல்லாம் வார்த்தைகளே!

3. நிறுத்தக் குறிகள் வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.

 சுஜாதா
55 வார்த்தை கதைகளை பற்றி இப்படி குறிப்பிடுகிறார் "55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது."


இனி நான் எழுதியது.
தலைப்பு: வாசனை

ஊருக்கு போயிருந்த என்னவளின் நினைப்பிலிருந்து கலைத்தது அவளுடைய அலைப்பேசி அழைப்பு 

'சொல்லுடி, எப்படியிருக்க' 

'நல்லாயிருக்கேன்'

'மதியத்திலிருந்து உன் நினைப்புதாண்டி, திடீர்னு வீடெல்லாம்  எங்க போனாலும் உன் வாசனையாவே இருக்கு '

'அப்புறம்'  சிணுங்கினாள்

'உன் ஞாபகம் அதிகமாயிருச்சு, ஊருக்கு வரட்டுமா?'

'ரொம்ப கொஞ்சாதீங்க, வந்துருவேன், ஆமா குளிச்சிடீங்களா?'

'ஆச்சு, என்  ஷாம்பூ  தீர்ந்துபோச்சுன்னு  உன் ஷாம்பை உபயோகிச்சேன்'
சிறிது அமைதிக்கு பிறகு

'இவ்வளவு நேரம் ஃபீல் பண்ண வாசம், அந்த ஷாம்பூ வாசம் தான்' கடுப்பாக போனை வைத்தாள்.

இப்பதிவு பிடித்திருந்தால் ஓட்டளிக்கவும்.