Monday 22 November 2010

சுஜாதாவின் கடவுள்களின் பள்ளத்தாக்கு - ஒரு பார்வை

கடவுள்களின் பள்ளத்தாக்கு என்ற தலைப்பை பார்த்தவுடன் கடவுள் என்ற சித்தாந்தம் குறித்த கட்டுரைகளோ என்று நினைத்தேன். உள்ளடக்கத்தை பார்த்தவுடன் தான் தெரிந்தது இது சுஜாதா பல தருணங்களில், பல இதழ்களில் எழுதிய (ஒன்றோ ரெண்டோ மேடைகளில் பேசியது) கட்டுரைகளின் தொகுப்பே தவிர கடவுள் பற்றி ஒரு கட்டுரையும் இல்லை. இக்கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்தவர் சுஜாதாவின் நண்பரான தேசிகன். கட்டுரைகளை பயணம், இலக்கியம், சினிமா, அரசியல் மற்றும் பொது என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இத்தொகுப்பில் என்னை கவர்ந்த சில கட்டுரைகள் பற்றி கீழே.

கடவுள்களின் பள்ளத்தாக்கு கட்டுரை திபெத் எல்லையில் உள்ள பத்ரி நாராயணன் கோவிலுக்கு அவர் மேற்கொண்ட பயணம் பற்றியது.  இக்கோவில் 8ஆம் நூற்றாண்டில் பௌத்த ஆதிக்கத்தில் இருந்தது, பிறகு ஆதிசங்கரரால் வைணவத் தலமாக மாற்றப்பட்டது, திருமங்கையாழ்வார் இங்கு (தேவப்ரயாகை, ஜோஷிமட், பத்ரி) வந்து பாடியது, கேரள நம்பூதிரிகள் தான் இங்கு அர்ச்சகர்களாக இருப்பது  என  கோவில் பற்றி பல தகவல்களை கொடுத்திருக்கிறார்.

நகைச்சுவை பற்றி ஒரு சீரியஸான கட்டுரையில் நகைச்சுவையை இப்படி விவரிக்கிறார் "ஒரு கருத்தை மற்றொரு கருத்தோடு முரண்பட வைத்து அதன் மூலம் எதிரபாராத ஒரு சந்தோஷத்தை, பரவசத்தை கொடுப்பது, முடிந்தால் நம் சிந்தனைத் திறனையும் உயர்த்துவது." நகைச்சுவைகளின் வகைகளை பற்றி இக்கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.

தமிழ்த் திரைப்படங்கள் ஆஸ்கார் வாங்க முடியாத  காரணங்களையும், ஆஸ்கார் வாங்க செய்யவேண்டியவைகளை பற்றியும் தமிழ் படம் ஆஸ்கார் வாங்க முடியுமா? என்ற கட்டுரையில் விவாதிக்கிறார். கட்டுரையின் முடிவில் ஆஸ்கார் வாங்க பத்து கட்டளைகளை பட்டியலிட்டிருக்கிறார்.அவற்றலிருந்து சில கீழே

1. கமர்சியல் தேவைகளிலிருந்து விடுபட வேண்டும். "இத்தனை செலவாகும் கமர்சியலாக ஓடுமா ஓடாதா?" என்ற சங்கதியெல்லாம் வேண்டாம். இப்படி ஒரு தயாரிப்பாளர் வேண்டும்.

2. இயக்குனர்கள் கதை பண்ணாமல், தமிழ் இலக்கியத்தின் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து படம் பண்ண வேண்டும்.

3. கதைக்கேற்ப, பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க Casting Director வேண்டும்.

4. டை கட்டிய இளைஞர்களிடம் கொடுத்து, டில்லியிலும் ஹாலிவுட்டிலும் கூவி விற்கவேண்டும்.


வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு என்ற தலைப்பில், வெளிநாட்டு மோகத்தை மூன்று வகையாக பிரிக்கிறார், வெளிநாட்டு பொருட்களின்மேல் மோகம், வெளிநாட்டுப் பழக்க வழக்கங்களின்மேல் மோகம் மற்றும் வெளிநாடு சென்றே ஆக வேண்டும் என்கிற மோகம். இவற்றை பற்றி விரிவாக விவாதிக்கிறார்.  வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை இது.

இவை தவிர ஹே ராம், பாய்ஸ் திரைப்படங்கள் பற்றி, குவைத் மற்றும் மலேசிய நாடுகள் பற்றி, காவிரி பிரச்சனை, முஷ்ரப் இந்திய வருகை, பில்கேட்ஸ் பற்றி எழுதிய கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. சுஜாதாவின் எழுத்தில் எதைப் படித்தாலும் சுவாரஸ்யமாகவே இருக்கும், அது போலவே இந்த கட்டுரைகளும், பயணத்தின் போது படிப்பதற்கு ஏதுவான புத்தகம்.