Monday, 26 September 2011

எங்கேயும் எப்போதும்

பெரும்பாலானோர் ஊரு விட்டு ஊரு வந்து வேலை பார்க்கும் இன்றைய வாழ்கையில் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நாம் தினமும் எங்கையாவது பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அப்படி பயணம் போகும் போது நிகழும் விபத்தும் அதனால் ஏற்படும் பாதிப்பும் என்ன என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் எங்கேயும் எப்போதும்.


சென்னைக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் அனன்யாவிற்கு ஒரு நெருக்கடியில் உதவி செய்ய வருகிறார் சர்வா, அன்று முழுவதும் அவருடனேயே சர்வா இருக்க நேர்கிறது. அந்த சம்பவங்கள் ஒரு track. திருச்சியில் அமைதியான ஜெய், அதிரடியான அஞ்சலி, இடையேயான காதல் மற்றொரு track. இவர்கள் பயணம் செய்யும் பேருந்துகள் பேருந்துகள் விபத்துகுள்ளவதும் அதன் பாதிப்புமே படம்.


படத்தில் எனக்கு பிடித்த விசையங்கள், படத்தின் முதன்மை பத்திரம் முதல், சில காட்சிகளே வரும் பயணிகள் வரை  ஒவ்வொரு கதாபத்திரத்தையும் அழகாக கட்டமைத்திருக்கிறார்  இயக்குனர். மிதப்பான ஊர் தலைவர், வெளிநாட்டில் இருந்து வருடங்கள் கடந்து வரும் நபர், அந்த கல்லூரி மாணவன் மற்றும் மாணவி, சமத்து குழந்தை, அந்த மாமி என ஒவ்வொரு பாத்திரத்திற்கும்  ஒரு வடிவம் கொடுத்திருப்பது அழகு, அதனால் படத்துடன் ஒன்ற முடிகிறது. தேவை இல்லாத பாடல்களின்றி, தேவையான அளவு நகைச்சுவை தெளித்து, எங்கும் தொய்வடையாமல் சீராக செல்லும் திரைக்கதை மற்றொரு பலம். சத்யாவின் இசையும் வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு தேவையான அளவு சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் காட்சிகளும், விபத்து காட்சியும் மிக அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.




படத்தில் எல்லா பாத்திரங்களும் சிறப்பாக இருந்தது, அதில் அஞ்சலியின் பாத்திரம் கொஞ்சம் புதிது. சர்வாவின் உதவும் குணம், விபத்தின் போது அஞ்சலியின் செயல் என எல்லா பாத்திரமும் படம் நெடுக அதன் இயல்பை விட்டு விலகாமல் இருந்தது சிறப்பு. என்னை மிகவும் கவர்ந்தது அனன்யாவின் பாத்திரம், திருமணமான புதிதில் முதல் முறை என் மனைவி சென்னை வந்த போது அவள் வெளிப்படுத்திய உணர்வுகளை அப்படியே பிரதிபலித்தது. (சென்னை சாலைகளை பார்த்து விட்டு என்னைக் கேட்டாள் "இத்தனை பெரும் எங்கதான் போறாங்க" என்று). அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருகின்றனர். அனைவருக்கும் மேலும் நல்ல படங்கள் அமைந்தால் நல்லது.


எடுத்துக்கொண்ட கதைக்கும், அவருடைய குருநாதர் கொடுத்த வாய்ப்பிற்கும்   நியாயம் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். முதல் படத்தில் அவருடைய திறமையை நிருபித்திருக்கிறார் மேலும் இது போல நல்ல படங்கள் தர வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் முருகதாஸ் அவர்களும் இப்படத்தின் வெற்றியின் மூலம் மேலும் சிலருக்கு இயக்குனர் வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.


படத்தில் சில குறைகள் இருந்தாலும், இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு கருத்தை நேர்மையாக  சொல்லியிருக்கும் இப்படத்திற்கு, சிறந்த படங்களின் வரிசையில் எங்கேயும் எப்போதும்  ஒரு இடம் உண்டு. கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள், படம் பார்த்தபின் உங்கள் வாகனத்தின் வேகத்தை நீங்கள் குறைக்கக் கூடும்.

Monday, 18 July 2011

தெய்வத்திருமக(ன்)ள்

30 வயது உடல் வளர்ச்சி  ஐந்து வயது மன வளர்ச்சியும் உள்ள தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்குமான உறவும் பிரிவும் போராட்டமுமே தெய்வத்திருமகள்.

ஊட்டியில் ஒரு கிராமத்தில் தங்கி அங்கயே  உள்ள  சாக்லேட் பாக்டரியில் வேலை செய்பவர் கிருஷ்ணா (விக்ரம்), அவருடைய மனைவி ஒரு குழந்தை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விடுகிறார். அந்தக் குழந்தையை குளிப்பாட்டி, உணவூட்டி, பாதுகாத்து, கதை சொல்லி  அங்கிருப்பவர்களின் உதவியுடன் வளர்க்கிறார் கிருஷ்ணா. அழகாக வாழ்ந்து வரும் தந்தையும் மகளும், ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவின் மாமனார் மூலம் பிரிக்கப்படுகிறார்கள், இது முதல் பாதி.

 சென்னையில் தனது மகளை தேடி அலையும் கிருஷ்ணா, தனது மகளை மீட்டுத்தருமாறு வக்கீல் அனுராதாவிடம் உதவி கேட்கிறார், அவரின் கதையை கேட்டு உதவி செய்ய முன்வருகிறார் அனுராதா. அவர் மிக மூத்த வக்கீலான பாஷ்யத்துடன் வழக்காடி கிருஷ்ணாவிற்கு அவர் குழந்தை நிலாவை மீட்டுக்கொடுத்தாரா இல்லையா என்பது உணர்ச்சிமயமான கிளைமாக்ஸ் உடன்  இரண்டாவது பாதி.


 
 
கிருஷ்ணா என்ற வளர்ந்த குழந்தையாகவே மாறியிருக்கிறார்  விக்ரம், அவருடைய உடல் மொழி அற்புதம். ஒவ்வொரு படத்திருக்கும் அவர் எடுத்து கொள்ளும் சிரத்தை வியக்கவைக்கிறது.  இதுவரை அவர் செய்த பாத்திரங்களில் மிக சிறப்பானதாக இதை சொல்லலாம்.  இப்படத்திற்காக பல  விருதுகள் அவரை தேடிவரும் என் நம்புகிறேன். விக்ரமிற்கு இணையான பாத்திரம் நிலாவாக  நடித்திற்கும் குழந்தை சாராவிற்கு. இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார். சுத்திபோடுங்கப்பா சாராவிற்கு, எத்தனை கண்ணு பட்டுச்சோ.வக்கீலாக அனுஷ்கா, அழகாக அளவாக நடித்திருக்கிறார். பள்ளி நிர்வாகியாக அமலா பால், முதல் பாதியில் நகைச்சுவைக்கு எம் எஸ் பாஸ்கர், இரண்டாம் பாதியில் சந்தானம் என துணை பாத்திரங்கள் சிறப்பாக செய்திருக்கின்றனர். பாஷ்யம் என்ற அப்பாடக்கர் வக்கீலாக நாசர்,  சில காட்சிகளை தவிர சிறப்பாக செய்திருக்கிறார் .

மதராசபட்டினத்தை தொடர்ந்து ஒரு வித்யாசமான ஒரு திரைப்படத்தை அளித்திருக்கும் இயக்குனர் விஜய்க்கு வாழ்த்துக்கள். எடுத்துக்கொண்ட கதையை சிறப்பான  திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் விஜய். படத்தில் பல நெகிழ்ச்சியான காட்சிகள் இருகின்றன, ஆனால் அவைகளுக்கு இடையே நகைச்சுவையை தெளித்து  ஓவர் emotional dramaவாக ஆக்காமல் திரைக்கதை அமைத்திருப்பது அழகு. குழந்தைக்கு நிலா என்று பெயர் வைப்பது, பிடித்த பட்டாம் பூச்சி பறந்ததும் ஏமாறும் கிருஷ்ணாவை நிலா தன் இமைகளையே பட்டாம்பூச்சி போல் அசைத்து  மகிழ்ச்சிப்படுதும்  காட்சி, கதை சொல்லும் காட்சி, இறுதியில் தந்தை மகள் உரையாடும் காட்சி என பல கவிதையான காட்சிகள் அமைத்திருக்கிறார் விஜய். இசையும் (பிரகாஷ்), ஒளிப்பதிவும் (நீரவ் ஷா)  இப்படத்திற்கு தேவையான அளவு சிறப்பாக அமைந்திருக்கிறது. படதொகுப்பாளர் இன்னும் சில காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கலாம் என்று படுகிறது.

இரண்டாம் பாதி நீளமாக இருப்பது, "விழிகளில் ஒரு வானவில்" பாடல்,  குழந்தைக்கு தேவையான மருந்தை கிருஷ்ணா சரியாக வாங்கி வருவது, போன்ற சில குறைகள் இருந்தாலும். தெய்வத்திருமகள் தமிழில் முக்கியமான ஒரு திரைப்படம். கிருஷ்ணா நிலாவை வளர்க்கும் காட்சிகளில், ஒரு குழந்தையை இப்படிதான் வளர்க்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. நல்ல படம் மட்டும் தான் பார்ப்பேன் என்று அடம் பண்ணுபவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம்.