Showing posts with label கிளிஞ்சல்கள். Show all posts
Showing posts with label கிளிஞ்சல்கள். Show all posts

Saturday, 31 July 2010

கிளிஞ்சல் 6 - பலூன்தாத்தா

தோள்ப்பட்டையில் ஒரு நார் பை, பழைய சட்டை, அதே அளவு பழைய  லுங்கி, ஒரு கையில் கம்பு, அதில் வண்ண வண்ண பலூன்கள்,  மற்றொரு கையில் ஒரு பலூனை வைத்துக்கொண்டு "கிர்க்... கிர்க்..." என்று ஒலி எழுப்பி கொண்டு 70 வயது மதிக்கத்தக்க ஒருவரை  சைதாப்பேடையில் பார்த்திருக்கிறீர்களா? அவர் தான் இந்த கிளிஞ்சல். அவருடன் நான் பழகியதில்லை, பேசியதில்லை சைதாப்பேடையில் நான் இருந்த தெருவிலும், பஜார் தெருவிலும் பல முறை பார்த்திருக்கிறேன். எப்பொழுது முதலில் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, ஏதோ ஒரு தருணத்தில் அவரை கவனிக்க தொடங்கினேன். நகரத்தின் இரைச்சலுக்கு நடுவில் ஒரு சன்யாசி போல் நடந்து கொண்டிருப்பார், "பலூன்" என்று கத்தவும் மாட்டார் "கிர்க்... கிர்க்..."  என்ற சத்தம் மட்டுமே. எனக்கு ஏற்பட்ட ஆச்சர்யம், சென்னை போன்ற நகரங்களில் யார் பலூன் எல்லாம் வாங்குவார்கள், அவரிடம் யாரும் பலூன் வாங்கி நான் பார்த்ததில்லை (அதையும் மீறி  சைதாப்பேட்டை தெருவில் வாங்கி வெளிவருவதற்குள் அது வெடித்து விட அனைத்து சாத்தியங்களும் இருக்கிறது), ஏதோ நம்பிக்கையில் பலூன் விற்கிறார். அப்படியே சிலர் வாங்கினாலும் பலூன் வியாபாரத்தை  வைத்து எப்படி ஒருவர் சென்னையில் ஜீவனம் செய்வது? இந்தக் கேள்வி எழுந்த நாளில் இருந்து அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன். அன்று அவரிடம் பலூன் வாங்கி சென்றேன்.

பிறகு எப்போது மாலை இரவு நேரங்களில் கடைத்தெருவிற்கு போகும் பொழுதும் அவரை தேடுவேன், அவரை பார்த்தால் கண்டிப்பாக ஒரு பலூன் வாங்கி வருவேன். சமீபத்தில் நான் சைதையிலிருந்து பாலவாக்கத்திற்கு வீடு மாறினேன், ஐந்தரை வருடங்களுக்கு மேல் வாழ்ந்த இடம்,  சைதையிலிருந்து கிளம்புவதற்கு முன் அவரை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் முடியவில்லை. நடுவில் ஒருநாள் மறுபடியும் சைதை வரவேண்டியது இருந்தது  அப்போது அவரை பார்த்தேன், வழக்கம் போல் அவரிடம் பலூன் வாங்க 10 ருபாய் கொடுத்தேன் அவர் ஒரு சிறிய பலூன் ஒன்றை தந்தார், மற்றொரு பலூனை தரவும் எடுத்தார், நான் வேண்டாம் என்றதும் "இல்ல இத வாங்கிக்க, இன்னைக்கு வியாபாரமே இல்லை, இப்ப கடையில சாப்பிடறதுக்கு 10 ரூபாய் போதும்" என்றார், நான் சிறிது நேரம் பேச்சற்று நின்றேன். பிறகு அவரை பின்தொடர்ந்து சென்று என் அலைப்பேசியில் எடுத்த புகைப்படம் தான் கீழே.



அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது  கேள்விகள் மட்டுமே. "பலூன் வித்து எப்படி பிழைக்கிறார்?". அவரால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூட  சம்பாதிக்க முடியுமா என்று தெரியவில்லை, அந்த ரூபாயை வைத்துக் கொண்டு  எப்படி சமாளிக்கிறார்?  ஒரு நாள் வியாபாரம் ஆகாமல் போனால், என்ன செய்வார்? அவருக்கு குடும்பம் இருக்கிறதா? எங்கு எப்படி தங்குகிறார்?, முடிவில்லா கேள்விகள்.

சைதையில் நான் இருந்த தெருவில் இருக்கும் பிச்சைக்காரர் கூட கண்டிப்பாக ஒரு நாளில் 50 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பார், இது அந்த தாத்தாவுக்கும் தெரிந்திருக்கும், இருந்தும் உழைத்து மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிற அந்த எண்ணம் தான் அவரை பெரிய மனிதராக காட்டுகிறது.  இவரை போல் மிக சிறிய தொழில் செய்து கொண்டு  இந்த பெருநகரத்தில் இன்னும் பலர் நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்,  இவர்களை பார்க்கும் போது வாழ்க்கை மேல் இன்னும் நம்பிக்கை கூடுகிறது. மறுபடியும் பலூன் தாத்தாவை எப்போது பார்ப்பேன் என்று தெரியவில்லை நீங்கள் பார்த்தால் மறக்காமல் அவரிடம் ஒரு பலூன் வாங்கி செல்லுங்கள்.

குறிப்பு: பாலவாக்கதிற்கு சமீபத்தில் வீடு மாறினேன், அங்கு இணைய இணைப்பு கிடைக்க தாமதம் ஏற்ப்பட்டதால் சில நாட்கள் பதிவெழுத முடியாமல் போயிற்று, இனி பதிவுகள் வழக்கம் போல் தொடரும்.

Sunday, 4 October 2009

கிளிஞ்சல் 5 - கே பழனிச்சாமி (K P)

உங்களுக்கு உங்கள் ஊரில் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? நான் சொல்வது பார்த்தால் ஹலோ மட்டும் சொல்லும் நண்பர்கள் அல்ல, அதையும் தாண்டிய நெருங்கிய நண்பர்கள்? ஒரு ஐந்து பேர் இருப்பார்களா அல்லது மூன்று பேர் குறைந்தபட்சம் ஒருத்தராவது இருப்பார்கள் என்று நினைகிறேன், எனக்கு இருந்த ஒரே ஊர் நண்பன் கே பழனிச்சாமி. இருந்தான் என்று படித்தவுடன் பயந்து விடாதீர்கள், அவன் இன்னும் இருக்கிறான் ஆனால் இன்று எங்களுக்குள் நட்பு இருப்பதாக தோன்றவில்லை அவ்வளவு தான். இனி அவனை பற்றி...

எங்கள் ஊரில் என் வயது பையன்கள் என்று பார்த்தால் பழனிச்சாமி, முகிலன், பாலன் அவ்வளவுதான். இதில் பழனிச்சாமிக்கும் எனக்கும் ஒரே வயது, முகிலன் என்னை விட ஒரு வயதும், பாலன் என்னை விட மூன்று வயதும் சிறியவர்கள். இதில் நானும் முகிலனும் ஒரே ஆங்கிலப் பள்ளியில் படித்தோம், பழனிச்சாமியும் பாலனும் அரசு பள்ளியில் படித்தனர். பழனிச்சாமி சுமாருக்கும் நன்றுக்கும் இடையில் படித்தான், முகிலன் சுமாராக படித்தான், பாலன் நன்றாக விளையாடுவான், படிப்பை தவிர மற்ற வேலைகள் நன்றாக செய்வான். இந்தப்பதிவு பழனிச்சாமி பற்றியதால் இவர்கள் இனி தேவையில்லை தேவைப்பட்டால் அழைத்துக்கொள்ளலாம். பழனிச்சாமி ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன், அவனுக்கு ஒரு அக்கா ஒரு தங்கை, அப்பா பெயர் காளி, அம்மா பெயர் சரசா. அவனை ஊரில் பெரும்பாலும் காளி பையன் என்றே அழைப்பார்கள், நாங்கள் K P என்று. எங்கள் ஊரில் ஒரு ஓரத்தில் அவர்கள் வீடு இருக்கிறது. இத்துடன் மணிபுரம் எல்லை முடிவு என்று கோடு போட்டது போல் வரிசையாக சில வீடுகள் இருக்கும், அதில் கடைசி வீடு தான் பழனிச்சாமியின் வீடு. அவனுடைய அப்பா ஒரு அரிசி மில்லில் வேலை செய்தார், இன்னும் செய்கிறார் என்று நினைக்கிறேன். பழனிச்சாமி வீடு இருந்த அந்த வரிசை முழுவதும் அவர்கள் உறவினர்கள் வீடே.

எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகம் எப்போது நிகழ்ந்தது என்று நினைவில் இல்லை. ஆனால் நினைவு தெரிந்த நாளில் இருந்து ஊரில் என்னோடு சுற்றிய ஒரே நண்பன் அவன் தான். நாங்கள் இணைந்து ஐஸ் நம்பெரிலிருந்து கிரிக்கெட் கபடி வரைக்கும் விளையாடியிருக்கிறோம். கிரிக்கெட்டை பொறுத்தவரை அப்போது எங்கள் ஊரில் இருந்த நட்சத்திர ஆட்டக்காரர்கள் பாலன், K P மற்றும் நான் (அப்போது). எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் இருப்பவர்களை இரு அணிகளாக பிரித்து நான் ஒரு அணிக்கும், பழனிச்சாமி ஒரு அணிக்கும் கேப்டனாக இருப்போம், சில சமயங்களில் இருவரும் ஒரு அணியில் இருந்தும் ஆடுவோம். எங்கள் ஊர் கிரிக்கெட்டில் அப்போது continuous ஓவரெல்லாம் உண்டு, அதாவது ஒருவரே தொடர்ந்து மூன்று ஓவர் போடலாம். பக்கத்து ஊரில் எல்லாம் போய் விளையாடி இருக்கிறோம். அவனுடைய அக்காவும் என் அக்காவும் நண்பர்கள். அவனுடைய அக்கா என்னை எங்கள் ஊரின் G T நாய்டு என்று அழைப்பார், நான் அவ்வளவு புத்திசாலியாம். அவன் வீட்டில் எப்போதும் எதாவது ஒரு புத்தகம் படிக்க கிடைக்கும் ராணி காமிக்ஸ், ராணி முத்து, ராஜேஷ்குமார் கிரைம் நாவல் மற்றும் சில மாத வார இதழ்கள். இதெல்லாம் அவன் வாங்கியிருப்பான் அல்லது மற்றவர்களிடமிருந்து வாங்கி வந்திருப்பான், எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் வர இதெல்லாம் ஒரு காரணமா அமைந்தது. நான் முதலில் படித்தது, காமிக்ஸ் புத்தகம், அது அவனுடைய வீட்டில் இருந்துதான்.

அவனுடைய வீட்டில் எனக்கு எல்லா உரிமையும் இருந்தது, என் மேல் அவர்களுக்கு ஒரு மரியாதை, அவன் அதிக மதிப்பெண்கள் வாங்கா விட்டால் அவன் நல்ல படிக்க வேண்டும் என்று என்னை சொல்ல சொல்வார்கள். அவரவர் பள்ளியில் நடப்பதை பகிரிந்து கொள்வோம். வெவ்வேறு மீடியம்களில் படித்ததால் இருவரும் சேர்ந்து படித்ததில்லை, இருவரும் ஓரளவு படித்தோம். அவனுடைய பள்ளி நாட்களில் நான் விடுப்பில் இருக்கும் சமயங்களில் அவனுடைய பள்ளிக்கு சென்றிருக்கிறேன், அங்கு அவனுடன் பள்ளியில் கொடுக்கும் உணவை உண்டுவிட்டு, அவனுடைய பள்ளி நண்பர்களுடன் விளையாடிவிட்டு வந்திருக்கிறேன். அப்போது வருடா வருடம் எங்கள் ஊரில் விளையாட்டு போட்டி நடக்கும், அதற்கு பரிசு வாங்க ஊர் மக்களிடம் பணம் வசூலிக்க நானும் அவனும் போவோம், வருடா வருடம் மின்னொளியில் நடந்த கபடி போட்டிகளை விடிய விடிய பார்த்திருக்கிறோம், அவ்வப்போது ஊரில் பொதுவில் டிவி டெக் வைத்து ஒளிபரப்பப்படும் படங்களை ஒன்றாக பார்த்திருக்கிறோம். இப்போது விளையாட்டு போட்டியும் இல்லை, கபடி போட்டியும் நடத்தப்படுவதில்லை, யாரும் டெக்கில் படம் போடுவதும் இல்லை.

நாங்கள் இருவர் மட்டும் இருக்கும் சமயங்களில், எங்கள் வீடு வாசலில் நாங்கள் மட்டும் கிரிக்கெட் விளையாடுவோம். கால், அரை பரீட்ச்சை சமயங்களில், தேர்வு இல்லாத மதிய வேளைகளில் என் வீட்டு வாசலில் பிளாஸ்டிக் பந்தில் பேசிகொண்டே கிரிக்கெட் விளையாடியது இன்னும் நினைவில் இருக்கிறது. பத்தாவதில் 350 மதிப்பெண்களே அவன் வாங்கியிருந்தான், ஆனாலும் கவுந்தப்பாடி அரசு பள்ளியில் முதல் குரூப் கிடைக்குமென்றும் அதை தேர்வு செய்யுமாறும் கூறியிருந்தேன், அவனும் சரி என்றான். +1 முதல் நாள் பள்ளி சென்று வந்த நான், அவனுடைய வீடிற்கு போனேன் அவன் வீட்டில் இல்லை, சரி என்று அவன் புத்தக பையை பார்த்த போது தான் அவன் மூன்றாவது குரூப் எடுத்தது தெரிந்தது, எனக்கு பெரும் கோபம் வந்தது. ஏதோ அவன் பெரும் தவறு செய்தது போல் தோன்றியது. அவனிடம் மிகவும் வருத்தப்பட்டுவிட்டு வந்தேன், அவன் தனக்கு இதே போதுமென்றான்.

+2 படிக்கும் போது கொஞ்ச நாள் பள்ளி விடுதியில் தங்கி இருந்ததாலும் தீவிரமாக படித்து கொண்டிருந்ததாலும் அவனுடன் அதிகம் பேச முடியவில்லை, எங்களுகிடையில் சின்ன இடைவெளி விழுந்தது. மேலும் இச்சமயத்தில் அவனுக்கு சில புது நட்பு கிடைத்திருக்கலாம். +2 முடித்த பின் நான் பொறியியல் சேர்க்கைக்கு காத்திருந்தேன், அவன் மேல் படிப்பிற்கு எதுவும் முயற்சி செய்ததாக தெரியவில்லை. மேலே எதுவும் படித்தானா என்று நினைவில் இல்லை. நான் பொறியியல் கல்லூரி சேர்ந்த புதிதில் ஊருக்கு வரும் போது அவன் அவர்கள் உறவினர் ஒருவரிடம் முடி திருத்தல் தொழில் கற்றுக்கொண்டிருப்பதாக கூறினர். பிறகு சில மாதங்கள் கழித்து நான் கவுந்தப்பாடி சென்ற போது அங்கு அவன் கடை வைந்திருந்தது தெரிந்தது, கொஞ்ச நேரம் பேசி விட்டு வந்தேன் எங்களுக்கிடையில் ஒரு இடைவெளி இருந்தது தெரிந்தது. அதன் பிறகு செமஸ்டர் விடுப்புகளில் ஊருக்கு வரும் சமயங்களில் சாலையில் சந்திக்கும் போது பேசிக்கொள்வோம். சில காலம் கழித்து அவன் செய்து வந்த தொழிலையும் விட்டுவிட்டு கரூரில் ஏதோ ஒரு மகளிர் குழுவிலோ அமைப்பிலோ வேலை செய்வதாக கேள்விப்பட்டேன். சமீபகாலங்களில் நான் அவனை பற்றி கேள்விப்பட்டதெல்லாம் கெட்ட விசையங்களே (என்னுடைய இரு சம்பவங்கள் பதிவில் முதல் சமபாவம் இவனை பற்றியதே).

ஒரு ஏழ்மையான படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் இருந்த இவன், நன்றாக படித்து நல்ல நிலைக்கு வருவான் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எல்லாம் வேறு மாதிரி ஆகிவிட்டது. அவனுடைய இந்த தலைகீழ் மாற்றத்திற்கு காரணம் +1, +2விலோ அல்லது அதற்கு பிறகோ அவனுக்கு ஏற்பட்ட கெட்ட சகவாசங்களே. நான் அவனை பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது, இனி எப்போது அவனை பார்த்தாலும் அந்த பழைய நட்பு எட்டி பார்க்குமா என்பது சந்தேகமே, மீண்டும் அந்த நட்பு துளிர்க்க வேண்டும் என்பதே என் ஆவல். இந்த மாதிரி எத்தனையோ பழனிச்சாமிகள் பல ஊர்களில் வழி தவறி போய் ஊர் சுற்றிகொண்டிருகிறார்கள், நாமெல்லாம் தப்பி பிழைத்து உலகம் சுற்றிகொண்டிருகிறோம்.

Thursday, 3 September 2009

கிளிஞ்சல் 4 - ஆசிரியர் ராஜேந்திரன்

ஆசிரியர்கள், இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் கூட சிலர் இருக்கிறார்கள் ஆனால் ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப குறைவு, படிக்காதவர்களுக்கு கூட அவர்கள் செய்யும் தொழில் சம்பந்தமான ஆசிரியர்கள் இருப்பார்கள். இதுவரையான என் பயணத்தில் பல ஆசிரியர்களை கடந்து வந்திருக்கிறேன், அதில் எனக்கு பிடித்த ஆசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள். ஐந்தாவது வரை படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர், கணக்கு வாத்தியார் பரமேஸ்வரன், சரஸ்வதி மேடம், தமிழன்னை, விலங்கியல் ஆசிரியர் அர்த்தநாரி, வேதியியல் ஆசிரியர் சரவணன், டியூஷன் வேதியியல் ஆசிரியர் ராஜேந்திரன், கல்லூரி விரிவுரையாளர்கள் மகாலிங்கம், மகேஷ் மற்றும் குமார் போன்றோர்கள் மறக்க முடியாத ஆசிரியர்கள். இந்த வரிசையில் நான் புத்தகம் படிக்கவும், வலைப்பூவில் எழுதவும் ஆர்வத்தை தூண்டியவர் என்கிற முறையில் திரு. சுஜாதாவும் என் ஆசிரியரே. மேலே குறிப்பிட்ட பல ஆசிரியர்களையும் விட்டு நான் விலகி விட்டேன், ஒரு சிலருடன் தான் தொடர்பு இருக்கிறது. என்னுடைய ஆறாவது வகுப்பு முதல் இன்று வரை நான் விலகாமல் இருக்கும் ஒரே ஆசிரியர் என்னுடைய இயற்பியல் ஆசிரியர் திரு. ராஜேந்திரன், இந்த வார கிளிஞ்சல்.

நான் ஐந்தாவது வரை கவுந்தப்பாடி காந்தி கல்வி நிலையத்தில் படித்தேன், ஆறாவது முதல் பள்ளி மாற வேண்டிய நிலை, நான் ஆங்கில வழிக்கல்வியில் தான் படிப்பேன் என்று அடம் பண்ணியதால் நான் பெருந்துறை விவேகானந்த matriculation பள்ளியில் சேர்க்கப்பட்டேன், எங்கள் வீட்டிலிருந்து 15 கீ.மீ. தொலைவில் அமைந்திருந்தது இப்பள்ளி. நான் சேர்ந்ததில் இருந்த பள்ளி படிப்பை முடிக்கும் வரை இப்பள்ளியில் இருந்த ஆசிரியர்களில் ராஜேந்திரன் ஆசிரியரும் ஒருவர், இயற்பியல் ஆசிரியர். நான் படிப்பில் ஏழாவது வரை சுமார் தான், எட்டாவதில் இருந்துதான் ஓரளவு நன்றாக படித்தேன். ஆறு, ஏழு வகுப்புகளில் ஒரு ஆசிரியர் மாணவனாக தான் பழகினோம், எட்டவதில் இருந்து எங்கள் பிணைப்பு கொஞ்சம் அதிகமானது, நான் படிப்பில் சுமார் என்பதாலோ என்னவோ ஏழாவது வரை கொஞ்சம் பயத்துடன் ஆசிரியர்களை பார்த்துவந்தேன், எட்டவதில் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை எனக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது, கொஞ்சம் அக்கறையுடன், நேசத்துடன் என் படிப்பை அணுகினேன், கொஞ்சம் படிக்கவும் செய்தேன், அதனால் ஆசிரியர்களும் நண்பர்களாக தெரிந்தனர். முதல் ரேங்க் வாங்கவில்லை என்றாலும் நான்காவது ஐந்தாவது ரேங்க் வாங்கும் அளவுக்கு படித்தேன். எட்டவதில் இருந்து ஆசிரியர்களுடன் நன்றாக பழக ஆரம்பித்தேன் குறிப்பாக ராஜேந்திரன் ஆசிரியருடன்.

நான் காலை ஏழு மணி 17ஆம் என் பேருந்தில் பள்ளிக்கு செல்வேன், நான் ஏறும் நிறுத்தத்தில் இருந்து 15 நிமிடத்தில் வரும் கருங்கரடு நிறுத்தத்தில் ஆசிரியர் ஏறுவார், நான் ஏறும்போது எப்படியும் அமர்வதற்கு இடம் இருக்கும் அவர் ஏறும் போது எப்போதும் இடம் இருக்காது. நான் பேருந்தில் ஏறிய சில நிமிடங்களில் தூங்க ஆரம்பித்துவிடுவேன் நான் இறங்கும் நிறுத்தத்தில் தான் விழிப்பேன். அந்த நிறுத்தத்தில் இருந்து பள்ளிக்கு 10 நிமிடம் நடக்க வேண்டும், நானும் அவரும் பேசிக்கொண்டே நடந்து செல்வோம். ஆசிரியர் நல்ல உயரம், அவர் வேகமாக நடப்பார் நானும் அவருக்கு இணையாக நடக்க முயற்சிப்பேன், சில நாட்கள் நான் கிட்ட தட்ட ஓடுவேன். இந்த நடை பயணத்தின் போது நாங்கள் பொதுவாக விளையாட்டு சம்பந்தமாக எதாவது பேசுவோம், குறிப்பாக கிரிக்கெட் அல்லது டென்னிஸ். கிரிக்கெட் அவருக்கு மிகவும் பிடிக்கும். விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார், பூ பந்து, கிரிக்கெட் விளையாட்டுகளில் எங்களுடன் விளையாடியிருக்கிறார்.பள்ளி முடிந்த பிறகு மாலை வேளைகளில் அவர் பெரும்பாலும் பூ பந்து விளையாடுவார்.

எட்டாவதில் முதல் மாதத்துக்கு பிறகு அவர் மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஆனார். முதல் மாதம் terror. எட்டாவதில் முதல் பாடம் Vernier caliper நடத்தும் போது வகுப்பில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அனைவரும் அடி வாங்கினோம், அதன் பிறகு இரண்டாவது பாடம் நடத்தும் போது What is mass? என்ற கேள்விக்கு பயந்துகொண்டு நான் கூறிய பதில் அவர் காதில் விழுந்ததா இல்லையோ தெரியவில்லை அவர் இடது கையால் விட்ட அறை இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு அவரிடம் நான் அடிவாங்கவில்லை, சமத்து மாணவனாகிவிட்டேன். ஒன்பதாவது வரைக்கும் எங்களுக்கு பாடம் எடுத்தார், பள்ளியில் +1, +2 ஆரம்பித்த பிறகு அவர் அவர்களுக்கு பாடம் நடத்த போய்விட்டதால், பத்தாவதுக்கு மட்டும் ஆனந்த் என்ற ஆசிரியர் எங்களுக்கு இயற்பியல் பாடம் நடத்தினார். ராஜேந்திரன் சார் நன்றாக பாடம் நடத்துவார், அவர் பாடம் நடத்தியதில் புரியாதது என்று எதுவும் இருக்காது, வகுப்பில் புரியவில்லை என்று தனியாக கேட்டாலும் அழகாக சொல்லித்தருவார். அரைகுறையாக, அவசரமாக பாடம் நடத்துவதெல்லாம் இருக்காது, நிதானமாக ஆழமாக நடத்துவார். +2 படிக்கும் போது இயற்பியலை என் விருப்பாடமாக கருதியதற்கு முக்கிய காரணம் அவர் தான்.

என் படிப்பின் மேல் கொஞ்சம் தனி கவனம் செலுத்தினார் அவர், காரணம் என் அப்பா. அவர்கள் எப்படி அறிமுகமாகிகொன்டார்கள் என்று நினைவில் இல்லை, ஆனால் இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது, இருக்கிறது. அப்பா என் படிப்பை பற்றி அவரிடம் விசாரிப்பது உண்டு, ஆசிரியரும் நான் நன்றாக படிப்பதாகவும், நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவேன் என்றும் கூறுவார். சில சமயங்களில் அப்பா என்னை வீட்டிற்கு அழைத்து செல்லும் போது ஆசிரியரும் எங்களுடன் வருவார். என் படிப்பை தவிர அவர்கள் விவசாயம் குறித்தும் பேசிக்கொள்வதுண்டு. நான் +2 படிக்கும் போது "நீ நல்ல மார்க்கு வாங்க வேண்டும் அண்ணாமலை, உங்கப்பா உன்மேல நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்" என்று கூறுவார், நான் படித்தற்கு இதெல்லாம் எதோ ஒரு வகையில் மறைமுக காரணமாக இருந்திருக்கலாம். +2 இயற்பியல் பாடத் தேர்வு முடிந்தன்று நான் வீட்டிற்கு செல்ல அண்ணாசாலை நிறுத்தத்தில் நின்றுகொண்டிருதேன் அப்போது சற்று தள்ளி நின்றிருந்த ஆசிரியர் "பரீட்சை நல்ல எழுதியிருக்கிற இல்ல? 185 மார்க்காவது வாங்கணும் அண்ணாமலை, இல்லாட்டி உங்கப்பா மூஞ்சியில முழிக்க முடியாது" என்றார் நான் "கண்டிப்பா நல்ல மார்க் வாங்குவேன் சார்" என்றேன். இந்த காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது, சொன்னபடியே நல்ல மார்க் வாங்கினேன்.

நான் பள்ளியை விட்டு வந்த ஒன்றிரண்டு வருடங்களில் ராஜேந்திரன் சார், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிவிட்டார். நான் பள்ளி படிப்பு முடித்து கல்லூரி சேர்ந்த பின்னரும், வருடம் ஒரு முறையாவது பள்ளிக்கு செல்வதுண்டு, அங்கிருக்கும் என் ஆசிரியர்களிடம் பேசிவிட்டு வருவதுண்டு, அதே போல் அவரையும் தலைமை ஆசிரியர் அறையில் சந்தித்து பேசிவிட்டு வருவதுண்டு. எனக்கு பாடம் நடத்திய பலர் இன்று அந்தப்பள்ளியில் இல்லை அவர்களில் சிலருக்கு அரசு வேலை கிடைத்து, சிலர் வேறு பள்ளிகளுக்கு மாறிவிட்டனர். ராஜேந்திரன் சாரும் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்துவிட்டார். நான் ஒரு முறை அமெரிக்காவிலிருந்து அவரைத் தொலைபேசியில் அழைத்து பேசியிருந்தேன். பிறகொருமுறை சந்திக்கும் போது அந்த தொலைப்பேசி அழைப்பை குறிப்பிட்டு, தன்னுடைய மாணவன் ஒருவன் வளர்ந்து அமெரிக்காவிலிருந்து தனக்கு தொலைப்பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். என் வளர்ச்சியில் முக்கியப்பங்கு அவருக்கு இருக்கிறது அப்படிப்பட்ட ஆசிரியருக்கு என்னுடைய வணக்கங்களை எதாவது ஒரு முறையில் சொல்லிக்கொண்டிருகிறேன். நாங்கள் இப்போதும் சந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் தான் இருக்கிறோம். இன்று காலை கூட அவரை அழைத்து ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினேன். ஒரு வருடம் இடைவெளி விட்டு தொலைப்பேசினாலும், சந்தித்து கொண்டாலும் எந்த தயக்கமும் இன்றி கடந்த முறை சந்திப்பில் விட்ட இடத்தில இருந்து பேச முடிவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆசிரியர் என்பதைவிட அவரை ஒரு நண்பராகவே கருதுகிறேன்.

நான் இதுவரை என் வாழ்வில் அடைந்த முன்னேற்றத்தில் அவர் பங்கிருந்ததை போல, இன்னும் அடையப்போகும் முன்னேற்றத்திற்கும் அவருடைய வழிகாட்டலும் ஆசிர்வாதமும் எப்போதும் இருக்கும். இப்படி இவ்வுலகெங்கும் பல மாணவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றிகொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

Monday, 24 August 2009

கிளிஞ்சல் 3 - அந்தியூர்

அந்தியூர் என்ற ஊரை கேள்விப்படிருப்பீர்கள், ஆனால் நான் சொல்லப்போவது அந்தியூர் என்ற ஊரை பற்றியில்லை அந்தியூர் என்ற நபரை பற்றி. எனக்கு அந்தியூர் என்ற ஊர் அறிமுகம் ஆகும் முன் அந்தியூர் என்ற நபர் தான் அறிமுகமானார். அந்தியூருடைய பெயர் தங்கராசு. அவர் பெயர் தங்கராசு என்பது பல பேருக்கு தெரியாது, ஏன் எனக்கே இப்பதிவை எழுத ஆரம்பிக்கும் முன் அவர் பெயரை யோசிக்கும் பொது நினைவு வரவில்லை, பின் என் அம்மாவை கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவரின் சொந்த ஊர் அந்தியூர் பக்கத்திலிருக்கும் அம்மனாம்பாளையம், அந்த ஊரிலிருந்து எங்கள் ஊருக்கு அவரின் அப்பா குடும்பத்துடன் வந்து தங்கினார். அந்தியூர் பக்கத்திலிருந்து வந்ததால் சிறு வயதிலேயே தங்கராசு என்று அழைக்கப்படாமல் அந்தியூர்காரன் , அந்தியூர்காரன் என்றழைக்கப்பட்டார், பின்னர் அதுவே அந்தியூர் ஆனது. பின்னர் பெரும்பாலும் அவர் அந்தியூர் என்ற பெயரை தவிர வேறு பெயரில் அழைக்கப்படவில்லை.

அந்தியூரை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், உழைப்பாளி.
"வயலுக்கு தண்ணி கட்டனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"பாத்தி பிடிக்கனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"மஞ்சள் வெட்டனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"கரும்பு வெட்டனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"ஐயோ் பாம்பு..." - "அந்தியூரை கூப்பிடுங்க"

எத்தனையோ நாள் இரவு எங்கள் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சியிருகிறார், வெட்டி வைத்த மஞ்சளுக்கு காவல் இருந்திருக்கிறார், இரவெல்லாம் நெல்லடித்திருகிறார். எங்கள் ஊரில் எதாவது பனை அல்லது தென்னை மரம் வெட்டப்பட்டால் அதிலிரிந்து குருத்து வெட்டி தந்திருக்கிறார், பனங்காய் வெட்டி தந்திருக்கிறார், எங்கள் வீட்டில் கோழி குழம்பு என்றால் கோழி பொசுக்குவது அவராகத்தான் இருக்கும்.அவர் செய்யாத தோட்ட வேலை எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆடி பெருக்கின் போது ஊஞ்சல் கட்டுவதாகட்டும், எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் விசேசத்தின் போது உதவி செய்வதாகட்டும் அவருக்கு நிகர் அவர் தான்.என்ன வேலை எத்தனை மணிக்கு சொன்னாலும் கொஞ்சமும் தயக்கமின்றி செய்வார். என் அக்காவின் திருமணம் வேறு ஊரில் நடந்த போது, கல்யாண வீடு என்று தெரிவதற்க்காக அவருடைய டேப் ரெகார்டரை எங்கள் வீடு திண்ணையில் வைத்து பாட்டு ஒலிபரப்பியிருக்கிறார்.

பார்ப்பதற்கு ஆரம்பகால விஜயகாந்த் போல இருப்பார்.கடின உழைபினாலேயே அவர் உடல் மிக வலுவாக இருக்கும், என் சிறுவயதில் அவர் புஜ பலத்தை காட்ட சொல்லி அதில் தொங்கியிருக்கிறேன், எங்கள் ஊர் அர்னால்ட் அவர் தான். அவர் முகத்தில் எப்போதும் சிறு முரட்டுத்தனம் குடியிருக்கும். எப்பவாவது சிரிப்பார். காட்டில் வேலை செய்யும் போது நேரம் வீணடிக்காமல் ஏதோ தன் சொந்த தோட்டத்தில் வேலை செய்வது போல அக்கறையாக வேலை செய்வார். எங்கள் தோட்டத்தில் அவர் செய்யாத வேலை இல்லை, எங்கள் தோட்டத்தில் விளைந்த பல வெள்ளாமைகளில் அவருடைய உழைப்பு கணிசமாக உண்டு.

நான் எப்போதும் அவரை அந்தியூர் அண்ணா என்று தான் அழைப்பேன். என்னை பெரும்பாலும் மலை என்று அழைப்பார். காலையும் மாலையும் தேநீர் குடிப்பதற்கு தினமும் எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் எங்கள் வீட்டிற்கு வராத நாட்கள் மிகக் குறைவு. என்னை பல முறை பள்ளியில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். என் பாட்டி கவலைக்கிடமாக இருந்த போது கூட அவர்தான் என்னை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். இப்படி பல வேலைகளில் பல உதவிகள். என் சிறு வயது முதல் கல்லூரி காலம் முடியும் வரை என் வாழ்வில் பல இடங்களில் பரவிகிடக்கிறார் அந்தியூர் அண்ணன். அவருடைய மனைவி பெயர் தங்கம்மாள், அவரும் எங்கள் தோட்டத்தில் வேலை செய்திருக்கிறார், இன்னமும் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு மகன்கள் செல்வம், முத்து. இவர்கள் பெரிதாக படிக்கவில்லை. இருவரும் பனியன் கம்பெனிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

சில பொருட்கள், சம்பவங்கள் சிலரை ஞாபகப்படுத்தும், அந்த வகையில் இரண்டு விசையங்கள் அவரை ஞாபகப்படுத்தும் ஒன்று பலாப்பழம் மற்றொன்று ஆடி மாதம் கட்டும் தூரி (அதாவது ஊஞ்சல்). ஒவ்வொரு வருடமும் பலாப்பழ சீசனின் போது என் அப்பா வாங்கி வரும் பலாப்பழத்தை வெட்டி சுளைகளை எடுத்து தருவது அந்தியூர் அண்ணன் தான். பலாப்பழத்தை மற்ற பழங்களை போல அப்படியே வெட்டி சாப்பிட முடியாது, பலாப்பழத்தை வெட்டும் போது அதனுள் இருக்கும் நார்கள் அதிலுள்ள பசையால் கத்தியிலும், கையிலும் ஒட்டிக்கொள்ளும் பிறகு அதை சுத்தம் செய்ய கடினமாக இருக்கும், அதற்காகவே பலாப்பழத்தை வெட்டும்முன் கத்தி மற்றும் கைகளில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொண்டு வெட்டுவதுண்டு, அப்படி மிக அழகாக சுத்தமாக வெட்டித் தருவார் அவர். அதே போல தூரி, ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் தூரி கட்டி ஆடுவது பல இடங்களில் உள்ள பழக்கம், அப்படி நாங்கள் எங்கள் புளிய மரத்தில் தூரி கட்டி ஆடுவோம், அந்த தூரியை கட்டி தருவது அவர் தான். பல நேரங்களில் தூரி கட்டிவிட்டு வேகமாக ஆட்டிவிடுவார் கல்லூரி சென்ற காலங்களில் கூட தூரி ஆடியது உண்டு,. அவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் இரண்டு பனை மரங்களுக்கு இடையில் பெரிய தூரியெல்லாம் கட்டித் தருவார், அதில் ஆடுவதே பயமாக இருக்கும்.

அவருடைய கேட்கும் திறன் சில வருடங்களுக்கு முன் கொஞ்சம் குறைந்தது. கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள் அவர் எங்கள் ஊர்லிருந்து கவுந்தப்பாடிக்கு மிதிவண்டியில் செல்லும் போது பின்னாடி வந்த லாரி மோதியது, பலமான அடி, உடனடியாக பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்றும் அவர்கள் போலீஸ் கேஸ் அது இது என்று ஏற்ப்படுத்திய தாமதத்தில் அங்கேயே தன்னுடைய கடைசி மூச்சை சுவாசித்தார். இந்த விபத்து பற்றிய தகவல் எங்கள் வீடிற்கு தான் முதலில் தொலைப்பேசியில் தெரிவிக்கப்பட்டது, அவரின் உறவினர்கள் செல்லும் போது அவர் இறந்திருந்தார். இந்த சம்பவம் நடந்தன்று நான் உடல் நிலை சரியில்லாததால் விடுப்பில் வீட்டில் தான் இருந்தேன், அந்த செய்தி கேட்டு என்னால் நம்ப முடியவில்லை, அழ ஆரம்பித்துவிட்டேன், வேறென்ன செய்ய முடியும். காவல் துறை விசாரணைக்கு பிறகு அவருடைய உடல் எடுத்து வரப்பட்டது, உடல் நிலை சரி இல்லாததால் நான் சென்று பார்க்கவில்லை, அதுவும் நல்லதுதான் என்று தோன்றுகிறது பிறகெப்போது அவர் நினைவு வரும்போதெல்லாம் அவருடைய கம்பீரமான முகமே ஞாபகம் வருகிறது.

கடந்த முறை ஊருக்கு சென்ற போது என் அக்கா மகள் தூரி கட்டி தர சொல்லி அடம் பண்ணி கொண்டிருத்தால், ஆடி 18 அன்று வரை தூரி கட்டப்படாமலையே இருந்தது பிறகு அன்று மதியம் போலத் தான் தூரி கட்டப்பட்டது. அவள் அன்று மாலை வரை மட்டும் ஆடிவிட்டு பிறகு ஜெடெக்ஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். அந்தியூர் அண்ணன் போன்றவர்களை இவள் வாழ்க்கையில் சந்திப்பாளா என்பது சந்தேகமே. அந்தியூர் அண்ணன் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என் மனதிலும், அவருக்கான இந்த அஞ்சலி பதிவிலும். உங்கள் ஊரிலும் இதுபோல் போல் ஒருவர் கண்டிப்பாக இருப்பார், தேடிப்பாருங்கள்.

Thursday, 13 August 2009

கிளிஞ்சல் 2 - மாரி என்கிற மொட்ட தாத்தா

என்னுடைய நினைவு தெரிந்த நாளிலில் இருந்து என்னுடைய 15 வயது வரையில் எங்கள் வீட்டுக்கு எதிரில் குடியிருந்தவர் மாரி. பெயர் மாரியாயிருந்தாலும் நான் என் அம்மா அப்பா அக்கா அனைவரும் மொட்டதாத்தா என்று தான் அழைப்போம். பல காலம் நான் காலை வீட்டை விட்டு வெளியில் வந்ததும் அவரை தான் முதலில் பார்ப்பேன்.எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த எங்கள் இடத்தில் ஒரு குடிசை அமைத்து அவரும் அவரது மனைவியும் வாழ்ந்துவந்தனர். அவர் வீட்டிற்கும் எங்கள் வீட்டிற்கும் நடுவில் ஒரு தார் ரோடு மட்டுமே. அவருக்கும் அவர் மனைவிக்கும் பல வருடமா பேச்சு வார்த்தை கிடையாது, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நான் பார்த்ததே இல்லை. அந்த குடிசையில் இரண்டு அறைகள் இருந்தன, எங்கள் வீட்டை நோக்கி இருந்த அறையில் அவரும் அதன் பக்கத்துக்கு அறையில் அவர் மனைவியும் குடியிருந்தனர். மாரி ஒரு சவரத் தொழிலாளி. கொஞ்சம் திக்கி திக்கி பேசுவார். அந்த ஒரு அறையே தான் அவர் உறங்கும் இடமும் உழைக்கும் இடமும். நான் 12வது முடிக்கும் வரை அவரை தவிர நான் வேற யாரிடமும் முடி வெட்டிக்கொண்டதாக ஞாபகம் இல்லை. அவரிடம் தலையை கொடுத்தல் என் அம்மாவின் ஆணைப்படி ஒண்ட வெட்டிவிடுவார், கிட்ட தட்ட மொட்டை அடித்து 15 நாள் ஆனா மாதிரி இருக்கும். மறுபடியும் முடிவெட்ட இரண்டு மாதம் ஆகிவிடும்.

மாரி சமைக்கவெல்லாம் மாட்டார், யாராவது வீட்டில் வாங்கி சாப்பிட்டு கொள்வார். தனது பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சில வீடுகளுக்கு சென்று வந்தால் அவர் பாத்திரம் நிறைந்து விடும் பின்பு அவர் வயிறும். தினமும் உணவு சாப்பிடுகிறரோ இல்லையோ கண்டிப்பாக மருந்து (சரக்கு) சாப்பிட்டாக வேண்டும். தினமும் மாலை எங்கள் ஊரிலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவுந்தப்பாடிக்கு கிளம்பிவிடுவார். மளிகை கடை, மருந்துக்கடை, திரை அரங்கு என்று கிட்டத்தட்ட எல்ல அத்யாவசியமான பொருளும் கிடைக்கும் இடம் கவுந்தப்பாடி. மாரி தினமும் மாலை பேருந்துலேயோ இல்லை மிதி வண்டியலேயோ கிளம்பி விடுவார். அவர் வாகனத் தேர்வு நேரத்தையும் கையிருப்பையும் பொறுத்தது. கையில் காசு கொஞ்சம் கம்மியாக இருந்தால் யாரிடமாவது வாங்கிக்கொண்டு கிளம்பிவிடுவார். தண்ணி அடித்துவிட்டு வரும்போது மிகவும் அமைதியாக இருப்பார் அல்லது அவர் நம்மை பார்த்து பேசாமல் அமைதியாக இருந்தால் அன்று அவர் தன்னியடித்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். தண்ணியடித்துவிட்டு அவர் யாரிடமும் பிரச்சனை செய்வதோ, உலறுவதோ இருக்காது. ஓரிருமுறை அவர் மனைவியுடன் சின்ன தகராறு செய்ததாக ஞாபகம்.

அவருக்கு எப்போதும் என் மேலும் என் அக்கா மேலும் தனிப்பிரியம் உண்டு. எப்போது கவுந்தப்பாடியில் இருந்து வரும்போதும் எங்களுக்கு கண்டிப்பாக எதாவது மிக்சர் அல்லது பக்கோடா பொட்டலம் வாங்கிவருவார். அவர் கையிருப்பை பொறுத்து ஒன்றோ இரண்டோ வாங்கி வருவார். பல நாட்கள் அவர் கிளம்பும் போதே நானும் என் அக்காவும் "எங்களையும் கவனிச்சுக்க மொட்டத் தாத்தா" என்று சொல்லியிருக்கிறோம். கண்டிப்பாக அவர் எங்களுக்கு எதாவது வாங்கி வருவார், அவர் வாங்கி வராத நாட்கள் மிக சொர்ப்பமே. அந்த மிக்சர்களுக்கு தனி சுவை இருக்கும், இப்போதும் அந்த சுவை தூரத்து உறவினரை போல எப்பவாவது மனதில் வந்து போகும். அவருக்கும் எங்களுக்கும் எப்போதும் நல்ல புரிதல் இருந்தது, அவருடன் பழகுவதை எங்கள் வீட்டில் யாரும் தடுத்தது இல்லை.

அந்த காலங்களில் மொட்டதாத்தா கிட்ட தட்ட எங்களில் ஒருவராக இருந்தார், எங்கள் வீட்டிலிருந்து அவருக்கு சுவீட், காரம், காபி எல்லாம் தருவோம். அவர் கடையில் எதிரஎதிரக இரண்டு கண்ணாடிகள் இருக்கும், ஒரு கண்ணாடியின் பிம்பம் மற்றொரு கண்ணாடியில் பல ஆயிரம் பிம்பங்களாக தெரியும். கண்ணாடிக்குள் கண்ணாடிகள் இருப்பதாக தெரியும், அந்த வயதில் அது ஒரு ஆச்சர்யம். அவர் முடி வெட்டுபவர்களுக்கு தலையில் தண்ணியடிக்க ஒரு கண்ணாடி ஜாரில் தண்ணீர் நிறைத்து வைத்திருப்பார், அதன் தலையில் நீட்டிக்கொண்டிருக்கும் பைப்பை கீழ் நோக்கி அழுத்தினால் தண்ணீர் வரும், அதையெல்லாம் வைத்துக்கொண்டு விளையாடியது உண்டு. நாங்கள் செய்யும் குறும்புகளை பொறுத்துக்கொள்வார், திட்ட மாட்டார்.அவர் எங்கள் ஊரை விட்டு அதிகம் வெளியேபோனதாக தெரியவில்லை, அவருக்கு எங்கள் ஊரு தான் உலகம் போல இருந்தார். அவரை பார்க்க உறவினர்கள் எப்பவாவது வருவார்கள்.

என் வாழ்க்கையில் நான் அனுபவித்த தாத்தா பாசம் மிக குறைவு தான். என் அப்பாவின் அப்பா என் அப்பாவின் சிறு வயதிலேயே இறந்துவிட்டார், நான் பார்த்ததேயில்லை, புகைப்படத்தில் கூட. என் அம்மாவின் அப்பா எங்கள் மேல் மிகவும் பாசமாக இருப்பார் ஆனால் அவர் வீட்டுக்கு எப்பவாவது தான் செல்லுவோம், வருடா வருடம் முழு பரீட்ச்சை விடுமுறையின் போது கண்டிப்பாக செல்லுவோம், அந்த சமயத்தில் பல சொந்தங்கள் அங்கு வருவார்கள், ஒரே திருவிழா கோலமாக இருக்கும். எங்கள் தாத்தாவின் மீது எங்களுக்கு பாசம் கொஞ்சம் பயம் கலந்துதான் இருக்கும், அவரை அந்த ஊரே மரியாதை கலந்த பயத்துடன் தான் பார்க்கும், நாங்கள் பயம் கலந்த பாசத்துடன். கிட்டத்தட்ட ராஜ்கிரண் போல இருப்பார். அவர் நாங்கள் அங்கே இருக்கும் சமயத்தில் தினமும் எங்களுக்கு எதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவார், ஒவ்வொருவராக அவரிடம் ஒரு முத்தம் பெற்றுக்கொண்டும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டும் அந்த தின்பண்டங்களை வாங்கி வருவோம். அவர் முத்தம் கொடுக்கும் போது அவர் மீசை குத்தும் அது ஒரு சுகம், இப்போதும் என்னால் அதை உணரமுடியும். இப்படி வருடத்தில் ஒரிருமுறையே தாத்தா பாசம் கிடைக்கும் எங்களுக்கு மொட்டதாத்தாவின் பாசம் அந்த குறையை கொஞ்சம் குறைத்தது அந்த வகையில் எங்களுக்கு அவரும் ஒரு தாத்தாவே.

சுமூகமாக இருந்த எங்கள் உறவில் விஷம் வைத்தனர் சிலர். எங்கள் வீட்டின் மேல் இருந்த கோபத்தில் எங்கள் இடத்தில் குடியிருந்த மொட்டதாத்தாவின் மனைவியின் மனதை கெடுத்து, 14 வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் வாடகைக்கு இருந்தால் அது அங்கிருந்தவர்களுக்கே சொந்தம் என்று சில விசமிகள் சொல்லிவிட அதனால் சில பிரச்சனைகள் வந்தன. மொட்டதாத்தா இதற்க்கு உடந்தையில்லை என்றாலும் அவரால் அதை எதிர்க்க முடியாமல் ஒதுங்கிவிட்டார். பிறகு பஞ்சாயத்து அது இது என்று கிட்ட தட்ட 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்டிவிட்டு எங்கள் இடத்தை மீட்டார் என் அப்பா. அந்த சம்பவத்துக்கு பிறகு மொட்ட தாத்தாவின் மனைவி ஊரை காலி செய்துவிட்டார். மொட்டதாத்தா எங்கள் ஊரிலே ஒரு பெட்டி கடை வைத்து தன சவரத்தொழிலை தொடர்ந்து வந்தார் அப்போதும் அவருடன் ஓரளவு பேசி கொண்டுதான் இருந்தோம். சிலகாலங்கள் கழித்து கடையை எங்கள் ஊரிலிரிந்து பக்கத்து ஊருக்கு மாற்றி விட்டார். அவருடனான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமக குறைந்தது.

நான் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நான் எங்கள் ஊரிலிருந்த நாட்கள் குறைவு தான், அதனால் நாள் பட நாள் பட எனக்கும் அவருக்கும்மான இடைவெளி அதிகரித்தது. கல்லூரி படிக்கும் போது ஒரு சமயத்தில் அவரிடம் நான் முடி வெட்டிக்கொள்ள சென்ற போது அவர் நினைவில் நான் மங்கிப்போயிருந்தது தெரிந்தது. முடிவெட்டி முடிக்கும் வரை நான் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை, கடைசியாக தான் கண்டு பிடித்தார் அதற்காக கொஞ்சம் விசாரித்தார். இப்பவெல்லாம் நான் ஊருக்கு போகும் சமயங்களில் அவர் எங்கள் ஊர் பக்கம் வந்தாலோ இல்லை நான் அவர் ஊர் பக்கம் போனாலோ பார்ப்பேன், பேசுவது மிக குறைவு.எங்களுக்கு இடையில் இருந்த ஈர்ப்பு இப்போது ஏனோ ஏற்ப்படுவதில்லை.

இப்போதெல்லாம் யாரும் மிக்சர் போன்றவற்றை காகிதத்தில் கட்டி தருவதில்லை எல்லாம் கண்ணாடி காகிதங்கள் ஆகிவிட்டன, இப்போதும் கூம்பு வடிவிலான காகித பொட்டலங்கள் மொட்டதாத்தாவையும் அவர் வாங்கி தந்த மிகசரின் சுவையையும் நினைவுபடுத்தி கொண்டு தான் இருகின்றன.

Wednesday, 29 July 2009

கிளிஞ்சல் 1 - அருணாச்சலம்

நம் வாழ்க்கை பயணத்தில் நாம் பலதரப்பட்ட மனிதர்களை பல்வேறு சூழ்நிலைகளில் சந்திக்கிறோம், விருப்பமோ இல்லையோ நாம் பல மனிதர்களுடம் பழக வேண்டியிருகிறது. நம் பயணத்தில் நம் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்கள் கடைசிவரை நம்முடன் வருவார்கள், இது ஒருவகை. இன்னும் ஒரு சிலர் நம்முடன் சிலகாலம் மட்டும் இருப்பார்கள், எதாவது ஒரு சமயத்தில் நாம் அவர்களை விட்டோ இல்லை அவர்கள் நம்மை விட்டோ பிரிந்துவிடுவோம், இப்படி சந்திக்கும் நபர்கள் யாவரும் நம்மை கவர்வதில்லை அல்லது யாவருக்கும் நம்மை பிடிப்பதில்லை. என்னை கவர்ந்த மற்றும் எதாவது ஒரு விதத்தில் என்னை பாதித்த மனிதர்களை பற்றி "கிளிஞ்சல்கள்" என்ற தலைப்பில் எழுதப்போகிறேன். கடற்கரை மணலில் நாம் விளையாடும்போதெல்லாம் அத்தனை மனல்கடுகிடையில் சில கிளிஞ்சல்களை பொறுக்கி வருவதுபோல் நான் இதுவரை சந்தித்த கிளிஞ்சல்கள் பற்றி இந்த பதிவு. வாரம் ஒருவரை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

நான் கல்லூரியில் படிக்கும்போது கல்லூரி தங்கும் விடுதியில் தங்கித்தான் படித்தேன். எங்களது தெலுங்கு மைனாரிட்டி கல்லூரி என்பதால் 50% தெலுங்கு மாணவர்கள் படித்தனர் அதில் பெருமபன்மனையோர் கல்லூரி தாங்கும் விடுதுயில் தங்கினர் அதனால் கல்லூரி தெலுங்கு மைனாரிட்டி, விடுதி தமிழ் மைனாரிட்டி. நான் சேர்ந்த கல்லூரி அந்த வருடம் தான் திறக்கப்பட்டது, அதனால் அங்கு தங்கும் விடுதி எல்லாம் கட்டவே இல்லை ஒரு கல்யாண மண்டபத்தை மரப்பலகைகள் வைத்து அறைகள் தடுத்து விடுதியக்கியிருந்தனர். அந்த கல்யாண மண்டப விடுதிக்கு இரண்டு இரவு காவலாளிகள் அதில் ஒருவர் தான் அருணாச்சலம் - இந்த வர கிளிஞ்சல்.

ஆறடி உயரம், நல்ல தேகம், தொப்பை, முறுக்கு மீசை, முறுக்கு மீசைக்கு பின்னிருக்கும் முகத்தில் ஒரு மென்மை படர்ந்திருந்தால் அவர் கிட்ட தட்ட அருணச்சலம் போல தான் இருப்பார். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவர் விடுதி காவலுக்கு வருவார். நன்றாக பழகுவார், நானும் அவருடன் நன்றாக பழகினேன். சில நாட்களுக்கு பிறகு அவருக்கு நான் நல்ல தோஸ்த் ஆனேன். விடுதியில் Study hours நேரங்களில் வெளியே செல்ல விட மாட்டார்கள், அப்படியே சென்றாலும் ரெஜிஸ்டரில் கையெழுத்து போட வேண்டும், ஆனால் நான் கையெழுதெல்லம் போடாமல் போய் வருவேன் அவர் கண்டுக்கமாட்டார். அதே போல் பருவத்தேர்வின் (semester) போது இரவு தேநீர் குடிக்க போறதுக்கு சாவி தேவைப்படுபோதெல்லாம் (எப்போதும் இரவு 10 மணிக்கு உள்ளே பூடிவிடுவார்கள்) சாவி கேட்டால் எதுவும் சொல்லல் கொடுத்துவிடுவார். அதனாலையே பலருக்குகாக நான் சாவி கேட்டு வாங்கியிருகிறேன். நல்ல திடக்கத்திரமாக இருக்கும் அவருக்கு ஒரு சின்ன வீக்னஸ், அவர் இடுப்பை தொட்டால் துள்ளி குதிப்பார். பலமுறை அவர் இடுப்பை தொட்டுவிட்டு ஓடியிருக்கிறேன் சில நாட்கள் அவர் இதுக்காக என்னை கோவித்துகொண்டதும் உண்டு. அவர் குடும்பத்தை பற்றியெல்லாம் கூறுவார். தீபாவளி சமயங்களில் நண்பர்களெல்லாம் சேர்ந்து அவருக்கு துணியெல்லாம் எடுத்து கொடுத்துள்ளோம். நாங்கள் விடுதியில் இருக்கும் வரை எங்களுடன் இனிமையாக பழகிவந்தார்.

இப்படி சராசரியாக இருக்கும் இவருக்கு இன்னொருமுகமும் இருந்தது அது அவர் ஒரு தெருகூத்து நாடக நடிகர். ஒருநாள் நான் என் நண்பர்களுடன் அவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் பொது தான் ஒரு நாடக நடிகர் என்று சொன்னார். ஆனால் தற்போது நாடகம் எல்லாம் நடிப்பதில்லை என்றும் அதை விட்டுவிட்டதாக கூறினார். அவர் தெருக்கூத்தை விட்டதுக்கான காரணத்தை சொன்னார். அது சுவரஸ்யமானது. அவர் பெரும்பாலும் பிரகலாதன் நாடகத்தில் நரசிம்மர் வேடத்தில் நடிப்பவர், ஒரு முறை ஒரு கிராமத்துக்கு நாடகம் போட சென்ற போது அங்கிருந்தவர்கள் பிரகலாதன் நாடகம் வேண்டாம் என்றும் வள்ளி திருமண நாடக போட வென்றும் கூறிவிட்டார்கள். நாடகத்தை நடத்துபவர்களும் வேறு வழியின்றி வள்ளி திருமண நாடகம் போடா சம்மதித்தனர் அதற்க்கு தயாராக ஆரம்பித்தனர். நம்மவர்க்கு வள்ளி திருமண நாடகத்தில் ஏற்க எந்த வேடமும் இல்லை அதனால் அன்று நாடகத்தில் அவருக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. எப்படியும் இன்று மேடை ஏறப்போவது இல்லையென்பதால் நம்மவர் நல்லா சரக்கு அடித்துவிட்டு படுத்துவிட்டார். நாடககுளுவால் வள்ளி திருமண நடகதிருக்கு தயார் செய்ய பல சிரமங்கள் இருந்ததால் மீண்டும் பிரகலாதன் நாடகத்தையே போட சொல்லிவிட்டனர். நம் நரசிம்மனோ நன்றாக உறங்கிகொண்டிருகிறார், அவரை எழுப்புவதற்கு எவள்ளவோ முயற்சி செய்தும் முடியாமல் போய் விட்டது, ஆக அன்று நாடகம் ஏக சொதப்பலில் முடிந்தது. விடிந்ததும் முந்தின இரவு நடந்ததை கேள்விப்பட்டு நம்மவர் மிகுந்த அவமானபட்டிருகிறார், அப்போதே இனிமேல் நாடகத்தில் நடிப்பதில்லை என்று சத்தியம் செய்துவிட்டார், அதன் பிறகு அவர் அரிதாரம் பூசவேயில்லை.

இந்த கதையை கேட்ட பிறகு என்னால் நம்பவேமுடியவில்லை. அவரிடம் ஒரு காட்சி நடித்துக்காட்ட சொன்னேன். சட்டென்று நரசிமனாக மாறி அவர் பாடி நடித்த அந்த சில நிமிடங்கள் நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். சாதரணமாக பேசிகொண்டிருந்தவரால் எப்படி திடீரென்று இப்படி நடிக்க முடிந்தது அங்கு மேடைஇல்லை, மக்கள் கூட்டம் இல்லை, அரிதாரம் இல்லை எனக்கு ஒருவனக்குகாக நடித்து காட்டினார். அவர் ரத்தத்தில் நாடகமும், பாட்டும், நடிப்பும் இன்னும் ஓடிகொண்டிருந்தான் இருக்கும் போல. இதன் பிறகு அவர்மேல் இருந்த மரியாதை அதிகமாகியது. இவர்களெல்லாம் படப்படாத நாயகர்கள் (Unsung Heroes).

நான் கல்லூரி விட்டு வந்த பிறகு அவரை சந்திக்கவில்லை (முயற்சிக்கவில்லை), எங்கள் கல்லூரியில் விடுதி கட்டப்பட்ட பிறகு அவர் அங்கு வேலைசெய்யவில்லை என்று நினைக்கிறேன். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் இன்னும் இருக்கிறது. இன்றும் நான் பார்க்கும் சில காவலாளிகள் அவரை நினைவு படுத்திகொண்டே இருக்கின்றனர்.