தோள்ப்பட்டையில் ஒரு நார் பை, பழைய சட்டை, அதே அளவு பழைய லுங்கி, ஒரு கையில் கம்பு, அதில் வண்ண வண்ண பலூன்கள், மற்றொரு கையில் ஒரு பலூனை வைத்துக்கொண்டு "கிர்க்... கிர்க்..." என்று ஒலி எழுப்பி கொண்டு 70 வயது மதிக்கத்தக்க ஒருவரை சைதாப்பேடையில் பார்த்திருக்கிறீர்களா? அவர் தான் இந்த கிளிஞ்சல். அவருடன் நான் பழகியதில்லை, பேசியதில்லை சைதாப்பேடையில் நான் இருந்த தெருவிலும், பஜார் தெருவிலும் பல முறை பார்த்திருக்கிறேன். எப்பொழுது முதலில் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, ஏதோ ஒரு தருணத்தில் அவரை கவனிக்க தொடங்கினேன். நகரத்தின் இரைச்சலுக்கு நடுவில் ஒரு சன்யாசி போல் நடந்து கொண்டிருப்பார், "பலூன்" என்று கத்தவும் மாட்டார் "கிர்க்... கிர்க்..." என்ற சத்தம் மட்டுமே. எனக்கு ஏற்பட்ட ஆச்சர்யம், சென்னை போன்ற நகரங்களில் யார் பலூன் எல்லாம் வாங்குவார்கள், அவரிடம் யாரும் பலூன் வாங்கி நான் பார்த்ததில்லை (அதையும் மீறி சைதாப்பேட்டை தெருவில் வாங்கி வெளிவருவதற்குள் அது வெடித்து விட அனைத்து சாத்தியங்களும் இருக்கிறது), ஏதோ நம்பிக்கையில் பலூன் விற்கிறார். அப்படியே சிலர் வாங்கினாலும் பலூன் வியாபாரத்தை வைத்து எப்படி ஒருவர் சென்னையில் ஜீவனம் செய்வது? இந்தக் கேள்வி எழுந்த நாளில் இருந்து அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன். அன்று அவரிடம் பலூன் வாங்கி சென்றேன்.
பிறகு எப்போது மாலை இரவு நேரங்களில் கடைத்தெருவிற்கு போகும் பொழுதும் அவரை தேடுவேன், அவரை பார்த்தால் கண்டிப்பாக ஒரு பலூன் வாங்கி வருவேன். சமீபத்தில் நான் சைதையிலிருந்து பாலவாக்கத்திற்கு வீடு மாறினேன், ஐந்தரை வருடங்களுக்கு மேல் வாழ்ந்த இடம், சைதையிலிருந்து கிளம்புவதற்கு முன் அவரை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் முடியவில்லை. நடுவில் ஒருநாள் மறுபடியும் சைதை வரவேண்டியது இருந்தது அப்போது அவரை பார்த்தேன், வழக்கம் போல் அவரிடம் பலூன் வாங்க 10 ருபாய் கொடுத்தேன் அவர் ஒரு சிறிய பலூன் ஒன்றை தந்தார், மற்றொரு பலூனை தரவும் எடுத்தார், நான் வேண்டாம் என்றதும் "இல்ல இத வாங்கிக்க, இன்னைக்கு வியாபாரமே இல்லை, இப்ப கடையில சாப்பிடறதுக்கு 10 ரூபாய் போதும்" என்றார், நான் சிறிது நேரம் பேச்சற்று நின்றேன். பிறகு அவரை பின்தொடர்ந்து சென்று என் அலைப்பேசியில் எடுத்த புகைப்படம் தான் கீழே.
அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது கேள்விகள் மட்டுமே. "பலூன் வித்து எப்படி பிழைக்கிறார்?". அவரால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியுமா என்று தெரியவில்லை, அந்த ரூபாயை வைத்துக் கொண்டு எப்படி சமாளிக்கிறார்? ஒரு நாள் வியாபாரம் ஆகாமல் போனால், என்ன செய்வார்? அவருக்கு குடும்பம் இருக்கிறதா? எங்கு எப்படி தங்குகிறார்?, முடிவில்லா கேள்விகள்.
சைதையில் நான் இருந்த தெருவில் இருக்கும் பிச்சைக்காரர் கூட கண்டிப்பாக ஒரு நாளில் 50 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பார், இது அந்த தாத்தாவுக்கும் தெரிந்திருக்கும், இருந்தும் உழைத்து மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிற அந்த எண்ணம் தான் அவரை பெரிய மனிதராக காட்டுகிறது. இவரை போல் மிக சிறிய தொழில் செய்து கொண்டு இந்த பெருநகரத்தில் இன்னும் பலர் நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், இவர்களை பார்க்கும் போது வாழ்க்கை மேல் இன்னும் நம்பிக்கை கூடுகிறது. மறுபடியும் பலூன் தாத்தாவை எப்போது பார்ப்பேன் என்று தெரியவில்லை நீங்கள் பார்த்தால் மறக்காமல் அவரிடம் ஒரு பலூன் வாங்கி செல்லுங்கள்.
குறிப்பு: பாலவாக்கதிற்கு சமீபத்தில் வீடு மாறினேன், அங்கு இணைய இணைப்பு கிடைக்க தாமதம் ஏற்ப்பட்டதால் சில நாட்கள் பதிவெழுத முடியாமல் போயிற்று, இனி பதிவுகள் வழக்கம் போல் தொடரும்.
Saturday, 31 July 2010
Subscribe to:
Post Comments (Atom)
Bharathi
Categories
- 787 Dreamliner (1)
- English (2)
- அகிலன் (1)
- அசோகமித்திரன் (1)
- அரசியல் (1)
- அறிவியல் (1)
- அனுபவம் (2)
- இந்த வாரம் (2)
- இலக்கியம் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- கட்டுரைத் தொகுப்பு (1)
- கதம்பம் (3)
- கலைஞர் (1)
- கிளிஞ்சல்கள் (6)
- குமுதம் (1)
- கேணி பாலு மகேந்திரா (1)
- கொலை வழக்கு (1)
- சச்சின் (1)
- சஞ்சீவ் நந்தா (1)
- சித்திரப்பாவை (1)
- சியாட்டல் நாட்கள் (9)
- சிறுகதை (3)
- சுதந்திர தினம் (1)
- செய்தி (1)
- செய்திகள் (1)
- செய்திக்கதம்பம் (2)
- ஞான பீட (1)
- தமிழ் (1)
- தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் (1)
- திரை விமர்சனம் (10)
- திரைவிமர்சனம் (1)
- நாவல் (2)
- நான் ரசித்த படங்கள் (3)
- புத்தகக்காட்சி (2)
- புத்தகம் (8)
- புனைவு (1)
- மின்னஞ்சல் (1)
- லஞ்சம் (1)
- விமர்சனம் (2)
3 comments:
அருமையான பதிவு.....வாழ்த்துகள்
நம்பிக்கையில்தான் வாழ்க்கை பணத்தில் இல்லை . . மிகவும் சிறப்பான பதிவு .
விளிம்புநிலை மனிதர்களையும் உறவாக நினைக்கும் உங்கள் கனிந்த உள்ளத்தை கண்டு நெகிழ்ந்துவிட்டேன்.ஆண்டவன் உங்களுக்கு சகல நன்மைகளும் தருவார்.
Post a Comment