Tuesday, 2 February 2010

ராஜிவ் கொலை வழக்கு - ஒரு பார்வை


புத்தக கண்காட்சியில் வாங்கியதில் முதலில் படித்த புத்தகம் கே. ராகோத்தமன் எழுதிய "ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்." புத்தக கண்காட்சியில் பரபரப்பாக விற்ற புத்தகம், கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

இப்பூமியில் நடந்த அரசியல் படுகொலைகளில் மிக முக்கியமானது ராஜிவ் கொலை, அக்கொலை விசாரணை குழுவில் தலைமை புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கே. ராகோத்தமன் அவர்கள் அவ்விசாரணை மற்றும் துப்பறிந்த முறை பற்றி எழுதியதே இந்நூல். இதற்கு முன் இவ்வழக்கின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி திரு. கார்த்திகேயன் அவர்கள் இவ்வழக்கை பற்றி "புலன் விசாரணை" என்ற நூல் எழுதியிருக்கிறார். இரண்டு நூலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான், ராகோத்தமன் எழுப்பும் பல ஏன்? என்ற கேள்விகள் தவிர.

ராஜிவ் கொலையில் ஆரம்பிக்கிறது நூல், ஒரு துப்பு கூட கிடைக்காமல், "முடிந்தால் கண்டுபிடிக்கட்டும்" என்ற சவாலுடன் விசாரணையை ஆரம்பிக்கும் புலனாய்வுத் துறை ஒரு கேமராவையும், சில புகை படங்களையும் வைத்துக்கொண்டு எப்படி கொலையாளிகளை பிடிக்கிறார்கள் என்பதை ராக்கெட் வேகத்தில் ஒரு க்ரைம் நாவல் போல சொல்கிறார் ஆசிரியர். நம் புலனாய்வு துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆங்காங்கே விளக்குகிறார். புலனாய்வு துறை ஆரம்பம் முதல் கடைசி வரை பெரும்பாலும் நேர்மையாகவே நடந்திருகிறது, கடைசி கட்டத்தை தவிர, சிவராசனை உயிருடன் பிடித்திருந்தால் இவ்வழக்கு முழுமை அடைந்திருக்கும், இது 99% சதவித வெற்றி தான் என்கிறார்.

நடந்தவற்றை நேரில் பார்த்தது போல் விவரிக்கிறார் ஆசிரியர். தேர்ந்த எழுத்தாளரை போல நூலை எழுதியிருக்கிறார். புலிகள் இக்கொலை திட்டமிடுவதிலிருந்து, அதன் பின்னணி, எப்படி எப்படியெல்லாம் காய் நகர்த்தியிருக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர். கொலை திட்டம், அத்திட்டம் பொய்த்தால் அதற்கு backup plan, காரியம் முடிந்ததும் தப்பிக்க வழிகள் என தெளிவாக திட்டமிட்டிருகிறார்கள் புலிகள், அவர்களின் தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் நெட்வொர்க் பற்றி தெரிந்துகொள்ளும் போது நமக்கு சில அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும் இருகின்றன. புலிகளுக்கு தமிழகம் முழுவதிலிருக்கும் தொடர்பை பற்றி தெரிந்து கொள்ளும் போது கொஞ்சம் பயமாகவே இருக்கிறது, எவ்ளோ பெரிய நெட்வொர்க்!

ராஜிவ் கொலை திட்டப்படி நடந்ததற்கு புலிகளின் திட்டமிடல் மற்றும் கொண்ட காரியத்தின் அவர்களுக்கு இருந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றை மீறிய முக்கிய காரணம் நம் அமைப்பின் தேசிய குணமான மெத்தனமும், அலட்சியமுமே. விசாரணையில் காட்டிய தீவரத்தையும், நேர்மையையும், ராஜிவின் பாதுகாப்பில் காட்டியிருந்தால், குறைந்தபட்சம் ஒரு மெட்டல் டிடெக்டர் உபயோகப்படுத்தபட்டிருந்தால் ஒரு நாட்டின் முக்கிய மனிதரின் கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஆங்காங்கே சில கேள்விகளை எழுப்பிக்கொண்டே போகிறார், விசாரணையின் போது விசாரிக்ப்படாத சில பிரமுகர்கள், மறைக்கப்பட்ட சில தகவல்கள், என பல கேள்விகள் எழுப்புகிறார், யார் பதில் சொல்ல போகிறார்கள்? யாரும் இல்லை! நூலின் மேல் "மர்மம் விலகும் நேரம்" என்று குறிப்பிட்டிருகிறார்கள், இந்நூல் சில கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் மேலும் சில கேள்விகளை எழுப்புகிறதே தவிர பெரிதாக எந்த மர்மத்தையும் விலக்கவில்லை, மாறாக நம் அமைப்பின் மெத்தனத்தையும், அலட்சியத்தையும் வெளிச்சமிட்டு காட்டுகிறது, அதை தெரிந்து கொள்ளவாவது இந்நூலை கட்டாயம் படிக்க வேண்டும்.

Sunday, 24 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - திரைப்பார்வை


இந்த சனிக்கிழமை சத்யம்மில் பார்த்தேன். முடிந்த அளவு எந்த விமர்சனமும் படிக்காமல் பார்க்க நினைத்தேன், ஆனால் பலதரப்பட்ட செய்திகள் வந்த வண்ணம் இருந்ததால் (பட தலைப்பில் ஒருவன் என்று வந்தாலே இப்படிதானா?) சில விமர்சனங்களை மேலோட்டமாக படித்து விட்டு தான் படம் பார்க்க போனேன். இனி படத்தை பற்றிய என் பார்வை.

இதுவரை இந்திய சினிமாவில் யாரும் தொடாத களத்தை தொட்டிருகிறார் இயக்குனர், Fantasy and Adventure. 12ஆம் நூற்றான்டின் இறுதியில் கடைசி சோழ இளவரசனை பாண்டியர்களிடமிருந்து காப்பாற்ற எங்கோ அழைத்து சென்று மறைத்து வைக்கப்படுகிறார், அந்த கடைசி மன்னன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த சோழனை அல்லது அவன் கடைசியாக வாழ்ந்த இடத்தை கண்டுபிடிக்க பாண்டியர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாண்டியர்களால் கண்டுபிடிக்க முடியாத சோழர்களை 2010ல் தேடி ஒரு குழு விரைகிறது. இந்த தேடலும் அதன் முடிவுமே ஆயிரத்தில் ஒருவன்.

இத்தேடலின் தலைவி ரீமா, இவருக்கு உதவியாக வருபவர்கள் கார்த்தி, ஆண்டிரியா மற்றும் இந்திய ராணுவப்படை. சென்னையிலிருந்து வியட்நாம் அருகில் ஒரு தீவில் சோழன் கடைசியாக வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு கிளம்புகிறார்கள், அந்த இடத்தை நோக்கிய பயணமும் அந்தப்பயணத்தில் அவர்கள் சந்திக்கும் இன்னல்களும், இழப்புகளும், அதிர்ச்சிகளும் முதல் பாதி. அழிந்ததாக கருதப்படும் சோழர்கள் என்ன ஆனார்கள், ரீமா, கார்த்தி குழுவினர் சென்ற காரியம் முடித்து திரும்பினார்களா என்பது இரண்டாம் பாதி.

Fantasy, Adventure படத்துக்கு தேவையான அனைத்தும் படத்தில் இருக்கிறது, கப்பல் பயணம், அடர் காட்டுவழி பயணம், காட்டுவாசிகள், பாம்புகள், பாலைவனம் மற்றும் சோழர்கள் என அனைத்தும் தமிழ் படத்திற்கு புதுசு. ரீமா, கார்த்தி, பார்த்திபன் மற்றும் பல துணை நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். அதிக தைரியம் கொஞ்சம் திமிர் கலந்த பாத்திரத்தை மிக இயல்பாக செய்திருக்கிறார் ரீமா, மற்ற படங்களை விட இந்தப்படத்தில் கூடுதல் அழகாவே இருந்தார் ரீமா. பருத்திவீரனில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திருக்கிறார் கார்த்தி, ஆனால் அவர் பாத்திரம் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது, தனது இரண்டாவது படத்திலேயே இந்த மாதிரி ஒரு படம் பண்ணியதற்கு பாராட்டுகள் கார்த்தி. surprise கதாபாத்திரம் பார்த்திபன், சிறப்பாக செய்திருக்கிறார், அவருடைய கேலி கிண்டல் மட்டும் இல்லாமல் இந்த மாதிரி வித்தியாசமான பத்திரங்களில் பார்த்திபனை பார்ப்பதும் மகிழ்வாக இருக்கிறது. படம் நெடுக பெருமளவில் பங்களித்திருக்கும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இப்படத்தின் கதாநாயகன் இயக்குனர் செல்வராகவன், தான் நினைத்ததை திரையில் கொண்டுவர அவரின் உழைப்பு தெரிகிறது, இவருக்கு பக்க(கா) பலமாக கை கொடுத்து படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றிருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் கலை இயக்குனர் சந்தானம். படத்தின் ஒளி அமைப்பு மிக சிறப்பாக இருந்தது, குகை காட்சிகள் அருமையாக படம் பிடித்திருக்கிறார், அடர் காடாகட்டும், பாலைவனமாகட்டும் மிக அழகாக, சிந்தாமல் சிதறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராம்ஜி, சோழ ராஜ்ஜியத்தை ஒரு குகைக்குள் நிறுவியிருக்கிறார் கலை இயக்குனர். ஜீவியின் இசை படத்திற்கு இன்னொரு பலம். இவர்கள் அனைவருக்கும் ஒரு பொக்கே. படத்தின் மற்றொரு முக்கியஸ்தர் CG, பல இடங்களில் CG என்பதே தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது, சில இடங்களில் CG துருத்தி கொண்டிருந்தாலும் இந்த பட்ஜெட்டில் அவ்வளவுதான் முடிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. படத்தில் மற்றொரு சிறப்பு அம்சம் சோழர் தமிழ், எனக்கு மிகவும் பிடித்தது, எப்படி இருந்த தமிழ், இப்படி ஆகியிருக்கிறது, அந்த தமிழை கேக்கும் போதே பேஜாராக்கீதுப்பா ச்சே, வருத்தமாக இருக்கிறது.

இப்படத்தை பற்றி பல வகையாக பல விமர்சனங்கள், அப்படிப்பட்ட சில விமர்சனங்களுக்கு என் கருத்துகள்
1. படத்தின் கதை புரியவில்லை?- என்ன புரியவில்லை என்று எனக்கு புரியவில்லை, படத்தை கவனமாக பாருங்கள், ஒவ்வொரு வசனத்தையும் கவனியுங்கள், அப்போதுதான் புரியும், நடுவில் யாரிடமாவது பேசிக்கொண்டும், comment அடித்துக்கொண்டும் பார்த்தால் புரியாது. நம்முடன் ஆயிரம் பேர் படம் பார்க்கிறார்கள் என்ற உணர்வில்லாமல் கத்திகொண்டிருப்பவர்களும், அவர்கள் பேசும் தமிழ் புரியவில்லை (லிங்க தரிசனம் தவிர) என்று கமெண்ட் அடிப்பவர்களுக்கும், அலைபேசியை நொண்டி கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் புரியாது.

2. சோழர்கள் பற்றி எடுக்கும் முன் இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்திருக்கலாம், சிலது வரலாற்றுடன் ஒட்டவில்லை - எதற்கு ஒட்டவேண்டும், அதுதான் படத்தின் தொடக்கத்திலேயே ஒரு disclaimar போடுகிறார்களே இப்படத்திற்கும் சோழர்கள் வரலாற்றுக்கும் தொடர்பில்லை, முற்றிலும் கற்பனையே என்று, பின் எதற்கு இந்த கேள்வி?

3. CG சில இடங்களில் தனியாக தெரிகிறது, இது ஒன்றும் $237 மில்லியனில் எடுக்கப்பட்ட அவதார் அல்ல, 32 கோடியில் எடுக்கப்பட்ட படம், இந்த பட்ஜெட்டிற்கு ஒரு எல்லை இருக்கிறது, இந்த மாதிரி முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்குமாயின் CG போன்றவைகளுக்கு நம் தயாரிப்பாளர்கள் செலவு செய்ய முன்வருவார்கள், இல்லையேல் பல கைகள் கொண்ட அம்மனையும், சட்டை போட்டு நடனமாடும் யானையும், CGயில் பார்த்துகொண்டிருக்க வேண்டியதுதான்.

4. ஒரு வலைத்தளத்தில் சோழர்களை Zombiக்களாக காட்டியிருப்பதாக குறிப்பிடிருந்தனர், இவர்கள் என்ன லட்சணத்தில் படம் பார்த்தார்கள் என்று தெரியவில்லை.

5. தி ஹிந்து விமர்சனத்தில், அந்த ராஜாவும் மக்களும் பேசும் தமிழ் புரியவில்லை என்கிறார் - என்ன செய்யலாம்? ஒரு வேலை சோழர்களை "இன்ன ராஜா, நாஸ்டா கூட தர மாட்டீன்ர , உன்னோடு ஒரு பேஜாரூப்பா," என்று பேசியிருந்தால் புரிந்திருக்குமோ?. தமிழ் புரியவில்லை என்பது நமக்கு தான் அசிங்கம், வேண்டுமென்றால் subtitle போட்டு இன்னும் அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கலாம். இவ்விமர்சனத்தை பற்றி என் நண்பனின் பதிவு இது.

6. படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாது என்று ஒரு குறை - அதற்கு தான் தணிக்கை குழு ஒவ்வொரு படத்தையும் பார்த்து விட்டு சான்றிதழ் வழங்குகின்றது, அதை கொஞ்சம் மதித்து கவனித்தால் எந்த படத்திற்கு யாரை அழைத்து செல்லலாம் என்று புரியும்.

7. படத்தை விமர்சிக்கவே கூடாதா? - விமர்சிக்கலாம், படத்தை புரிந்துகொண்டு, அது ஆரோக்கியமான விமர்சனமாக இருந்தால், ஒரு கலைஞனை உற்சாகபடுத்துவதாக இருந்தால் நன்மையே, முற்றிலும் தாழ்த்தி விமர்சனம் செய்வது யாருக்கும் நன்மையில்லை.

படத்தில் குறைகளே இல்லையா?, இருக்கிறது, அதீத வன்முறை, ரத்தம் (குறிப்பாக ராஜா முன் பலியிடப்படும் காட்சி மற்றும் சில சண்டை காட்சிகள்). மனதை பதைபதைக்க வைக்கும் சில காட்சிகள் உண்டு. இதை தவிர்த்து விட்டு பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் ஒரு சிறப்பான படம், தமிழில் இப்படியான ஒரு படம் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது ஒரு மிக முக்கியமான படமா என்றால்? ஆம், தவழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை தத்தி தத்தி நடக்க எடுத்து வைக்கும் முதல் அடிகளில் இதுவும் ஒன்று, தள்ளாட்டத்துடன் தான் இருக்கும், கொஞ்சம் ஆதரவு தாருங்கள், உற்சாகமூட்டுங்கள், நம்பிக்கையிழக்க செய்யாதீர்கள், நம் அடுத்த தலைமுறைக்குள் நடக்க பழகிவிடும், இல்லையேல் இன்னும் பல காலத்திற்கும் நாம் யாருக்கு "என்ன தளபதி" பட்டம் கொடுக்கலாம் என்று யோசித்துகொண்டே இருக்கவேண்டியதுதான்.