
நெம்பர் 40 ரெட்டை தெரு சமீபத்தில் படித்த புத்தகம். இரா.முருகனின் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட நூல். சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள் (கதைகள்)" படித்து இருக்கிறீர்களா? அதைப்போல இது முருகனின் ரெட்டை தெரு தேவதைகள். அவர் வாழ்ந்த அந்த ரெட்டை தெருவில் தன்னுடைய இளம் (பள்ளி செல்லும்) வயது வரை பார்த்த மனிதர்களின், நடந்த சம்பவங்களின் அழகான தொகுப்பு தான் இந்த நூல். கிரேசி மோகனின் முன்னுரையே சிறப்பாக இருந்தது, அதில் முருகனை சுஜாதாவுடன் ஒப்பிடுகிறார். கிரேசி எழுதியது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றியது. இதற்கு முன் முருகனின் "மூன்று விரல்" நாவல் படித்திருக்கிறேன், அது மென்பொருள் துறையில் வேலை செய்யும் ஒருவனை பற்றியது, நன்றாக இருந்தது, அந்த நாவல் படிக்கும் போது சில நேரங்களில் எழுதியது முருகனா? சுஜாதாவா? என்று சிறு குழப்பம் ஏற்படும் அந்த அளவிற்கு சுஜாதா நடையை போல் இவர் நடையும் அற்புதம்.
இந்தப்புத்தகம் ஒரு நாவல் அல்ல, சிறுகதைகளும் அல்ல, முருகனின் பால்ய கால சம்பவங்களின் தொகுப்பு. சுஜாதாவின் ""ஸ்ரீரங்கத்துக்கும்" முருகனின் ரெட்டை தெருவுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் சுஜாதா அவர் நினைவுகளை (கொஞ்சம் கற்பனை கலந்து என்று நினைக்கிறேன்) "சற்றே பெரிய சிறுகதைகள்" ஆக்கியிருந்தார். முருகன் தொகுப்புகளாக, சம்பவங்களாக எழுதியிருக்கிறார். சில பகுதிகளுக்குள் தொடர்ச்சி இருக்கும் சிலதில் இருக்காது. இது ஒரு தீவிர வாசிப்பை எதிர்பார்க்காத நூல். ஆனால் படிக்க இனிமையான நூல். முருகனின் மூளையில் மடிப்புகள் அதிகமாக இருக்க வேண்டும். இல்லையேல் அவர் பதின் வயதிலும் அதற்கு முன்னரும் நடந்த சம்பவங்களை இவ்வளவு தெளிவாக ஞாபகம் வைத்து எழுதியிருக்க முடியாது.
ஒவ்வொரு அத்யாயமும் ஒரு மனிதரையோ அல்லது சம்பவத்தையோ குறித்து சொல்கிறது. யாரோ அருகில் அமர்ந்து கதை சொல்வது போல் இருக்கிறது நடை. இந்நூலை படித்த போது 1960லில் நம்ம ஊர் எப்படி இருந்திருக்கும் என்று எட்டி பார்த்து வந்ததுபோல் இருக்கிறது. பல சம்பவங்கள் நமக்குள் பல நினைவுகளை கிளறி விடுகிறது. இதில் வரும் சில மனிதர்கள் போல் நம் ஊரிலும் சிலர் இருப்பார்கள்/இருந்திருப்பார்கள். அவர் வீட்டு மனிதர்கள் ஒரு துணை கதப்பாதிரமாகவே வந்து போகின்றனர், சில அத்யாயங்கள் தவிர. அவர் ஊரில் வாழ்ந்த வக்கீல்கள், பால்காரர், கடைக்காரர், போஸ்ட் மேன், மேஸ்திரி, மளிகை கடைக்காரர், போலீஸ் ஏட்டு, பள்ளி ஆசிரியர்கள், ஊர் தெருவோரத்தில் வாழ்ந்த பாட்டிகள், உணவகம், சவுண்ட் சர்வீஸ், டைப்பிங் பயிற்சி பள்ளி என்று பலரையும்/பலவற்றையும் பற்றி சம்பவங்கள் நிறைந்திருகின்றன. அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த சில வழக்கங்கள், சட்டங்கள், அரசியல் பற்றியும் சில குறிப்புகள் இருகின்றன. நூல் முழுவதும் நகைச்சுவை நிரம்பியிருக்கிறது. சில அத்யாயங்கள் படித்து முடித்ததும் ஒரு புன்சிரிப்பும், சில அத்யாயங்கள் முடிக்கும் போது சிறு பாரமும் அழுத்துகிறது. அனேகமாக அந்த வீதியில் வாழ்ந்த அனைவரையும் பற்றி குறைந்தபட்சம் ஒரு வரியாவது எழுதியிருப்பார், அவர்கள் இதை படித்தால் வரும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது, குறிப்பாக அவருடைய சிறு வயது நண்பர்கள் படிக்கும் போது ஒரு குறுகுறுப்பும், படித்த பின் ஒரு அகமகிழ்ச்சியும் ஏற்படும்.
பயணம் செய்யும் போது படிப்பது பிடித்தமான ஒரு விசையம், இந்த புத்தகம் அப்படி படிக்கப்பட்டது. பெரும்பான்மையான பகுதிகளை காலையில் பேருந்தில் அலுவலகம் செல்லும் போது திரும்பி வரும் போதும் படித்து முடித்தேன். சியாட்டலில் ரெட்டை தெரு இல்லை என்றாலும் ஏதோ ரெட்டை தெரு வழியாக அலுவலகம் சென்று வந்தது போல் ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. எத்தனையோ கதைகள் எத்தனையோ தெருக்களில் இன்னும் எழுதப்படாமல் இருகின்றன, முருகன் எழுத்தில் ரெட்டை தெருவும் அதில் வாழ்ந்த மனிதர்களும் சாகா வரம் பெற்று இப்புத்தக வடிவில் உலவிக்கொண்டிருப்பார்கள்.
1 comment:
Very nice write up annamalai.
I have read Sujatha's Sri rangatthu devathaigal. waiting to read this book as well.
Post a Comment