Wednesday, 1 December 2010

நந்தலாலா - திரைப்பார்வை


இளையராஜாவின் இசையில் மிஷ்கின் இயக்கி நடித்திருக்கும் படம் நந்தலாலா. ஜப்பானிய படமான கிகுஜிரோவின்  தழுவல் இந்தப்படமா? என்பதை கடைசியில் பார்ப்போம், முதலில் நந்தலாலாவை பற்றி.

அகி, பாட்டியிடம் வளரும் சிறுவன், ஒரு நாள் தன்னை பிரிந்து தனக்காக அன்னவயல் என்னும் ஊரில் வேலை செய்யும் தாயைத்   தேடி  கிளம்புகிறேன். பாஸ்கர்மணி, தன்னை மனநல காப்பகத்தில் சேர்த்ததற்காக தன் தாயை பார்த்து ஒரு அரை விடவேண்டும் என்று காப்பகத்தில் இருந்து தப்பித்து தாய்வாசல் என்னும் ஊரில்  இருக்கும்  தன் தாயை தேடி கிளம்புகிறான். புத்திசாலியான சிறுவன் அகியும், குழந்தை மனமுள்ள  பாஸ்கர்மணியும் ஒரு புள்ளியில் இணைந்து ஒருவருக்கொருவர் துணையாக தங்கள் தாயை தேடி செல்கின்றனர், இவர்களின் தேடலே நந்தலாலா.


தங்கள் தாயைத் தேட, கூடுமான பணமில்லாமல் பயணத்தை துவக்கும் இருவரும், வழியில் சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும், அதன் வழியே வழியும் மனிதமும் தான் திரைக்கதை. முதல் பாதியில் அகியின் அம்மாவை தேடுவதில் செல்கிறது, ஊரை அடைந்து தேடும் போது, அகி அவன் தாயை பார்க்க முடியாத நிலையில் முதல் பாதி முடிகிறது.
வழியில் சந்திக்கும் பாலியல் தொழிலாளி ஸிநிக்தாவும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள பாஸ்கர்மணியின் அம்மாவைத் தேடி இரண்டாவது பாதி பயணிக்கிறது. அவர்கள் அவன் அம்மாவை எந்த நிலையில் சந்திக்கிறார்கள், அகியின் நிலைமை என்ன என்பது முடிவு.

பயணத்தில் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களின் வழியாக நகர்கிறது திரைக்கதை. பெரும்பாலான பாத்திரங்கள் படம் முடிந்தும்  நம் மனதில் நிற்கிறார்கள். லாரி ஓட்டுனர், கீழே விழுந்து அடிபடும் பள்ளிச்  சிறுமி, புதுமண தம்பதி குறிப்பாக அந்த கணவன் ("அம்மா 40ல தான் போக சொல்லியிருக்காங்க"), யாருமற்ற ஒரு இடத்தில் பஞ்சர் கடை வைத்து நடத்தும் மாற்றுத்திறன் படைத்த தம்பதி, ஒரு கால் ஊனமான வழிகாட்டி, பைக் குண்டர்கள், இளநீர் விற்கும் தாத்தா, road side ரோமியோக்கள்   என அவர்கள் பயணம் முழுவதும் பல்வேறு மனிதர்கள், சம்பவங்கள். ஒவ்வொரு பாத்திரங்களுடனான   சந்திப்பும் கசப்பாக ஆரம்பித்தாலும் அச்சந்திப்பு முடியும் போது அவர்களின் அடிமனதில் இருக்கும் அன்பே பிரதானமாக மிளிர்கிறது. பல காட்சிகள்  மென்புன்னகையுடனோ  மென்சோகத்துடனோ  முடிகிறது.



Nandalala is a perfect road movie ever made in Tamil Cinema or may be Indian cinema. படத்தின் நான்கு நாயகர்கள் மிஷ்கின், அஸ்வத் ராம், இளையராஜா மற்றும் மகேஷ் முத்துசுவாமி. இவர்கள் அனைவரின் உழைப்பும் சரி விகிதத்தில் கலந்ததால் இப்படம் வேறொரு தளத்தில் இருக்கிறது. சில இடங்களில் மிஷ்கின் மிகையாக நடித்திருந்தாலும் முதல் படத்திலேயே நடிப்பில் அசத்தியிருக்கிறார். அகியாக அஸ்வத் (அள்ளி முத்தம் கொடுக்கலாம்), அழகான  அளவான நடிப்பில் சிறக்கிறார்.  படம் முழுவதும் படர்ந்து நம்மை தழுவி செல்கிறது ராஜாவின் இசை. குறிப்பாக கடைசி 20 நிமிடம் ராஜா தான் ஹீரோ.  மௌனம் என்னும் இசையை  இளையராஜாவைப் போல் யாரும் இவ்வளவு நேர்த்தியாக பயன்படுத்தியதில்லை. பின்னணி இசைக்கு பாடம். இந்த பயணத்தில் ஒளிப்பதிவால் நம்மையும் ஒரு பயணியாக இணைத்துக்கொள்கிறார் மகேஷ் முத்துசுவாமி. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாக படம் பிடித்திருக்கிறார், சில இடங்களில் காட்சி முடிந்தும் extendஆகும் சில shotகளை மட்டும் தவிர்த்திருக்கலாம். 12 நொடிகள் வரும் நாசர் உட்பட அனைத்து கலைஞர்களும் அப்பாத்திரமாகவே வாழ்ந்திருகின்றனர். மேலும் ஓவியர் மருது இப்படத்தில் அழகியல் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.


அஞ்சாதேவுக்கு பிறகு மிஷ்கின் ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருகிறார், இயக்குனர்  மிஷ்கினை விட  திரைக்கதை ஆசிரியர் மிஷ்கின் என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறார். எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் ஒரு அழுத்தமான படத்தை ஆங்காங்கே நகைச்சுவை தூவி திரைக்கதை அமைத்து கொடுத்திருகிறார், நகைச்சுவை மட்டும் இல்லையேல் திரைக்கதை தொய்வாக இருந்திருக்கும். படத்தில் வசனங்கள் குறைவாக அழகாக பயன்படுத்தப்படிருக்கிறது. தமிழின் ஒரு முக்கியமான படத்தை இயக்கியிருக்கிறார் மிஷ்கின். இதுவரை பார்த்திடாத ஒரு தமிழ் படம் நந்தலாலா.


கிகுஜிரோவும் நந்தலாலாவும்
மிஷ்கின் இரு பேட்டிகளில் (Behindwoods.com)  நந்தலாலா கிகுஜிரோவின் தழுவலா  என்ற கேள்விக்கு The inspiration for the movie came from many incidents in my life and another movie என்றும் In a way his Kikujiro stimulated me to take Nandalala but Nandalala is not Kikujiro என்றும்  கூறியிருக்கிறார். ஆகவே ஒருபொழுதும் கிகுஜிரோவிற்கும் நந்தலாலாவிற்கும் சம்பந்தமே இல்லை என்று மிஷ்கின் கூறியதாக தெரியவில்லை.


முதலில் ஒற்றுமை, கிகுஜிரோவின் one lineற்கும்  நந்தலாலாவின் one lineற்கும் அதிக வித்தியாசமில்லை. தன் தாயை தேடி புறப்படும் சிறுவன் மாசோவுக்கு   துணையாக ஒரு முரட்டு, சூதாடும் ஆசாமி கிகுஜிரோ அனுப்பப்படுகிறார், அவர் சிறுவனை அம்மாவிடம் சேர்த்தாரா என்பதே  கிகுஜிரோ. கிகுஜிரோவில் உள்ள சில கதாப்பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் நந்தலாலாவிலும் உண்டு.

இனி வேற்றுமை,
ஜப்பானிய படம் சிறுவன் மசோவை விட கிகுஜிரோவை பெரிதும் முன்னிறுத்தியே நகர்கிறது, ஜப்பானிய படம் முன்னிறுத்தும் கருத்து ஜப்பானில் குறைந்து வரும் குடும்ப சூழலை பற்றியது.

நந்தலாலா பேசுவது மகன் தாய் உறவை மற்றும்  அம்மாக்களின் இருவேறு எல்லைகளை பற்றியது.  கிகுஜிரோவில் உள்ள சில கதாப்பாத்திரங்கள் நந்தலாலாவிலும் உண்டு என்றாலும் அதன் பயன்படுத்தப்பட்ட விதம் முற்றிலும் வேறானது.  நந்தலாலாவில் அவர்கள் சந்திக்கும் அனைத்து பாத்திரங்களும் அப்பாத்திரங்களின் நெகிழ்வான தருணங்களை வெளிக்கொண்டுவருகிறது, கிகுஜிரோவில்  நடக்கும் சம்பவங்கள் விலகியிருக்கும் மாசோவையும் கிகுஜிரோவையும் எப்படி இணைக்கிறது என்று செல்கிறது.

மிஷ்கின் செய்ய தவறியது பட ஆரம்பத்தில் ஒரு நன்றி போடாமல் விட்டது, போட்டிருந்தால் இவ்வளவு சர்ச்சைகள் உருவாகியிருக்காது.  இதை மறைக்கவும்  மிஷ்கின் முயற்சிக்கவில்லை, நினைத்திருந்தால் கிகுஜிரோவில் இருந்து எடுக்கபட்ட பாத்திரங்களை மாற்றி அமைத்திருக்கலாம், அப்படி செய்யவில்லை மாறாக அப்பாத்திரங்களின் மீதே அவருடைய கதையையும் எழுதி செல்கிறார். இது தவறென்று புத்தி சொல்கிறது, பரவாயில்லை என்று மனது சொல்கிறது.  இந்த காரணத்திற்காக நந்தலாலா ஒரு குறைபட்ட படைப்பு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

உலக சினிமா ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது ஒரு பெரிய குறையாக இருக்கலாம், என்னைப் போல்  உள்ளூர் ரசிகர்களுக்கு இப்படம் உயரந்ததே காரணம் கிகுஜிரோ தராது ஒரு உணர்வை நந்தலாலா எனக்கு கொடுத்திருக்கிறது.

5 comments:

நிகழ்காலத்தில்... said...

\\என்னைப் போல் உள்ளூர் ரசிகர்களுக்கு இப்படம் உயரந்ததே காரணம் கிகுஜிரோ தராது ஒரு உணர்வை நந்தலாலா எனக்கு கொடுத்திருக்கிறது. \\

உண்மை....:))

subra said...

ஓர் அருமையான படம் பார்த்த திருப்தி
நல்ல பதிவு வாழ்த்துக்கள்

ALHABSHIEST said...

படத்தினை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தினை ஏற்படுத்தும் விமர்சனம்.வலைப்பூவின் பெயர்காரணம் தெரிந்து கொள்ள வேண்டும்.மின்னஞ்சல் முகவரி தாருங்களேன்.

Annamalai Swamy said...

@நிகழ்காலத்தில், @Subra
நன்றிகள் நண்பர்களே!

@Siva
நன்றி நண்பரே! எனது மின்னஞ்சல்: annamalai_swamy@yahoo.co.in.
பெயர் கரணம்: மணிபுரம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எனது கிராமத்தின் பெயர்.

Unknown said...

nice