Saturday, 14 August 2010

வாசனை - 55 வார்த்தை கதை

"சிறு சிறு கதைகள்" என்ற புத்தகத்தில், சுஜாதா பல வகையான கதைகளை பற்றி எழுதியிருக்கிறார் இரண்டு வார்த்தை கதைகள், 55 வார்த்தை கதைகள், சி.சி. கதைகள் மற்றும் பல வகையான கதைகளை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்.

இனி 55 வார்த்தை கதைக்கான விதிமுறைகள்.
மொத்தம் 55- வார்த்தைகளில் கதை இருக்க வேண்டும். இது தான் முக்கிய விதி!
மற்ற விதிமுறைகள்:

1. கதையின் தலைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் அதுவும் ஏழு வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. எண்களும் கணக்கில் உண்டு 45, 500, 3458 போன்றவையெல்லாம் வார்த்தைகளே!

3. நிறுத்தக் குறிகள் வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.

 சுஜாதா
55 வார்த்தை கதைகளை பற்றி இப்படி குறிப்பிடுகிறார் "55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது."


இனி நான் எழுதியது.
தலைப்பு: வாசனை

ஊருக்கு போயிருந்த என்னவளின் நினைப்பிலிருந்து கலைத்தது அவளுடைய அலைப்பேசி அழைப்பு 

'சொல்லுடி, எப்படியிருக்க' 

'நல்லாயிருக்கேன்'

'மதியத்திலிருந்து உன் நினைப்புதாண்டி, திடீர்னு வீடெல்லாம்  எங்க போனாலும் உன் வாசனையாவே இருக்கு '

'அப்புறம்'  சிணுங்கினாள்

'உன் ஞாபகம் அதிகமாயிருச்சு, ஊருக்கு வரட்டுமா?'

'ரொம்ப கொஞ்சாதீங்க, வந்துருவேன், ஆமா குளிச்சிடீங்களா?'

'ஆச்சு, என்  ஷாம்பூ  தீர்ந்துபோச்சுன்னு  உன் ஷாம்பை உபயோகிச்சேன்'
சிறிது அமைதிக்கு பிறகு

'இவ்வளவு நேரம் ஃபீல் பண்ண வாசம், அந்த ஷாம்பூ வாசம் தான்' கடுப்பாக போனை வைத்தாள்.

இப்பதிவு பிடித்திருந்தால் ஓட்டளிக்கவும். 

Saturday, 31 July 2010

கிளிஞ்சல் 6 - பலூன்தாத்தா

தோள்ப்பட்டையில் ஒரு நார் பை, பழைய சட்டை, அதே அளவு பழைய  லுங்கி, ஒரு கையில் கம்பு, அதில் வண்ண வண்ண பலூன்கள்,  மற்றொரு கையில் ஒரு பலூனை வைத்துக்கொண்டு "கிர்க்... கிர்க்..." என்று ஒலி எழுப்பி கொண்டு 70 வயது மதிக்கத்தக்க ஒருவரை  சைதாப்பேடையில் பார்த்திருக்கிறீர்களா? அவர் தான் இந்த கிளிஞ்சல். அவருடன் நான் பழகியதில்லை, பேசியதில்லை சைதாப்பேடையில் நான் இருந்த தெருவிலும், பஜார் தெருவிலும் பல முறை பார்த்திருக்கிறேன். எப்பொழுது முதலில் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, ஏதோ ஒரு தருணத்தில் அவரை கவனிக்க தொடங்கினேன். நகரத்தின் இரைச்சலுக்கு நடுவில் ஒரு சன்யாசி போல் நடந்து கொண்டிருப்பார், "பலூன்" என்று கத்தவும் மாட்டார் "கிர்க்... கிர்க்..."  என்ற சத்தம் மட்டுமே. எனக்கு ஏற்பட்ட ஆச்சர்யம், சென்னை போன்ற நகரங்களில் யார் பலூன் எல்லாம் வாங்குவார்கள், அவரிடம் யாரும் பலூன் வாங்கி நான் பார்த்ததில்லை (அதையும் மீறி  சைதாப்பேட்டை தெருவில் வாங்கி வெளிவருவதற்குள் அது வெடித்து விட அனைத்து சாத்தியங்களும் இருக்கிறது), ஏதோ நம்பிக்கையில் பலூன் விற்கிறார். அப்படியே சிலர் வாங்கினாலும் பலூன் வியாபாரத்தை  வைத்து எப்படி ஒருவர் சென்னையில் ஜீவனம் செய்வது? இந்தக் கேள்வி எழுந்த நாளில் இருந்து அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன். அன்று அவரிடம் பலூன் வாங்கி சென்றேன்.

பிறகு எப்போது மாலை இரவு நேரங்களில் கடைத்தெருவிற்கு போகும் பொழுதும் அவரை தேடுவேன், அவரை பார்த்தால் கண்டிப்பாக ஒரு பலூன் வாங்கி வருவேன். சமீபத்தில் நான் சைதையிலிருந்து பாலவாக்கத்திற்கு வீடு மாறினேன், ஐந்தரை வருடங்களுக்கு மேல் வாழ்ந்த இடம்,  சைதையிலிருந்து கிளம்புவதற்கு முன் அவரை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் முடியவில்லை. நடுவில் ஒருநாள் மறுபடியும் சைதை வரவேண்டியது இருந்தது  அப்போது அவரை பார்த்தேன், வழக்கம் போல் அவரிடம் பலூன் வாங்க 10 ருபாய் கொடுத்தேன் அவர் ஒரு சிறிய பலூன் ஒன்றை தந்தார், மற்றொரு பலூனை தரவும் எடுத்தார், நான் வேண்டாம் என்றதும் "இல்ல இத வாங்கிக்க, இன்னைக்கு வியாபாரமே இல்லை, இப்ப கடையில சாப்பிடறதுக்கு 10 ரூபாய் போதும்" என்றார், நான் சிறிது நேரம் பேச்சற்று நின்றேன். பிறகு அவரை பின்தொடர்ந்து சென்று என் அலைப்பேசியில் எடுத்த புகைப்படம் தான் கீழே.



அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது  கேள்விகள் மட்டுமே. "பலூன் வித்து எப்படி பிழைக்கிறார்?". அவரால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூட  சம்பாதிக்க முடியுமா என்று தெரியவில்லை, அந்த ரூபாயை வைத்துக் கொண்டு  எப்படி சமாளிக்கிறார்?  ஒரு நாள் வியாபாரம் ஆகாமல் போனால், என்ன செய்வார்? அவருக்கு குடும்பம் இருக்கிறதா? எங்கு எப்படி தங்குகிறார்?, முடிவில்லா கேள்விகள்.

சைதையில் நான் இருந்த தெருவில் இருக்கும் பிச்சைக்காரர் கூட கண்டிப்பாக ஒரு நாளில் 50 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பார், இது அந்த தாத்தாவுக்கும் தெரிந்திருக்கும், இருந்தும் உழைத்து மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிற அந்த எண்ணம் தான் அவரை பெரிய மனிதராக காட்டுகிறது.  இவரை போல் மிக சிறிய தொழில் செய்து கொண்டு  இந்த பெருநகரத்தில் இன்னும் பலர் நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்,  இவர்களை பார்க்கும் போது வாழ்க்கை மேல் இன்னும் நம்பிக்கை கூடுகிறது. மறுபடியும் பலூன் தாத்தாவை எப்போது பார்ப்பேன் என்று தெரியவில்லை நீங்கள் பார்த்தால் மறக்காமல் அவரிடம் ஒரு பலூன் வாங்கி செல்லுங்கள்.

குறிப்பு: பாலவாக்கதிற்கு சமீபத்தில் வீடு மாறினேன், அங்கு இணைய இணைப்பு கிடைக்க தாமதம் ஏற்ப்பட்டதால் சில நாட்கள் பதிவெழுத முடியாமல் போயிற்று, இனி பதிவுகள் வழக்கம் போல் தொடரும்.