Sunday, 16 May 2010

அட!

குறிப்பு 1: முதல் கதை பதிவில் குறிப்பிட்டிருக்கும் போட்டிக்கு முதலில் எழுத நினைத்த  கதை இது தான்.

குறிப்பு 2: முதல் கதை பதிவில் குறிப்பிட்டிருக்கும் "Machine Life" கதை முதல் பரிசுக்கு தேர்வாகியிருக்கிறது.

அதிகாலை நேரம், சூரியன் இன்னும் ஒளிந்து கொண்டிருந்தது, பூங்காவில் அதிக கூட்டம் இல்லை, இனிமையான நாள், ஒரு கனவு போல் நடந்து கொண்டிருந்தேன். 'ராம்' என்று யாரோ பின்னாலிருந்து அழைத்தார், திரும்பி பார்த்தால் அட, யார் இவள்?, ஜாகிங் உடையில் ஒரு அழகான பெண் என்னை பார்த்து நின்று கொண்டிருந்தாள்.

"நீங்க ராம் தானே?"

"அமாம், நீங்க?" என்றேன் கேள்விக்குறியுடன்

"என்னை தெரியலையா உங்களுக்கு?" என்றாள் ஒரு சிரிப்புடன், இப்போது இன்னும் அழகாக இருந்தாள்.

"உங்கள பார்த்ததில்லையே" என்றேன் அவளை ரசித்து கொண்டே

"நல்ல ஞாபகப்படுத்தி சொல்லுங்க என்றாள்" மறுபடியும் அதே சிரிப்பு, ஜெராக்ஸ் எடுத்தார் போல்.

"உங்கள மாதிரி தேவதைய ஒருதடவ பார்த்தா யாரவது மறப்பாங்களா? உங்கள இப்பத்தான் பார்க்கிறேன்"

"இப்பத்தான் பாக்கறீங்க, ஆனா இதுக்கு முன்னாடி பேசியிருக்கீங்க" என்றாள்.

என் ஞாபத்தில் எவ்வளவு தேடியும், இந்த குரலை யாருக்கும் பொறுத்த முடியவில்லை.

சலிப்புடன் "ஏதாவது, பேங்க், கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்டதா?"

"என்ன நக்கலா?" என்று பொய் கோபம் காட்டினால், அப்பவும் அழகாக இருந்தாள்.

"சரி, இன்னொரு clue தரேன், நாம கடைசியா பேசினது, ரெண்டு மாசம் முன்னாடி"

"ஹே, சாருலதாவா நீ?" என்றேன் ஆச்சர்யத்துடன்.

"அப்பாடா, ஞாபகம் வச்சிருக்கியே, சந்தோசம்"

சாருலதா!, ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி, நல்ல விசயங்களை மட்டும் பகிர்ந்து கொண்டு, பிறகு சாட்டில் எழுதி, படித்து, பேசி, நன்றாக பழகினோம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முந்தைய ஆறு மாதங்களில் நடந்த எல்லாவற்றையும்  பகிர்ந்து கொண்டோம். இவள் அப்போது ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருந்தாள், இரண்டு மாதம் முன்பு, ப்ராஜெக்ட் மற்றும் பரீட்ச்சை இருப்பதால் இன்னும் கொஞ்ச நாள் chat பண்ண முடியாது என்று சொன்னாள், எப்பவாவது மெயில் அனுப்புவாள், அதற்கு பிறகு இப்போதுதான் சந்திக்கிறோம்.

ஃபேஸ்புக்கில் என் போட்டோவை பார்த்திருக்கிறாள், அவள் போட்டோ வைத்து கொண்டதில்லை.

"ப்ராஜெக்ட் எப்படி போச்சு? "

"ப்ராஜெக்ட், பரீட்ச்சை எல்லாம் நல்லா முடிஞ்சுது" என்றாள்.

"கோவிச்சுக்காத, ரெண்டு வாரம் முன்னாடி தான் எல்லாம் முடிஞ்சுது, நிறைய நண்பர்கள் அவுங்க வீட்டிற்கு கூப்பிட்டிருந்தார்கள், அங்கெல்லாம் போயிட்டு அப்படியே டைம் போயிருச்சு, சென்னை வந்ததும் உன்னை எங்கயாவது மீட் பண்ணனும்னு நினைச்சிட்டு இருந்தேன், அதுக்குள்ள எதேச்சையா இங்கயே பார்த்துட்டேன்."

"பரவாயில்லை, நீயே மெயில் பண்ணுவன்னு காத்துகிட்டு இருந்தேன், நானும் ரெண்டு மாசம் பிசி தான் வொர்க் கடினமா போயிட்டிருந்தது" சமாளித்தேன்.


"இங்க தான் உன்  வீடு இருக்கா?"

"இல்ல, அக்கா வீடு இங்க இருக்கு, அவங்க வீட்ல தான் இப்ப இருக்கேன்." அடிக்கடி சந்திக்கலாம் என்று நினைத்து கொண்டேன்.

"காபி குடிக்கலாமா?" என்று கேட்டு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றோம்.
காபியை வாங்கி அவளிடம் கொடுத்த போது, முதல் முறையாக விரல்கள் தொட்டுக் கொண்டன, நான் மெய் மறந்து கொண்டடிருந்த போது மறுபடியும் யாரோ கூப்பிட்டார்கள்

"டேய் ராம், எந்திரிடா,  என்ன இன்னும் தூக்கம்"

அம்மா கத்தியதில் சட்டென்று எழுந்த்தேன், "ச்சே, எல்லாம் கனவா? சாரு, நெஜமாலும் இவ்வளவு அழகா இருப்பாளோ, இன்னைக்கு கண்டிப்பா போட்டோ அனுப்ப சொல்லணும்".

"ஏம்மா, அதுக்குள்ளே எழுப்பிட்ட?'

"டேய், அப்பா ஊரில் இல்ல, ஜிம்மி எந்திரிச்சதலிரிந்து கத்திகிட்டே இருக்கு, அத பக்கத்து பார்க் வரைக்கும் வாக்கிங் கூட்டிட்டு போடா."

"அப்பாவுக்குதான், வேலையில்ல நீயுமாம்மா?"

"அது கத்திகிட்டே இருக்கும், இன்னைக்கு ஒரு நாள் கூட்டிட்டு போடா"

"சரிம்மா"

சிறிது நேரத்தில், பல் தேய்த்து, முகம் கழுவி ஜிம்மியுடன் பார்க்கிற்கு கிளம்பினேன்.

அதிகாலை நேரம், சூரியன் இன்னும் ஒளிந்து கொண்டிருந்தது, பூங்காவில் அதிக கூட்டம் இல்லை, இனிமையான நாள், ஒரு கனவு போல் நடந்து கொண்டிருந்தேன். 'ராம்' என்று யாரோ பின்னாலிருந்து அழைத்தார், திரும்பி பார்த்தால், அட!


கதை பிடித்திருந்தால் தமிலிஷில் ஓட்டளிக்கவும்.

Monday, 3 May 2010

அங்காடித் தெரு - திரைப்பார்வை

வாழ்வில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நமக்கு தோற்ற ஒருவனின் வாழ்க்கையை வெயிலாக தந்த வசந்த பாலன், வாழ்வு தேடி பெரு நகரங்களுக்கு வந்து, ஜொலி ஜொலிக்கும் கடைகளில் அடிமைபட்டிருப்பவர்களின் வாழ்வை அங்காடித் தெருவில் நம் பார்வைக்கு (சிந்தனைக்கும்) வைத்திருக்கிறார்.

மேற்படிப்பு  படிக்கும் கனவில் இருக்கும் மகேசுக்கு, அப்பாவின் மரணம் மூலம் இடி விழுகிறது, வீட்டை காப்பாற்ற வேறு வழியில்லாமல், சென்னையில் பிரமாண்டமாய் இருக்கும் கடைக்கு சேல்ஸ் மேன் வேலைக்கு சேர்கிறார். கடையின் ஜொலி ஜொலிப்பு போல் வாழ்க்கை அமையும் என்று நம்பி சென்னை வரும் மகேஷ், அங்கு சந்திக்கும் நிஜம் அவரை மட்டுமல்ல பார்க்கும் நம்மையும் உறைய வைக்கிறது.  அதே கடையில் வேலை செய்கிறார் அஞ்சலி,  ஆரம்பத்தில் இருவரும் அடிக்கடி மோதிகொள்கிறார்கள், அப்புறம் வழக்கம் போல் நன்றாக பழகுகிறார்கள். இவர்கள் மூலம்  இந்த மாதிரி கடையில் வேலை செய்பவர்கள் காலை முதல் இரவு வரை சந்திக்கும் பிரச்சனையையே நமக்கு படமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். அவர்களின் தங்குமிடம், உணவு, பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டுபாடுகள் அதை மீறினால் கிடக்கும் தண்டனைகள், என எல்லாம் நமக்கு அதிர்ச்சி தருகின்றன.

கதையின் நாயகனாக புதுமுகம் மகேஷ், நாயகியாக "கற்றது தமிழ்" அஞ்சலி. கோபமான காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார் மகேஷ், படத்தில் நடிப்பிற்கு முதல் மார்க் வாங்குவது அஞ்சலி ("நெசமாத்தான் சொல்றேன்"), அருமையாக நடித்திருக்கிறார், அத்தனை விதமான உணர்ச்சிகளையும் முகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுபோல் பல படங்கள் அமைய வாழ்த்துக்கள் அஞ்சலி.   வேலை செய்பவர்களின் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும்  கடையின் டெரர் கண்காணிப்பாளர் "கருங்காலி"யாக இயக்குனர் வெங்கடேஷ் அசத்தியிருக்கிறார். மகேஷின் நண்பனாக வரும் பாண்டி அப்பப்ப கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

இதுவரை யாரும் தொடாத ஒரு கதையை தொட்டிருக்கும் இயக்குனர் வசந்த பாலனுக்கு வாழ்த்துக்கள் பல. எடுத்துக்கொண்ட கதையை எதாதர்த்திற்கு அருகாமையில் படமாக்கியிருக்கிறார் (சில காட்சிகளை தவிர) .திரைப்படங்களை பொழுதுபோக்குக்காக பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் பிடிக்காமல் போகலாம், அர்த்தமுள்ள படங்களை விரும்புவர்களுக்கு இதப்படம் கண்டிப்பாக பிடிக்கும். பிரதான கதைக்கு நடுவில் வரும் கதைகளும் சிறந்த சிறு கதையை படித்த உணர்வை தருகிறது. "அவள் அப்படி ஒன்றும்" பாடலும், "உன் பேரை" பாடலும் நன்றாக இருந்தன. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்தில் உரையாடலை சிறப்பாக அமைத்திருக்கிறார் ஜெயமோகன். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் முதல் பாதி வேகமாக செல்கிறது, இரண்டாவது பாதி சோகமாக இருப்பதாலோ என்னவோ கொஞ்சம் மெதுவாக செல்கிறது. இப்படத்தை தயாரித்திருக்கும் அய்ங்கரன் நிறுவனதிற்கு வாழ்த்துக்கள், இதுபோன்ற அர்த்தமுள்ள பல படங்களை தயாரிக்க வேண்டுகிறோம் (சீக்கிரம் நந்தலாலாவை வெளியிடுங்கப்பா).

மேம்பாலம் தன் கடையை மறைத்து விடும் என்று, பாலத்தை பாதியிலயே முடிக்க வைக்கும் முதலாளிகளும், கடையை இடிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும், கொடுக்க வேண்டியதை கொடுத்து நீதி மன்ற உத்தரவை மழுங்கடிக்க அரசு உத்தரவை பெரும் முதலாளிகளும் இப்படத்தை பார்த்து திருந்துவார்களா, என்பது தேவையில்லாத கேள்வியென்றே தோன்றுகிறது. இந்தப்படம் பார்த்த பிறகு, எந்த சேல்ஸ் மேன்/வுமன்களை பார்க்கும்போது அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றும், அதுவே இப்படத்தின் வெற்றி.

குறிப்பு: படம் பார்த்து 2 வாரம் ஆச்சு, ஆனால் விமர்சனம் எழுதமுடியவில்லை, நல்ல படம் பற்றி கண்டிப்பா எழுதியே ஆகணும் என்பதால், தாமதமானாலும் பரவாயில்லை என்று இந்த விமர்சனம் எழுதியிருக்கிறேன்.