Saturday, 22 January 2011

ஆடுகளம்

பொல்லாதவன் கூட்டணியின் அடுத்த படைப்பு ஆடுகளம். காணும் பொங்கலன்று நான் கண்ட திரைப்படம்.

மதுரையில் சேவல் சண்டையில் பெரிய ஆள் பேட்டைக்காரன். அவரை சேவல் சண்டையில் தோற்கடிப்பதே லட்சியமாக கொண்டிருப்பவர்  ரத்தினவேல். காவல் ஆய்வாளரான ரத்தினவேலிடம் மோதுவது தன்னுடன் இருப்பவர்களுக்கு நல்லதல்ல என்று சேவல் சண்டையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்  பேட்டைக்காரன். அவரை மீண்டும் சண்டைக்கு  இழுக்கிறார் ரத்தினவேல். ஒரு சூழ்நிலையில்  ரத்தினவேலுடன் கடைசி முறையாக "உசுருக்கு சமானம் தான் போட்டி " என்று சவால் விட்டு சேவல் சண்டையில் மோத தயாராகிறார்   பேட்டை. கருப்பு(தனுஷ்) மற்றும் துரையின்(கிஷோர்) உதவியுடன் பேட்டைக்காரன் எப்படி வெல்கிறார் என்பது முதல் பாதி.



இந்த வெற்றியில் பேட்டைக்காரன் தேறாது என்று சொன்ன சேவலை வைத்து கருப்பு ஒரு பெரிய பரிசு ஜெயித்து விட திடீர் பிரபலமாகிறார். அதன் தொடரச்சியாக நடக்கும் சம்பவங்களால் தனது மரியாதை பாதிக்கப்படுவதாக உணர்கிறார் பேட்டை, இதனால் பேட்டைக்கு ஏற்படும் வெறுப்பும், அதன் விளைவுகளும் இரண்டாவது பாதி.

சேவல் சண்டையைப் பற்றி படம் ஆரம்பிக்கும் போதே நம்மை உள்ளிழுத்து விடுகிறார் வெற்றிமாறன். யாரும் தொடாத களத்தை தொட்டு சீரிய திரைகதையில் படத்தை நகர்த்தி சென்ற வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்.    இந்நேரம் 'நிதி' குடும்பத்தினர் யாராவது  இவரை அடுத்த படத்திற்கு புக் செய்திருப்பார்கள். படத்தின் பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஜீ வியின் பின்னணி இசையும். சேவல் சண்டையை கொஞ்சம் மிகைப்படுத்திக் காட்டியிருப்பது போல் தோன்றினாலும் அந்த கிராபிக் காட்சிகள் நன்றாகவே இருந்தன.

தனுஷின் நடிப்பு அபாரம், அந்த உடல் மொழியும், நக்கல் கலந்த மதுரை தமிழ் பேச்சும் என அவர் ராஜ்ஜியம் தான். பேட்டைக்காரன் பின்னால் சுற்றுவதும்,  காதலியிடம் மருகுவதும், அம்மாவுடன் சேவலுக்காக சண்டையிடுவதும், துரையிடம் "அண்ணே" என்று அன்பைப் பொழிவதும் என பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.  பல பொழுதுபோக்கு படம் நடித்து வந்தாலும் நடுநடுவே இந்த மாதிரி கதைக்கும் நடிப்பிற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தனுஷ் தேர்ந்தெடுத்து நடிப்பது ஆரோக்கியமான விஷையம்.

பேட்டைக்காரனாக கவிஞர் ஜெயபாலன் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோசம், கோபம், வெறுப்பு என  பல்வேறு உணர்வுகளை அவர் உடல் மொழியில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார், அவருக்கு மிக சிறப்பாக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் ராதாரவி. கிஷோர் இயல்பாக சிறப்பாக நடித்திருக்கிறார்.  இவருக்கு ஹீரோவிடம் அடிவாங்கும் வில்லன் பாத்திரம் மட்டுமின்றி   இந்தமாதிரி பாத்திரங்களும் தொடர்ந்து கிடைத்தால் நன்று. பேட்டையின் இளம் மனைவி, கருப்பின் நண்பன், சேவல் சண்டையை நடத்துபவர் என ஒவ்வொரு பாத்திரமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

மெதுவாக செல்லும் சில காட்சிகள்,  தமிழ்ப்பட சம்பரதாயமாக கடைசியில் நாயகனுடன் சேர்ந்துகொள்ளும் நாயகி , போன்ற சிறு குறைகள் இருந்தாலும் கதை களம், சிறப்பான  இயக்கம்  மற்றும் நடிப்பிற்காகவும்  கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் ஆடுகளம்.

1 comment:

Raju said...

really wonderful movie. Dhanush Rocks. There is no Heroism in the movie. Fights are like real in our life. Love scene is marvelous. Songs are fantastic. Good Movie. We can watch this movie in theatre with family. (we have to accept violence). Vetrimaran superb. Music too super. Dialogues are wonderful. Good Movie.