Tuesday, 2 February 2010

ராஜிவ் கொலை வழக்கு - ஒரு பார்வை


புத்தக கண்காட்சியில் வாங்கியதில் முதலில் படித்த புத்தகம் கே. ராகோத்தமன் எழுதிய "ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்." புத்தக கண்காட்சியில் பரபரப்பாக விற்ற புத்தகம், கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

இப்பூமியில் நடந்த அரசியல் படுகொலைகளில் மிக முக்கியமானது ராஜிவ் கொலை, அக்கொலை விசாரணை குழுவில் தலைமை புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கே. ராகோத்தமன் அவர்கள் அவ்விசாரணை மற்றும் துப்பறிந்த முறை பற்றி எழுதியதே இந்நூல். இதற்கு முன் இவ்வழக்கின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி திரு. கார்த்திகேயன் அவர்கள் இவ்வழக்கை பற்றி "புலன் விசாரணை" என்ற நூல் எழுதியிருக்கிறார். இரண்டு நூலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான், ராகோத்தமன் எழுப்பும் பல ஏன்? என்ற கேள்விகள் தவிர.

ராஜிவ் கொலையில் ஆரம்பிக்கிறது நூல், ஒரு துப்பு கூட கிடைக்காமல், "முடிந்தால் கண்டுபிடிக்கட்டும்" என்ற சவாலுடன் விசாரணையை ஆரம்பிக்கும் புலனாய்வுத் துறை ஒரு கேமராவையும், சில புகை படங்களையும் வைத்துக்கொண்டு எப்படி கொலையாளிகளை பிடிக்கிறார்கள் என்பதை ராக்கெட் வேகத்தில் ஒரு க்ரைம் நாவல் போல சொல்கிறார் ஆசிரியர். நம் புலனாய்வு துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆங்காங்கே விளக்குகிறார். புலனாய்வு துறை ஆரம்பம் முதல் கடைசி வரை பெரும்பாலும் நேர்மையாகவே நடந்திருகிறது, கடைசி கட்டத்தை தவிர, சிவராசனை உயிருடன் பிடித்திருந்தால் இவ்வழக்கு முழுமை அடைந்திருக்கும், இது 99% சதவித வெற்றி தான் என்கிறார்.

நடந்தவற்றை நேரில் பார்த்தது போல் விவரிக்கிறார் ஆசிரியர். தேர்ந்த எழுத்தாளரை போல நூலை எழுதியிருக்கிறார். புலிகள் இக்கொலை திட்டமிடுவதிலிருந்து, அதன் பின்னணி, எப்படி எப்படியெல்லாம் காய் நகர்த்தியிருக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர். கொலை திட்டம், அத்திட்டம் பொய்த்தால் அதற்கு backup plan, காரியம் முடிந்ததும் தப்பிக்க வழிகள் என தெளிவாக திட்டமிட்டிருகிறார்கள் புலிகள், அவர்களின் தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் நெட்வொர்க் பற்றி தெரிந்துகொள்ளும் போது நமக்கு சில அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும் இருகின்றன. புலிகளுக்கு தமிழகம் முழுவதிலிருக்கும் தொடர்பை பற்றி தெரிந்து கொள்ளும் போது கொஞ்சம் பயமாகவே இருக்கிறது, எவ்ளோ பெரிய நெட்வொர்க்!

ராஜிவ் கொலை திட்டப்படி நடந்ததற்கு புலிகளின் திட்டமிடல் மற்றும் கொண்ட காரியத்தின் அவர்களுக்கு இருந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றை மீறிய முக்கிய காரணம் நம் அமைப்பின் தேசிய குணமான மெத்தனமும், அலட்சியமுமே. விசாரணையில் காட்டிய தீவரத்தையும், நேர்மையையும், ராஜிவின் பாதுகாப்பில் காட்டியிருந்தால், குறைந்தபட்சம் ஒரு மெட்டல் டிடெக்டர் உபயோகப்படுத்தபட்டிருந்தால் ஒரு நாட்டின் முக்கிய மனிதரின் கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஆங்காங்கே சில கேள்விகளை எழுப்பிக்கொண்டே போகிறார், விசாரணையின் போது விசாரிக்ப்படாத சில பிரமுகர்கள், மறைக்கப்பட்ட சில தகவல்கள், என பல கேள்விகள் எழுப்புகிறார், யார் பதில் சொல்ல போகிறார்கள்? யாரும் இல்லை! நூலின் மேல் "மர்மம் விலகும் நேரம்" என்று குறிப்பிட்டிருகிறார்கள், இந்நூல் சில கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் மேலும் சில கேள்விகளை எழுப்புகிறதே தவிர பெரிதாக எந்த மர்மத்தையும் விலக்கவில்லை, மாறாக நம் அமைப்பின் மெத்தனத்தையும், அலட்சியத்தையும் வெளிச்சமிட்டு காட்டுகிறது, அதை தெரிந்து கொள்ளவாவது இந்நூலை கட்டாயம் படிக்க வேண்டும்.