Monday, 26 September 2011

எங்கேயும் எப்போதும்

பெரும்பாலானோர் ஊரு விட்டு ஊரு வந்து வேலை பார்க்கும் இன்றைய வாழ்கையில் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நாம் தினமும் எங்கையாவது பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அப்படி பயணம் போகும் போது நிகழும் விபத்தும் அதனால் ஏற்படும் பாதிப்பும் என்ன என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் எங்கேயும் எப்போதும்.


சென்னைக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் அனன்யாவிற்கு ஒரு நெருக்கடியில் உதவி செய்ய வருகிறார் சர்வா, அன்று முழுவதும் அவருடனேயே சர்வா இருக்க நேர்கிறது. அந்த சம்பவங்கள் ஒரு track. திருச்சியில் அமைதியான ஜெய், அதிரடியான அஞ்சலி, இடையேயான காதல் மற்றொரு track. இவர்கள் பயணம் செய்யும் பேருந்துகள் பேருந்துகள் விபத்துகுள்ளவதும் அதன் பாதிப்புமே படம்.


படத்தில் எனக்கு பிடித்த விசையங்கள், படத்தின் முதன்மை பத்திரம் முதல், சில காட்சிகளே வரும் பயணிகள் வரை  ஒவ்வொரு கதாபத்திரத்தையும் அழகாக கட்டமைத்திருக்கிறார்  இயக்குனர். மிதப்பான ஊர் தலைவர், வெளிநாட்டில் இருந்து வருடங்கள் கடந்து வரும் நபர், அந்த கல்லூரி மாணவன் மற்றும் மாணவி, சமத்து குழந்தை, அந்த மாமி என ஒவ்வொரு பாத்திரத்திற்கும்  ஒரு வடிவம் கொடுத்திருப்பது அழகு, அதனால் படத்துடன் ஒன்ற முடிகிறது. தேவை இல்லாத பாடல்களின்றி, தேவையான அளவு நகைச்சுவை தெளித்து, எங்கும் தொய்வடையாமல் சீராக செல்லும் திரைக்கதை மற்றொரு பலம். சத்யாவின் இசையும் வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு தேவையான அளவு சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் காட்சிகளும், விபத்து காட்சியும் மிக அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.
படத்தில் எல்லா பாத்திரங்களும் சிறப்பாக இருந்தது, அதில் அஞ்சலியின் பாத்திரம் கொஞ்சம் புதிது. சர்வாவின் உதவும் குணம், விபத்தின் போது அஞ்சலியின் செயல் என எல்லா பாத்திரமும் படம் நெடுக அதன் இயல்பை விட்டு விலகாமல் இருந்தது சிறப்பு. என்னை மிகவும் கவர்ந்தது அனன்யாவின் பாத்திரம், திருமணமான புதிதில் முதல் முறை என் மனைவி சென்னை வந்த போது அவள் வெளிப்படுத்திய உணர்வுகளை அப்படியே பிரதிபலித்தது. (சென்னை சாலைகளை பார்த்து விட்டு என்னைக் கேட்டாள் "இத்தனை பெரும் எங்கதான் போறாங்க" என்று). அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருகின்றனர். அனைவருக்கும் மேலும் நல்ல படங்கள் அமைந்தால் நல்லது.


எடுத்துக்கொண்ட கதைக்கும், அவருடைய குருநாதர் கொடுத்த வாய்ப்பிற்கும்   நியாயம் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். முதல் படத்தில் அவருடைய திறமையை நிருபித்திருக்கிறார் மேலும் இது போல நல்ல படங்கள் தர வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் முருகதாஸ் அவர்களும் இப்படத்தின் வெற்றியின் மூலம் மேலும் சிலருக்கு இயக்குனர் வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.


படத்தில் சில குறைகள் இருந்தாலும், இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு கருத்தை நேர்மையாக  சொல்லியிருக்கும் இப்படத்திற்கு, சிறந்த படங்களின் வரிசையில் எங்கேயும் எப்போதும்  ஒரு இடம் உண்டு. கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள், படம் பார்த்தபின் உங்கள் வாகனத்தின் வேகத்தை நீங்கள் குறைக்கக் கூடும்.

Monday, 18 July 2011

தெய்வத்திருமக(ன்)ள்

30 வயது உடல் வளர்ச்சி  ஐந்து வயது மன வளர்ச்சியும் உள்ள தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்குமான உறவும் பிரிவும் போராட்டமுமே தெய்வத்திருமகள்.

ஊட்டியில் ஒரு கிராமத்தில் தங்கி அங்கயே  உள்ள  சாக்லேட் பாக்டரியில் வேலை செய்பவர் கிருஷ்ணா (விக்ரம்), அவருடைய மனைவி ஒரு குழந்தை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விடுகிறார். அந்தக் குழந்தையை குளிப்பாட்டி, உணவூட்டி, பாதுகாத்து, கதை சொல்லி  அங்கிருப்பவர்களின் உதவியுடன் வளர்க்கிறார் கிருஷ்ணா. அழகாக வாழ்ந்து வரும் தந்தையும் மகளும், ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவின் மாமனார் மூலம் பிரிக்கப்படுகிறார்கள், இது முதல் பாதி.

 சென்னையில் தனது மகளை தேடி அலையும் கிருஷ்ணா, தனது மகளை மீட்டுத்தருமாறு வக்கீல் அனுராதாவிடம் உதவி கேட்கிறார், அவரின் கதையை கேட்டு உதவி செய்ய முன்வருகிறார் அனுராதா. அவர் மிக மூத்த வக்கீலான பாஷ்யத்துடன் வழக்காடி கிருஷ்ணாவிற்கு அவர் குழந்தை நிலாவை மீட்டுக்கொடுத்தாரா இல்லையா என்பது உணர்ச்சிமயமான கிளைமாக்ஸ் உடன்  இரண்டாவது பாதி.


 
 
கிருஷ்ணா என்ற வளர்ந்த குழந்தையாகவே மாறியிருக்கிறார்  விக்ரம், அவருடைய உடல் மொழி அற்புதம். ஒவ்வொரு படத்திருக்கும் அவர் எடுத்து கொள்ளும் சிரத்தை வியக்கவைக்கிறது.  இதுவரை அவர் செய்த பாத்திரங்களில் மிக சிறப்பானதாக இதை சொல்லலாம்.  இப்படத்திற்காக பல  விருதுகள் அவரை தேடிவரும் என் நம்புகிறேன். விக்ரமிற்கு இணையான பாத்திரம் நிலாவாக  நடித்திற்கும் குழந்தை சாராவிற்கு. இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார். சுத்திபோடுங்கப்பா சாராவிற்கு, எத்தனை கண்ணு பட்டுச்சோ.வக்கீலாக அனுஷ்கா, அழகாக அளவாக நடித்திருக்கிறார். பள்ளி நிர்வாகியாக அமலா பால், முதல் பாதியில் நகைச்சுவைக்கு எம் எஸ் பாஸ்கர், இரண்டாம் பாதியில் சந்தானம் என துணை பாத்திரங்கள் சிறப்பாக செய்திருக்கின்றனர். பாஷ்யம் என்ற அப்பாடக்கர் வக்கீலாக நாசர்,  சில காட்சிகளை தவிர சிறப்பாக செய்திருக்கிறார் .

மதராசபட்டினத்தை தொடர்ந்து ஒரு வித்யாசமான ஒரு திரைப்படத்தை அளித்திருக்கும் இயக்குனர் விஜய்க்கு வாழ்த்துக்கள். எடுத்துக்கொண்ட கதையை சிறப்பான  திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் விஜய். படத்தில் பல நெகிழ்ச்சியான காட்சிகள் இருகின்றன, ஆனால் அவைகளுக்கு இடையே நகைச்சுவையை தெளித்து  ஓவர் emotional dramaவாக ஆக்காமல் திரைக்கதை அமைத்திருப்பது அழகு. குழந்தைக்கு நிலா என்று பெயர் வைப்பது, பிடித்த பட்டாம் பூச்சி பறந்ததும் ஏமாறும் கிருஷ்ணாவை நிலா தன் இமைகளையே பட்டாம்பூச்சி போல் அசைத்து  மகிழ்ச்சிப்படுதும்  காட்சி, கதை சொல்லும் காட்சி, இறுதியில் தந்தை மகள் உரையாடும் காட்சி என பல கவிதையான காட்சிகள் அமைத்திருக்கிறார் விஜய். இசையும் (பிரகாஷ்), ஒளிப்பதிவும் (நீரவ் ஷா)  இப்படத்திற்கு தேவையான அளவு சிறப்பாக அமைந்திருக்கிறது. படதொகுப்பாளர் இன்னும் சில காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கலாம் என்று படுகிறது.

இரண்டாம் பாதி நீளமாக இருப்பது, "விழிகளில் ஒரு வானவில்" பாடல்,  குழந்தைக்கு தேவையான மருந்தை கிருஷ்ணா சரியாக வாங்கி வருவது, போன்ற சில குறைகள் இருந்தாலும். தெய்வத்திருமகள் தமிழில் முக்கியமான ஒரு திரைப்படம். கிருஷ்ணா நிலாவை வளர்க்கும் காட்சிகளில், ஒரு குழந்தையை இப்படிதான் வளர்க்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. நல்ல படம் மட்டும் தான் பார்ப்பேன் என்று அடம் பண்ணுபவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம்.

Friday, 18 February 2011

அன்புத் தம்பீ!

அன்புத் தம்பீ!
கழகத்திற்காக உழைத்து உழைத்து எறும்பாக தேய்ந்த தேய்ந்து கொண்டிருக்கும் தேய போகும் என் உடன் பிறப்புகளே அவரின் வாரிசுகளே! உடன் பிறப்புகள் என்ற வார்த்தை எழுதும்போது கூட என் பேனா தளுதளுக்கிறது என் கண்கள் பனிக்கின்றன, அதை எல்லாம் துடைத்துக் கொண்டு என் ரத்தத்தால் (ரத்தத்தின் ரதம் அல்ல!) இந்த மடலை வரைகிறேன்.

ஒரு ரூபாய்க்கு மேல் விற்றால அரிசி வாங்கி சாப்பிட இயலாத, இலவச பொங்கல் பொருட்கள் கொடுக்காமல்விட்டால் பொங்கல் வைக்க வக்கில்லாத என் உடன் பிறப்புகளே! அரை நாள் உன்னாவிரதத்திலேயே  ஒரு போரை நிறுத்தி தமிழர்களின் உயிர் மற்றும் மானம் காத்த உங்கள் முதல்வர் இல்லை இல்லை தலைவர் உங்களிடம் இந்த மடல் மூலம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். தேர்தல் நம்மை நோக்கி வருகிறது, என் தம்பிகள் நீங்கள் இருக்கும் வரை எனக்கு எந்த பயமும் இல்லை. நம்மை திட்டிய திட்டும் திட்டபோகும் அணைத்து கட்சிகளையும் இணைத்து பலமான ஒரு கூட்டணி அமைப்பேன் நீங்கள் உங்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைத்து உதய சூரியனை துளிர்க்க மன்னிக்கவும் உதிக்க செய்ய வேண்டும்.

திமுக கூட்டனியில் யார் யார் இருக்கிறார்கள் என்று குழப்பம் நில்வுவதாக உளவுத்துறை மூலம்  செய்திகள் வந்தன, கவலைப்படாதீர்கள் அது எனக்கே குழப்பமகாத்தன் இருக்கிறது. என் வாரிசுகள் அனைவரின் கருத்துகளை கேட்ட போது அனைத்து கட்சிகளுடனும் (அதிமுக தவிர) கூட்டணி வாய்ப்பு இருப்பதாக கூறினார் (இன்னும் சில வாரிசுகள் பேச கட்சிகள் இல்லை) ,  இருந்தும் தமிழ் நாட்டிற்கு எது முக்கியம்,  என்ன செய்தால் இந்த நாடு செழிக்கும், என் வாழ் நாளிலே என்னை தவிர ஏழைகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க தேவையான் கூட்டணியை அமைப்போம் என்று மற்றும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

இப்போது நம் கூட்டணியில் திமுக இருக்கிறது காங்கிரஸ் இருக்கிறதா இல்லையா என்று அந்த ராசாவுக்கு சாரி ராகுலுக்குத்  தான் தெரியும், தவிர போக இடம் இல்லாத சில கட்சிகள் பொட்டிகள் ச்சே கொள்கைகள் அடிப்படையில்  விரைவில் நம்மிடம் சேரும்.  ஆனால் நம் கூட்டணிக்கு வலு சேர்க்க நமை கரை சேர்க்க பாமாக சாரி பாமக நம் கூட்டணியில் இணைகிறது என்று   வெக்கமோ அசிங்கமோ இன்றி மனதில் மட்டற்ற மகிழ்ச்சியில் தெரிவித்து கொள்கிறேன். பாமாக சாரி பாமக ஒரு நேர்மையான நம்பகமான கட்சி என்று நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை, அவர்கள் நமக்கு கொடுத்த பூஜ்ய மதிப்பெண்ணை நான் மறந்துவிட்டான், நீங்களும் மறந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.   டாஸ்மாக்கின் வருமானம் தான் நமக்கு முதன்மையான வருமானம் என்றாலும் டாஸ்மாக்கின் நேரத்தை ஒரு சில மணித்துளிகள் குறைத்து கொள்வதின் மூலம் பாமகவின் கொள்கைக்கு விரோதமில்லாமல் நடந்து கொண்டு சிறப்பான ஆட்சியை நம்மால் வழங்க முடியும். 


பாமக நம் கூட்டனி சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த பாமக தலைவரின் முகைத்தை பார்த்தாயா தம்பீ  அதற்கு காரணம் நாம் கொடுத்த 31 சட்டமன்ற  தொகுதியா இல்லை 1 ராஜ்ய சபா தொகுதியா  இல்லை வேறேதும் காரணமா  என்று லியோனி தலைமையிலே நாம் ஒரு பட்டி மன்றம் வைக்கலாம், அதில் காடுவெட்டி குரு என்னை புகழ்ந்தது பேசுவது கேட்கே என் மனம் துடிக்கிறது. பாமக எங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே வைத்திருகிறது எதை வேண்டுமானாலும் இலவசமாக கொடுங்கள் அனால் உப்பை மட்டும் கொடுக்காதீர்கள், அடுத்த முறை நாங்கள் எங்கும் ஜெய்க்க முடியாது என்றார், உங்கள் மேல் நம்பிக்கை வைத்து நான் கூறினேன் "உப்புக் கடலிலே சுடப்பட்டு மிதக்கும் உடல்களை பார்த்தே சொரணை வராத இவர்களை பார்த்து நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை  என்றேன்", என்ன கழக கண்மணிகளே உடன் பிறப்புகளே சரிதானே?

இப்படிக்கு
உங்கள் கீழ்படிந்துள்ள
ஏழை முதல்வரோ தலைவரோ

Saturday, 5 February 2011

யுத்தம் செய்

விமர்சனம் என்கிற பெயரில் இப்படத்தின் கதையை நான் கூறப்போவதில்லை,  அடுத்து மூன்று வரிக்குமேல் கதையை பற்றி ஒரு வார்த்தை இல்லை ஆக தாரளமாக நீங்கள் இதை படிக்கலாம்.

நகரத்தில் திடீரென்று ஒரு பெட்டியில் வெட்டப்பட்ட கைகள் மக்கள் அதிகம் இருக்கும் சில இடங்களில்  வைக்கப்படுகிறது. இதன் பின்னணியை விசாரிக்கும் பொறுப்பு CB CID அதிகாரி சேரனிடம் கொடுக்கப்படுகிறது, அந்த விசாரணை எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என்பதே யுத்தம் செய்.


இப்படம் ஒரு அக்மார்க் த்ரில்லர், படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் நாம் கதையோடு ஒன்றி, சேரனின் குழுவில் நான்காவது ஆளாக இணைந்து கொள்கிறோம் (நான் கொண்டேன்).  படத்திற்கு சிறப்பான  பின்னனி இசை அமைத்து 'கே'வும், மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து  சத்யனும் பலம் சேர்க்கின்றனர். நடிகர்கள் அனைவரும் அளவான நடிப்பை கொடுத்திருகின்றனர்.
 
திரைப்படம் என்னும் ஊடகத்தை தொடர்ந்து சிறப்பாக பயன்படுத்திவருகிறார் மிஷ்கின். காட்சிகளுக்கு முக்கியத்துவம், அளவான வசனம், தேவையில்லாத  காட்சிகள் தவிர்ப்பு என்று  எடுத்துக்கொண்ட கதைக்கு மிஷ்கின் சீரான சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார். உங்களின் அடுத்த படத்திற்கு காத்திருக்கிறேன் மிஷ்கின்.
 
படத்தில் சில குறைகளும் உண்டு, மிஷ்கின் பாணி சண்டை காட்சி, மஞ்சள் சீலை பாடல், சில இடங்களில் மெதுவாக செல்லும் திரைக்கதை மற்றும் கொஞ்சம் சினிமா தனமான கிளைமாக்ஸ் ஆகியவை. இதை தவிர்த்து பார்த்தால், யுத்தம் செய் இதுவரை தமிழ் சினிமாவில் நாம் பார்த்திடாத த்ரில்லர், எந்தக் கதையையும், கதையை விவரிக்கும் விமர்சனத்தையும் படிக்காமல், படத்திற்கு செல்லுங்கள், you are in for some surprises.

குறிப்பு: இப்படத்திற்கு குழந்தைகளையோ சிறுவர்களையோ அழைத்து செல்லாதீர்கள்!.


Saturday, 22 January 2011

ஆடுகளம்

பொல்லாதவன் கூட்டணியின் அடுத்த படைப்பு ஆடுகளம். காணும் பொங்கலன்று நான் கண்ட திரைப்படம்.

மதுரையில் சேவல் சண்டையில் பெரிய ஆள் பேட்டைக்காரன். அவரை சேவல் சண்டையில் தோற்கடிப்பதே லட்சியமாக கொண்டிருப்பவர்  ரத்தினவேல். காவல் ஆய்வாளரான ரத்தினவேலிடம் மோதுவது தன்னுடன் இருப்பவர்களுக்கு நல்லதல்ல என்று சேவல் சண்டையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்  பேட்டைக்காரன். அவரை மீண்டும் சண்டைக்கு  இழுக்கிறார் ரத்தினவேல். ஒரு சூழ்நிலையில்  ரத்தினவேலுடன் கடைசி முறையாக "உசுருக்கு சமானம் தான் போட்டி " என்று சவால் விட்டு சேவல் சண்டையில் மோத தயாராகிறார்   பேட்டை. கருப்பு(தனுஷ்) மற்றும் துரையின்(கிஷோர்) உதவியுடன் பேட்டைக்காரன் எப்படி வெல்கிறார் என்பது முதல் பாதி.இந்த வெற்றியில் பேட்டைக்காரன் தேறாது என்று சொன்ன சேவலை வைத்து கருப்பு ஒரு பெரிய பரிசு ஜெயித்து விட திடீர் பிரபலமாகிறார். அதன் தொடரச்சியாக நடக்கும் சம்பவங்களால் தனது மரியாதை பாதிக்கப்படுவதாக உணர்கிறார் பேட்டை, இதனால் பேட்டைக்கு ஏற்படும் வெறுப்பும், அதன் விளைவுகளும் இரண்டாவது பாதி.

சேவல் சண்டையைப் பற்றி படம் ஆரம்பிக்கும் போதே நம்மை உள்ளிழுத்து விடுகிறார் வெற்றிமாறன். யாரும் தொடாத களத்தை தொட்டு சீரிய திரைகதையில் படத்தை நகர்த்தி சென்ற வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்.    இந்நேரம் 'நிதி' குடும்பத்தினர் யாராவது  இவரை அடுத்த படத்திற்கு புக் செய்திருப்பார்கள். படத்தின் பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஜீ வியின் பின்னணி இசையும். சேவல் சண்டையை கொஞ்சம் மிகைப்படுத்திக் காட்டியிருப்பது போல் தோன்றினாலும் அந்த கிராபிக் காட்சிகள் நன்றாகவே இருந்தன.

தனுஷின் நடிப்பு அபாரம், அந்த உடல் மொழியும், நக்கல் கலந்த மதுரை தமிழ் பேச்சும் என அவர் ராஜ்ஜியம் தான். பேட்டைக்காரன் பின்னால் சுற்றுவதும்,  காதலியிடம் மருகுவதும், அம்மாவுடன் சேவலுக்காக சண்டையிடுவதும், துரையிடம் "அண்ணே" என்று அன்பைப் பொழிவதும் என பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.  பல பொழுதுபோக்கு படம் நடித்து வந்தாலும் நடுநடுவே இந்த மாதிரி கதைக்கும் நடிப்பிற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தனுஷ் தேர்ந்தெடுத்து நடிப்பது ஆரோக்கியமான விஷையம்.

பேட்டைக்காரனாக கவிஞர் ஜெயபாலன் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோசம், கோபம், வெறுப்பு என  பல்வேறு உணர்வுகளை அவர் உடல் மொழியில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார், அவருக்கு மிக சிறப்பாக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் ராதாரவி. கிஷோர் இயல்பாக சிறப்பாக நடித்திருக்கிறார்.  இவருக்கு ஹீரோவிடம் அடிவாங்கும் வில்லன் பாத்திரம் மட்டுமின்றி   இந்தமாதிரி பாத்திரங்களும் தொடர்ந்து கிடைத்தால் நன்று. பேட்டையின் இளம் மனைவி, கருப்பின் நண்பன், சேவல் சண்டையை நடத்துபவர் என ஒவ்வொரு பாத்திரமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

மெதுவாக செல்லும் சில காட்சிகள்,  தமிழ்ப்பட சம்பரதாயமாக கடைசியில் நாயகனுடன் சேர்ந்துகொள்ளும் நாயகி , போன்ற சிறு குறைகள் இருந்தாலும் கதை களம், சிறப்பான  இயக்கம்  மற்றும் நடிப்பிற்காகவும்  கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் ஆடுகளம்.

Monday, 17 January 2011

34வது சென்னை புத்தகக்காட்சி

இந்த வருட புத்தக காட்சிக்கு நேற்றுத்தான் செல்ல முடிந்தது. நான் புத்தகம் படிப்பதற்கே திட்டும் என் மனைவியையும் அழைத்துச் சென்றிருந்தேன். புத்தகங்களைப் பார்த்து இவ்வளோ புத்தகங்களா! என்று  ஆச்சர்யப்பட்டாள். புத்தகங்களைப் பார்பதற்கே மகிழ்வாக இருக்கிறது. சில பதிப்பகங்களை தவிர  பெரும்பாலான கடைகளில் கூட்டமாகவே இருந்தது.


இந்த முறை எப்படியும் எழுத்தாளர்களையும் பதிவர்களையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்றிருந்தேன், கிடைத்தது. அன்னம் பதிப்பகத்தில் திரு  மற்றும் திருமதி கி.ரா  அமர்ந்திருந்தார்கள் , இதுவரை அவருடைய புத்தகங்கள் படித்ததில்லை என்றாலும் அவரிடம் கையெழுத்திற்காக அவரின்   புத்தகம் ஒன்று வாங்கி கையெழுத்து வாங்கி வந்தேன், கனிவாக பேசினார் கி ரா, அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.  முதல் சுற்றில் உயிர்மையில் பிரபலங்கள் யாரும் இல்லை. கிளம்புவதற்கு முன் உயிர்மையில் எஸ்.ரா  இருப்பார் (உயிர்மையில் மாலை 4:30 மணிக்கு மேல் இருப்பேன் என்று அவருடைய வலைத்தளத்தில் கூறியிருந்தார்) என்று சென்றேன், எஸ். ரா இல்லை ஆனால் மனுஷ்யபுத்திரனும், சாருவும் இருந்தார்கள், அவர்களிடம் பேசவில்லை திரும்பி  வரும்போது பதிவர் எழுத்தாளர் நர்சிம் (ரொம்ப ஸ்மார்டாக) நின்றிருந்தார், அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சில வார்த்தைகள் பேசிவிட்டு வந்தேன்.

கி.ராவுடன்
மாலை 6:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்படிருந்த உரை அரங்கத்தில்  பாரதி பாஸ்கர், வைத்தியநாதன் ஆகியோர் பேசுவதாக அறிவித்திருந்தனர். நம் பண்பாட்டின் படி 45 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்தது உரை அரங்கம். நூலகர் முத்துசாமி அவர்கள் நூலகர்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார். அடுத்து பாரதி பாஸ்கர் "இத்தரை மீதினிலே தமிழ் எத்துனை உயர்ந்ததம்மா" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.

இந்த முறை அதிக புத்தகங்கள் வாங்க எண்ணம் இல்லை. ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்க மட்டுமே எண்ணியிருந்தேன்.அதற்கு காரணம் போன மாதம் இதற்கு முன் வேலை செய்த அலுவலகத்தின் கடைசி நாளன்று நினைவுப் பரிசாக ஆறு புத்தகங்கள் கொடுத்திருந்தனர், மேலும் அதற்கு முன் வாங்கிய சில புத்தகங்கள் இன்னும் உறை பிரிக்கப்படாமல் இருகின்றன. அப்புத்தகங்களை கிழித்து (உறையை)    படித்து விட்டு மேலும் புத்தகங்கள் வாங்கலாம் என்றிருக்கிறேன்.

தினத் தந்தியின் "வரலாற்றுச் சுவடுகள்" 864 பக்கங்கள் ஆர்ட் காகிதத்தில் வண்ண எழுத்து, படங்களுடன்  270 ரூபாய்க்கு விற்றனர், டீ கடையில் பஜ்ஜி விற்பதுபோல்  சுடச் சுட விற்றுக் கொண்டிருந்தது. இப்புத்தகம் வெளிவந்து நான்கு மாதத்தில் இரண்டாவது பதிப்பு கண்டிருக்கிறது, amazing.  சந்தேகமில்லாமல் இந்த வருடம் அதிக விற்பனையான புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். இப்புத்தகத்தை பற்றி எனக்கு ஒரே குறை இவ்வளோ பெரிய புத்தகத்தை பயணத்தின் போது எடுத்து சென்று படிக்க முடியாது, கீதை மாதிரி வீட்டிலேயே படிக்க வேண்டும். மூன்று நான்கு வால்யுமுகளாக போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், மற்ற படி அருமையான புத்தகம்.

நான் வாங்கிய புத்தகங்கள்:
என் இனிய இயந்திரா - சுஜாதா (வாத்தியார் புத்தகம் இல்லாமலா?)
கிராமியக் கதைகள் - கி. ரா
வரலாற்றுச் சுவடுகள் - தினத் தந்தி
காந்திய நெறியில் நம் வாழ்க்கை (VCD) - நெல்லை கண்ணன் உரை .
வெரைட்டி ரைஸ் வகைகள் - கீதா பாலகிருஷ்ணன் (ஹி... ஹி... இது வீட்டம்மாவுக்கு)