எங்கள் அறையிலிருந்து அனைவரும் கடந்த வாரம் எவெரட் சென்றிருந்தோம். சியாட்டலின் சிறப்பாக இருக்கும் போயிங் விமான நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு கூடம் (Boeing Assembly Plant) இங்கு இருக்கிறது. இந்த இடத்திற்கு யாரும் வரலாம், ஒரு டூர் போல் அழைத்து சென்று நமக்கு சுற்றி காட்டுகின்றனர். போயிங் தயாரிக்கும் பயணிகள் விமானங்களின் மாடல்கள் 707, 727, 737, 747 (ஏர் பஸ்சின் A380க்கு அடுத்த பெரிய பயணிகள் விமானம்), 757, 767 மற்றும் 777. இப்போது அவர்கள் புதிதாக உருவாக்கி வரும் மாடல் 787. இந்த விமானம் உருவாகி வருவதையே ஒரு பெரிய படமாக எடுக்கலாம், அவளவ்வு போராட்டங்கள். இந்த விமானம் சந்தைக்கு வந்த பின் விமானத்தை அலுமினிய பறவை என்று எழுத முடியாது, இந்த விமானம் அலுமினியம் இல்லாமல், கார்பன் கலவைகளால் உருவாக்கப்படுகிறது. இந்த மாதிரியை பற்றி தெரிந்து கொள்ள
இங்க சொடுக்கவும். மேலே குறிப்பிட்ட மாடல்களில் 747, 767, 777 மற்றும் 787 வகை விமானங்கள் இங்கு தான் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
1960களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை பற்றி சில தகவல்கள்...
உலகில் அதிக கொள்ளவு (Volume) உள்ள கட்டடம் (மொத்தம் 98.3 ஏக்கர்). - கின்னஸ் ரெகார்டில் இடம்பெற்றது.
10 லட்சம் மின் விளக்குகள் உள்ளன. குளிர் அதிகமான இடம் என்பதால் இவ்விளக்குகள் வெப்பத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
1,300 மிதிவண்டிகள் உள்ளன.
கட்டிடத்திற்கு அடியில் இருக்கும் மொத்த tunnellன் நீளம் 3.7 கி.மீ. இந்த இடத்தை வேலையாட்கள் ஓடுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் உபயோகித்து கொள்கின்றனர்.
இந்த கட்டிடத்தின் முன் மனிதர்கள் எறும்பு போல தோன்றுகின்றனர்.

இங்கு என்ன செய்கிறார்கள்?
இந்த கட்டிடத்திற்குள் உதிரிபாகங்களை கொண்டு வந்து வெளியில் விமானமாக அனுப்புகிறார்கள்.
ஒரு 777 வகை விமானத்தின் உ. பா. எண்ணிக்கை 30 இலட்சம். 747 இல் 60 இலட்சம், 787 இல் 14 இலட்சம்.
விமானத்தின் பாகங்களை நட்டு, போல்டெல்லாம் போட்டு ஒன்றினைத்து, மின்சார இணைப்புகள் கொடுத்து, பாகங்கள் சரியாக வேலை செய்கிறதா என்று அடிப்படை பரிசோதனை செய்து பின் பறக்கும் தகுதியில் வெளியில் அனுப்புவார்கள்.
வெளியில் வந்தவுடன் விமானத்திற்கு வாடிக்கையாளர் விரும்பியபடி வண்ணம் பூசப்படும். விமானத்தின் எடையை கருத்தில் கொண்டு வண்ணம் பூசுவார்கள்.
இந்த வேலைகளெல்லாம் முடிந்தவுடன் விமானம் பறக்க தயாராகிவிடும், பிறகு விமானம் பறக்கும் சோதனைக்கு உட்படுத்தப்படும், சோதனை வெற்றிகரமா முடிந்தவுடன், விமானம் மனிதர்கள் பறக்க தகுதியானது என்று சான்றிதழ் பெற்றவுடன் (
FAA போன்றவர்கள் இந்த சான்றிதழ் தருவார்கள்) , விமானம் விற்கப்படும். வாடிக்கையாளர்கள் ஒரு விமான ஓட்டியுடன் வந்து விமானத்தை எடுத்து செல்லுவார்கள். ஒரு
விமானம் இங்கு முழுதாக உருவாக 3 மாதங்கள் வரை கூட ஆகும். இப்போது உருவாகி வரும் 787 வகை விமானம் 12 நாட்களில் assemble செய்து விட முடியும் என்றனர்.
ஒரு முறை நாங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனம் ஒரு விமானத்தை பழம் வைத்து, தேங்காய் உடைத்து பூஜை செய்து எடுத்து சென்றதாக அதைப் பார்த்த என் நண்பர்கள் சொன்னார்கள். சக்கரங்களுக்கு எலுமிச்சை பழம் வைத்தார்களா என்று தெரியவில்லை.
இந்த இடத்தை சுற்றி காட்டியவர் கடைசியில், நாங்கள் மிக பாதுகாப்பான விமானம் தயாரிக்கிறோம், அடுத்த முறை நீங்கள் விமானத்தில் ஏறும் முன் "If it is not Boeing, I am not going " என்று சொல்ல வேண்டும் என்றார்.
எனக்குள் இருக்கும் சில நம்ப முடியாத விசயங்களில் ஒன்று விமானம் எப்படி பறக்கிறது என்பது, பல முறை அதைப்பற்றி படித்து புரிந்தது போல் இருந்தாலும், அடுத்தமுறை விமானத்தை பார்க்கும் போது எனக்குள் இருக்கும் குழந்தை இது எப்படி பறக்கிறது? என்ற கேள்வியை திரும்ப கேட்டுகொண்டே இருக்கிறது.