Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Monday, 26 September 2011

எங்கேயும் எப்போதும்

பெரும்பாலானோர் ஊரு விட்டு ஊரு வந்து வேலை பார்க்கும் இன்றைய வாழ்கையில் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நாம் தினமும் எங்கையாவது பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அப்படி பயணம் போகும் போது நிகழும் விபத்தும் அதனால் ஏற்படும் பாதிப்பும் என்ன என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் எங்கேயும் எப்போதும்.


சென்னைக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் அனன்யாவிற்கு ஒரு நெருக்கடியில் உதவி செய்ய வருகிறார் சர்வா, அன்று முழுவதும் அவருடனேயே சர்வா இருக்க நேர்கிறது. அந்த சம்பவங்கள் ஒரு track. திருச்சியில் அமைதியான ஜெய், அதிரடியான அஞ்சலி, இடையேயான காதல் மற்றொரு track. இவர்கள் பயணம் செய்யும் பேருந்துகள் பேருந்துகள் விபத்துகுள்ளவதும் அதன் பாதிப்புமே படம்.


படத்தில் எனக்கு பிடித்த விசையங்கள், படத்தின் முதன்மை பத்திரம் முதல், சில காட்சிகளே வரும் பயணிகள் வரை  ஒவ்வொரு கதாபத்திரத்தையும் அழகாக கட்டமைத்திருக்கிறார்  இயக்குனர். மிதப்பான ஊர் தலைவர், வெளிநாட்டில் இருந்து வருடங்கள் கடந்து வரும் நபர், அந்த கல்லூரி மாணவன் மற்றும் மாணவி, சமத்து குழந்தை, அந்த மாமி என ஒவ்வொரு பாத்திரத்திற்கும்  ஒரு வடிவம் கொடுத்திருப்பது அழகு, அதனால் படத்துடன் ஒன்ற முடிகிறது. தேவை இல்லாத பாடல்களின்றி, தேவையான அளவு நகைச்சுவை தெளித்து, எங்கும் தொய்வடையாமல் சீராக செல்லும் திரைக்கதை மற்றொரு பலம். சத்யாவின் இசையும் வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு தேவையான அளவு சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் காட்சிகளும், விபத்து காட்சியும் மிக அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.




படத்தில் எல்லா பாத்திரங்களும் சிறப்பாக இருந்தது, அதில் அஞ்சலியின் பாத்திரம் கொஞ்சம் புதிது. சர்வாவின் உதவும் குணம், விபத்தின் போது அஞ்சலியின் செயல் என எல்லா பாத்திரமும் படம் நெடுக அதன் இயல்பை விட்டு விலகாமல் இருந்தது சிறப்பு. என்னை மிகவும் கவர்ந்தது அனன்யாவின் பாத்திரம், திருமணமான புதிதில் முதல் முறை என் மனைவி சென்னை வந்த போது அவள் வெளிப்படுத்திய உணர்வுகளை அப்படியே பிரதிபலித்தது. (சென்னை சாலைகளை பார்த்து விட்டு என்னைக் கேட்டாள் "இத்தனை பெரும் எங்கதான் போறாங்க" என்று). அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருகின்றனர். அனைவருக்கும் மேலும் நல்ல படங்கள் அமைந்தால் நல்லது.


எடுத்துக்கொண்ட கதைக்கும், அவருடைய குருநாதர் கொடுத்த வாய்ப்பிற்கும்   நியாயம் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். முதல் படத்தில் அவருடைய திறமையை நிருபித்திருக்கிறார் மேலும் இது போல நல்ல படங்கள் தர வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் முருகதாஸ் அவர்களும் இப்படத்தின் வெற்றியின் மூலம் மேலும் சிலருக்கு இயக்குனர் வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.


படத்தில் சில குறைகள் இருந்தாலும், இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு கருத்தை நேர்மையாக  சொல்லியிருக்கும் இப்படத்திற்கு, சிறந்த படங்களின் வரிசையில் எங்கேயும் எப்போதும்  ஒரு இடம் உண்டு. கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள், படம் பார்த்தபின் உங்கள் வாகனத்தின் வேகத்தை நீங்கள் குறைக்கக் கூடும்.

Monday, 18 July 2011

தெய்வத்திருமக(ன்)ள்

30 வயது உடல் வளர்ச்சி  ஐந்து வயது மன வளர்ச்சியும் உள்ள தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்குமான உறவும் பிரிவும் போராட்டமுமே தெய்வத்திருமகள்.

ஊட்டியில் ஒரு கிராமத்தில் தங்கி அங்கயே  உள்ள  சாக்லேட் பாக்டரியில் வேலை செய்பவர் கிருஷ்ணா (விக்ரம்), அவருடைய மனைவி ஒரு குழந்தை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விடுகிறார். அந்தக் குழந்தையை குளிப்பாட்டி, உணவூட்டி, பாதுகாத்து, கதை சொல்லி  அங்கிருப்பவர்களின் உதவியுடன் வளர்க்கிறார் கிருஷ்ணா. அழகாக வாழ்ந்து வரும் தந்தையும் மகளும், ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவின் மாமனார் மூலம் பிரிக்கப்படுகிறார்கள், இது முதல் பாதி.

 சென்னையில் தனது மகளை தேடி அலையும் கிருஷ்ணா, தனது மகளை மீட்டுத்தருமாறு வக்கீல் அனுராதாவிடம் உதவி கேட்கிறார், அவரின் கதையை கேட்டு உதவி செய்ய முன்வருகிறார் அனுராதா. அவர் மிக மூத்த வக்கீலான பாஷ்யத்துடன் வழக்காடி கிருஷ்ணாவிற்கு அவர் குழந்தை நிலாவை மீட்டுக்கொடுத்தாரா இல்லையா என்பது உணர்ச்சிமயமான கிளைமாக்ஸ் உடன்  இரண்டாவது பாதி.


 
 
கிருஷ்ணா என்ற வளர்ந்த குழந்தையாகவே மாறியிருக்கிறார்  விக்ரம், அவருடைய உடல் மொழி அற்புதம். ஒவ்வொரு படத்திருக்கும் அவர் எடுத்து கொள்ளும் சிரத்தை வியக்கவைக்கிறது.  இதுவரை அவர் செய்த பாத்திரங்களில் மிக சிறப்பானதாக இதை சொல்லலாம்.  இப்படத்திற்காக பல  விருதுகள் அவரை தேடிவரும் என் நம்புகிறேன். விக்ரமிற்கு இணையான பாத்திரம் நிலாவாக  நடித்திற்கும் குழந்தை சாராவிற்கு. இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார். சுத்திபோடுங்கப்பா சாராவிற்கு, எத்தனை கண்ணு பட்டுச்சோ.வக்கீலாக அனுஷ்கா, அழகாக அளவாக நடித்திருக்கிறார். பள்ளி நிர்வாகியாக அமலா பால், முதல் பாதியில் நகைச்சுவைக்கு எம் எஸ் பாஸ்கர், இரண்டாம் பாதியில் சந்தானம் என துணை பாத்திரங்கள் சிறப்பாக செய்திருக்கின்றனர். பாஷ்யம் என்ற அப்பாடக்கர் வக்கீலாக நாசர்,  சில காட்சிகளை தவிர சிறப்பாக செய்திருக்கிறார் .

மதராசபட்டினத்தை தொடர்ந்து ஒரு வித்யாசமான ஒரு திரைப்படத்தை அளித்திருக்கும் இயக்குனர் விஜய்க்கு வாழ்த்துக்கள். எடுத்துக்கொண்ட கதையை சிறப்பான  திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் விஜய். படத்தில் பல நெகிழ்ச்சியான காட்சிகள் இருகின்றன, ஆனால் அவைகளுக்கு இடையே நகைச்சுவையை தெளித்து  ஓவர் emotional dramaவாக ஆக்காமல் திரைக்கதை அமைத்திருப்பது அழகு. குழந்தைக்கு நிலா என்று பெயர் வைப்பது, பிடித்த பட்டாம் பூச்சி பறந்ததும் ஏமாறும் கிருஷ்ணாவை நிலா தன் இமைகளையே பட்டாம்பூச்சி போல் அசைத்து  மகிழ்ச்சிப்படுதும்  காட்சி, கதை சொல்லும் காட்சி, இறுதியில் தந்தை மகள் உரையாடும் காட்சி என பல கவிதையான காட்சிகள் அமைத்திருக்கிறார் விஜய். இசையும் (பிரகாஷ்), ஒளிப்பதிவும் (நீரவ் ஷா)  இப்படத்திற்கு தேவையான அளவு சிறப்பாக அமைந்திருக்கிறது. படதொகுப்பாளர் இன்னும் சில காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கலாம் என்று படுகிறது.

இரண்டாம் பாதி நீளமாக இருப்பது, "விழிகளில் ஒரு வானவில்" பாடல்,  குழந்தைக்கு தேவையான மருந்தை கிருஷ்ணா சரியாக வாங்கி வருவது, போன்ற சில குறைகள் இருந்தாலும். தெய்வத்திருமகள் தமிழில் முக்கியமான ஒரு திரைப்படம். கிருஷ்ணா நிலாவை வளர்க்கும் காட்சிகளில், ஒரு குழந்தையை இப்படிதான் வளர்க்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. நல்ல படம் மட்டும் தான் பார்ப்பேன் என்று அடம் பண்ணுபவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம்.

Saturday, 5 February 2011

யுத்தம் செய்

விமர்சனம் என்கிற பெயரில் இப்படத்தின் கதையை நான் கூறப்போவதில்லை,  அடுத்து மூன்று வரிக்குமேல் கதையை பற்றி ஒரு வார்த்தை இல்லை ஆக தாரளமாக நீங்கள் இதை படிக்கலாம்.

நகரத்தில் திடீரென்று ஒரு பெட்டியில் வெட்டப்பட்ட கைகள் மக்கள் அதிகம் இருக்கும் சில இடங்களில்  வைக்கப்படுகிறது. இதன் பின்னணியை விசாரிக்கும் பொறுப்பு CB CID அதிகாரி சேரனிடம் கொடுக்கப்படுகிறது, அந்த விசாரணை எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என்பதே யுத்தம் செய்.


இப்படம் ஒரு அக்மார்க் த்ரில்லர், படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் நாம் கதையோடு ஒன்றி, சேரனின் குழுவில் நான்காவது ஆளாக இணைந்து கொள்கிறோம் (நான் கொண்டேன்).  படத்திற்கு சிறப்பான  பின்னனி இசை அமைத்து 'கே'வும், மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து  சத்யனும் பலம் சேர்க்கின்றனர். நடிகர்கள் அனைவரும் அளவான நடிப்பை கொடுத்திருகின்றனர்.
 
திரைப்படம் என்னும் ஊடகத்தை தொடர்ந்து சிறப்பாக பயன்படுத்திவருகிறார் மிஷ்கின். காட்சிகளுக்கு முக்கியத்துவம், அளவான வசனம், தேவையில்லாத  காட்சிகள் தவிர்ப்பு என்று  எடுத்துக்கொண்ட கதைக்கு மிஷ்கின் சீரான சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார். உங்களின் அடுத்த படத்திற்கு காத்திருக்கிறேன் மிஷ்கின்.
 
படத்தில் சில குறைகளும் உண்டு, மிஷ்கின் பாணி சண்டை காட்சி, மஞ்சள் சீலை பாடல், சில இடங்களில் மெதுவாக செல்லும் திரைக்கதை மற்றும் கொஞ்சம் சினிமா தனமான கிளைமாக்ஸ் ஆகியவை. இதை தவிர்த்து பார்த்தால், யுத்தம் செய் இதுவரை தமிழ் சினிமாவில் நாம் பார்த்திடாத த்ரில்லர், எந்தக் கதையையும், கதையை விவரிக்கும் விமர்சனத்தையும் படிக்காமல், படத்திற்கு செல்லுங்கள், you are in for some surprises.

குறிப்பு: இப்படத்திற்கு குழந்தைகளையோ சிறுவர்களையோ அழைத்து செல்லாதீர்கள்!.


Saturday, 22 January 2011

ஆடுகளம்

பொல்லாதவன் கூட்டணியின் அடுத்த படைப்பு ஆடுகளம். காணும் பொங்கலன்று நான் கண்ட திரைப்படம்.

மதுரையில் சேவல் சண்டையில் பெரிய ஆள் பேட்டைக்காரன். அவரை சேவல் சண்டையில் தோற்கடிப்பதே லட்சியமாக கொண்டிருப்பவர்  ரத்தினவேல். காவல் ஆய்வாளரான ரத்தினவேலிடம் மோதுவது தன்னுடன் இருப்பவர்களுக்கு நல்லதல்ல என்று சேவல் சண்டையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்  பேட்டைக்காரன். அவரை மீண்டும் சண்டைக்கு  இழுக்கிறார் ரத்தினவேல். ஒரு சூழ்நிலையில்  ரத்தினவேலுடன் கடைசி முறையாக "உசுருக்கு சமானம் தான் போட்டி " என்று சவால் விட்டு சேவல் சண்டையில் மோத தயாராகிறார்   பேட்டை. கருப்பு(தனுஷ்) மற்றும் துரையின்(கிஷோர்) உதவியுடன் பேட்டைக்காரன் எப்படி வெல்கிறார் என்பது முதல் பாதி.



இந்த வெற்றியில் பேட்டைக்காரன் தேறாது என்று சொன்ன சேவலை வைத்து கருப்பு ஒரு பெரிய பரிசு ஜெயித்து விட திடீர் பிரபலமாகிறார். அதன் தொடரச்சியாக நடக்கும் சம்பவங்களால் தனது மரியாதை பாதிக்கப்படுவதாக உணர்கிறார் பேட்டை, இதனால் பேட்டைக்கு ஏற்படும் வெறுப்பும், அதன் விளைவுகளும் இரண்டாவது பாதி.

சேவல் சண்டையைப் பற்றி படம் ஆரம்பிக்கும் போதே நம்மை உள்ளிழுத்து விடுகிறார் வெற்றிமாறன். யாரும் தொடாத களத்தை தொட்டு சீரிய திரைகதையில் படத்தை நகர்த்தி சென்ற வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்.    இந்நேரம் 'நிதி' குடும்பத்தினர் யாராவது  இவரை அடுத்த படத்திற்கு புக் செய்திருப்பார்கள். படத்தின் பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஜீ வியின் பின்னணி இசையும். சேவல் சண்டையை கொஞ்சம் மிகைப்படுத்திக் காட்டியிருப்பது போல் தோன்றினாலும் அந்த கிராபிக் காட்சிகள் நன்றாகவே இருந்தன.

தனுஷின் நடிப்பு அபாரம், அந்த உடல் மொழியும், நக்கல் கலந்த மதுரை தமிழ் பேச்சும் என அவர் ராஜ்ஜியம் தான். பேட்டைக்காரன் பின்னால் சுற்றுவதும்,  காதலியிடம் மருகுவதும், அம்மாவுடன் சேவலுக்காக சண்டையிடுவதும், துரையிடம் "அண்ணே" என்று அன்பைப் பொழிவதும் என பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.  பல பொழுதுபோக்கு படம் நடித்து வந்தாலும் நடுநடுவே இந்த மாதிரி கதைக்கும் நடிப்பிற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தனுஷ் தேர்ந்தெடுத்து நடிப்பது ஆரோக்கியமான விஷையம்.

பேட்டைக்காரனாக கவிஞர் ஜெயபாலன் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோசம், கோபம், வெறுப்பு என  பல்வேறு உணர்வுகளை அவர் உடல் மொழியில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார், அவருக்கு மிக சிறப்பாக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் ராதாரவி. கிஷோர் இயல்பாக சிறப்பாக நடித்திருக்கிறார்.  இவருக்கு ஹீரோவிடம் அடிவாங்கும் வில்லன் பாத்திரம் மட்டுமின்றி   இந்தமாதிரி பாத்திரங்களும் தொடர்ந்து கிடைத்தால் நன்று. பேட்டையின் இளம் மனைவி, கருப்பின் நண்பன், சேவல் சண்டையை நடத்துபவர் என ஒவ்வொரு பாத்திரமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

மெதுவாக செல்லும் சில காட்சிகள்,  தமிழ்ப்பட சம்பரதாயமாக கடைசியில் நாயகனுடன் சேர்ந்துகொள்ளும் நாயகி , போன்ற சிறு குறைகள் இருந்தாலும் கதை களம், சிறப்பான  இயக்கம்  மற்றும் நடிப்பிற்காகவும்  கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் ஆடுகளம்.

Wednesday, 1 December 2010

நந்தலாலா - திரைப்பார்வை


இளையராஜாவின் இசையில் மிஷ்கின் இயக்கி நடித்திருக்கும் படம் நந்தலாலா. ஜப்பானிய படமான கிகுஜிரோவின்  தழுவல் இந்தப்படமா? என்பதை கடைசியில் பார்ப்போம், முதலில் நந்தலாலாவை பற்றி.

அகி, பாட்டியிடம் வளரும் சிறுவன், ஒரு நாள் தன்னை பிரிந்து தனக்காக அன்னவயல் என்னும் ஊரில் வேலை செய்யும் தாயைத்   தேடி  கிளம்புகிறேன். பாஸ்கர்மணி, தன்னை மனநல காப்பகத்தில் சேர்த்ததற்காக தன் தாயை பார்த்து ஒரு அரை விடவேண்டும் என்று காப்பகத்தில் இருந்து தப்பித்து தாய்வாசல் என்னும் ஊரில்  இருக்கும்  தன் தாயை தேடி கிளம்புகிறான். புத்திசாலியான சிறுவன் அகியும், குழந்தை மனமுள்ள  பாஸ்கர்மணியும் ஒரு புள்ளியில் இணைந்து ஒருவருக்கொருவர் துணையாக தங்கள் தாயை தேடி செல்கின்றனர், இவர்களின் தேடலே நந்தலாலா.


தங்கள் தாயைத் தேட, கூடுமான பணமில்லாமல் பயணத்தை துவக்கும் இருவரும், வழியில் சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும், அதன் வழியே வழியும் மனிதமும் தான் திரைக்கதை. முதல் பாதியில் அகியின் அம்மாவை தேடுவதில் செல்கிறது, ஊரை அடைந்து தேடும் போது, அகி அவன் தாயை பார்க்க முடியாத நிலையில் முதல் பாதி முடிகிறது.
வழியில் சந்திக்கும் பாலியல் தொழிலாளி ஸிநிக்தாவும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள பாஸ்கர்மணியின் அம்மாவைத் தேடி இரண்டாவது பாதி பயணிக்கிறது. அவர்கள் அவன் அம்மாவை எந்த நிலையில் சந்திக்கிறார்கள், அகியின் நிலைமை என்ன என்பது முடிவு.

பயணத்தில் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களின் வழியாக நகர்கிறது திரைக்கதை. பெரும்பாலான பாத்திரங்கள் படம் முடிந்தும்  நம் மனதில் நிற்கிறார்கள். லாரி ஓட்டுனர், கீழே விழுந்து அடிபடும் பள்ளிச்  சிறுமி, புதுமண தம்பதி குறிப்பாக அந்த கணவன் ("அம்மா 40ல தான் போக சொல்லியிருக்காங்க"), யாருமற்ற ஒரு இடத்தில் பஞ்சர் கடை வைத்து நடத்தும் மாற்றுத்திறன் படைத்த தம்பதி, ஒரு கால் ஊனமான வழிகாட்டி, பைக் குண்டர்கள், இளநீர் விற்கும் தாத்தா, road side ரோமியோக்கள்   என அவர்கள் பயணம் முழுவதும் பல்வேறு மனிதர்கள், சம்பவங்கள். ஒவ்வொரு பாத்திரங்களுடனான   சந்திப்பும் கசப்பாக ஆரம்பித்தாலும் அச்சந்திப்பு முடியும் போது அவர்களின் அடிமனதில் இருக்கும் அன்பே பிரதானமாக மிளிர்கிறது. பல காட்சிகள்  மென்புன்னகையுடனோ  மென்சோகத்துடனோ  முடிகிறது.



Nandalala is a perfect road movie ever made in Tamil Cinema or may be Indian cinema. படத்தின் நான்கு நாயகர்கள் மிஷ்கின், அஸ்வத் ராம், இளையராஜா மற்றும் மகேஷ் முத்துசுவாமி. இவர்கள் அனைவரின் உழைப்பும் சரி விகிதத்தில் கலந்ததால் இப்படம் வேறொரு தளத்தில் இருக்கிறது. சில இடங்களில் மிஷ்கின் மிகையாக நடித்திருந்தாலும் முதல் படத்திலேயே நடிப்பில் அசத்தியிருக்கிறார். அகியாக அஸ்வத் (அள்ளி முத்தம் கொடுக்கலாம்), அழகான  அளவான நடிப்பில் சிறக்கிறார்.  படம் முழுவதும் படர்ந்து நம்மை தழுவி செல்கிறது ராஜாவின் இசை. குறிப்பாக கடைசி 20 நிமிடம் ராஜா தான் ஹீரோ.  மௌனம் என்னும் இசையை  இளையராஜாவைப் போல் யாரும் இவ்வளவு நேர்த்தியாக பயன்படுத்தியதில்லை. பின்னணி இசைக்கு பாடம். இந்த பயணத்தில் ஒளிப்பதிவால் நம்மையும் ஒரு பயணியாக இணைத்துக்கொள்கிறார் மகேஷ் முத்துசுவாமி. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாக படம் பிடித்திருக்கிறார், சில இடங்களில் காட்சி முடிந்தும் extendஆகும் சில shotகளை மட்டும் தவிர்த்திருக்கலாம். 12 நொடிகள் வரும் நாசர் உட்பட அனைத்து கலைஞர்களும் அப்பாத்திரமாகவே வாழ்ந்திருகின்றனர். மேலும் ஓவியர் மருது இப்படத்தில் அழகியல் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.


அஞ்சாதேவுக்கு பிறகு மிஷ்கின் ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருகிறார், இயக்குனர்  மிஷ்கினை விட  திரைக்கதை ஆசிரியர் மிஷ்கின் என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறார். எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் ஒரு அழுத்தமான படத்தை ஆங்காங்கே நகைச்சுவை தூவி திரைக்கதை அமைத்து கொடுத்திருகிறார், நகைச்சுவை மட்டும் இல்லையேல் திரைக்கதை தொய்வாக இருந்திருக்கும். படத்தில் வசனங்கள் குறைவாக அழகாக பயன்படுத்தப்படிருக்கிறது. தமிழின் ஒரு முக்கியமான படத்தை இயக்கியிருக்கிறார் மிஷ்கின். இதுவரை பார்த்திடாத ஒரு தமிழ் படம் நந்தலாலா.


கிகுஜிரோவும் நந்தலாலாவும்
மிஷ்கின் இரு பேட்டிகளில் (Behindwoods.com)  நந்தலாலா கிகுஜிரோவின் தழுவலா  என்ற கேள்விக்கு The inspiration for the movie came from many incidents in my life and another movie என்றும் In a way his Kikujiro stimulated me to take Nandalala but Nandalala is not Kikujiro என்றும்  கூறியிருக்கிறார். ஆகவே ஒருபொழுதும் கிகுஜிரோவிற்கும் நந்தலாலாவிற்கும் சம்பந்தமே இல்லை என்று மிஷ்கின் கூறியதாக தெரியவில்லை.


முதலில் ஒற்றுமை, கிகுஜிரோவின் one lineற்கும்  நந்தலாலாவின் one lineற்கும் அதிக வித்தியாசமில்லை. தன் தாயை தேடி புறப்படும் சிறுவன் மாசோவுக்கு   துணையாக ஒரு முரட்டு, சூதாடும் ஆசாமி கிகுஜிரோ அனுப்பப்படுகிறார், அவர் சிறுவனை அம்மாவிடம் சேர்த்தாரா என்பதே  கிகுஜிரோ. கிகுஜிரோவில் உள்ள சில கதாப்பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் நந்தலாலாவிலும் உண்டு.

இனி வேற்றுமை,
ஜப்பானிய படம் சிறுவன் மசோவை விட கிகுஜிரோவை பெரிதும் முன்னிறுத்தியே நகர்கிறது, ஜப்பானிய படம் முன்னிறுத்தும் கருத்து ஜப்பானில் குறைந்து வரும் குடும்ப சூழலை பற்றியது.

நந்தலாலா பேசுவது மகன் தாய் உறவை மற்றும்  அம்மாக்களின் இருவேறு எல்லைகளை பற்றியது.  கிகுஜிரோவில் உள்ள சில கதாப்பாத்திரங்கள் நந்தலாலாவிலும் உண்டு என்றாலும் அதன் பயன்படுத்தப்பட்ட விதம் முற்றிலும் வேறானது.  நந்தலாலாவில் அவர்கள் சந்திக்கும் அனைத்து பாத்திரங்களும் அப்பாத்திரங்களின் நெகிழ்வான தருணங்களை வெளிக்கொண்டுவருகிறது, கிகுஜிரோவில்  நடக்கும் சம்பவங்கள் விலகியிருக்கும் மாசோவையும் கிகுஜிரோவையும் எப்படி இணைக்கிறது என்று செல்கிறது.

மிஷ்கின் செய்ய தவறியது பட ஆரம்பத்தில் ஒரு நன்றி போடாமல் விட்டது, போட்டிருந்தால் இவ்வளவு சர்ச்சைகள் உருவாகியிருக்காது.  இதை மறைக்கவும்  மிஷ்கின் முயற்சிக்கவில்லை, நினைத்திருந்தால் கிகுஜிரோவில் இருந்து எடுக்கபட்ட பாத்திரங்களை மாற்றி அமைத்திருக்கலாம், அப்படி செய்யவில்லை மாறாக அப்பாத்திரங்களின் மீதே அவருடைய கதையையும் எழுதி செல்கிறார். இது தவறென்று புத்தி சொல்கிறது, பரவாயில்லை என்று மனது சொல்கிறது.  இந்த காரணத்திற்காக நந்தலாலா ஒரு குறைபட்ட படைப்பு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

உலக சினிமா ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது ஒரு பெரிய குறையாக இருக்கலாம், என்னைப் போல்  உள்ளூர் ரசிகர்களுக்கு இப்படம் உயரந்ததே காரணம் கிகுஜிரோ தராது ஒரு உணர்வை நந்தலாலா எனக்கு கொடுத்திருக்கிறது.

Sunday, 3 October 2010

எந்திரன் - திரைப்பார்வை


சிறுகதைகள் எழுதும் போது முதல் வரியிலேயே கதையை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார் சுஜாதா, அப்படித் தான், முதல் 2 நிமிடத்திலையே  எந்திரன் ஒரு அறிவியல் புனைவு (sci-fi) என்றும் மற்றும் இது வழக்கமான ரஜினி படம் இல்லை இயக்குனர் ஷங்கர் படம் என்பதையும் உணர்த்திவிடுகிறது. மிக எளிதான கதை, ஒரு விஞ்ஞானி (வசீகரன்) தன்னை போல் ஒரு எந்திரனை (android robot)  உருவாக்குகிறார், சில காரணங்களால் அதற்கு உணர்வுகளையும் கொடுக்கிறார் அதனால் ஏற்ப்படும் விளைவுகளே எந்திரன் கதை. வழக்கமான ஷங்கரின் "இப்படி நடந்தால் என்னவாகும்?" என்கிற வகை கதைதான், அதை திரையில் காட்சிப்படுத்திய விதம் தான் படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்கிறது.

திரைக்கதை தெளிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது, மனிதனை போல் ஒரு எந்திரம்  (சிட்டி)  உறுவாக்கப்பட்டு, மனிதர்களுடன் பழகுவதால்,  ஏற்படும் நிகழ்வுகள், விளைவுகள் முதல் பாதி. அறிவியல் படம் என்பதால் கணிப்பொறி சார்ந்த வார்த்தைகள் மற்றும் பல புரியாத விஷையங்கள் இருக்கும் என்று நினைக்க தோன்றும், ஆனால் பார்க்கிறவர்கள் யாவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிதான காட்சிகளை அடுக்கி வைத்திருகிறார்கள். உதாரணமாக தீ விபத்து காட்சியில் எந்திரத்தால் என்ன முடியும், என்ன முடியாது என்று விளக்கியிருப்பது அருமை.

அந்த இயந்திரத்திற்கு உணர்வுகள் கொடுக்கப்பட்டு, தானாக சிந்திக்க ஆரம்பித்தால் ஏற்படும் விளைவுகள் இரண்டாம் பாதி. ஐஸை சிட்டி காதலிக்க ஆரம்பித்ததும் சிட்டிக்கும் வசிக்கும் இடையில் ஈகோ பிரச்சனை உருவாகிறது, இதை வசீகரனுடைய குரு சுயநலத்திற்கு எப்படி பயன்படுத்த பார்க்கிறார், இதனால் ஏற்படும்  விளைவும் முடிவும் இரண்டாம் பாதி. இரண்டாம் பாதி முதல் பாதியை போல் சரளமாக இல்லை, சில இடங்களில் மெதுவாக இருக்கிறது குறிப்பாக "ரங்குஸ்கி" காட்சியும், 'கிளிமஞ்சாரோ" பாடலுக்கான லீடும் கொஞ்சம் இழுவை (அடுத்த வாரங்களில் இக்காட்சிகள் குறைக்கவோ நீக்கவோ படலாம் என்று எதிர்பார்க்கிறேன்).


இப்படத்தின் பலம் ரஜினி மற்றும் இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்ப சங்கதிகள்,  தொழில்நுட்பத்தில் எந்திரன் ஒரு ஹை ஜம்ப் அடித்திருக்கிறான். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் இரண்டு ரஜினி தோன்றினாலும், அந்த காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கபட்டிருகின்றன, அதே போல் இந்திய பாடங்களில் இதுவரை கண்டிராத தலை சுற்றும்  க்ராபிக்ஸ் காட்சிகளை நீங்களே திரையில் கண்டு கொள்ளுங்கள். காட்சிகளையும், ரஜினியையும் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரத்தினவேலு, குறிப்பாக 'காதல் அணுக்கள்', 'கிளிமஞ்சாரோ' பாடல் படமாக்கப்பட்ட இடம் மற்றும் 'அரிமா அரிமா' படமாக்கப்பட்ட விதம் என அனைத்தும் அருமை.  அவருடைய உழைப்பிற்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே.

கலை இயக்குனர் சாபு சிரிலின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் ரோபோ ஆராய்ச்சி கூடம் முதல், ரஜினி வீடு வரை பளிச்சென பிரமாண்டாமாக  இருக்கின்றன, ஐஸ் தங்கியிருக்கும் வீடு cum ஆதரவற்றோர்  இல்லமும் பிரமாண்டாமாக இருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. ஆண்டனியின் படக்கோர்வையும் அருமை, மேலே குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். படத்தின் மற்றொரு பெரிய பலம் அமரர் சுஜாதாவின் வசனங்கள், அனைத்து வசனங்களும் யாருக்கும் புரியும் வண்ணம் short and sweetஆக இருந்தன.படத்தின் பல இடங்களில் சுஜாதா தெரிகிறார் உதாரணமாக கடவுள் இருக்கிறாரா? என்ற கேளிவிக்கு சிட்டியின் பதில், வி மிஸ் யு வாத்தியாரே. ரஹ்மானின் இசையில் பாடல்கள் அருமை, பின்னணி இசை இறுதி காட்சிகளில் இன்னும் கொஞ்சம்  சிறப்பாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

 படம் முழுவதும் எங்கு பார்த்தாலும் ரஜினி தான்.
விஞ்ஞானி ரஜினி -  Intro song, punch டயலாக், style gimmick என்று எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத ரஜினி, நான் ரொம்ப நாளாக பார்க்க துடித்த ரஜினி அருமையாக நடித்திருக்கிறார்.

ரோபோ ரஜினி - சுறு சுறுப்பான, ஒயிலான, அழகான ரஜினி. இந்த பாத்திரத்திற்கு அவருடைய உழைப்பு அபாரம். இந்த ரோபோ ரஜினி இரண்டாம் பாதியில்  வேறொரு அவதாரம் எடுக்கும் போது, அவருடைய நடிப்பு class + mass. சங்கர் எழுதியதை திரையில் கொண்டு வர ரஜினியின் (60 வயதில்) உழைப்பும் முயற்சியும் ஆச்சர்யம் அளிக்கிறது.  யாராவது ரஜினியை வச்சு நெற்றிக்கண் மாதிரி ஒரு படம் எடுங்கப்பா!

ஐஸ் - அழகாக  வருகிறார், ஆடுகிறார், அழகாக இருப்பதுதான் அவருடைய பாத்திரம், அதை  சிறப்பாக செய்திருக்கிறார்.

கருணாஸ், சந்தானத்தின் பாத்திரங்களை இன்னும் கொஞ்சம் சிறப்பாக பயன் படுத்தியிருக்கலாம்.

மேல குறிப்பிட்ட அனைவரையும் வழி நடத்தி தான் நினைத்ததை திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர். ரோபோ படம் என்றதும் எந்த காட்சி எந்தப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருகிறது என்று குத்தி கிழிக்க ஒரு கூட்டமே காத்திருந்தது, அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமும் தராத சங்கர் அவர்களுக்கு ஒரு  மெகா சைஸ் பூங்கொத்து, ஷங்கர் ஒரு master director என்றும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஷங்கரின் உழைப்பிற்கு கண்டிப்பாக பெரிய பலனும் புகழும் கிடைக்கும்.   இப்படத்தின் உயரத்தை தாண்டும்  அல்லது தொடும்  அடுத்த படம் எப்போது வருமென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இப்படத்தை பல வழிகளில் விளம்பர 'படுத்தியும்', நாளுக்கொரு விழா நடத்தி வந்தாலும், இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸுக்கு வாழ்த்துகள்.


படத்தின் நீளம், சில லாஜிக் மீறிய காட்சிகள்  என சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன, இருந்தாலும் எந்திரன் தமிழ் சினிமாவில் உருவான மிக சிறந்த பொழுதுபோக்கு படம், தமிழ் சினிமாவின் இல்லை இந்திய சினிமாவின் சாத்தியங்களையும் எல்லையையும் உயர்த்தி வைத்திருக்கிறான் எந்திரன். குடும்பஸ்த்தர்கள் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்.

எந்திரன் - தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத ஓர் அனுபவம் - Get ready folks.


Monday, 3 May 2010

அங்காடித் தெரு - திரைப்பார்வை

வாழ்வில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நமக்கு தோற்ற ஒருவனின் வாழ்க்கையை வெயிலாக தந்த வசந்த பாலன், வாழ்வு தேடி பெரு நகரங்களுக்கு வந்து, ஜொலி ஜொலிக்கும் கடைகளில் அடிமைபட்டிருப்பவர்களின் வாழ்வை அங்காடித் தெருவில் நம் பார்வைக்கு (சிந்தனைக்கும்) வைத்திருக்கிறார்.

மேற்படிப்பு  படிக்கும் கனவில் இருக்கும் மகேசுக்கு, அப்பாவின் மரணம் மூலம் இடி விழுகிறது, வீட்டை காப்பாற்ற வேறு வழியில்லாமல், சென்னையில் பிரமாண்டமாய் இருக்கும் கடைக்கு சேல்ஸ் மேன் வேலைக்கு சேர்கிறார். கடையின் ஜொலி ஜொலிப்பு போல் வாழ்க்கை அமையும் என்று நம்பி சென்னை வரும் மகேஷ், அங்கு சந்திக்கும் நிஜம் அவரை மட்டுமல்ல பார்க்கும் நம்மையும் உறைய வைக்கிறது.  அதே கடையில் வேலை செய்கிறார் அஞ்சலி,  ஆரம்பத்தில் இருவரும் அடிக்கடி மோதிகொள்கிறார்கள், அப்புறம் வழக்கம் போல் நன்றாக பழகுகிறார்கள். இவர்கள் மூலம்  இந்த மாதிரி கடையில் வேலை செய்பவர்கள் காலை முதல் இரவு வரை சந்திக்கும் பிரச்சனையையே நமக்கு படமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். அவர்களின் தங்குமிடம், உணவு, பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டுபாடுகள் அதை மீறினால் கிடக்கும் தண்டனைகள், என எல்லாம் நமக்கு அதிர்ச்சி தருகின்றன.

கதையின் நாயகனாக புதுமுகம் மகேஷ், நாயகியாக "கற்றது தமிழ்" அஞ்சலி. கோபமான காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார் மகேஷ், படத்தில் நடிப்பிற்கு முதல் மார்க் வாங்குவது அஞ்சலி ("நெசமாத்தான் சொல்றேன்"), அருமையாக நடித்திருக்கிறார், அத்தனை விதமான உணர்ச்சிகளையும் முகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுபோல் பல படங்கள் அமைய வாழ்த்துக்கள் அஞ்சலி.   வேலை செய்பவர்களின் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும்  கடையின் டெரர் கண்காணிப்பாளர் "கருங்காலி"யாக இயக்குனர் வெங்கடேஷ் அசத்தியிருக்கிறார். மகேஷின் நண்பனாக வரும் பாண்டி அப்பப்ப கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

இதுவரை யாரும் தொடாத ஒரு கதையை தொட்டிருக்கும் இயக்குனர் வசந்த பாலனுக்கு வாழ்த்துக்கள் பல. எடுத்துக்கொண்ட கதையை எதாதர்த்திற்கு அருகாமையில் படமாக்கியிருக்கிறார் (சில காட்சிகளை தவிர) .திரைப்படங்களை பொழுதுபோக்குக்காக பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் பிடிக்காமல் போகலாம், அர்த்தமுள்ள படங்களை விரும்புவர்களுக்கு இதப்படம் கண்டிப்பாக பிடிக்கும். பிரதான கதைக்கு நடுவில் வரும் கதைகளும் சிறந்த சிறு கதையை படித்த உணர்வை தருகிறது. "அவள் அப்படி ஒன்றும்" பாடலும், "உன் பேரை" பாடலும் நன்றாக இருந்தன. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்தில் உரையாடலை சிறப்பாக அமைத்திருக்கிறார் ஜெயமோகன். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் முதல் பாதி வேகமாக செல்கிறது, இரண்டாவது பாதி சோகமாக இருப்பதாலோ என்னவோ கொஞ்சம் மெதுவாக செல்கிறது. இப்படத்தை தயாரித்திருக்கும் அய்ங்கரன் நிறுவனதிற்கு வாழ்த்துக்கள், இதுபோன்ற அர்த்தமுள்ள பல படங்களை தயாரிக்க வேண்டுகிறோம் (சீக்கிரம் நந்தலாலாவை வெளியிடுங்கப்பா).

மேம்பாலம் தன் கடையை மறைத்து விடும் என்று, பாலத்தை பாதியிலயே முடிக்க வைக்கும் முதலாளிகளும், கடையை இடிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும், கொடுக்க வேண்டியதை கொடுத்து நீதி மன்ற உத்தரவை மழுங்கடிக்க அரசு உத்தரவை பெரும் முதலாளிகளும் இப்படத்தை பார்த்து திருந்துவார்களா, என்பது தேவையில்லாத கேள்வியென்றே தோன்றுகிறது. இந்தப்படம் பார்த்த பிறகு, எந்த சேல்ஸ் மேன்/வுமன்களை பார்க்கும்போது அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றும், அதுவே இப்படத்தின் வெற்றி.

குறிப்பு: படம் பார்த்து 2 வாரம் ஆச்சு, ஆனால் விமர்சனம் எழுதமுடியவில்லை, நல்ல படம் பற்றி கண்டிப்பா எழுதியே ஆகணும் என்பதால், தாமதமானாலும் பரவாயில்லை என்று இந்த விமர்சனம் எழுதியிருக்கிறேன்.

Sunday, 24 January 2010

ஆயிரத்தில் ஒருவன் - திரைப்பார்வை


இந்த சனிக்கிழமை சத்யம்மில் பார்த்தேன். முடிந்த அளவு எந்த விமர்சனமும் படிக்காமல் பார்க்க நினைத்தேன், ஆனால் பலதரப்பட்ட செய்திகள் வந்த வண்ணம் இருந்ததால் (பட தலைப்பில் ஒருவன் என்று வந்தாலே இப்படிதானா?) சில விமர்சனங்களை மேலோட்டமாக படித்து விட்டு தான் படம் பார்க்க போனேன். இனி படத்தை பற்றிய என் பார்வை.

இதுவரை இந்திய சினிமாவில் யாரும் தொடாத களத்தை தொட்டிருகிறார் இயக்குனர், Fantasy and Adventure. 12ஆம் நூற்றான்டின் இறுதியில் கடைசி சோழ இளவரசனை பாண்டியர்களிடமிருந்து காப்பாற்ற எங்கோ அழைத்து சென்று மறைத்து வைக்கப்படுகிறார், அந்த கடைசி மன்னன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த சோழனை அல்லது அவன் கடைசியாக வாழ்ந்த இடத்தை கண்டுபிடிக்க பாண்டியர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாண்டியர்களால் கண்டுபிடிக்க முடியாத சோழர்களை 2010ல் தேடி ஒரு குழு விரைகிறது. இந்த தேடலும் அதன் முடிவுமே ஆயிரத்தில் ஒருவன்.

இத்தேடலின் தலைவி ரீமா, இவருக்கு உதவியாக வருபவர்கள் கார்த்தி, ஆண்டிரியா மற்றும் இந்திய ராணுவப்படை. சென்னையிலிருந்து வியட்நாம் அருகில் ஒரு தீவில் சோழன் கடைசியாக வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு கிளம்புகிறார்கள், அந்த இடத்தை நோக்கிய பயணமும் அந்தப்பயணத்தில் அவர்கள் சந்திக்கும் இன்னல்களும், இழப்புகளும், அதிர்ச்சிகளும் முதல் பாதி. அழிந்ததாக கருதப்படும் சோழர்கள் என்ன ஆனார்கள், ரீமா, கார்த்தி குழுவினர் சென்ற காரியம் முடித்து திரும்பினார்களா என்பது இரண்டாம் பாதி.

Fantasy, Adventure படத்துக்கு தேவையான அனைத்தும் படத்தில் இருக்கிறது, கப்பல் பயணம், அடர் காட்டுவழி பயணம், காட்டுவாசிகள், பாம்புகள், பாலைவனம் மற்றும் சோழர்கள் என அனைத்தும் தமிழ் படத்திற்கு புதுசு. ரீமா, கார்த்தி, பார்த்திபன் மற்றும் பல துணை நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். அதிக தைரியம் கொஞ்சம் திமிர் கலந்த பாத்திரத்தை மிக இயல்பாக செய்திருக்கிறார் ரீமா, மற்ற படங்களை விட இந்தப்படத்தில் கூடுதல் அழகாவே இருந்தார் ரீமா. பருத்திவீரனில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திருக்கிறார் கார்த்தி, ஆனால் அவர் பாத்திரம் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது, தனது இரண்டாவது படத்திலேயே இந்த மாதிரி ஒரு படம் பண்ணியதற்கு பாராட்டுகள் கார்த்தி. surprise கதாபாத்திரம் பார்த்திபன், சிறப்பாக செய்திருக்கிறார், அவருடைய கேலி கிண்டல் மட்டும் இல்லாமல் இந்த மாதிரி வித்தியாசமான பத்திரங்களில் பார்த்திபனை பார்ப்பதும் மகிழ்வாக இருக்கிறது. படம் நெடுக பெருமளவில் பங்களித்திருக்கும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இப்படத்தின் கதாநாயகன் இயக்குனர் செல்வராகவன், தான் நினைத்ததை திரையில் கொண்டுவர அவரின் உழைப்பு தெரிகிறது, இவருக்கு பக்க(கா) பலமாக கை கொடுத்து படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றிருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் கலை இயக்குனர் சந்தானம். படத்தின் ஒளி அமைப்பு மிக சிறப்பாக இருந்தது, குகை காட்சிகள் அருமையாக படம் பிடித்திருக்கிறார், அடர் காடாகட்டும், பாலைவனமாகட்டும் மிக அழகாக, சிந்தாமல் சிதறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராம்ஜி, சோழ ராஜ்ஜியத்தை ஒரு குகைக்குள் நிறுவியிருக்கிறார் கலை இயக்குனர். ஜீவியின் இசை படத்திற்கு இன்னொரு பலம். இவர்கள் அனைவருக்கும் ஒரு பொக்கே. படத்தின் மற்றொரு முக்கியஸ்தர் CG, பல இடங்களில் CG என்பதே தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது, சில இடங்களில் CG துருத்தி கொண்டிருந்தாலும் இந்த பட்ஜெட்டில் அவ்வளவுதான் முடிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. படத்தில் மற்றொரு சிறப்பு அம்சம் சோழர் தமிழ், எனக்கு மிகவும் பிடித்தது, எப்படி இருந்த தமிழ், இப்படி ஆகியிருக்கிறது, அந்த தமிழை கேக்கும் போதே பேஜாராக்கீதுப்பா ச்சே, வருத்தமாக இருக்கிறது.

இப்படத்தை பற்றி பல வகையாக பல விமர்சனங்கள், அப்படிப்பட்ட சில விமர்சனங்களுக்கு என் கருத்துகள்
1. படத்தின் கதை புரியவில்லை?- என்ன புரியவில்லை என்று எனக்கு புரியவில்லை, படத்தை கவனமாக பாருங்கள், ஒவ்வொரு வசனத்தையும் கவனியுங்கள், அப்போதுதான் புரியும், நடுவில் யாரிடமாவது பேசிக்கொண்டும், comment அடித்துக்கொண்டும் பார்த்தால் புரியாது. நம்முடன் ஆயிரம் பேர் படம் பார்க்கிறார்கள் என்ற உணர்வில்லாமல் கத்திகொண்டிருப்பவர்களும், அவர்கள் பேசும் தமிழ் புரியவில்லை (லிங்க தரிசனம் தவிர) என்று கமெண்ட் அடிப்பவர்களுக்கும், அலைபேசியை நொண்டி கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் புரியாது.

2. சோழர்கள் பற்றி எடுக்கும் முன் இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்திருக்கலாம், சிலது வரலாற்றுடன் ஒட்டவில்லை - எதற்கு ஒட்டவேண்டும், அதுதான் படத்தின் தொடக்கத்திலேயே ஒரு disclaimar போடுகிறார்களே இப்படத்திற்கும் சோழர்கள் வரலாற்றுக்கும் தொடர்பில்லை, முற்றிலும் கற்பனையே என்று, பின் எதற்கு இந்த கேள்வி?

3. CG சில இடங்களில் தனியாக தெரிகிறது, இது ஒன்றும் $237 மில்லியனில் எடுக்கப்பட்ட அவதார் அல்ல, 32 கோடியில் எடுக்கப்பட்ட படம், இந்த பட்ஜெட்டிற்கு ஒரு எல்லை இருக்கிறது, இந்த மாதிரி முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்குமாயின் CG போன்றவைகளுக்கு நம் தயாரிப்பாளர்கள் செலவு செய்ய முன்வருவார்கள், இல்லையேல் பல கைகள் கொண்ட அம்மனையும், சட்டை போட்டு நடனமாடும் யானையும், CGயில் பார்த்துகொண்டிருக்க வேண்டியதுதான்.

4. ஒரு வலைத்தளத்தில் சோழர்களை Zombiக்களாக காட்டியிருப்பதாக குறிப்பிடிருந்தனர், இவர்கள் என்ன லட்சணத்தில் படம் பார்த்தார்கள் என்று தெரியவில்லை.

5. தி ஹிந்து விமர்சனத்தில், அந்த ராஜாவும் மக்களும் பேசும் தமிழ் புரியவில்லை என்கிறார் - என்ன செய்யலாம்? ஒரு வேலை சோழர்களை "இன்ன ராஜா, நாஸ்டா கூட தர மாட்டீன்ர , உன்னோடு ஒரு பேஜாரூப்பா," என்று பேசியிருந்தால் புரிந்திருக்குமோ?. தமிழ் புரியவில்லை என்பது நமக்கு தான் அசிங்கம், வேண்டுமென்றால் subtitle போட்டு இன்னும் அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கலாம். இவ்விமர்சனத்தை பற்றி என் நண்பனின் பதிவு இது.

6. படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாது என்று ஒரு குறை - அதற்கு தான் தணிக்கை குழு ஒவ்வொரு படத்தையும் பார்த்து விட்டு சான்றிதழ் வழங்குகின்றது, அதை கொஞ்சம் மதித்து கவனித்தால் எந்த படத்திற்கு யாரை அழைத்து செல்லலாம் என்று புரியும்.

7. படத்தை விமர்சிக்கவே கூடாதா? - விமர்சிக்கலாம், படத்தை புரிந்துகொண்டு, அது ஆரோக்கியமான விமர்சனமாக இருந்தால், ஒரு கலைஞனை உற்சாகபடுத்துவதாக இருந்தால் நன்மையே, முற்றிலும் தாழ்த்தி விமர்சனம் செய்வது யாருக்கும் நன்மையில்லை.

படத்தில் குறைகளே இல்லையா?, இருக்கிறது, அதீத வன்முறை, ரத்தம் (குறிப்பாக ராஜா முன் பலியிடப்படும் காட்சி மற்றும் சில சண்டை காட்சிகள்). மனதை பதைபதைக்க வைக்கும் சில காட்சிகள் உண்டு. இதை தவிர்த்து விட்டு பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் ஒரு சிறப்பான படம், தமிழில் இப்படியான ஒரு படம் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது ஒரு மிக முக்கியமான படமா என்றால்? ஆம், தவழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை தத்தி தத்தி நடக்க எடுத்து வைக்கும் முதல் அடிகளில் இதுவும் ஒன்று, தள்ளாட்டத்துடன் தான் இருக்கும், கொஞ்சம் ஆதரவு தாருங்கள், உற்சாகமூட்டுங்கள், நம்பிக்கையிழக்க செய்யாதீர்கள், நம் அடுத்த தலைமுறைக்குள் நடக்க பழகிவிடும், இல்லையேல் இன்னும் பல காலத்திற்கும் நாம் யாருக்கு "என்ன தளபதி" பட்டம் கொடுக்கலாம் என்று யோசித்துகொண்டே இருக்கவேண்டியதுதான்.

Sunday, 13 September 2009

ஈரம் - திரைப்பார்வை


இயக்குனர் சங்கரின் அடுத்த தயாரிப்பு ஈரம். அவருடன் பணியாற்றிய உதவி இயக்குனர் அறிவழகன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். மிருகம் படத்தில் நடித்த ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். தன்னுடைய ஒவ்வொரு தயாரிப்பும் எதாவது ஒரு வகையில் புதுமையாக அல்லது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக சங்கர் இருப்பார் போல, அந்த வகையில் ஈரம் படமும் ஒரு புதுமையான அனுபவம் கொடுக்கிறது. சங்கர் தயாரிப்பு என்பதால் கொஞ்சம் எதிர்ப்பபுடன் படத்துக்கு சென்றேன், படம் சிறப்பாக இருந்தது. தமிழில் திரில்லர் வகை படங்கள் மிக குறைவு, அந்த குறையை போக்க வைத்திருக்கிறது ஈரம்.

பெரிய அப்பார்ட்மென்டில் ஒரு பெண்ணின் மரணம் நிகழ்கிறது, அதை விசாரிக்கும் காவல் துறை, கிடைக்கும் ஆதாரங்களை வைத்து அது ஒரு தற்கொலை என்று வழக்கை மூட நினைக்கையில், ACP வாசுதேவன் அந்த வழக்கில் சில மர்மங்கள் இருப்பதாக தோன்றுவதால் தானே அந்த வழக்கை மேலும் விசாரிக்க விரும்புவதாக கூறி, அந்த வழக்கு விசாரணையை தொடங்குகிறார். இந்த வழக்கை விசாரிக்க அவர் ஆர்வம் காட்ட முக்கிய காரணம் இறந்த பெண்ணும் இவரும் பழைய காதலர்கள். முதல் கட்ட விசாரணையில் அந்த மரணம் ஒரு தற்கொலை போலவே தோன்றுகிறது, அந்த சமயத்தில் அடுத்தடுத்து அந்த அப்பார்ட்மென்டில் வசிக்கும் இருவர் இறக்க, விசாரணை சூடு பிடிக்கிறது. நான்காவதாக நடக்கும் கொலையை நேரில் பார்க்கும் ACPயால் அந்த கொலைகாரனை பிடிக்க முடியாமல் போகிறது. இடைவேளைக்குப் பிறகு இந்த தொடர் கொலைகளுக்கான காரணங்கள் தெரிய வரும் போது சில ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் காத்திருக்கிறது.

ACPயாக ஆதி, பிசினஸ் மேனாக நந்தா, அவர் மனைவியாக சிந்து நடித்திருக்கிறார்கள். ஒரு காவல் அதிகாரிக்கான கம்பீரம் மற்றும் மிடுக்குடன் குறையுமில்லாமல் மிகையுமில்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் ஆதி, நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் அவருக்கு சிறப்பான இடம் காத்திருக்கிறது, வாழ்த்துக்கள் ஆதி. கல்லூரி மாணவியாகவும், பின்னர் மனைவியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் சிந்து. நந்தாவும் தன் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். சரண்யா மோகன், ஸ்ரீ நாத் என்று துணை பாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று மிக சிறப்பாக நடித்திருக்கும் மற்றொரு நடிகர் தண்ணீர்.

படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஈரமாக இருக்கிறது, தண்ணீர் இடம் பெறாத காட்சிகள் மிக குறைவு. இந்த காட்சிகள் எதுவும் திணிக்கப்படாமல் இயல்பாக வந்து போகிறது. படத்தில் எனக்கு பிடித்த மற்றொரு அம்சம் பாடல், ஒரே ஒரு பாடல் தான் அதுவும் காட்சிகளுக்கு பின்னணியில் ஒலிக்கிறது, மழையே! மழையே! என்ற அந்த பாடல் சிறப்பாக இருந்தது. படத்திற்கு இசை தமன், பாய்ஸ் படம் பார்த்தீர்களா? அதில் குண்டாக வருவரே, அவரேதான். இசை நன்றாக இருந்தது, ஒரு திர்ல்லர் படத்திற்க்கான இசையை சிறப்பாக அமைத்திருக்கிறார் தமன், அவருக்கு ஒரு பூங்கொத்து. முதல் பாதியில் கொலை விசாரணயின் போது நடு நடுவே ஆதி சிந்து காதல் காட்சிகள் வந்து போகின்றன, இந்த காட்சிகளில் எடிட்டிங் சிறப்பாக இருந்தது. கேமரா மழையில் நனைந்தது போல் ஈரமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமகம்சா, காட்சிகள் அணைத்தும் அழகு + திரில், இவருக்கும் ஒரு பூங்கொத்து. மேல் குறிப்பிட்ட அனைத்தும் படத்திற்கு பக்க(கா) பலமாக அமைந்திருக்கிறது. இத்தனையும் சிறப்பாக அமைய முக்கிய காரணம் இயக்குனர் அறிவழகன், தன் குருவிடம் சிறப்பாக பாடம் பயின்று வந்திருக்கிறார், சங்கரின் எந்த சாயலும் தெரியாமல் ஒரு புதுவிதமான அனுபவமாக இந்த படத்தை இயகியிருகிறார். மனதில் ஈரமில்லாதவர்களை பற்றிய இப்படத்திற்கு ஈரம் என்ற தலைப்பிட்டதற்கு ஒரு பூங்கொத்து, . திரில்லர் படம் என்பதற்காக திடீர் இசை, க்ளோஸ் அப் சாட், கதாபாத்திரங்கள் அனைவரையும் திகிலாக பேசவைப்பது என்றில்லாமல் சிறப்பான திரைக்கதை அமைத்து திகிலூட்டியிருகிருக்கும் இயக்குனர்அறிவழகனுக்கு ஒரு பொக்கே.இந்த படத்தின் மூலம் நம்பிக்கையான இயக்குனர் என்று பெயர் பெற்றுவிடுவீர்கள், இனி எடுக்க போகும் படங்களும் இதே போல் அல்லது இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். தொடர்ந்து தனது தயாரிப்பில் புதுமையையும், புதியவர்களையும் அறிமுகப்படுத்தி சிறந்த தயாரிப்பாளராக வெற்றிநடை போடும் இயக்குனர் சங்கருக்கும் ஒரு பொக்கே.

இந்த வருடத்தின் சிறந்த படங்கள் வரிசையில் ஈரம் படத்திற்கும், சிறந்த இயக்குனர் வரிசையில் அறிவழகனுக்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு. இந்த விமர்சனம் எழுதிகொண்டிருக்கும் போது என் வீட்டு குளியல் அறையின் கதவிடுக்கிளிரிந்து ஈரம் கசிந்து கொண்டிருக்கிறது, அது போல் நம் மனங்களிலும் ஈரம் கசியட்டும்.

Sunday, 19 July 2009

அச்சமுண்டு! அச்சமுண்டு! - விமர்சனம்

இன்று நான் INOXஇல் அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் பார்த்தேன். அந்த படத்தை பற்றிய ஒரு விமர்சனம்.
இந்த படத்தை பார்க்க நான் கொஞ்சம் ஆவலாக இருந்தேன் காரணம் இந்தியாவில் முதன் முதலில் RED ONE கேமராவில் எடுக்கப்பட்ட திரைப்படம் மற்றும் தமிழில் வெகு குறைவாகவே த்ரில்லர் வகை திரைப்படங்கள் வருகின்றன அந்த வகையில் இதுவும் ஒரு ஆவலை தூண்டிய திரைப்படம். விமர்சனம் என்கிற பெயரில் இப்படத்தின் கதையை நான் கூறப்போவதில்லை, ஆக தாரளமாக நீங்கள் இதை படிக்கலாம். இத்திரைப்படம் ஒரு சமுதாய பிரச்சனையை பற்றி பேசுகிறது (அது என்னவென்பதை வெள்ளித்திரையில் கண்டுகொள்க), உலகில் எந்த ஊரிலும் நடக்கின்ற நடக்ககூடிய பிரச்சனை.இந்த படத்தில் பிரசன்னா மற்றும் சினேகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள், மற்றும் John Shea (Emmy award Winner) என்கிற ஹாலிவுட் நடிகர் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.எழுதி இயக்கியிருப்பவர் அருண் வைத்தியநாதன்.இசை அமைத்திருக்கிறார் கார்த்திக்ராஜா.

பிரசன்னாவும் சினேகாவும் நியூ ஜெர்செயில் வசிக்கும் தம்பதி. அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கும் ஒரு Typical இந்திய குடும்பம், அவர்களுக்கு கிட்டத்தட்ட 10 வயதில் ஒரு குழந்தை. அவர்கள் புதிதாக ஒரு வீடு வாங்கி தங்கியிருக்கிறார்கள், இவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான் படம். பிரசன்னாவும் சினேகாவும் கணவன் மனைவிக்குரிய அன்னியோனத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர் (நம் கோலிவுட் பாசையில் இவர்களுக்கு இடையில் Chemistry Physics எல்லாம் சிறப்பாக உள்ளது). படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்கள் நாலு பேர் மட்டும் தான், அவர்களை சுற்றியே திரைக்கதை பின்னன்ப்படிருகிறது.சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார் அருண். அமெரிக்காவில் ஒரு தமிழ் குடும்பம் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள். பிரசன்னாவின் குழந்தை எப்பவும் ஆங்கிலம் பேசுவதும், சினேகா தமிழில் பேசுமாறு சொல்லிக்கொண்டே இருப்பதும், வார இறுதியில் கோவில் போவதும், கிரிக்கெட் விளையாடுவதும், அவர்கள் குழந்தைகென்று தனியறை ஒதுக்கி தூங்க வைப்பதும், எதற்கெடுத்தாலும் தேங்க்ஸ் சொல்வதும் அங்கு எப்பவும் நடப்பதே.

இயக்குனர் அமெரிக்காவில் இருந்ததாலும், இக்கதைக்கு தேவை இல்லை என்பதாலும் பின்னணியில் ஒலிப்பதை தவிர தனியாக பாடல் வைக்கவில்லை. திரைக்கதையில் தேவை இல்லாமல் ஒரு காட்சியும் இல்லை. பிரசன்னா சினேகாவை தவிர மற்றவர்கள் யாவரும் புதுமுகங்கள் என்பதும் ஒரு பிளஸ். கார்த்திக் ராஜா சிறப்பாக இசையமைத்திருக்கிறார், "கண்ணில் தாகம்" சிறப்பாக இருந்தது, பின்னணி இசையும் சிறப்பாக செய்திருக்கிறார்.ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது ஆனால் RED One காமெராவின் வித்தயாசத்தை சிறப்பை உணரமுடியவில்லை. படம் இரண்டு மணிநேரத்துக்குள் முடிந்து விடுகிறது, இது ஒரு திரில்லர் படத்துக்கு முக்கியமான பலம். இந்த படத்தில் நடித்ததற்காக பிரசன்னா மற்றும் சினேகாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். பிரசன்னா இது போன்ற அர்த்தமுள்ள பாடங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும்.

படத்தில் பலவீனம் எதுவும் இல்லாமல் இல்லை, படம் ஒரு வீட்டுக்குள்ளயே முடிந்து விடுகிறது, அமெரிக்க போன்ற பாதுகாப்பு பலமான ஊரிலே கூட குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றமுடிகிறது. படத்தில் பெரும்பான்மையான வசனங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன, சினேகா பிரசன்னவே பல காட்சிகளில் ஆங்கிலத்திலயே பேசுகிறார்கள், அதனாலயே பலருக்கு இத்திரைப்படம் புரியாமல் அல்லது புடிக்காமல் போகலாம், ரொம்ப எதார்த்தமாக எடுப்பதற்காக இப்படி எடுகப்படிருக்கலாம், குறைந்த பட்சம் subtitleஆவது போட்டிருக்கலாம்.இருந்தாலும் இப்படம் பேசும் பிரச்சனை பற்றி தமிழில் ஏதும் படம் வந்ததே என்று எனக்கு தெரியவில்லை, அதனாலே இத்திரப்படதிற்கு சிறப்பான இடம் தரப்படவேண்டும். இந்தவருடம் வெளிவந்த சிறப்பான திரைப்படங்கள் வெண்ணிலா கபடி குழு, யாவரும் நலம், பசங்க, நாடோடிகள் வரிசையில் அச்சமுண்டு அச்சமுண்டுவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இது போன்ற படங்கள் நம் தமிழ் திரையில் காண்பது அரிது இத்திரைப்படத்தை நாம் வெற்றிப்படம் ஆக்கவேண்டியது ரசிகர்கள் கையில் தான் உள்ளது, இந்த மாதிரி படங்களுக்கு நாம் வரவேற்ப்பு தராவிட்டால், பிரசன்னா போன்றவர்கள் கூட கையில் கத்தி எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்துவிடுவார்கள்.

கண்டிப்பாக பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம் என்று விளம்பரம் செய்கிறார்கள் கண்டிப்பாக இது பெற்றோர்கள் மட்டும் அல்ல அனைவரும் பார்க்கவேண்டிய படமே.