Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Wednesday, 28 October 2009

ஆலங்கட்டி மழை

எத்தனை வகையான மழை தெரியும் உங்களுக்கு? நானறிந்த வகையில் மொத்தத்தில் ஐந்து வகையான மழை (ஆசிட் மழையை தவிர்த்து) இருகின்றன
1. Normal Rain (மழை)
2. Snow Rain (பனி மழை)
3. Sleet or Ice pellets (சிறு பனி கட்டிகள் மழை)
4. Freezing Rain (உறையும் மழை)
5. Hail Stone rain (ஆலங்கட்டி மழை)

வடபழனி, வேளச்சேரி ரோடுகளில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் படகு ஓட்டி கொண்டிருப்பார்களே அதற்கு காரணமான மழையை பற்றி நன்கு தெரியும் என்பதால் நாம் பனி மழையில் இருந்து தொடங்குவோம்.

பனி மழை:
வானத்தில் வெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது மழை பனியாகிறது. அந்தப் பனி பூமி வரும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் மழை பனியாக பொழிகிறது. வெப்பநிலை, நீர் உறையும் அளவோ, அதைவிட குறைவாகவோ (மைனஸில்) இருந்தால் மழை பனியாக பொழிய வாய்ப்புண்டு, இந்த வெப்பநிலை Troposphere (இதற்கான தமிழ் பதம் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்) முழுவதும் நிலவ வேண்டும் . இந்தப்பனி பஞ்சு போல் இருக்கும், ஆரம்பத்தில் இதில் விளையாட உற்சாகமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் பனி பட்ட இடம் எல்லாம் எறிய ஆரம்பித்துவிடும்.



சிறு ஐஸ் கட்டிகள் மழை:
மேலே சொன்ன அதேப்பனி காற்று மண்டலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றம் காரணமாக சிறு பனி கட்டி மழையாக பெய்யும். பனியாக ஆரம்பிக்கும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகி, நிலத்தை நெருங்கும் முன் மீண்டும் குறைந்த வெப்பம் காரணமாக சிறு ஐஸ் கட்டிகளாக விழும். இந்த கட்டிகள் சிறு கற்கண்டு அளவிலோ இல்லை அதை விட கொஞ்சம் பெரியதாகவோ இருக்கும்.



உறையும் மழை:
பனியாக வரும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில், காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம், உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது மீண்டும் நீராகிவிடுகிறது அல்லவா, அந்த நீர் பூமியை அடைந்து பின் உறைந்தால் அது உறையும் மழை. அதாவது பனி நீரான பின்பு மீண்டும் பனியாவதற்கு குறைந்த வெப்பம் தேவை, பூமியில் இருந்து மிக கொஞ்சம் உயரத்திற்கே குறைந்த வெப்பம் இருந்து நீர் பனியாக விழாமல், பூமியில் விழுந்த பின் நிலத்தின் குறைந்த வெப்பம் காரணமாக பனியானால் அது உறையும் மழை. இந்தப்பனி நிலத்தில் கண்ணாடி போல உறைந்திருக்கும். இது கொஞ்சம் ஆபத்தான மழை, நிலத்தில் நீர் உறைந்திருப்பதே தெரியாது, தரை வழுக்கும், வண்டிகள் ஓட்டுவதற்கு கடினமாக இருக்கும்.



ஆலங்கட்டி மழை:
மேலே சொன்ன மழையெல்லாம் மழை மற்றும் பனி காலங்களில் வரும், ஆனால் ஆலங்கட்டி மழை வெய்யில் காலங்களில் வரும். இந்த காலங்களில் சில சமயம் உருவாகும் ஒரு வகை மேகங்களில் ஏற்படும் சிறு புயலில் நீர் துளிகள் ஒன்றாகி உருவாகுவது தான் இந்த பெரிய ஆலங்கட்டிகள், பெரிய பனி கட்டிகள். இந்த கட்டிகள் கற்கண்டு அளவில் இருந்து உள்ளங்கை அளவில் வரை இருக்கும். நம் மேல் விழுந்தால் வலிக்கும். இந்த கட்டிகள் கார் கண்ணாடியெல்லாம் உடைத்து விடும்.



சரி, என்ன திடீர்னு மழை பற்றி எழுதுறேன் பாக்கறீங்களா? கடந்த செவ்வாயன்று இங்கு திடீரென்று பனி கட்டி மழை பெய்தது, அது ஆலங்கட்டி மழை என்று நினைத்து கொண்டோம், அது எப்படி உருவாகிறது என்று படித்த போது, பெய்தது ஆலங்கட்டி மழை இல்லை பனி கட்டி மழை என்று தெரிந்தது. நமக்கு தெரிந்தத நாலு பேருக்கு சொல்லலாம்னு இந்தப்பதிவு, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல தானே.