Showing posts with label நான் ரசித்த படங்கள். Show all posts
Showing posts with label நான் ரசித்த படங்கள். Show all posts

Friday, 13 November 2009

SIGNS (2009) - குறும்படம்


என் அலுவலக நண்பன் பகத், ஒரு நிழற்பட நிபுணர், சொன்னதின் பேரில் நான் பார்த்த குறும்படம் SIGNS. 12 நிமிடம் மட்டுமே ஓடும் ஒரு அற்புதமான படம். 12 நிமிட படத்தில் என்னவெல்லாம் சொல்ல முடியும்? ஏக்கம், ஏமாற்றம், காதல், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி இவ்வனைத்தையும் காட்சிப்படுத்தி, உணர வைத்திருக்கிறார் இயக்குனர் Patric Hughes. இவர் ஆஸ்திரேலியா நாட்டுக்காரர்.

கொஞ்சம் மெதுவாக ஆரம்பிக்கும் படம் போகப் போக நம்மை உள்ளிழுக்கிறது, பிறகு அந்த அழகான முடிவு. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னனி இசை, படத்தொகுப்பு என எல்லாம் மிக சிறப்பாக இருந்தது. ஆங்... ஒன்னு சொல்ல மறந்துட்டேன் படத்தில வசனமே இல்லீங்க. படம் முடியும் போது உங்கள் முகத்தில் கண்டிப்பாக ஒரு புன்னகை மலரும்.

இங்கே சுட்டினால் படத்தை ரசிக்கலாம்.

Sunday, 25 October 2009

The Shawshank Redemption (1994)


"வாழ்க்கையில் எந்த நிலமையிலும் சூழலிலும் நம்பிக்கை ஒன்று இருந்தால் வெற்றி பெறலாம்" என்று சொல்லும் படம் தான் The Shawshank Redemption. மார்கன் ஃப்ரீமன், டிம் ரபின்ஸ் நடித்து ஸ்டீபன் கிங்கின் கதையை அடிப்படையாக வைத்து ஃபிரான்க் டரபோன்ட் இயக்கியது. எனக்கு பிடித்தமான படங்களில் மிக முக்கியமான படம். வாழ்க்கையே முடிந்து போகும் என்ற புள்ளியிலிருந்து ஒருவன் எப்படி மீண்டும் தன் வாழ்க்கையை தொடங்குகிறான் என்பதே The Shawshank Redemption. IMDBல் டாப் 250 படங்களில் மக்கள் இப்படத்திற்கு முதல் இடத்ததை கொடுத்திருக்கிறார்கள்.

Andy - ஒரு நிதி நிறுவனத்தின் மேலதிகாரி, அவன் தன் மனைவியையும், அவளுடைய காதலனையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, நிருபிக்கப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை (மொத்தம் 40 வருடங்கள்) விதிக்கப்படுகிறான். அந்த தண்டனையை அனுபவிக்க அனுப்பப்படும் இடம் ஷஷாங் சிறைச்சாலை . அங்கு சிறையில் பலருக்கு தேவையான பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வரும் மற்றொரு கைதி ரெட், பிரபலமான கைதி. சிறைக்கு வந்து சில நாட்கள் கழித்து ரெட்டிடம் தனக்கு கற்களை வைத்து சிறு பொம்மைகள் செய்வதில் விருப்பம் என்றும் அதனால் ஒரு சுத்தியல் வேண்டுமென்று கேட்கிறான், ரெட்டும் வாங்கி தருகிறான். இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நட்பாகின்றனர், Andyயும் ரெட்டின் குழுவில் ஒருவனாகிறான். ஒரு முறை சிறை காவலதிகாரி தான் அதிக வருமான வரி கட்ட வேண்டியது குறித்து சக அதிகாரிகளிடம் கூறுவதை கேட்கும் Andy, அவருக்கு வரி கட்டாமல் சொத்தை எப்படி பாதுகாப்பது என்று வழி சொல்கிறான், அதில் பிரபலமாகும் Andy, சிறை அதிகாரி பலருக்கும் வருமான வரி ஆலோசகனாகிறான். இதற்கு பிறகு ரெட் குழுவில் அவன் மரியாதை ஏறுகிறது.

ஷஷாங் சிறையின் மேலதிகாரி நார்டன், சிறை கைதிகளை தனக்கு வருமானம் ஈட்டுவதற்கு உபயோகித்து கொள்கிறார், அதற்கு நிதி ஆலோசகராக Andyயை உபயோகித்து கொள்கிறார் நார்டன். இதனால் சிறை மேலதிகாரியுடனும் நெருக்கமாகிறான் Andy. சில வருடங்கள் கழித்து மற்றொரு கைதிகள் குழு அந்த சிறைக்கு வருகிறது, அதில் டாம் என்கிற ஒரு இளம் கைதி இவர்கள் குழுவில் ேர்கிறான். அவனுக்கு எழுதப் படிக்க கற்று கொடுக்கிறான் Andy. ஒரு நாள், Andy சிறைக்கு வந்த கதையை கேட்டு விட்டு, இதற்கு முன் தன்னுடன் சிறையிலிருந்தவன் இதே போல் கொலை செய்ததாகவும், அதற்கு ஒரு வங்கி அதிகாரி தண்டிக்கப்பட்டதாக கூறியதையும் டாம் கூறுகிறான். இதை சிறை மேலதிகாரியிடம் கூறி தன் வழக்கை மறு விசாரணை செய்யுமாறு கோருகிறான் Andy, அதை ஏற்காத அதிகாரி அவனை தனிமை சிறையில் தள்ளுகிறார், பிறகு டாமையும் கொலை செய்கிறார் . சில மாதங்கள் கழித்து தனிமை சிறையிலிருந்து வருகிறான் Andy, ஒரு நாள் ரெட்டிடம், விடுதலை ஆகி வந்தால் தன்னை சந்திக்க வேண்டுமென்றும், இருவரும் தொழில் செய்யலாம் என்றும் கூறுகிறான். அடுத்த நாள் சிறையில் இருந்து மாயமாகிறான் Andy. Andy எப்படி தப்பித்தான், ரெட் விடுதலை ஆனான? Andyயுடன் சேர்ந்தானா என்பது மீதிப்படம்.

சிறையும், சிறை சார்ந்த அனுபவங்களே படம் முழுவதும். சிறையில் பல வருடங்கள் இருப்பவர்கள் சிறைக்கு வெளியில் உள்ள உலகத்தை சந்திக்க தயங்குவதையும், அப்படி வெளியில் செல்வோரின் நிலைமையை ப்ரூக்ஸ் தாத்தா பாத்திரத்தின் வாயிலாக கூறியிருக்கிறார்கள். கதையை ரெட் narrate செய்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரெட்டாக மார்கன் ஃப்ரீமன், Andyயாக டிம் ரபின்ஸ் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். மார்கன் ஃப்ரீமனின் வசன உச்சரிப்பு அற்புதம், அவருடைய குரலே தனி கம்பீரம், அவர் செய்யும் narration மற்றொரு அற்புதம். படத்தில் எனக்கு பிடித்த மற்றொரு பாத்திரம் ப்ரூக்ஸ் தாத்தா. இருபது வருடங்களில் ஒருவன் மனம் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களை சிறப்பாக காட்சிபடுத்தியிருகின்றனர். படத்தில் பல காட்சிகள் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக நூலகத்தை பராமரிக்கும் ப்ரூக்ஸ் தாத்தா, பரோலில் விடுதலை செய்யப்படும் போது, சிறையை விட்டு போக மனமில்லாமல் அழும் காட்சியும், ரெட்டை பரோலில் விடுவிக்க நடக்கும் விவாத காட்சியும், பரோலில் விடுதலை செய்யப்படும் ரெட், தன் வேலை செய்யும் இடத்தில் ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கவும் அனுமதி கேட்கும் காட்சியும். படத்தில் எனக்கு பிடித்த வசனங்களில் சில...

"The funny thing is, on the outside, I was an honest man, straight as an arrow. I had to come to prison to be a crook."

"There are things in this world not carved out of gray stone. That there's a small place inside of us they can never lock away, and that place is called hope."

"You're right. It's down there, and I'm in here. I guess it comes down to a simple choice, really. Get busy living or get busy dying."

"Andy Dufresne , who crawled through the river of shit and came out clean on the other end"

ஒரு காட்சியில் ரெட்டிடம் இப்படி சொல்கிறான் Andy "Hope is never dangerous Red, Hope is always a good thing, hope keeps a man Alive". இந்தப்படம் சொல்வது ஒன்று தான் நம்பிக்கை, நம் நம்பிக்கையை யாரும் சிதைக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் அதற்காக உழைத்தால், வெற்றி நிச்சயம். ஆம், நம் வாழ்க்கை என்னும் சக்கரம் நம்பிக்கை என்னும் அச்சாணியில் தானே சுற்றிக்கொண்டிருக்கிறது.

Saturday, 15 August 2009

12 Angry Men (1957)


சமீபத்தில் நான் பார்த்த ஆங்கிலப்படம் 12 Angry Men. 1957லில் வெளிவந்த கருப்பு வெள்ளை திரைப்படம். இத்திரைப்படத்தை பற்றி கொஞ்ச நாள் முன் என் நண்பர்கள் சொல்ல கேள்வி பட்டிருந்தேன், நல்ல திரைப்படம் என்று கூறியிருந்தனர். சமீபத்தில் எஸ் ராமகிருஷ்ணன் சிறிது வெளிச்சம் என்னும் தொடரில் இத்திரைப்படத்தை பற்றி குறிப்பிடிருந்தது் இத்திரைப்படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. இனி திரைப்படத்தை பற்றி.

ஒரு இளைஞன் அவன் தந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்படுகிறான், அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது, வழக்கு விசாரணையின் கடைசி நாளன்று படம் தொடங்குகிறது. கொலை வழக்கு விசாரணை இத்துடன் முடிவடைகிறது என்றும் நீங்கள் சேகரித்த தவல்களை வைத்து குற்றம் சாட்டப்படிருப்பவன் குற்றவாளியா இல்லையா என்று கூறுமாறு அங்கிருக்கும் ஜுரிக்கு ( A jury is a group of law-abiding members of a community brought together to give an impartial judgment) கூறுகிறார் நீதிபதி (ஒருவன் குற்றவாளியா இல்லையா என்பதை ஜூரிக்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது அமெரிக்க நாட்டில் உள்ள நடைமுறை, இந்த பழக்கம் இன்னும் சில மாகாணங்களில் இருக்கும் போல.). அந்த ஜூரியில் மொத்தம் 12 பேர். யாருக்காவது அவன் குற்றவாளி என்பதில் குறைந்தபட்ச சந்தேகம் (Reasonable Doubts) இருந்தால் கூட அவனை குற்றவாளி இல்லை என்று அவர் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார் நீதிபதி.பின்னர் அந்த ஜுரி அவன் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்க ஒரு அறையில் குழுமுகின்றது .

நடந்த விசாரணையிலும், கிடைத்த ஆதாரத்திலும் அந்த இளைஞன் கொலை செய்திருப்பது தெளிவாக தெரிவதாகவும் அதனால் விரைவில் அவனை குற்றவாளி என்று முடிவு செய்துவிட்டு நாம் கிளம்பி விடலாம் என்றே பலரும் பேசிக்கொள்கின்றனர். முதலில் அவன் குற்றவாளியா இல்லையா என்று ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாம் என்றும் யாருக்காவது மாற்று கருத்து இருந்தால் விவாதிக்கலாம் என்றும் முடிவு செய்கின்றனர். ஓட்டெடுபில் அவன் குற்றாவாளி என்று 11 பேரும், குற்றாவாளி இல்லை என்று ஒருவரும் ஓட்டளிக்கின்றனர். இதனால் எரிச்சல் அடையும் சிலர் அவன் குற்றவாளி என்று பல வகையில் நீதிமன்றத்தில் நிரூபிக்க பட்டதென்றும் இதில் எந்த சந்தேகமும் இல்லையென்றும் கூறுகின்றனர். அதற்க்கு அந்த ஒருவர், எந்த விவாதமும் செய்யாமல் சில நிமிடங்களில் ஒருவனை குற்றவாளி என்று சொல்லி அவனுக்கு மரண தண்டனை பெற்று தர தனக்கு மனமில்லை என்றும் இது ஒருவனின் வாழ்க்கை பிரச்சனை என்றும் ஆகவே நாம் அனைவரும் இந்த வழக்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

குற்றவாளி என்று ஓட்டளித்த 11 பேரும் மறுத்த ஓட்டளித்த அந்த ஒருவரை சமாதானப்படுத்தலாம் என்று முடிவு செய்து அவரவர் கருத்தை கூறுகின்றனர். இந்த விவாதம் எவ்வாறு முடிகிறது என்பது மீதிப்படம். ஒவ்வொருவரும் அவன் ஏன் குற்றவாளி என்று விளக்குகிறார்கள், அந்த ஒருவர் மட்டும் அவன் ஏன் குற்றவாளியாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார். ஒரு சுற்று பேசியவுடன் ஒரு ஓட்டெடுப்பு நடக்கிறது. இந்த மாதிரி பல சுற்றுகள் விவாதிக்கிறார்கள், குறிப்பிட்ட இடைவெளிகளில் ஓட்டெடுப்பு நடக்கிறது. அவர்கள் குறித்த நேரத்திற்குள் கடைசியாக என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது படத்தின் முடிவு.

அந்த ஜூரியில் இருக்கும் 12 பெரும் ஒவ்வொரு மனோநிலையில் இருக்கிறார்கள். ஒருவர் அன்று நடக்கும் ஒரு விளையாட்டுக்கு டிக்கெட் வாங்கியிருப்பதால் சீக்கிரம் விவாதத்தை முடித்துவிட்டு கிளம்பவேண்டும் என்று துடிக்கிறார், மற்றொருவர் தன் தொழிலை பற்றியே பேசுகிறார், இன்னொருவர் அந்த கைதி குற்றாவாளி தான் என்றும் இதை யாரும் மற்ற முடியாது என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படி ஒவ்வொருவரின் மனோநிலையும் அதற்கேற்ற வசனங்களும் சிறப்பாக அமைக்கப்பெற்றுகிறது, குறிப்பாக வசனங்கள் மிக சிறப்பாக உள்ளன. படத்தின் ஒளிப்பதிவும் அருமை, 50 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் என்றால் நம்ப முடியவில்லை (படம் கருப்பு வெள்ளை). படம் முழுவதும் ஒரு அறையிலேயே நடக்கிறது, ஒரு அறை, 12 பேர் இதுதான் கதை நடக்கும் இடம், மிக சிறப்பான திரைக்கதையும் (Reginald Rose) இயக்கமும் (Sidney Lumet) நம்மை இடத்தை விட்டு நகராமல் கட்டிபோடுகின்றன. படத்தின் மற்றொரு சிறப்பு எந்த கதாப்பாத்திரத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை, படம் முடியும் முன் அந்த ஜூரியில் இருந்த இரண்டு பேர் மட்டும் தங்கள் பெயர்களை கேட்டுகொள்கிறார்கள்.

எங்கள் அலுவலகத்தில் நடக்கும் Business Communication skills பயிற்சியின் போது இத்திரைப்படம் ஒளிபரப்புகிறார்கள். இந்தப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் தங்க கரடி விருது பெற்றிருக்கிறது. எந்த படைப்பு அதன் காலத்தையும் விஞ்சி நிற்கிறதோ அது அமர காவியம் (Classic) ஆகும், இந்தப்படமும் அப்படியே. வாய்ப்பு கிடைக்கும் போது இத்திரைப்படத்தை பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.