Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Thursday, 11 March 2010

என் பெயர் ராமசேஷன் - ஒரு பார்வை


சமீபத்தில் நான் படித்த நாவல் 1980ல் ஆதவன் எழுதிய "என் பெயர் ராமசேஷன்". ஒரு பதின் வயது மத்தியதர பிராமண இளைஞனின் பார்வையில், அவனுடைய கல்லூரி நாட்களை பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர் ஆதவன். அவன் பெயர் ராமசேஷன்.

ராமசேஷனின் டைரியை படிப்பது போல் இருந்தது நாவல். நடுத்தர குடும்பத்தில் இருக்கும் ராமசேஷன், பொறியியல் படிப்புக்கு கல்லூரியில் சேர்க்கபடுகிறான். விடுதியில் தங்கி படிக்கிறான்(?). கல்லூரியில் அவன் சந்திக்கும் மேல் தட்டு மக்களை போல் இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அவன் செய்யும் பாசாங்குகளும், அவர்களை விட பெரியவன் என்று காட்டிக்கொள்ள அவன் போட்டுக்கொள்ளும் வேஷங்களும்,
தான் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிம்பம் கொடுப்பதும், இவர்கள் இப்படிதான் என்று முடிவு செய்துகொள்வதும் , இவர்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ள அல்லது தான் ஒரு அதிபுத்திசாலி (Intellectual?) என காட்டிக்கொள்ள முயற்சிப்பதும், அதற்காக தனக்கும் ஒரு பிம்பம் மாட்டிக்கொள்வதும், அந்த பிம்பத்துக்குள் கடைசிவரை அவனால் இருக்க முடிந்ததா என்பதுமே "என் பெயர் ராமசேஷன்".

ஆரம்பத்தில் ராமசேஷன் தன்னை சுற்றியுள்ள பலரையும் வெறுக்கிறான். குறிப்பாக தன அப்பாவை. அவரை எதற்கும் உதவாதவர் என்றும் , தான் அவரிலிருந்து வேறுப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். கல்லூரியில் சேர்ந்ததும் அவன், ராவ், மூர்த்தி என்று மூவரும் ஒரு நட்பு வட்டம் ஏற்படுத்திக்கொள்கின்றனர், ராவ் பணக்காரன், மூர்த்தி ராவுடன் பழகினால் கிடைக்கும் சில நன்மைகளுக்காக ராவின் இடது கை போல் இருக்கிறான். ராமசேஷன் அப்படியில்லாமல் தன்னை ஒரு இயல்பான நண்பனாக காட்டிக்கொள்கிறான். இந்த மூவருக்குள் நடக்கும் ஈகோ யுத்தம் ஒரு பக்கம். ராவின் தங்கை மாலா மேல் ராமசேஷனுக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட, இருவரும் கொஞ்ச நாள் சுற்றி திரிகிறார்கள். இருவருக்கும் ஏற்படும் ஈகோ பிரச்சனையில் பிரிகிறார்கள். அழகான மாலாவுடன் அடிபட்டதற்கு மருந்தாக சுமாராக இருக்கும் பிரேமாவுடன் பழகுவது ஒரு பக்கம். இதற்கு நடுவில் கணக்கு ப்ரொபசர், ராமபத்ரன், ராமசேஷனின் பெரியப்பா, முக்கியமாக பங்கஜம் மாமி ஆகியோருடன் நடக்கும் சம்பவங்கள் என போகிறது நாவல். கல்லூரி வாழ்க்கை முடிந்த பின், ராமசேஷனால் அவன் நினைத்த மாதிரி தன் வாழ்வை அமைத்துக்கொள்ள முடிந்ததா இல்லையா என்று கூறி முடிகிறது நாவல்.


80ல் எழுதப்பட்ட இந்நாவல், இப்போது படிப்பதற்கும் சுவையாக இருக்கிறது, அதற்கு முக்கிய காரணம், ராமசேஷனின் பாத்திர படைப்பு, நிலையான மனமில்லாத, ஆசைகள் நிறைந்த ஒருவனை ராமசேஷன் மூலம் நம் கண் முன் நிறுத்துகிறார் ஆதவன். இந்த நாவலை படித்து முடிக்கும் போது நம்மில் பலரும் ராமசேஷனை போல தான் இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றியது. ஆதவனின் நடையும் அருமையாக இருந்தது. நீள நீளமான வாக்கியங்கள், இரண்டாவது பத்தியின் கடைசி வாக்கியத்தை கவனத்தீர்களா, எவ்வளோ பெரிய வாக்கியம்! அது போல அல்லது அதை விட பெரிய வாக்கியங்கள் நிறைந்தது இந்த நாவல். கதை மாந்தார்கள் இடையே நடைபெறும் உரையாடல் சுவாரஸியமாக இருந்தது. பல ஆங்கில வார்த்தை/வாக்கியங்களை சரளமாக பயன்படுத்தியிருக்கிறார். இப்போது படிப்பதற்கும் excitingஆக இருக்கிறான் ராமசேஷன் . படித்து பாருங்கள் உங்களுக்கும் ராமசேஷனை பிடிக்கும்.

நூல் விவரம்:
பெயர்: என் பெயர் ராமசேஷன்
ஆசிரியர்: ஆதவன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: 120 ரூபாய்.

Tuesday, 16 June 2009

அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு பார்வை

சமீபத்தில் நான் படித்த நாவல் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு. 1976ல் எழுதப்பட்ட இந்த நாவல் 1977 ஆம் ஆண்டுக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றிருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு பல சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த நம் நாடு சர்தார் வல்லபாய் பட்டேல் போற்றவர்களின் முயற்சியில் ஒன்றிணைத்து தற்போதைய இந்தியாவாக ஆனது. இந்த சமஸ்தான இணைப்புகளில் பெரும் சிரமும் கொடுத்தது ஹைதராபாத் நிஜாம் சமசதானமும் காஷ்மீர் ராஜாவும். சுதந்திரம் கிடைத்து சில மாதங்களக்கு பிறகே நிஜாம் சமஸ்தானம் நம் நாட்டுடன் இணைந்தது. சுதந்தரத்திற்கு பிறகும் நம் நாடுடன் இணைவதுற்கு முன்புமும் இருந்த ஒரு கலவர சூழலை இந்த நாவல் படம் பிடித்து காட்டுகிறது.

நிஜாம் சமஸ்தானத்தில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தை சுற்றி இந்த நாவல் பின்னப்பட்டிருக்கிறது. அவர்கள் வாயிலாக அன்றைய கலவர சூழலை காட்சிபடுதுகிறார் அசோகமித்திரன். அந்த தமிழ் குடும்பத்தின் இளைஞனான சந்திரசேகரனின் பார்வையில் இந்த நாவல் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது. சந்திரசேகரனின் கல்லூரியில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அவன் வெளியிடங்களில் சந்திக்கும் சம்பவங்கள் வாயிலாக அந்த சமயத்தின் சூழ்நிலையை விவரிக்கிறார் ஆசிரியர். அந்த சமயத்தில் நிஜாம் ராஜா இந்திய அரசுக்கு எதிராக செயல் பட முயற்சிப்பதும் பாகிஸ்தானும் ஜின்னாவும் உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் பிறகு இந்திய படையிடம் தோற்பதும் குறிபிடபட்டிருகிறது.
நாவல் ஆரம்பிக்கும் போது நிஜாம் ராஜாங்கத்தை சேர்ந்த ராஜக்கர்கள் ஹீரோவாக திரிவதும் பிறகு கொஞ்சம் கொஞ்சமா அவர்கள் கெத்து கொறைவதும் பிறகு அடங்கி போவதும் விவரிக்கப்பட்டிருக்கிறது. நாவலின் முடிவில் ராஜாகர்கள் மீது ஏனோ ஒரு பரிதாபம் ஏற்படுகிறது. மகாத்மா காந்தி இறந்து போகும் சமயத்தில் அதை உறுதி செய்து கொள்ள போது படும் பாடும் அது உறுதி என தெரிந்ததும் போது படும் வேதனையும் படிக்கும் போது நாமே அந்த வேதனையை உணரமுடிகிறது.

நாவலின் சந்திரசேகரனின் வாலிப ஆசையையும் அங்கங்கே பதிவுசெய்து இருக்கிறார் ஆசிரியர். ஆனால் என்னை பெரிதும் பாதித்தது அந்த முடிவு. சற்றும் எதிர்பாராத அந்த முடிவு என்னை வெகுவாக பாதித்தது அதுவே இந்த நாவல் என் நினைவில் இருந்து நீங்காமல் இருக்க காரணமாக இருக்கிறது.
இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு மத நல்லிணக்க விருதும் கன்னட மொழிபெயர்ப்புக்கு சாகித்திய அகடமி விருதும் பெற்றது.

தமிழ்நாட்டில் சந்தித்திராத இந்த சூழலை தமிழில் எத்தனை பேர் நூலாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, அந்த வகையில் இந்த நாவல் ஒரு வரலாற்று சான்றாக விளங்குகிறது. இந்த நாவலை படித்த முடித்த போது ஒரு சிறந்த நூலை படித்த உணர்வு ஏற்ப்பட்டது.