
அதற்குள் வந்துவிட்டது அடுத்த சுதந்திரம் தினம். சுதந்திர தினம் ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான உணர்வை ஏற்படுத்தும். பெரும்பான்மையானவர்களுக்கு சுதந்திர தினம் என்பது ஒரு விடுமுறை நாள் (இந்த முறை அதுவும் போச்சு). கொஞ்சம் பெரிய பதவியில் இருப்பவர்கள் தான் பாவம் அலுவலகம் சென்று கொடி ஏற்ற வேண்டும். தொலைக்காட்சிகளுக்கு இந்திய தொலைகாட்சி வரலாற்றில் (வரலாறை எதுயெதுககுதான் உபயோகப்படுதுரதுன்னு இல்லையா?) முதன் முறையாக சில நல்ல(?) படங்கள் ஒளிபரப்புவார்கள், மற்றும் நம் சுதந்திரதிரத்தை நினைவுபடுத்தும் (அட dressல தான்) நமீதா, நயன்தாரா போன்றவர்கள் வாழ்த்து சொல்லுவார்கள் எப்படியோ அவர்கள் கல்லா நிரம்பிவிடும். மென்பொருள் துறையில் வேலை செய்பவர்களுக்கு அத்துறையில் சேர்ந்ததும் சுதந்திரம் பறிபோயிருக்கும் அவர்களுக்கு சுதந்திரம் தினம் எல்லாம் இருக்காது, பலருக்கு Critical issues, UAT Stopped என்று பல மின் அஞ்சல்கள் வரும் அவர்களில் பலருக்கு சுதந்திர தினம் அலுவலகத்தில் தான். இதுல பாருங்க ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தினத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அமெரிக்கர்கள் வேலைக்கு வர மாட்டார்கள் அதனால நமக்கு ஜாலி. எதாவது கிராமங்களில் அல்லது நகரங்களில் இன்னும் இருக்கும் சுதந்திர போராளிகள் கொடி ஏற்றி மகிழ்ச்சி அடைவார்கள். மற்றும் சிலருக்கு இது மற்றொரு நாளே (Just another day).
சுதந்திரத்தை பற்றி அதாவது எப்படி பெற்றோம் என்பதை சுதந்திரம் பெற்று 63 வருடம் கழித்தும் பேசிகொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இந்த நாளின் சிறப்பை கொஞ்சம் சொல்லலாம், எப்படி சுதந்திரம் பெற்றோம், யார் யார் என்னயென்ன தியாகங்கள் செய்தார்கள் என்பதை கொஞ்சம் சுருக்கமாக சொல்லலாம் (கொஞ்ச நேரத்துக்கு மேல் கேட்க மாட்டார்கள்). நம் பழம் பெருமைகளை இப்போதும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. ஒரு நல்ல சமுதாயத்தை கட்டமைப்பது நம் அவசர தேவை. இந்த வேலையெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டியது ஆனால் நம் ஊரில் அதெல்லாம் சாத்தியம் இல்லை, நம்மால் முடிந்த வரை இந்த சமுதாயத்துக்கு எதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்?
புத்தாண்டின் போது நம்மில் சிலர் உறுதி மொழி எடுப்போம், அதுபோல் இந்த சுதந்திர தினத்தில் இருந்து நம் நாடு, சமுதாயம் சம்பந்தப்பட்ட ஒரு நல்ல விஷயத்தை கடைபிடிப்பதாக உறுதி எடுப்போம். உதாரனமாக குப்பையை இனிமேல் குப்பைதொட்டியில் மட்டுமே போடுவது, ஒரு வழி பாதையில் எதிர் திசையில் போகாமல் இருப்பது, சாலையில் மஞ்சள் கோட்டை தாண்டாமல் இருப்பது, அவசர ஊர்தி வந்தால் அதற்க்கு போட்டியாக வண்டி ஓட்டமல் ஒதுங்கி வழி விடுவது, வசதியில்லாத ஒரு மாணவனை படிக்க வைப்பது, உங்கள் ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது எதாவது சொல்லித் தருவது, எதாவது ஒரு அரசாங்க சான்றிதழை நேர்மையான வழியில் பெறுவது, மக்களுக்கான எதாவது ஒரு போராட்டத்தில் கலந்து கொள்வது அல்லது ஒரு பிரச்சனைக்கு மனு கொடுப்பது, வாங்கும் பொருட்களுக்கு ரசீது வாங்குவது, லஞ்சம் கொடுக்காமல் இருப்பது (இதை கடைபிடிப்பவர்களுக்கு ஒரு விருது கட்டாயம் தரலாம்), இப்படி எதாவது ஒன்றோ ரெண்டோ கடைபிடிக்கலாம், மற்றவர்களையும் கடை பிடிக்க சொல்லலாம். இதெல்லாம் முடியாது என்று ஒதுக்க வேண்டாம், கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போம். தனியாக செய்வதற்கு ஆர்வம் குறையலாம், உங்கள் நண்பர்களை சேர்த்துக்கொள்ளுங்கள் ஆர்வத்தை கூட்டும், நம்மை யாரோ கவனிக்கரார்கள் என்ற உணர்வு இருக்கும். சில மாதங்களுக்கு பின் நம்மை நாம் பரிசோதித்துக்கொள்ளலாம் (Crosscheck). கொஞ்ச காலத்தில் நமக்கு அது பழக்கமாகிவிடும், பிறகு வேறொன்றை சேர்த்துக்கொண்டு அதையும் கடைபிடிக்கலாம். முக்கியமாக நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இதை பழக்கப்படுத்துவோம். வருடா வருடம் இதை தொடர்வோம். முயற்சி செய்வோம் ஊர் கூடி தேர் இழுப்போம்.
இந்த சுத்திர தினத்தில் நம் தேசியக்கொடியை பற்றிய சில தகவல்.
* நம் தேசியக்கொடியின் அளவு 2:3 என்ற விகிதாசாரத்தில் இருக்க வேண்டும்.
* சூர்யோதயத்துக்கு பின் தான் கொடியேற்ற பட வேண்டும், அஸ்தமனத்துக்கு முன் தான் இறக்கப்பட வேண்டும் (சில அனுமதிக்கப்பட்ட இடங்களில் இரவும் பறக்கின்றன).
* கொடியை ஏற்றும் போது வேகமாக ஏற்ற வேண்டும், இறக்கும் போது மெதுவாக இறக்க வேண்டும்.
* கொடியை தலைகீழாக ஏற்றவோ கையாளவோ கூடாது.
* கட்டடங்களில் பறக்கும் போது நம் தேசியக்கொடிதான் உயரமாக இருக்க வேண்டும்.
* கொடி எக்காரணம் கொண்டும் நிலத்தையோ, தண்ணீரையோ தொடக்கூடாது.
* நம் தேசிய கொடியை அவமதிபவர்களை தண்டிக்க சட்டத்தில் தனிபிரிவு (Indian flag code) இருக்கிறது.
* நம் தேசிய கீதம் 52 வினாடியில் பாடப்பட வேண்டும்.
இன்றைக்கு வந்த ஒரு மின் அஞ்சலில் சுதந்திரம் வாங்கிய அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்தன அவைகளில் சில கீழே.



அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.