Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Monday, 17 January 2011

34வது சென்னை புத்தகக்காட்சி

இந்த வருட புத்தக காட்சிக்கு நேற்றுத்தான் செல்ல முடிந்தது. நான் புத்தகம் படிப்பதற்கே திட்டும் என் மனைவியையும் அழைத்துச் சென்றிருந்தேன். புத்தகங்களைப் பார்த்து இவ்வளோ புத்தகங்களா! என்று  ஆச்சர்யப்பட்டாள். புத்தகங்களைப் பார்பதற்கே மகிழ்வாக இருக்கிறது. சில பதிப்பகங்களை தவிர  பெரும்பாலான கடைகளில் கூட்டமாகவே இருந்தது.


இந்த முறை எப்படியும் எழுத்தாளர்களையும் பதிவர்களையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்றிருந்தேன், கிடைத்தது. அன்னம் பதிப்பகத்தில் திரு  மற்றும் திருமதி கி.ரா  அமர்ந்திருந்தார்கள் , இதுவரை அவருடைய புத்தகங்கள் படித்ததில்லை என்றாலும் அவரிடம் கையெழுத்திற்காக அவரின்   புத்தகம் ஒன்று வாங்கி கையெழுத்து வாங்கி வந்தேன், கனிவாக பேசினார் கி ரா, அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.  முதல் சுற்றில் உயிர்மையில் பிரபலங்கள் யாரும் இல்லை. கிளம்புவதற்கு முன் உயிர்மையில் எஸ்.ரா  இருப்பார் (உயிர்மையில் மாலை 4:30 மணிக்கு மேல் இருப்பேன் என்று அவருடைய வலைத்தளத்தில் கூறியிருந்தார்) என்று சென்றேன், எஸ். ரா இல்லை ஆனால் மனுஷ்யபுத்திரனும், சாருவும் இருந்தார்கள், அவர்களிடம் பேசவில்லை திரும்பி  வரும்போது பதிவர் எழுத்தாளர் நர்சிம் (ரொம்ப ஸ்மார்டாக) நின்றிருந்தார், அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சில வார்த்தைகள் பேசிவிட்டு வந்தேன்.

கி.ராவுடன்
மாலை 6:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்படிருந்த உரை அரங்கத்தில்  பாரதி பாஸ்கர், வைத்தியநாதன் ஆகியோர் பேசுவதாக அறிவித்திருந்தனர். நம் பண்பாட்டின் படி 45 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்தது உரை அரங்கம். நூலகர் முத்துசாமி அவர்கள் நூலகர்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார். அடுத்து பாரதி பாஸ்கர் "இத்தரை மீதினிலே தமிழ் எத்துனை உயர்ந்ததம்மா" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.

இந்த முறை அதிக புத்தகங்கள் வாங்க எண்ணம் இல்லை. ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்க மட்டுமே எண்ணியிருந்தேன்.அதற்கு காரணம் போன மாதம் இதற்கு முன் வேலை செய்த அலுவலகத்தின் கடைசி நாளன்று நினைவுப் பரிசாக ஆறு புத்தகங்கள் கொடுத்திருந்தனர், மேலும் அதற்கு முன் வாங்கிய சில புத்தகங்கள் இன்னும் உறை பிரிக்கப்படாமல் இருகின்றன. அப்புத்தகங்களை கிழித்து (உறையை)    படித்து விட்டு மேலும் புத்தகங்கள் வாங்கலாம் என்றிருக்கிறேன்.

தினத் தந்தியின் "வரலாற்றுச் சுவடுகள்" 864 பக்கங்கள் ஆர்ட் காகிதத்தில் வண்ண எழுத்து, படங்களுடன்  270 ரூபாய்க்கு விற்றனர், டீ கடையில் பஜ்ஜி விற்பதுபோல்  சுடச் சுட விற்றுக் கொண்டிருந்தது. இப்புத்தகம் வெளிவந்து நான்கு மாதத்தில் இரண்டாவது பதிப்பு கண்டிருக்கிறது, amazing.  சந்தேகமில்லாமல் இந்த வருடம் அதிக விற்பனையான புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். இப்புத்தகத்தை பற்றி எனக்கு ஒரே குறை இவ்வளோ பெரிய புத்தகத்தை பயணத்தின் போது எடுத்து சென்று படிக்க முடியாது, கீதை மாதிரி வீட்டிலேயே படிக்க வேண்டும். மூன்று நான்கு வால்யுமுகளாக போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், மற்ற படி அருமையான புத்தகம்.

நான் வாங்கிய புத்தகங்கள்:
என் இனிய இயந்திரா - சுஜாதா (வாத்தியார் புத்தகம் இல்லாமலா?)
கிராமியக் கதைகள் - கி. ரா
வரலாற்றுச் சுவடுகள் - தினத் தந்தி
காந்திய நெறியில் நம் வாழ்க்கை (VCD) - நெல்லை கண்ணன் உரை .
வெரைட்டி ரைஸ் வகைகள் - கீதா பாலகிருஷ்ணன் (ஹி... ஹி... இது வீட்டம்மாவுக்கு)

Monday, 22 November 2010

சுஜாதாவின் கடவுள்களின் பள்ளத்தாக்கு - ஒரு பார்வை

கடவுள்களின் பள்ளத்தாக்கு என்ற தலைப்பை பார்த்தவுடன் கடவுள் என்ற சித்தாந்தம் குறித்த கட்டுரைகளோ என்று நினைத்தேன். உள்ளடக்கத்தை பார்த்தவுடன் தான் தெரிந்தது இது சுஜாதா பல தருணங்களில், பல இதழ்களில் எழுதிய (ஒன்றோ ரெண்டோ மேடைகளில் பேசியது) கட்டுரைகளின் தொகுப்பே தவிர கடவுள் பற்றி ஒரு கட்டுரையும் இல்லை. இக்கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்தவர் சுஜாதாவின் நண்பரான தேசிகன். கட்டுரைகளை பயணம், இலக்கியம், சினிமா, அரசியல் மற்றும் பொது என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இத்தொகுப்பில் என்னை கவர்ந்த சில கட்டுரைகள் பற்றி கீழே.

கடவுள்களின் பள்ளத்தாக்கு கட்டுரை திபெத் எல்லையில் உள்ள பத்ரி நாராயணன் கோவிலுக்கு அவர் மேற்கொண்ட பயணம் பற்றியது.  இக்கோவில் 8ஆம் நூற்றாண்டில் பௌத்த ஆதிக்கத்தில் இருந்தது, பிறகு ஆதிசங்கரரால் வைணவத் தலமாக மாற்றப்பட்டது, திருமங்கையாழ்வார் இங்கு (தேவப்ரயாகை, ஜோஷிமட், பத்ரி) வந்து பாடியது, கேரள நம்பூதிரிகள் தான் இங்கு அர்ச்சகர்களாக இருப்பது  என  கோவில் பற்றி பல தகவல்களை கொடுத்திருக்கிறார்.

நகைச்சுவை பற்றி ஒரு சீரியஸான கட்டுரையில் நகைச்சுவையை இப்படி விவரிக்கிறார் "ஒரு கருத்தை மற்றொரு கருத்தோடு முரண்பட வைத்து அதன் மூலம் எதிரபாராத ஒரு சந்தோஷத்தை, பரவசத்தை கொடுப்பது, முடிந்தால் நம் சிந்தனைத் திறனையும் உயர்த்துவது." நகைச்சுவைகளின் வகைகளை பற்றி இக்கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.

தமிழ்த் திரைப்படங்கள் ஆஸ்கார் வாங்க முடியாத  காரணங்களையும், ஆஸ்கார் வாங்க செய்யவேண்டியவைகளை பற்றியும் தமிழ் படம் ஆஸ்கார் வாங்க முடியுமா? என்ற கட்டுரையில் விவாதிக்கிறார். கட்டுரையின் முடிவில் ஆஸ்கார் வாங்க பத்து கட்டளைகளை பட்டியலிட்டிருக்கிறார்.அவற்றலிருந்து சில கீழே

1. கமர்சியல் தேவைகளிலிருந்து விடுபட வேண்டும். "இத்தனை செலவாகும் கமர்சியலாக ஓடுமா ஓடாதா?" என்ற சங்கதியெல்லாம் வேண்டாம். இப்படி ஒரு தயாரிப்பாளர் வேண்டும்.

2. இயக்குனர்கள் கதை பண்ணாமல், தமிழ் இலக்கியத்தின் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து படம் பண்ண வேண்டும்.

3. கதைக்கேற்ப, பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க Casting Director வேண்டும்.

4. டை கட்டிய இளைஞர்களிடம் கொடுத்து, டில்லியிலும் ஹாலிவுட்டிலும் கூவி விற்கவேண்டும்.


வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு என்ற தலைப்பில், வெளிநாட்டு மோகத்தை மூன்று வகையாக பிரிக்கிறார், வெளிநாட்டு பொருட்களின்மேல் மோகம், வெளிநாட்டுப் பழக்க வழக்கங்களின்மேல் மோகம் மற்றும் வெளிநாடு சென்றே ஆக வேண்டும் என்கிற மோகம். இவற்றை பற்றி விரிவாக விவாதிக்கிறார்.  வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை இது.

இவை தவிர ஹே ராம், பாய்ஸ் திரைப்படங்கள் பற்றி, குவைத் மற்றும் மலேசிய நாடுகள் பற்றி, காவிரி பிரச்சனை, முஷ்ரப் இந்திய வருகை, பில்கேட்ஸ் பற்றி எழுதிய கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. சுஜாதாவின் எழுத்தில் எதைப் படித்தாலும் சுவாரஸ்யமாகவே இருக்கும், அது போலவே இந்த கட்டுரைகளும், பயணத்தின் போது படிப்பதற்கு ஏதுவான புத்தகம்.

Thursday, 11 March 2010

என் பெயர் ராமசேஷன் - ஒரு பார்வை


சமீபத்தில் நான் படித்த நாவல் 1980ல் ஆதவன் எழுதிய "என் பெயர் ராமசேஷன்". ஒரு பதின் வயது மத்தியதர பிராமண இளைஞனின் பார்வையில், அவனுடைய கல்லூரி நாட்களை பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர் ஆதவன். அவன் பெயர் ராமசேஷன்.

ராமசேஷனின் டைரியை படிப்பது போல் இருந்தது நாவல். நடுத்தர குடும்பத்தில் இருக்கும் ராமசேஷன், பொறியியல் படிப்புக்கு கல்லூரியில் சேர்க்கபடுகிறான். விடுதியில் தங்கி படிக்கிறான்(?). கல்லூரியில் அவன் சந்திக்கும் மேல் தட்டு மக்களை போல் இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அவன் செய்யும் பாசாங்குகளும், அவர்களை விட பெரியவன் என்று காட்டிக்கொள்ள அவன் போட்டுக்கொள்ளும் வேஷங்களும்,
தான் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிம்பம் கொடுப்பதும், இவர்கள் இப்படிதான் என்று முடிவு செய்துகொள்வதும் , இவர்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ள அல்லது தான் ஒரு அதிபுத்திசாலி (Intellectual?) என காட்டிக்கொள்ள முயற்சிப்பதும், அதற்காக தனக்கும் ஒரு பிம்பம் மாட்டிக்கொள்வதும், அந்த பிம்பத்துக்குள் கடைசிவரை அவனால் இருக்க முடிந்ததா என்பதுமே "என் பெயர் ராமசேஷன்".

ஆரம்பத்தில் ராமசேஷன் தன்னை சுற்றியுள்ள பலரையும் வெறுக்கிறான். குறிப்பாக தன அப்பாவை. அவரை எதற்கும் உதவாதவர் என்றும் , தான் அவரிலிருந்து வேறுப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். கல்லூரியில் சேர்ந்ததும் அவன், ராவ், மூர்த்தி என்று மூவரும் ஒரு நட்பு வட்டம் ஏற்படுத்திக்கொள்கின்றனர், ராவ் பணக்காரன், மூர்த்தி ராவுடன் பழகினால் கிடைக்கும் சில நன்மைகளுக்காக ராவின் இடது கை போல் இருக்கிறான். ராமசேஷன் அப்படியில்லாமல் தன்னை ஒரு இயல்பான நண்பனாக காட்டிக்கொள்கிறான். இந்த மூவருக்குள் நடக்கும் ஈகோ யுத்தம் ஒரு பக்கம். ராவின் தங்கை மாலா மேல் ராமசேஷனுக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட, இருவரும் கொஞ்ச நாள் சுற்றி திரிகிறார்கள். இருவருக்கும் ஏற்படும் ஈகோ பிரச்சனையில் பிரிகிறார்கள். அழகான மாலாவுடன் அடிபட்டதற்கு மருந்தாக சுமாராக இருக்கும் பிரேமாவுடன் பழகுவது ஒரு பக்கம். இதற்கு நடுவில் கணக்கு ப்ரொபசர், ராமபத்ரன், ராமசேஷனின் பெரியப்பா, முக்கியமாக பங்கஜம் மாமி ஆகியோருடன் நடக்கும் சம்பவங்கள் என போகிறது நாவல். கல்லூரி வாழ்க்கை முடிந்த பின், ராமசேஷனால் அவன் நினைத்த மாதிரி தன் வாழ்வை அமைத்துக்கொள்ள முடிந்ததா இல்லையா என்று கூறி முடிகிறது நாவல்.


80ல் எழுதப்பட்ட இந்நாவல், இப்போது படிப்பதற்கும் சுவையாக இருக்கிறது, அதற்கு முக்கிய காரணம், ராமசேஷனின் பாத்திர படைப்பு, நிலையான மனமில்லாத, ஆசைகள் நிறைந்த ஒருவனை ராமசேஷன் மூலம் நம் கண் முன் நிறுத்துகிறார் ஆதவன். இந்த நாவலை படித்து முடிக்கும் போது நம்மில் பலரும் ராமசேஷனை போல தான் இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றியது. ஆதவனின் நடையும் அருமையாக இருந்தது. நீள நீளமான வாக்கியங்கள், இரண்டாவது பத்தியின் கடைசி வாக்கியத்தை கவனத்தீர்களா, எவ்வளோ பெரிய வாக்கியம்! அது போல அல்லது அதை விட பெரிய வாக்கியங்கள் நிறைந்தது இந்த நாவல். கதை மாந்தார்கள் இடையே நடைபெறும் உரையாடல் சுவாரஸியமாக இருந்தது. பல ஆங்கில வார்த்தை/வாக்கியங்களை சரளமாக பயன்படுத்தியிருக்கிறார். இப்போது படிப்பதற்கும் excitingஆக இருக்கிறான் ராமசேஷன் . படித்து பாருங்கள் உங்களுக்கும் ராமசேஷனை பிடிக்கும்.

நூல் விவரம்:
பெயர்: என் பெயர் ராமசேஷன்
ஆசிரியர்: ஆதவன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: 120 ரூபாய்.

Tuesday, 2 February 2010

ராஜிவ் கொலை வழக்கு - ஒரு பார்வை


புத்தக கண்காட்சியில் வாங்கியதில் முதலில் படித்த புத்தகம் கே. ராகோத்தமன் எழுதிய "ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்." புத்தக கண்காட்சியில் பரபரப்பாக விற்ற புத்தகம், கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

இப்பூமியில் நடந்த அரசியல் படுகொலைகளில் மிக முக்கியமானது ராஜிவ் கொலை, அக்கொலை விசாரணை குழுவில் தலைமை புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கே. ராகோத்தமன் அவர்கள் அவ்விசாரணை மற்றும் துப்பறிந்த முறை பற்றி எழுதியதே இந்நூல். இதற்கு முன் இவ்வழக்கின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி திரு. கார்த்திகேயன் அவர்கள் இவ்வழக்கை பற்றி "புலன் விசாரணை" என்ற நூல் எழுதியிருக்கிறார். இரண்டு நூலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான், ராகோத்தமன் எழுப்பும் பல ஏன்? என்ற கேள்விகள் தவிர.

ராஜிவ் கொலையில் ஆரம்பிக்கிறது நூல், ஒரு துப்பு கூட கிடைக்காமல், "முடிந்தால் கண்டுபிடிக்கட்டும்" என்ற சவாலுடன் விசாரணையை ஆரம்பிக்கும் புலனாய்வுத் துறை ஒரு கேமராவையும், சில புகை படங்களையும் வைத்துக்கொண்டு எப்படி கொலையாளிகளை பிடிக்கிறார்கள் என்பதை ராக்கெட் வேகத்தில் ஒரு க்ரைம் நாவல் போல சொல்கிறார் ஆசிரியர். நம் புலனாய்வு துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆங்காங்கே விளக்குகிறார். புலனாய்வு துறை ஆரம்பம் முதல் கடைசி வரை பெரும்பாலும் நேர்மையாகவே நடந்திருகிறது, கடைசி கட்டத்தை தவிர, சிவராசனை உயிருடன் பிடித்திருந்தால் இவ்வழக்கு முழுமை அடைந்திருக்கும், இது 99% சதவித வெற்றி தான் என்கிறார்.

நடந்தவற்றை நேரில் பார்த்தது போல் விவரிக்கிறார் ஆசிரியர். தேர்ந்த எழுத்தாளரை போல நூலை எழுதியிருக்கிறார். புலிகள் இக்கொலை திட்டமிடுவதிலிருந்து, அதன் பின்னணி, எப்படி எப்படியெல்லாம் காய் நகர்த்தியிருக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர். கொலை திட்டம், அத்திட்டம் பொய்த்தால் அதற்கு backup plan, காரியம் முடிந்ததும் தப்பிக்க வழிகள் என தெளிவாக திட்டமிட்டிருகிறார்கள் புலிகள், அவர்களின் தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் நெட்வொர்க் பற்றி தெரிந்துகொள்ளும் போது நமக்கு சில அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும் இருகின்றன. புலிகளுக்கு தமிழகம் முழுவதிலிருக்கும் தொடர்பை பற்றி தெரிந்து கொள்ளும் போது கொஞ்சம் பயமாகவே இருக்கிறது, எவ்ளோ பெரிய நெட்வொர்க்!

ராஜிவ் கொலை திட்டப்படி நடந்ததற்கு புலிகளின் திட்டமிடல் மற்றும் கொண்ட காரியத்தின் அவர்களுக்கு இருந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றை மீறிய முக்கிய காரணம் நம் அமைப்பின் தேசிய குணமான மெத்தனமும், அலட்சியமுமே. விசாரணையில் காட்டிய தீவரத்தையும், நேர்மையையும், ராஜிவின் பாதுகாப்பில் காட்டியிருந்தால், குறைந்தபட்சம் ஒரு மெட்டல் டிடெக்டர் உபயோகப்படுத்தபட்டிருந்தால் ஒரு நாட்டின் முக்கிய மனிதரின் கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஆங்காங்கே சில கேள்விகளை எழுப்பிக்கொண்டே போகிறார், விசாரணையின் போது விசாரிக்ப்படாத சில பிரமுகர்கள், மறைக்கப்பட்ட சில தகவல்கள், என பல கேள்விகள் எழுப்புகிறார், யார் பதில் சொல்ல போகிறார்கள்? யாரும் இல்லை! நூலின் மேல் "மர்மம் விலகும் நேரம்" என்று குறிப்பிட்டிருகிறார்கள், இந்நூல் சில கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் மேலும் சில கேள்விகளை எழுப்புகிறதே தவிர பெரிதாக எந்த மர்மத்தையும் விலக்கவில்லை, மாறாக நம் அமைப்பின் மெத்தனத்தையும், அலட்சியத்தையும் வெளிச்சமிட்டு காட்டுகிறது, அதை தெரிந்து கொள்ளவாவது இந்நூலை கட்டாயம் படிக்க வேண்டும்.

Thursday, 22 October 2009

இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டை தெரு - ஒரு பார்வை


நெம்பர் 40 ரெட்டை தெரு சமீபத்தில் படித்த புத்தகம். இரா.முருகனின் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட நூல். சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள் (கதைகள்)" படித்து இருக்கிறீர்களா? அதைப்போல இது முருகனின் ரெட்டை தெரு தேவதைகள். அவர் வாழ்ந்த அந்த ரெட்டை தெருவில் தன்னுடைய இளம் (பள்ளி செல்லும்) வயது வரை பார்த்த மனிதர்களின், நடந்த சம்பவங்களின் அழகான தொகுப்பு தான் இந்த நூல். கிரேசி மோகனின் முன்னுரையே சிறப்பாக இருந்தது, அதில் முருகனை சுஜாதாவுடன் ஒப்பிடுகிறார். கிரேசி எழுதியது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றியது. இதற்கு முன் முருகனின் "மூன்று விரல்" நாவல் படித்திருக்கிறேன், அது மென்பொருள் துறையில் வேலை செய்யும் ஒருவனை பற்றியது, நன்றாக இருந்தது, அந்த நாவல் படிக்கும் போது சில நேரங்களில் எழுதியது முருகனா? சுஜாதாவா? என்று சிறு குழப்பம் ஏற்படும் அந்த அளவிற்கு சுஜாதா நடையை போல் இவர் நடையும் அற்புதம்.

இந்தப்புத்தகம் ஒரு நாவல் அல்ல, சிறுகதைகளும் அல்ல, முருகனின் பால்ய கால சம்பவங்களின் தொகுப்பு. சுஜாதாவின் ""ஸ்ரீரங்கத்துக்கும்" முருகனின் ரெட்டை தெருவுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் சுஜாதா அவர் நினைவுகளை (கொஞ்சம் கற்பனை கலந்து என்று நினைக்கிறேன்) "சற்றே பெரிய சிறுகதைகள்" ஆக்கியிருந்தார். முருகன் தொகுப்புகளாக, சம்பவங்களாக எழுதியிருக்கிறார். சில பகுதிகளுக்குள் தொடர்ச்சி இருக்கும் சிலதில் இருக்காது. இது ஒரு தீவிர வாசிப்பை எதிர்பார்க்காத நூல். ஆனால் படிக்க இனிமையான நூல். முருகனின் மூளையில் மடிப்புகள் அதிகமாக இருக்க வேண்டும். இல்லையேல் அவர் பதின் வயதிலும் அதற்கு முன்னரும் நடந்த சம்பவங்களை இவ்வளவு தெளிவாக ஞாபகம் வைத்து எழுதியிருக்க முடியாது.

ஒவ்வொரு அத்யாயமும் ஒரு மனிதரையோ அல்லது சம்பவத்தையோ குறித்து சொல்கிறது. யாரோ அருகில் அமர்ந்து கதை சொல்வது போல் இருக்கிறது நடை. இந்நூலை படித்த போது 1960லில் நம்ம ஊர் எப்படி இருந்திருக்கும் என்று எட்டி பார்த்து வந்ததுபோல் இருக்கிறது. பல சம்பவங்கள் நமக்குள் பல நினைவுகளை கிளறி விடுகிறது. இதில் வரும் சில மனிதர்கள் போல் நம் ஊரிலும் சிலர் இருப்பார்கள்/இருந்திருப்பார்கள். அவர் வீட்டு மனிதர்கள் ஒரு துணை கதப்பாதிரமாகவே வந்து போகின்றனர், சில அத்யாயங்கள் தவிர. அவர் ஊரில் வாழ்ந்த வக்கீல்கள், பால்காரர், கடைக்காரர், போஸ்ட் மேன், மேஸ்திரி, மளிகை கடைக்காரர், போலீஸ் ஏட்டு, பள்ளி ஆசிரியர்கள், ஊர் தெருவோரத்தில் வாழ்ந்த பாட்டிகள், உணவகம், சவுண்ட் சர்வீஸ், டைப்பிங் பயிற்சி பள்ளி என்று பலரையும்/பலவற்றையும் பற்றி சம்பவங்கள் நிறைந்திருகின்றன. அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த சில வழக்கங்கள், சட்டங்கள், அரசியல் பற்றியும் சில குறிப்புகள் இருகின்றன. நூல் முழுவதும் நகைச்சுவை நிரம்பியிருக்கிறது. சில அத்யாயங்கள் படித்து முடித்ததும் ஒரு புன்சிரிப்பும், சில அத்யாயங்கள் முடிக்கும் போது சிறு பாரமும் அழுத்துகிறது. அனேகமாக அந்த வீதியில் வாழ்ந்த அனைவரையும் பற்றி குறைந்தபட்சம் ஒரு வரியாவது எழுதியிருப்பார், அவர்கள் இதை படித்தால் வரும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது, குறிப்பாக அவருடைய சிறு வயது நண்பர்கள் படிக்கும் போது ஒரு குறுகுறுப்பும், படித்த பின் ஒரு அகமகிழ்ச்சியும் ஏற்படும்.

பயணம் செய்யும் போது படிப்பது பிடித்தமான ஒரு விசையம், இந்த புத்தகம் அப்படி படிக்கப்பட்டது. பெரும்பான்மையான பகுதிகளை காலையில் பேருந்தில் அலுவலகம் செல்லும் போது திரும்பி வரும் போதும் படித்து முடித்தேன். சியாட்டலில் ரெட்டை தெரு இல்லை என்றாலும் ஏதோ ரெட்டை தெரு வழியாக அலுவலகம் சென்று வந்தது போல் ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. எத்தனையோ கதைகள் எத்தனையோ தெருக்களில் இன்னும் எழுதப்படாமல் இருகின்றன, முருகன் எழுத்தில் ரெட்டை தெருவும் அதில் வாழ்ந்த மனிதர்களும் சாகா வரம் பெற்று இப்புத்தக வடிவில் உலவிக்கொண்டிருப்பார்கள்.

Tuesday, 16 June 2009

அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு - ஒரு பார்வை

சமீபத்தில் நான் படித்த நாவல் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு. 1976ல் எழுதப்பட்ட இந்த நாவல் 1977 ஆம் ஆண்டுக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றிருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு பல சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த நம் நாடு சர்தார் வல்லபாய் பட்டேல் போற்றவர்களின் முயற்சியில் ஒன்றிணைத்து தற்போதைய இந்தியாவாக ஆனது. இந்த சமஸ்தான இணைப்புகளில் பெரும் சிரமும் கொடுத்தது ஹைதராபாத் நிஜாம் சமசதானமும் காஷ்மீர் ராஜாவும். சுதந்திரம் கிடைத்து சில மாதங்களக்கு பிறகே நிஜாம் சமஸ்தானம் நம் நாட்டுடன் இணைந்தது. சுதந்தரத்திற்கு பிறகும் நம் நாடுடன் இணைவதுற்கு முன்புமும் இருந்த ஒரு கலவர சூழலை இந்த நாவல் படம் பிடித்து காட்டுகிறது.

நிஜாம் சமஸ்தானத்தில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தை சுற்றி இந்த நாவல் பின்னப்பட்டிருக்கிறது. அவர்கள் வாயிலாக அன்றைய கலவர சூழலை காட்சிபடுதுகிறார் அசோகமித்திரன். அந்த தமிழ் குடும்பத்தின் இளைஞனான சந்திரசேகரனின் பார்வையில் இந்த நாவல் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது. சந்திரசேகரனின் கல்லூரியில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அவன் வெளியிடங்களில் சந்திக்கும் சம்பவங்கள் வாயிலாக அந்த சமயத்தின் சூழ்நிலையை விவரிக்கிறார் ஆசிரியர். அந்த சமயத்தில் நிஜாம் ராஜா இந்திய அரசுக்கு எதிராக செயல் பட முயற்சிப்பதும் பாகிஸ்தானும் ஜின்னாவும் உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் பிறகு இந்திய படையிடம் தோற்பதும் குறிபிடபட்டிருகிறது.
நாவல் ஆரம்பிக்கும் போது நிஜாம் ராஜாங்கத்தை சேர்ந்த ராஜக்கர்கள் ஹீரோவாக திரிவதும் பிறகு கொஞ்சம் கொஞ்சமா அவர்கள் கெத்து கொறைவதும் பிறகு அடங்கி போவதும் விவரிக்கப்பட்டிருக்கிறது. நாவலின் முடிவில் ராஜாகர்கள் மீது ஏனோ ஒரு பரிதாபம் ஏற்படுகிறது. மகாத்மா காந்தி இறந்து போகும் சமயத்தில் அதை உறுதி செய்து கொள்ள போது படும் பாடும் அது உறுதி என தெரிந்ததும் போது படும் வேதனையும் படிக்கும் போது நாமே அந்த வேதனையை உணரமுடிகிறது.

நாவலின் சந்திரசேகரனின் வாலிப ஆசையையும் அங்கங்கே பதிவுசெய்து இருக்கிறார் ஆசிரியர். ஆனால் என்னை பெரிதும் பாதித்தது அந்த முடிவு. சற்றும் எதிர்பாராத அந்த முடிவு என்னை வெகுவாக பாதித்தது அதுவே இந்த நாவல் என் நினைவில் இருந்து நீங்காமல் இருக்க காரணமாக இருக்கிறது.
இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு மத நல்லிணக்க விருதும் கன்னட மொழிபெயர்ப்புக்கு சாகித்திய அகடமி விருதும் பெற்றது.

தமிழ்நாட்டில் சந்தித்திராத இந்த சூழலை தமிழில் எத்தனை பேர் நூலாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, அந்த வகையில் இந்த நாவல் ஒரு வரலாற்று சான்றாக விளங்குகிறது. இந்த நாவலை படித்த முடித்த போது ஒரு சிறந்த நூலை படித்த உணர்வு ஏற்ப்பட்டது.

Sunday, 18 January 2009

32 வது சென்னை புத்தகக்காட்சி

பொங்கல் அன்று நான் புத்தகக்காட்சிக்கு சென்று இருந்தேன், சென்னையில் நான் செல்லும் இரண்டாவது புத்தகக்காட்சி இது. நல்ல கூட்டம், அனைத்து கடைகளையும் பார்ப்பதற்கு கண்டிப்பாக ஒரு நாள் வேண்டும். நான் பாதி மட்டும் பார்த்துவிட்டு வந்தேன். எத்தனை புத்தககங்கள், எத்தனை கடைகள், பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இங்கு நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா புத்தகங்களும் கிடைக்கும். இந்த முறை 500 மேற்பட்ட கடைகள் வைத்திருப்பதாக கூறினார்கள். பல மொழிகளில் பல தலைப்புகளில் புத்தககங்கள் கிடைக்கின்றன. கல்கி எழுதிய சில காவியங்களை சிறப்பு சலுகையில் கிடைத்தன. மக்கள் புத்தகம் வாங்குவதைப் பார்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது (மனைவியை எதாவது கோலப்புத்தகம் வாங்கலியா என்று கேட்ட கணவன்களும் வந்திருந்தார்கள்).

புத்தககங்கள் தான் மனிதனின் சிறந்த நண்பன் என்று சொல்வார்கள், இன்றைய காலகட்டதில் புத்தககங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதாக தோன்றுகிறது, பல தமிழ் இலக்கியங்களை படிக்காமல் நம் வாழ்வை வீனடிதுக்கொண்டிருகிறோம். நம் வருங்கால சந்ததியினர்க்கு நம் இலக்கிய வளமை தெரியாமல் போய்கொண்டிருக்கிறது. இந்த மாதிரி புத்தகக்காட்சிகள் கண்டிப்பாக ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும், நாம் செய்யவேண்டியது எல்லாம் நம் வீட்டில் இருப்பவர்களை படிக்க தூண்ட வேண்டும் குறிப்பாக சிறுவர்களை. குழந்தைகளை நாம் இந்த மாதிரி புத்தகக்காட்சிகளுக்கு அழைத்து சென்று பழக்க வேண்டும், நம் இலக்கிய செல்வங்களை நாம் அவர்களுக்கு அறிமுகபடுத்த வேண்டும். நல்ல புத்தககங்கள்களை அவர்களுக்கு நாம் அறிமுகபடுதிவிட்டால் அவர்கள் எதிர்காலம் மிக சிறப்பாக அமையும். இப்போதிருந்தே நாம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தா விட்டால், அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பை நாமாக ஏற்படுத்துகிறோம். சுஜாதா, ராமகிருஷ்ணன் போன்றோர் சிறுவர்களுக்கு என்று கதைகளை எழுதி இருக்கிறார்கள், அந்நூலை நாம் அவர்களுக்கு அளித்து படிக்க வைக்க வேண்டும். அவர்கள் பள்ளி படத்தில் உள்ள பாடல்களை முடிந்தவரை படித்து விளக்கி புரிய வைக்க வேண்டும் (இந்த வேலையயை வெகு சொற்ப பள்ளிகளே செய்கின்றன).

வருடம் ஒருமுறை ஆடி தள்ளுப்படிக்கு துணி வாங்குகிறோமோ இல்லையோ ,அட்சயதிதி அன்று தங்கம் வந்கோகிறோமோ இல்லையோ கண்டிப்பாக புத்தகக்காட்சிக்கு சென்றும் புத்தககங்கள் வாங்குவோம் என்றும் உறுதி கொள்வோமாக.

இந்த முறை புத்தகக்காட்சியில் நான் வாங்கிய புத்தககங்கள்:
இந்தியப் பிரிவினை - மருதன்
தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன் (சாகித்திய அகாடமி பதிப்பகம்)
சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி
பூக்குட்டி - சுஜாதா (சிறுவருக்கான நூல்).
இலக்கிய பேராசான் ஜீவாவை பற்றி நெல்லை கண்ணன் சிறப்புரை குறுந்தகடு.

Sunday, 28 December 2008

சித்திரப்பாவை - ஒரு பார்வை

வலைப்பூவில் எழுத வேண்டும் என்கிற என்னுடைய பல நாளது விருப்பம் இன்று நிறைவேறுகிறது. ஒரு வாரம் முன்பு தான் அகிலனின் சித்திரப்பாவை படித்து முடித்தேன். முதன் முதலில் தமிழுக்கு ஞான பீட பெற்று தந்த நூல் இது. இந்த நூல் வாங்கி, நான் படிப்பதற்கு முன் என் நண்பர்கள் இருவர் படித்துவிட்டு மிக சிறப்பான நூல் என்று கூறினர். 1968 இல் எழுதப்பட்ட இந்நாவலை படித்த பின் எனக்கு ஆச்சரியமாக தோன்றியது இன்றைய சூழலுக்கும் இந்நாவல் வரிக்கு வரி பொருந்தி வருகிறது என்பதுதான் . இந்நாவலில் இந்த சமுதாயம் எந்த திசையில் போகக்கூடது என்று அகிலன் கூறுகிறாரோ சரியாக அந்த திசையில் பயணம் செய்து வந்திருக்கிறது(றோம்). இந்நூலில் ஒரு இடத்தில் சரவணன் கதாபாத்திரம் இப்படி சொல்கிறார் "இனி கோவில்கள் கட்டிக் கவர்ச்சி நடிகைகளுக்குச் சிலை வடிக்க தொடங்கினாலும் தொடங்கி விடுவார்கள் எங்கள் இளைஞர்கள் !", அன்று சொன்னதை 1990 களில் நம் இளைஞர்கள் செய்துவிட்டனர்.

இந்நாவலில் அண்ணாமலை கதாபத்திரம் தனக்கு பிடித்தமான நியாமான வாழ்க்கை வாழ எப்படி எல்லாம் இந்த சமுதாயத்தில் போராடவேண்டி இருக்கிறது என்றும் அதற்கு என்னவெல்லாம் இழக்க வேண்டி இருக்கிறது என்றும் விவரிக்கிறது. அண்ணாமலை தன் லட்சியத்தை அடைய கதிரேசன், ஆனந்தி, சரவணன் மற்றும் சாரதா கதா பாத்திரங்கள் எப்படி உதவுகிறார்கள் என்றும்; மாணிக்கம், சுந்தரி மாதிரி ஆட்கள் எப்படி தடை கற்க்களாக இருக்கிறார்கள் என்றும் விவரிக்கிறது. இன்றைய காலத்தில் அண்ணாமலைகளும் , ஆனந்திகளும் குறைந்து மாணிக்கங்களும் சுந்தரிகளும் அதிகமகிவிட்டனர். இக்கதையின் முடிவு மிக நல்ல முடிவாக இருந்தது, இந்த கதை வெளிவந்த காலத்தில் கட்டாயம் இதன் முடிவு பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும்.இந்நூல் மிக அழகான நடையில் எழுதப்பட்டிருக்கிறது, இப்போது படிப்பதற்கும் இனிமையாக இருக்கிறது. ஒரு தெளிந்த நீரோடை போல கதை சொல்கிறார் ஆசிரியர். 1960களில் சென்னை எவ்வளவு அழகாக இருந்திருக்கிறது என்று படிப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.


நமக்கு இந்த நூல் கற்று கொடுப்பது இதுதான்:

"அழகாக வாழக் கற்றுக் கொள்;
முடிந்தால் வாழ்கையை அழகு படுத்து;
முடியாவிட்டால் அதை அசிங்கப் படுத்தாமலாவது இரு;"

- அகிலன்


இந்நூல் என்னைபொறுத்தவரையில் தமிழில் மிக முக்கியமான நூல், இந்த காலகட்டத்தில் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது, எத்தனை பேர் படிக்கிறார்கள்? இந்நூலை மக்களுக்கு எடுத்து செல்ல எனக்கு தோன்றும் இரண்டு வழிகள்:
1. குத்து பாட்டு, தனி காமெடி எல்லாம் இல்லாமல் ஒரு சிறந்த படமாக எடுக்கலாம்.
2. பள்ளி/கல்லூரிகளில் பாடமாக வைத்து மாணவர்களுக்கு இந்நூலை கொண்டு சேர்ப்பது.

என்னுடைய இந்த முதல் பதிவை படித்தமைக்கு நன்றி!