Monday 17 January 2011

34வது சென்னை புத்தகக்காட்சி

இந்த வருட புத்தக காட்சிக்கு நேற்றுத்தான் செல்ல முடிந்தது. நான் புத்தகம் படிப்பதற்கே திட்டும் என் மனைவியையும் அழைத்துச் சென்றிருந்தேன். புத்தகங்களைப் பார்த்து இவ்வளோ புத்தகங்களா! என்று  ஆச்சர்யப்பட்டாள். புத்தகங்களைப் பார்பதற்கே மகிழ்வாக இருக்கிறது. சில பதிப்பகங்களை தவிர  பெரும்பாலான கடைகளில் கூட்டமாகவே இருந்தது.


இந்த முறை எப்படியும் எழுத்தாளர்களையும் பதிவர்களையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்றிருந்தேன், கிடைத்தது. அன்னம் பதிப்பகத்தில் திரு  மற்றும் திருமதி கி.ரா  அமர்ந்திருந்தார்கள் , இதுவரை அவருடைய புத்தகங்கள் படித்ததில்லை என்றாலும் அவரிடம் கையெழுத்திற்காக அவரின்   புத்தகம் ஒன்று வாங்கி கையெழுத்து வாங்கி வந்தேன், கனிவாக பேசினார் கி ரா, அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.  முதல் சுற்றில் உயிர்மையில் பிரபலங்கள் யாரும் இல்லை. கிளம்புவதற்கு முன் உயிர்மையில் எஸ்.ரா  இருப்பார் (உயிர்மையில் மாலை 4:30 மணிக்கு மேல் இருப்பேன் என்று அவருடைய வலைத்தளத்தில் கூறியிருந்தார்) என்று சென்றேன், எஸ். ரா இல்லை ஆனால் மனுஷ்யபுத்திரனும், சாருவும் இருந்தார்கள், அவர்களிடம் பேசவில்லை திரும்பி  வரும்போது பதிவர் எழுத்தாளர் நர்சிம் (ரொம்ப ஸ்மார்டாக) நின்றிருந்தார், அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சில வார்த்தைகள் பேசிவிட்டு வந்தேன்.

கி.ராவுடன்
மாலை 6:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்படிருந்த உரை அரங்கத்தில்  பாரதி பாஸ்கர், வைத்தியநாதன் ஆகியோர் பேசுவதாக அறிவித்திருந்தனர். நம் பண்பாட்டின் படி 45 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்தது உரை அரங்கம். நூலகர் முத்துசாமி அவர்கள் நூலகர்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார். அடுத்து பாரதி பாஸ்கர் "இத்தரை மீதினிலே தமிழ் எத்துனை உயர்ந்ததம்மா" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.

இந்த முறை அதிக புத்தகங்கள் வாங்க எண்ணம் இல்லை. ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்க மட்டுமே எண்ணியிருந்தேன்.அதற்கு காரணம் போன மாதம் இதற்கு முன் வேலை செய்த அலுவலகத்தின் கடைசி நாளன்று நினைவுப் பரிசாக ஆறு புத்தகங்கள் கொடுத்திருந்தனர், மேலும் அதற்கு முன் வாங்கிய சில புத்தகங்கள் இன்னும் உறை பிரிக்கப்படாமல் இருகின்றன. அப்புத்தகங்களை கிழித்து (உறையை)    படித்து விட்டு மேலும் புத்தகங்கள் வாங்கலாம் என்றிருக்கிறேன்.

தினத் தந்தியின் "வரலாற்றுச் சுவடுகள்" 864 பக்கங்கள் ஆர்ட் காகிதத்தில் வண்ண எழுத்து, படங்களுடன்  270 ரூபாய்க்கு விற்றனர், டீ கடையில் பஜ்ஜி விற்பதுபோல்  சுடச் சுட விற்றுக் கொண்டிருந்தது. இப்புத்தகம் வெளிவந்து நான்கு மாதத்தில் இரண்டாவது பதிப்பு கண்டிருக்கிறது, amazing.  சந்தேகமில்லாமல் இந்த வருடம் அதிக விற்பனையான புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். இப்புத்தகத்தை பற்றி எனக்கு ஒரே குறை இவ்வளோ பெரிய புத்தகத்தை பயணத்தின் போது எடுத்து சென்று படிக்க முடியாது, கீதை மாதிரி வீட்டிலேயே படிக்க வேண்டும். மூன்று நான்கு வால்யுமுகளாக போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், மற்ற படி அருமையான புத்தகம்.

நான் வாங்கிய புத்தகங்கள்:
என் இனிய இயந்திரா - சுஜாதா (வாத்தியார் புத்தகம் இல்லாமலா?)
கிராமியக் கதைகள் - கி. ரா
வரலாற்றுச் சுவடுகள் - தினத் தந்தி
காந்திய நெறியில் நம் வாழ்க்கை (VCD) - நெல்லை கண்ணன் உரை .
வெரைட்டி ரைஸ் வகைகள் - கீதா பாலகிருஷ்ணன் (ஹி... ஹி... இது வீட்டம்மாவுக்கு)

1 comment:

Balajiviswanathan Veeraraghavan said...

அயல் நாட்டில் இருப்பதால் எவ்வளவு நாம் இழக்கிறோம் என்ற பட்டியலில் இந்த புத்தக கண்காட்சியும் ஒன்று....( I miss it) ...
இந்திரா சௌந்தராஜன் புத்தகங்கள் ஏதேனும் வாங்கினாயா ?
சமையல் குறிப்பு - ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் ... கலக்கற மலை