வாழ்வில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நமக்கு தோற்ற ஒருவனின் வாழ்க்கையை வெயிலாக தந்த வசந்த பாலன், வாழ்வு தேடி பெரு நகரங்களுக்கு வந்து, ஜொலி ஜொலிக்கும் கடைகளில் அடிமைபட்டிருப்பவர்களின் வாழ்வை அங்காடித் தெருவில் நம் பார்வைக்கு (சிந்தனைக்கும்) வைத்திருக்கிறார்.
மேற்படிப்பு படிக்கும் கனவில் இருக்கும் மகேசுக்கு, அப்பாவின் மரணம் மூலம் இடி விழுகிறது, வீட்டை காப்பாற்ற வேறு வழியில்லாமல், சென்னையில் பிரமாண்டமாய் இருக்கும் கடைக்கு சேல்ஸ் மேன் வேலைக்கு சேர்கிறார். கடையின் ஜொலி ஜொலிப்பு போல் வாழ்க்கை அமையும் என்று நம்பி சென்னை வரும் மகேஷ், அங்கு சந்திக்கும் நிஜம் அவரை மட்டுமல்ல பார்க்கும் நம்மையும் உறைய வைக்கிறது. அதே கடையில் வேலை செய்கிறார் அஞ்சலி, ஆரம்பத்தில் இருவரும் அடிக்கடி மோதிகொள்கிறார்கள், அப்புறம் வழக்கம் போல் நன்றாக பழகுகிறார்கள். இவர்கள் மூலம் இந்த மாதிரி கடையில் வேலை செய்பவர்கள் காலை முதல் இரவு வரை சந்திக்கும் பிரச்சனையையே நமக்கு படமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். அவர்களின் தங்குமிடம், உணவு, பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டுபாடுகள் அதை மீறினால் கிடக்கும் தண்டனைகள், என எல்லாம் நமக்கு அதிர்ச்சி தருகின்றன.
கதையின் நாயகனாக புதுமுகம் மகேஷ், நாயகியாக "கற்றது தமிழ்" அஞ்சலி. கோபமான காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார் மகேஷ், படத்தில் நடிப்பிற்கு முதல் மார்க் வாங்குவது அஞ்சலி ("நெசமாத்தான் சொல்றேன்"), அருமையாக நடித்திருக்கிறார், அத்தனை விதமான உணர்ச்சிகளையும் முகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுபோல் பல படங்கள் அமைய வாழ்த்துக்கள் அஞ்சலி. வேலை செய்பவர்களின் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கடையின் டெரர் கண்காணிப்பாளர் "கருங்காலி"யாக இயக்குனர் வெங்கடேஷ் அசத்தியிருக்கிறார். மகேஷின் நண்பனாக வரும் பாண்டி அப்பப்ப கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
இதுவரை யாரும் தொடாத ஒரு கதையை தொட்டிருக்கும் இயக்குனர் வசந்த பாலனுக்கு வாழ்த்துக்கள் பல. எடுத்துக்கொண்ட கதையை எதாதர்த்திற்கு அருகாமையில் படமாக்கியிருக்கிறார் (சில காட்சிகளை தவிர) .திரைப்படங்களை பொழுதுபோக்குக்காக பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் பிடிக்காமல் போகலாம், அர்த்தமுள்ள படங்களை விரும்புவர்களுக்கு இதப்படம் கண்டிப்பாக பிடிக்கும். பிரதான கதைக்கு நடுவில் வரும் கதைகளும் சிறந்த சிறு கதையை படித்த உணர்வை தருகிறது. "அவள் அப்படி ஒன்றும்" பாடலும், "உன் பேரை" பாடலும் நன்றாக இருந்தன. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்தில் உரையாடலை சிறப்பாக அமைத்திருக்கிறார் ஜெயமோகன். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் முதல் பாதி வேகமாக செல்கிறது, இரண்டாவது பாதி சோகமாக இருப்பதாலோ என்னவோ கொஞ்சம் மெதுவாக செல்கிறது. இப்படத்தை தயாரித்திருக்கும் அய்ங்கரன் நிறுவனதிற்கு வாழ்த்துக்கள், இதுபோன்ற அர்த்தமுள்ள பல படங்களை தயாரிக்க வேண்டுகிறோம் (சீக்கிரம் நந்தலாலாவை வெளியிடுங்கப்பா).
மேம்பாலம் தன் கடையை மறைத்து விடும் என்று, பாலத்தை பாதியிலயே முடிக்க வைக்கும் முதலாளிகளும், கடையை இடிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும், கொடுக்க வேண்டியதை கொடுத்து நீதி மன்ற உத்தரவை மழுங்கடிக்க அரசு உத்தரவை பெரும் முதலாளிகளும் இப்படத்தை பார்த்து திருந்துவார்களா, என்பது தேவையில்லாத கேள்வியென்றே தோன்றுகிறது. இந்தப்படம் பார்த்த பிறகு, எந்த சேல்ஸ் மேன்/வுமன்களை பார்க்கும்போது அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றும், அதுவே இப்படத்தின் வெற்றி.
குறிப்பு: படம் பார்த்து 2 வாரம் ஆச்சு, ஆனால் விமர்சனம் எழுதமுடியவில்லை, நல்ல படம் பற்றி கண்டிப்பா எழுதியே ஆகணும் என்பதால், தாமதமானாலும் பரவாயில்லை என்று இந்த விமர்சனம் எழுதியிருக்கிறேன்.
No comments:
Post a Comment