Monday, 18 July 2011

தெய்வத்திருமக(ன்)ள்

30 வயது உடல் வளர்ச்சி  ஐந்து வயது மன வளர்ச்சியும் உள்ள தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்குமான உறவும் பிரிவும் போராட்டமுமே தெய்வத்திருமகள்.

ஊட்டியில் ஒரு கிராமத்தில் தங்கி அங்கயே  உள்ள  சாக்லேட் பாக்டரியில் வேலை செய்பவர் கிருஷ்ணா (விக்ரம்), அவருடைய மனைவி ஒரு குழந்தை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விடுகிறார். அந்தக் குழந்தையை குளிப்பாட்டி, உணவூட்டி, பாதுகாத்து, கதை சொல்லி  அங்கிருப்பவர்களின் உதவியுடன் வளர்க்கிறார் கிருஷ்ணா. அழகாக வாழ்ந்து வரும் தந்தையும் மகளும், ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவின் மாமனார் மூலம் பிரிக்கப்படுகிறார்கள், இது முதல் பாதி.

 சென்னையில் தனது மகளை தேடி அலையும் கிருஷ்ணா, தனது மகளை மீட்டுத்தருமாறு வக்கீல் அனுராதாவிடம் உதவி கேட்கிறார், அவரின் கதையை கேட்டு உதவி செய்ய முன்வருகிறார் அனுராதா. அவர் மிக மூத்த வக்கீலான பாஷ்யத்துடன் வழக்காடி கிருஷ்ணாவிற்கு அவர் குழந்தை நிலாவை மீட்டுக்கொடுத்தாரா இல்லையா என்பது உணர்ச்சிமயமான கிளைமாக்ஸ் உடன்  இரண்டாவது பாதி.


 
 
கிருஷ்ணா என்ற வளர்ந்த குழந்தையாகவே மாறியிருக்கிறார்  விக்ரம், அவருடைய உடல் மொழி அற்புதம். ஒவ்வொரு படத்திருக்கும் அவர் எடுத்து கொள்ளும் சிரத்தை வியக்கவைக்கிறது.  இதுவரை அவர் செய்த பாத்திரங்களில் மிக சிறப்பானதாக இதை சொல்லலாம்.  இப்படத்திற்காக பல  விருதுகள் அவரை தேடிவரும் என் நம்புகிறேன். விக்ரமிற்கு இணையான பாத்திரம் நிலாவாக  நடித்திற்கும் குழந்தை சாராவிற்கு. இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார். சுத்திபோடுங்கப்பா சாராவிற்கு, எத்தனை கண்ணு பட்டுச்சோ.வக்கீலாக அனுஷ்கா, அழகாக அளவாக நடித்திருக்கிறார். பள்ளி நிர்வாகியாக அமலா பால், முதல் பாதியில் நகைச்சுவைக்கு எம் எஸ் பாஸ்கர், இரண்டாம் பாதியில் சந்தானம் என துணை பாத்திரங்கள் சிறப்பாக செய்திருக்கின்றனர். பாஷ்யம் என்ற அப்பாடக்கர் வக்கீலாக நாசர்,  சில காட்சிகளை தவிர சிறப்பாக செய்திருக்கிறார் .

மதராசபட்டினத்தை தொடர்ந்து ஒரு வித்யாசமான ஒரு திரைப்படத்தை அளித்திருக்கும் இயக்குனர் விஜய்க்கு வாழ்த்துக்கள். எடுத்துக்கொண்ட கதையை சிறப்பான  திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் விஜய். படத்தில் பல நெகிழ்ச்சியான காட்சிகள் இருகின்றன, ஆனால் அவைகளுக்கு இடையே நகைச்சுவையை தெளித்து  ஓவர் emotional dramaவாக ஆக்காமல் திரைக்கதை அமைத்திருப்பது அழகு. குழந்தைக்கு நிலா என்று பெயர் வைப்பது, பிடித்த பட்டாம் பூச்சி பறந்ததும் ஏமாறும் கிருஷ்ணாவை நிலா தன் இமைகளையே பட்டாம்பூச்சி போல் அசைத்து  மகிழ்ச்சிப்படுதும்  காட்சி, கதை சொல்லும் காட்சி, இறுதியில் தந்தை மகள் உரையாடும் காட்சி என பல கவிதையான காட்சிகள் அமைத்திருக்கிறார் விஜய். இசையும் (பிரகாஷ்), ஒளிப்பதிவும் (நீரவ் ஷா)  இப்படத்திற்கு தேவையான அளவு சிறப்பாக அமைந்திருக்கிறது. படதொகுப்பாளர் இன்னும் சில காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கலாம் என்று படுகிறது.

இரண்டாம் பாதி நீளமாக இருப்பது, "விழிகளில் ஒரு வானவில்" பாடல்,  குழந்தைக்கு தேவையான மருந்தை கிருஷ்ணா சரியாக வாங்கி வருவது, போன்ற சில குறைகள் இருந்தாலும். தெய்வத்திருமகள் தமிழில் முக்கியமான ஒரு திரைப்படம். கிருஷ்ணா நிலாவை வளர்க்கும் காட்சிகளில், ஒரு குழந்தையை இப்படிதான் வளர்க்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. நல்ல படம் மட்டும் தான் பார்ப்பேன் என்று அடம் பண்ணுபவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம்.

3 comments:

கவிதை காதலன் said...

நல்ல விமர்சனம்.. தெளிவாக இருக்கிறது.. பார்த்திடுவோம்

Philosophy Prabhakaran said...

உங்களை சென்னை பதிவர் சந்திப்பிற்கு வரவேற்கிறோம்...

http://goundamanifans.blogspot.com/2011/08/4.html

N.H.பிரசாத் said...

நேற்றுத் தான் இந்த படத்தை பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. உங்கள் விமர்சனமும் அருமை. நிறைய எழுதுங்கள். உங்கள் வலைதளத்தை இன்னும் சில திரட்டிகளில் இணைத்தால், உங்கள் பதிவு நிறைய பேரை சென்றடையும். நன்றி.