Sunday, 18 October 2009

கேக் வெட்டி கொண்டாடிய தீபாவளி

இந்த தீபாவளி நான் என் வீட்டில் கொண்டாடாத இரண்டாவது தீபாவளி. கல்லூரியில் ஒரு தீபாவளி, செமஸ்டர் தேர்வுக்கு இடையில் வந்ததால் கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் கொண்டாடப்பட்டது, இம்முறை ஊரில் இல்லாததால், அலுவலக நண்பர்களுடன் சியாட்டலில் கொண்டாடப்பட்டது. இந்திய நேரத்திலே கொண்டாடினோம். இங்கு 40 பேரு 15 அப்பார்ட்மென்டில் தங்கி இருக்கிறோம். நாங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடியது, சிறப்பு விருந்தினராக அமெரிக்க அலுவலக நண்பர்கள் இருவர் கலந்துகொண்டனர். எங்கள் அப்பார்ட்மென்டில் உள்ள சமுதாய கூடத்தை (Community Hall) வண்ண காகிதங்களால் அலங்கரித்திருந்தார்கள் அங்கு அவரவர் வீட்டில் இருந்து உணவு செய்து எடுத்து வந்து ஒன்றாக உண்டு தீபாவளி கொண்டாடினோம். எங்கள் அறையில் இருந்து தோசை. தோசை, பிரியாணி முதல் கேரட் அல்வா, ரசமலாய் வரை எல்லாம் இருந்தன. எல்லா உணவும் நனறாக இருந்தன. முதலில் இரண்டு விளையாட்டுகள் நடந்தன, மியூசிக் சேர் போன்று ஒரு விளையாட்டும், Dumb Charades விளையாட்டும் நடந்தது. கொஞ்ச நேரம் நடனமும், சந்திரா, சபரி, பிரதாப், அமிர்தா (இரண்டு வயது) ஆகியோர் சிறப்பாக நடனமாடினர்.

முதல் முறையாக கேக் வெட்டி தீபாவளி கொண்டாடப்பட்டது, பிறந்த நாளையே கேக் வெட்டி கொண்டாடாத எனக்கு ரொம்ப அன்னியமாக தோன்றிய விசையமிது, ஆனாலும் வேறு விழியில்லை என்பதால் கேக் வெட்டுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. பிறகு அனைவரும் அவரவர் உணவை தவிர மற்ற உணவுகளை ஒரு பிடி பிடித்துவிட்டு கிளம்பினோம். சாப்பிட்ட பிறகு யாருடைய உணவு அதிகம் காலியாகியிருக்கிறது என்று போட்டி வேறு, எங்கள் தோசை ஓரளவு போனியாயிருந்தது, தேங்காய் சட்னியை தவிர. மிக வேகமா காலியானது ஜீவனின் தம் பிரியாணியும், ககன் வீட்டிலிருந்து வந்த ரசமலாயும்.

இப்ப கொஞ்சம் ஃபீலிங்க்ஸ் ...

சின்ன வயதில் தீபாவளி ஒரு பண்டிகை என்பதை விட ஒரு படி மேலானது. சில வாரங்களுக்கு முன்னே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும், புது உடை, பட்டாசு,முறுக்கு, குலோப் ஜாமுன் என்று ஓவ்வொன்றும் ஒரு சந்தோசம். அதிலும் வீட்டின் கடைசி பிள்ளை போல் பட்டாசுக்கு மவுசு அதிகம், பத்து நாட்களுக்கு முன் பட்டாசு வீட்டுக்கு வந்து விடும், தினம் பள்ளியில் இருந்து வந்ததும் அந்த பட்டாசுகளை எடுத்து பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி. தீபாவளியன்று அதிகாலை நாலு மணிக்கு எழுந்து, எண்ணெய் வைத்து குளித்து, புது உடை உடுத்தி, அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கி, குலோப் ஜாமுன் சாப்பிட்டு பிறகு பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால் மாலை வரை பாட்டாசு தான். நினைத்தாலே இனிக்கும் நாட்கள்.

கடந்த வருடம் தீபாவளியன்று இதையெல்லாம் என் அம்மாவிடம் சொல்லி இப்பவெல்லாம் நான் ஏன் இவ்வளவு உற்சாகமா கொண்டாடுவதில்லை என்று வருத்தப்பட்டேன், அதற்கு அப்பா "உன்னை யார் இதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொன்னது இப்பவும் நீ அதிகாலை எழுந்த உன் இஷ்டம் போல கொண்டாடவேண்டியது தானே" என்றார், நியாயம்தான், தவறு என் மேல். ஆனாலும் தீபாவளி என்று எப்போது கேட்டாலும் மனதிலே தோன்றும் மகிழ்ச்சி குறைவதே இல்லை. அதனாலேயே தீபாவளி ஒரு பண்டிகை என்பதைவிட மேலானது. ஒரு பிஜிலி வெடி கூட வெடிக்காமல், மத்தாப்பு கொளுத்தாமல், குலோப் ஜாமுன் சாபிடாமல், பட்டிமன்றம் பார்க்காமல் கேக் வெட்டி கொண்டாடினாலும் இந்த தீபாவளியும் மனதின் ஒரு ஓரத்தில் மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.

2 comments:

Ananya Mahadevan said...

அது எப்படி அண்ணாமலை, நீங்களும் என்னை மாதிரியே புலம்பி தள்ளி இருக்கீங்க?

http://ananyathinks.blogspot.com/2009/10/blog-post_16.html

Annamalai Swamy said...

வீட்டை விட்டு வந்த பலருக்கு இதே புலம்பல் தான். நான் இந்தப்பதிவை எழுத்தும் போதே உங்களுடைய பதிவை படித்துவிட்டேன்.