Tuesday, 14 September 2010

இந்த வாரம் - 14/09/2010

தமிழக அரசியல்:
அரசியல் பற்றி ரஜினி பரபரப்பு பேட்டி என்று கடந்த வாரம் சில பத்திரிகைகள் கடைகளில் தொங்கிக் கொண்டிருந்தன, "பரபரப்பு பேட்டி" என்றால் அது ஒன்றும் இல்லாத வெத்துப் பேட்டி என்பது நம்மூர் பத்திரிக்கை விதி, அதனால் நான் கண்டுகொள்ளவில்லை. இணையத்தில் தேடிய போது அந்த செய்தி கிடைத்தது. "அரசியலுக்கு வரும் எண்ணம் இப்போது இல்லை" என்று 101வது முறையாக  பரபரப்பு பேட்டி கொடுத்திருந்தார். அவர் என்றைக்கும் வரப்போவது இல்லை (வராமல் இருப்பதே நல்லது என்பது என் கருத்து).

விளையாட்டு:
யு எஸ் ஓபன் முடிந்தது, என் கறு நாக்கோ  (கறு எழுத்து?) என்னவோ ஷரப்போவா மறுபடியும் அவுட். நடால் வென்றார்.

போப்பண்ணா ஜோடி இறுதி வரை வந்தது ஆறுதல், சேர்ந்து விளையாடுவது பாகிஸ்தான் நாட்டு ஆட்டக்காராக இருப்பதால் இன்னும் சுவாரசியம்.

சாம்பியன்ஸ் T20  ஆரம்பித்து விட்டது, ஃபிசிங்கா? இல்லையா? என்பது தொடர் முடிந்த பிறகு ஆராய்ச்சி செய்து கொள்ளலாம், அதுவரை டீ.வி முன் பலியாய் கிடக்கலாம், இல்லையேல் அமிதாப் வந்து அடிப்பார்.

கவிதை
இந்த வாரம் நான் படித்த மனுஷ்ய புத்திரன் கவிதை

பாபருக்கு வேண்டும் மசூதி
ராமருக்கு வேண்டும் கோயில்
ஜனங்களுக்கு வேண்டும்
சுகாதாரமான கழிப்பறைகளேனும்

வரும் 24ஆம் தேதி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு சொல்ல போகிறார்கள், எத்தனையோ ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பது போல் இத்தீர்ப்பையும் சொல்லாமல் இருப்பதே மேல்.

கோவில்
கடந்த வாரம் ஒரு நண்பரின் திருமணத்திற்காக கும்பகோணம் சென்றிருந்தோம், கிடைத்த நேரத்தில் சுவாமிமலை சென்றிருந்தோம். முருகனின் அறுபடை வீட்டில் நான் இதுவரை செல்லாத கோவில் அது. இது முருகனின் நான்காவது படைவீடு. கோவில் பெரிதாக அழகாக இருந்தது, வெளியிலிருந்து பார்க்கும் போது மலையெல்லாம் ஏற வேண்டியதில்லை என்று நினைத்தேன், உள்ள சென்ற பிறகு தான் தெரிந்தது நிறைய (60) படி ஏற வேண்டியது இருந்தது. நாங்கள் சென்ற நேரம் முருகனுக்கு அபிஷேகம் ஆரம்பித்திருந்தார்கள், சிறப்பான தரிசனம் கிடைத்தது.

இத்தலத்தின் சிறப்பு:
தந்தை சிவனுக்கு முருகன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை விளக்கி சொன்ன இடம் இது. அதனால் இங்கிருக்கும் முருகனுக்கு சுவாமிநாதன் என்றும் தகப்பன்சாமி என்றும் அழைக்கப்படுகிறார். 

Wednesday, 8 September 2010

அரபு நாடு வழியாக பயணம் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

கடந்த ஞாயிறன்று சுஜாதாவின் "கடவுள்களின் பள்ளத்தாக்கு" என்ற கட்டுரை தொகுப்பை வாங்கியிருந்தேன், அதில் நவீன குவைத் என்ற கட்டுரையில் "ப்ளேனில் சொன்னார்கள் சாராயம், பாப்பி (கசகசா) வைத்திருப்பது குற்றம் என்று.  கசகசாவுக்கு ஏன் பயப்படுகிறார்கள் என்று வியந்தேன். குவைத் நண்பர்கள் பின்னர் சொன்னார்கள், விதைத்தால் பாலை வனத்தில் கூட போதைப்பொருள் விளையுமாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.



இந்தப்பதிவு போடும் இன்று எங்கள் அலுவலகத்தில் ஒரு மின்னஞ்ல் அனுப்பியிருந்தார்கள், அதில்  இம்மின்னஞ்ல் அனுப்பிய நபரின் நண்பர் ஒருவர் துபாய் வழியாக யு கே (UK) செல்லவிருந்திருக்கிறார், அவர் பெட்டியில் கொஞ்சம் கசகசாவும் (சமையலுக்காக என்று நினைக்கிறேன்) இருந்திருக்கிறது. சிறிதளவு சமையலுக்கு உபயோக்கப்படுத்தும்  கசகசாவை வைத்துக்கொண்டு பாலைவனத்தில் கூட  போதைப் பொருட்கள் விளைவிக்க முடியுமாம், அதனால் துபாய் காவல் துறையால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரை விடுவிக்க அவருடைய நண்பர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவருக்காக வாதாடுவதற்கு வக்கீல்கள் ஏகப்பட்ட பணம் (AED 100,000) கேட்கிறார்களாம்.  தம்மாதூண்டு கசகசாவில் எவ்வளவு பெரிய பிரச்சனை, நினைக்கவே பயமாக இருக்கிறது. அவர் விரைவில் விடுதலை ஆகிவிடுவார் என்று நம்புவோம், பிரார்த்திப்போம்.

கசகசா(Poppy Seeds)



நம்ம ஊரில் இந்த மாதிரி ஏதும் மாட்டினால் எப்படியாவது தப்பித்துவிடலாம், ஆனால் பெரும்பான்மையான மற்ற நாடுகளில் அதெல்லாம் ரொம்ப  கஷ்டம், அதுவும் அரபு நாடுகளில் வாய்ப்பே இல்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் முன், எந்த நாட்டின் வழியாக செல்கிறோம் அங்கு என்ன என்ன எடுத்து செல்லலாம், செல்லக்கூடாது என்று தெரிந்து வைத்து கொள்ளுங்கள், வெளிநாடு செல்லும் உங்கள் நண்பர்களிடமும் இதை தெரிவுயுங்கள். நாம் கவனிக்காத சின்ன விசையங்களெல்லாம் பெரிய பிரச்சனையை உருவாக்குகின்றன, எச்சரிக்கையாக இருப்போம்.

Tuesday, 7 September 2010

இந்த வாரம் - 07/09/2010

கதம்பம் என்ற தலைப்பில் வேறு பதிவர்களும் எழுதிக் கொண்டிருப்பதால், இத்தலைப்பை மாற்ற நினைத்தேன். நல்லதாக ஒரு தலைப்பும் தோன்றவில்லை, அதனால் இப்பகுதிக்கு நான் "இந்த வாரம்" என்ற தலைப்பில் எழுதுகிறேன். வேறு ஏதும் தலைப்பு தோன்றினால் சொல்லுங்கள்.
 
தமிழக அரசியல்:
இந்த வாரம் பெரிய மாற்றம் இல்லை.

பா.ம.க மூன்றாவது கூட்டணிக்கு  தலைமை தாங்க தயார் என்று குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ். அடுத்த வாரம் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

30-40 தொகுதிகளுக்குகெல்லாம் கூட்டணி அமைக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார் விஜயகாந்த். கூட்டணி பேசும் கட்சிகளிடம் அதிகமா தொகுதிகள் வேண்டும்  என்று மறைமுகமாக கேட்கிறாரா?


இந்த வார விளையாட்டு:
பாகிஸ்தான் கிரிக்கெட் ஸ்பாட் ஃபிக்சிங் பிரச்சனையை தோண்டி கொண்டிருகிறார்கள், யாசிர் ஹமீது அளித்த தகவல், ஆஸ்திரேலியா தொடரிலும் ஃபிக்சிங் என  சில பூதங்கள் வந்துகொண்டிருகின்றன. பாகிஸ்தானில் அரசியல் மற்றும் விளையாட்டு எதில் ஊழல் நடந்தாலும் விளையாட்டாகவே எடுத்துகொள்கின்றனர்.

யு எஸ் ஓபன் விறு விருப்பாக நடந்த கொண்டிருக்கிறது. முன்னணி ஆட்டக்காரர்களில் ஆண்களில் முர்ரேவும், பெண்களில் டேமன்டிவாவும் தோற்றுவிட்டனர். இரட்டையர்கள் போட்டியில் நம்மவர்கள் பயசும் மற்றும் பூபதியும் தோற்று வெளியேறிவிட்டனர், போப்பண்ணா ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியிருகின்றனர்.

ஆறு வருடங்களுக்கு முன் 17 வயதில் டென்னிஸ் விளையாட்டில் புயலென நுழைந்தவர் ஷரப்போவா, ஆனால் தொடர்ந்து ஜொலிக்க முடியவில்லை, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த slamமும் ஜெய்க்க வில்லை,  இந்த முறையாவது  ஜெயிப்பாரா?

இந்த வாரத் திரைப்படம்
கடந்த வார இறுதியில் என் மடிக்கணினியில் Salt படம் பார்த்தேன், வெளிவந்து 2 மாதம் ஆகிறது, இப்போதுதான் பார்த்தேன். படம் ம்ம்ம் Ok, ரொம்ப அருமையில்லை என்றாலும் பொழுதுபோக்கிற்கு நல்ல படம். மறுபடி ஒரு அதிரடி கதாப்பாத்திரம்  ஏஞ்சலீனாவுக்கு, இந்த மாதிரி பாத்திரங்கள் (அழகு + அதிரடி) அவருக்கு நன்றாகவே பொருந்துகிறது.



இந்த வாரம் சிதறிய முத்து:
மறுபடியும் கலைஞர்.  குஷ்பு தயாரிப்பில் சுந்தர் நடிக்கும் நகரம் பட பாடல் வெளியீட்டு விழாவில் கலைஞர் பேசியதில் ஒரு பகுதி
"இவரை அழைத்தால் அவருடைய கட்சிப் பிரச்சாரம் செய்கிறாரே என்று எண்ணக் கூடாது. கட்சிப் பிரச்சாரம் என்பது சரியல்ல – கட்சி என்பதும் சரியல்ல. கட்சி என்பது ஒரு லட்சியத்திற்காகத் தான் இருக்கிறது. ஒரு கொள்கைக்காகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு இந்தக் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இனி இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், லட்சியங்களை வளர்க்க வேண்டும், இவைகளை வளர்ப்பதற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்."
இதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.