சிறுகதைகள் எழுதும் போது முதல் வரியிலேயே கதையை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார் சுஜாதா, அப்படித் தான், முதல் 2 நிமிடத்திலையே எந்திரன் ஒரு அறிவியல் புனைவு (sci-fi) என்றும் மற்றும் இது வழக்கமான ரஜினி படம் இல்லை இயக்குனர் ஷங்கர் படம் என்பதையும் உணர்த்திவிடுகிறது. மிக எளிதான கதை, ஒரு விஞ்ஞானி (வசீகரன்) தன்னை போல் ஒரு எந்திரனை (android robot) உருவாக்குகிறார், சில காரணங்களால் அதற்கு உணர்வுகளையும் கொடுக்கிறார் அதனால் ஏற்ப்படும் விளைவுகளே எந்திரன் கதை. வழக்கமான ஷங்கரின் "இப்படி நடந்தால் என்னவாகும்?" என்கிற வகை கதைதான், அதை திரையில் காட்சிப்படுத்திய விதம் தான் படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்கிறது.
திரைக்கதை தெளிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது, மனிதனை போல் ஒரு எந்திரம் (சிட்டி) உறுவாக்கப்பட்டு, மனிதர்களுடன் பழகுவதால், ஏற்படும் நிகழ்வுகள், விளைவுகள் முதல் பாதி. அறிவியல் படம் என்பதால் கணிப்பொறி சார்ந்த வார்த்தைகள் மற்றும் பல புரியாத விஷையங்கள் இருக்கும் என்று நினைக்க தோன்றும், ஆனால் பார்க்கிறவர்கள் யாவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிதான காட்சிகளை அடுக்கி வைத்திருகிறார்கள். உதாரணமாக தீ விபத்து காட்சியில் எந்திரத்தால் என்ன முடியும், என்ன முடியாது என்று விளக்கியிருப்பது அருமை.
அந்த இயந்திரத்திற்கு உணர்வுகள் கொடுக்கப்பட்டு, தானாக சிந்திக்க ஆரம்பித்தால் ஏற்படும் விளைவுகள் இரண்டாம் பாதி. ஐஸை சிட்டி காதலிக்க ஆரம்பித்ததும் சிட்டிக்கும் வசிக்கும் இடையில் ஈகோ பிரச்சனை உருவாகிறது, இதை வசீகரனுடைய குரு சுயநலத்திற்கு எப்படி பயன்படுத்த பார்க்கிறார், இதனால் ஏற்படும் விளைவும் முடிவும் இரண்டாம் பாதி. இரண்டாம் பாதி முதல் பாதியை போல் சரளமாக இல்லை, சில இடங்களில் மெதுவாக இருக்கிறது குறிப்பாக "ரங்குஸ்கி" காட்சியும், 'கிளிமஞ்சாரோ" பாடலுக்கான லீடும் கொஞ்சம் இழுவை (அடுத்த வாரங்களில் இக்காட்சிகள் குறைக்கவோ நீக்கவோ படலாம் என்று எதிர்பார்க்கிறேன்).
கலை இயக்குனர் சாபு சிரிலின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் ரோபோ ஆராய்ச்சி கூடம் முதல், ரஜினி வீடு வரை பளிச்சென பிரமாண்டாமாக இருக்கின்றன, ஐஸ் தங்கியிருக்கும் வீடு cum ஆதரவற்றோர் இல்லமும் பிரமாண்டாமாக இருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. ஆண்டனியின் படக்கோர்வையும் அருமை, மேலே குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். படத்தின் மற்றொரு பெரிய பலம் அமரர் சுஜாதாவின் வசனங்கள், அனைத்து வசனங்களும் யாருக்கும் புரியும் வண்ணம் short and sweetஆக இருந்தன.படத்தின் பல இடங்களில் சுஜாதா தெரிகிறார் உதாரணமாக கடவுள் இருக்கிறாரா? என்ற கேளிவிக்கு சிட்டியின் பதில், வி மிஸ் யு வாத்தியாரே. ரஹ்மானின் இசையில் பாடல்கள் அருமை, பின்னணி இசை இறுதி காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
விஞ்ஞானி ரஜினி - Intro song, punch டயலாக், style gimmick என்று எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத ரஜினி, நான் ரொம்ப நாளாக பார்க்க துடித்த ரஜினி அருமையாக நடித்திருக்கிறார்.
ரோபோ ரஜினி - சுறு சுறுப்பான, ஒயிலான, அழகான ரஜினி. இந்த பாத்திரத்திற்கு அவருடைய உழைப்பு அபாரம். இந்த ரோபோ ரஜினி இரண்டாம் பாதியில் வேறொரு அவதாரம் எடுக்கும் போது, அவருடைய நடிப்பு class + mass. சங்கர் எழுதியதை திரையில் கொண்டு வர ரஜினியின் (60 வயதில்) உழைப்பும் முயற்சியும் ஆச்சர்யம் அளிக்கிறது. யாராவது ரஜினியை வச்சு நெற்றிக்கண் மாதிரி ஒரு படம் எடுங்கப்பா!
ஐஸ் - அழகாக வருகிறார், ஆடுகிறார், அழகாக இருப்பதுதான் அவருடைய பாத்திரம், அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
கருணாஸ், சந்தானத்தின் பாத்திரங்களை இன்னும் கொஞ்சம் சிறப்பாக பயன் படுத்தியிருக்கலாம்.
மேல குறிப்பிட்ட அனைவரையும் வழி நடத்தி தான் நினைத்ததை திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர். ரோபோ படம் என்றதும் எந்த காட்சி எந்தப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருகிறது என்று குத்தி கிழிக்க ஒரு கூட்டமே காத்திருந்தது, அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமும் தராத சங்கர் அவர்களுக்கு ஒரு மெகா சைஸ் பூங்கொத்து, ஷங்கர் ஒரு master director என்றும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஷங்கரின் உழைப்பிற்கு கண்டிப்பாக பெரிய பலனும் புகழும் கிடைக்கும். இப்படத்தின் உயரத்தை தாண்டும் அல்லது தொடும் அடுத்த படம் எப்போது வருமென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படத்தை பல வழிகளில் விளம்பர 'படுத்தியும்', நாளுக்கொரு விழா நடத்தி வந்தாலும், இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸுக்கு வாழ்த்துகள்.
படத்தின் நீளம், சில லாஜிக் மீறிய காட்சிகள் என சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன, இருந்தாலும் எந்திரன் தமிழ் சினிமாவில் உருவான மிக சிறந்த பொழுதுபோக்கு படம், தமிழ் சினிமாவின் இல்லை இந்திய சினிமாவின் சாத்தியங்களையும் எல்லையையும் உயர்த்தி வைத்திருக்கிறான் எந்திரன். குடும்பஸ்த்தர்கள் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்.
எந்திரன் - தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத ஓர் அனுபவம் - Get ready folks.