Saturday, 14 November 2009
சச்சின் - ஒரு யுகம்
வாழ்க்கையில் சில விசையங்கள் தான் நமக்கு வெகு காலம் ஒரு மகிழ்ச்சியோ ஆனந்தமோ தொடர்ந்து தரும், அப்படி எனக்கு சிறு வயதிலிருந்து மகிழ்ச்சி தரும் விசையங்கள் ரஜினி படம், ஊரில் கிரிக்கெட் விளையாடுவது, கோவில் திருவிழா, பள்ளி விடுமுறையில் அம்மாவின் சொந்த ஊருக்கு போவது, மழை பெய்யும் மாலை பொழுதில் சூடான காபி அருந்துவது இந்த வரிசையில் முக்கியமானது சச்சின் விளையாடும் ஆட்டத்தை பார்ப்பது. சச்சினின் கிரிக்கெட் சாதனைகள் எல்லாருக்கும் தெரியும், அதை கண்டிப்பாக நான் பட்டியலிடப்போவதில்லை, கிரிக்கெட்டில் இருபது ஆண்டுகள் வைரமாக மின்னும் சச்சினை பற்றி எனக்கு தோன்றிய எண்ணங்களே இந்தப்பதிவு.
சச்சின் டெண்டுல்கர், இந்தப் பெயர் எப்போது எனக்கு பரிச்சியமானது, சரியாக நினைவில் இல்லை, 1991ஓ 2ஓ, ஒரு சனிக்கிழமை நடந்த கிரிக்கெட் ஆட்டத்தின் போது என் அப்பா "யாரோ சச்சின் டெண்டுல்கர்னு ஒருத்தன் நல்ல விளையாடுரானாம் பாரு" என்று சொல்லிவிட்டு போனார். நானும் ஆர்வமாக பார்த்தேன், அன்று சச்சினை பார்த்ததோ, இல்லை எப்படி ஆடினார் என்பதோ ஞயாபகம் இல்லை, ஆனால் அன்று எங்கள் வீட்டு கதவிடுக்கில் (அப்ப எங்க ஊரில் ரெண்டு வீட்டில் தான் தொ.கா. பெட்டி இருந்தது, இப்ப வீட்டுக்கு ரெண்டு இருக்கும்) ஆட்டம் பார்த்து கொண்டிருந்தவர்களிடம் சச்சினை பற்றி கூறிய போது "என்னடா பேரு தன்டூரகாரன்ட்டு" என்று கூறி விட்டு போனார்கள். 17 ஆண்டுகள் கழித்து அதே சச்சினை பற்றி எழுதுகிறேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
சச்சினின் வளர்ச்சியை பற்றி எல்லாருக்கும் தெரியும், தெரியாதவர்கள் அல்லது படிக்க விரும்புவர்கள் 22 வருடங்களுக்கு முன் வந்த இந்தக் கட்டுரையையும் இப்போது வந்திருக்கும் இந்தக் கட்டுரையையும் படித்தால் போதும். இரண்டின் பாடு பொருளும் சச்சின், இரண்டையும் எழுதியது ஹர்ஷா போகலே. எங்கள் வீட்டிலிருக்கும் அனைவருக்கும், நான் மணந்து கொள்ளப்போகும் பெண் உட்பட ஒரு ஒற்றுமை உண்டு, எல்லாருக்கும் சச்சினை பிடிக்கும், என் அப்பா கிரிக்கெட் பார்க்கும் போதெல்லாம் சச்சின் ஆடும் வரை மட்டும் தான் பார்ப்பார். 90 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருக்கும் போது சச்சினை விட என் அம்மா அதிக பரபரப்பாக இருப்பார், வேறு அலைவரிசை மாற்றிவிட்டு 100 ஓட்டங்கள் எடுத்தபின் பார்க்கலாம் என்பார், 100 அடித்த பிறகு என்னவோ என் அம்மாவே சதம் அடித்தது போல மகிழ்ச்சியில் இருப்பார். என் அக்கா பள்ளி செல்லும் நாட்களில் சச்சினின் புகைப்படத்தை சேகரிப்பது ஒரு முக்கிய வேலையாக வைத்திருந்தார், நானெல்லாம் பல படங்கள் என் அக்காவிற்கு கொடுத்துள்ளேன், எனக்கு சச்சின் ஆடுவதை பார்த்தால் போதும் சோறு தண்ணி வேண்டாம். எங்கயோ பிறந்து வளர்ந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் இப்படி எங்கள் வீட்டில் மட்டுமல்ல இது போல பல ஆயிரம் வீடுகளில் ஒரு நபராக இருந்தார், இருக்கிறார், இருப்பார்.
சச்சின் கிரிக்கெட் ஆடுவதை பார்ப்பதே அலாதியானது. நான் வெறித்தனமா சச்சினை பார்க்க ஆரம்பித்தது 1996ல் இருந்து. சச்சின் தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருந்த காலம் அது. அதுவரை இருந்த சந்தேகங்கள் எல்லாம் விலகி மாடர்ன் கிரிக்கெட்டின் பிதாமகர் சச்சின் என்று கிட்ட தட்ட அனைவரும் ஒத்துகொண்டனர். சச்சினுக்கு பேட்டிங் என்பது ஓவியம் வரைவது, இசையமைப்பது போல் ஒரு கலை. அவர் ஒவ்வொரு பந்தையும் ஒரு காதலியை காதலன் அணுகுவது போல அணுகுகிறார். Non Striker Endல் இருக்கும் ஸ்டம்பை முத்தமிட்டு செல்லும் straight drive, கொஞ்சமும் அலட்டிகொள்ளாமல் இரண்டடிகள் குதித்து வந்து மிட் ஆன் மீதோ, மிட் ஆப் மீதோ அல்லது இன்சைட் அவுட் என்றோ தூக்கி அடிக்கும் ஷாட், கீப்பருக்கு பின்னால் தட்டி விடும் பெடல் ஸ்வீப், ஒரு குழந்தையை செல்லமாக அடிப்பது போல் பந்துக்கு வலிக்காமல் அடிக்கும் கவர் டிரைவ், கொஞ்சம் கோவமாக அடிக்கும் புல் மற்றும் கட் ஷாட் என்று எதை விட, எதை சொல்ல, அத்தனையும் பார்ப்பதே இனிமையானது.
சச்சினின் பல ஆட்டங்கள் இன்னும் நினைவில் நீங்காமல் இருகின்றன. 96 உலககோப்பை ஆட்டம், 98 ஷார்ஜாவில் மணல் புயலுக்கிடையில் ஆடிய ஆட்டம் , 2003ல் செஞ்சுரியனில் அடித்த 98 ஓட்டங்கள், இரண்டு வாரம் முன்பு அடித்த 175 ஓட்டங்கள், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வீசிய அந்த கடைசி ஓவர் என இன்னும் பல ஆட்டங்கள். வெற்றிகள், விருதுகள். அவர் அடித்த ஒவ்வொரு ஓட்டமும் தங்களுடையது என்று ஒரு நாடே கொண்டாடுகிறது. சச்சின் ஆட ஆரம்பித்த காலத்தில், தவழ்ந்து கொண்டிருந்த குழந்தைகளெல்லாம் வளர்ந்து (சச்சினைப் பார்த்து) கிரிக்கெட் ஆடிப்பழகி இப்போது அவருடனே சேர்ந்து விளையாடி கொண்டிருகின்றனர், இதெல்லாம் சச்சினுக்கே கிடைத்த பெருமை.
சச்சினின் ஆட்டம் மட்டுமல்ல, மற்ற ஆட்டகாரரை மதிப்பது, பழகுவது முதல் எல்லாவற்றிலும் கிளாஸ் தான். இவ்வளவு புகழெல்லாம் ஒரு மனிதனால் தாங்க முடியாது என்கிற அளவு புகழ் அடைந்தாலும் அதை தலைகேற்றாமல், இப்ப கிரிக்கெட் ஆட வந்த சின்ன பையன் போல அடக்கமாக இருப்பதும் சச்சினின் சிறப்பு, அதனால் தான் இவளவ்வு காலம் சச்சினால் கோலோச்ச முடிந்திருக்கிறது. சச்சினின் சாதனைகளை யாரும் நெருங்குவது கூட கடினமே, அவர் சாதனை பட்டியலில் இன்னும் ஒன்று மட்டும் பாக்கி, அதை கூடிய சீக்கிரம் அடைய நம் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் அவருக்கு எப்போதும் உண்டு.
எனக்கு தெரிந்து விளையாட்டு துறையிலோ அல்லது அரசியல், கலை இல்லாத ஒரு துறையிலிருந்து இனம், மொழி, மதம் வேறுபாடுகளை தாண்டி ஒரு நாட்டின் மூளை முடுக்கெல்லாம் பரிச்சயமாகி தனது ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வைத்தது சச்சின் மட்டும் தான், இது சாதரண சாதனை இல்லை, ஒரு வரலாற்று சாதனை (யோசித்து பாருங்கள் உங்கள் ஒவ்வொரு அசைவையும் ஒரு நாடே கவனித்தால்?) . சச்சின் போன்றவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு ஒருவர் தான் இருப்பார்கள், சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் சச்சின் என்கிற பெயர் இல்லாமல் இருக்க முடியாது.
சச்சினை பற்றி பிரபலங்கள் கூறியவற்றில் எனக்கு பிடித்த வாசகங்கள் சில கீழே
"Don't bowl him bad balls, he hits the good ones for fours."
- Michael Kasprowicz
"You take Don Bradman away and he is next up I reckon."
- Steve Waugh
"I have seen God. He bats at number 4 for India"
"When Tendulkar goes out to bat, it is beyond chaos - it's a frantic appeal by a nation to one man"
- Mathew Hayden
"Cricketers like Sachin come once in a lifetime, and I am privileged he played in my time"
- Wasim Akram
"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player"
- Shane Warne
"Everybody gets 15 minutes of fame. But if there's one person I've admired over a 15-year of period, it's definitely Sachin." - Brain Lara
"Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there
is something we don't know, something beyond scientific measure. Something
that allows him to soar, to roam a territory of sport that, forget us, even
those who are gifted enough to play alongside him cannot even fathom. When
he goes out to bat, people switch on their TV sets and switch off their
lives "
- BBC on Sachin
"Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord is busy watching him batting!!!." - A Sachin Fan
1998ல் 90வது பிறந்தநாளில் டான் பிராட்மானும் சச்சினும் சந்தித்து கொண்ட நிகழ்வை தூர்தர்ஷன் செய்தியில் "கிரிக்கெட் விளையாட்டின் இரண்டு யுகங்கள் சந்தித்து கொண்டன" என்று கூறினார்கள், எவ்வளவு பொருத்தம், ஆம் சச்சின் ஒரு யுகம். ஒரு பேட்டியில், கிரிக்கெட் ஆட்ட ஓய்விற்கு பிறகு தனது வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை என்று கூறினார் சச்சின், ஆம் எங்களுக்கும் அப்படி தான் சச்சின், நீங்கள் இல்லாத கிரிக்கெட்டை நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது. ஆனால் கவலைப்படாதீர்கள் சச்சின் உங்களின் இந்த இருபது ஆண்டு ஆட்டத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் எங்களுடன் சேர்ந்து, எந்த பதற்றமும் இல்லாமல், ஒரு ரசிகராக. நீங்கள் எங்களுக்கு இதுவரை கொடுத்த மற்றும் இனிமேல் கொடுக்கப்போகும் அனைத்திற்கும் பல்லாயிரம் நன்றிகள் சச்சின்.
Labels:
சச்சின்
Subscribe to:
Post Comments (Atom)
Bharathi
Categories
- 787 Dreamliner (1)
- English (2)
- அகிலன் (1)
- அசோகமித்திரன் (1)
- அரசியல் (1)
- அறிவியல் (1)
- அனுபவம் (2)
- இந்த வாரம் (2)
- இலக்கியம் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- கட்டுரைத் தொகுப்பு (1)
- கதம்பம் (3)
- கலைஞர் (1)
- கிளிஞ்சல்கள் (6)
- குமுதம் (1)
- கேணி பாலு மகேந்திரா (1)
- கொலை வழக்கு (1)
- சச்சின் (1)
- சஞ்சீவ் நந்தா (1)
- சித்திரப்பாவை (1)
- சியாட்டல் நாட்கள் (9)
- சிறுகதை (3)
- சுதந்திர தினம் (1)
- செய்தி (1)
- செய்திகள் (1)
- செய்திக்கதம்பம் (2)
- ஞான பீட (1)
- தமிழ் (1)
- தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் (1)
- திரை விமர்சனம் (10)
- திரைவிமர்சனம் (1)
- நாவல் (2)
- நான் ரசித்த படங்கள் (3)
- புத்தகக்காட்சி (2)
- புத்தகம் (8)
- புனைவு (1)
- மின்னஞ்சல் (1)
- லஞ்சம் (1)
- விமர்சனம் (2)
1 comment:
Malai, 20 varusathayum 5 nimisam (padikkum pothu) kan munnala kondu vaknathathukku nandri
Post a Comment