Sunday 11 October 2009

சியாட்டல் - சிறு குறிப்பு

சியாட்டல், வாசிங்டன் மாநிலத்தின் ஒரு முக்கிய நகரம், பெரிய நகரம். கடலோரத்தில் அமைந்திருக்கும் அழகான நகரம். இது அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து மணிக்கு 96 மைல் வேகத்தில் சென்றால் ஒரு மணி நேரத்தில் கனடா வந்துவிடும். அமெரிக்க கனடா எல்லையில் அமைந்திருக்கிறது சியாட்டல். சியாட்டலுக்கு இருக்கும் பல பெயர்களில் மழை நகரம் (ரெயின் சிட்டி) பிரசித்தம். இங்கு எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் என்பார்கள். நான் முதன் முதல் சியாட்டல் ஒரு மே மாதம் வந்தேன், முதல் நாள் நான் அலுவலகம் சென்றது கொட்டும் மழையில். Sleepless in Seattle படம் பார்த்தீர்களா அதில் tom hanks வீட்டை காட்டும் போதெல்லாம் மழையில் தான் காட்டுவார்களாம். வாசிங்டன் மாநிலத்தை Evergreen state (பசுமை மாநிலம்) என்று அழைக்கிறார்கள், வாசிங்டன் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம். இலையுதிர் காலத்தில் கூட இங்கு பெரும்பான்மையான மரங்களில் இலை உதிர்வதில்லை, எப்போதும் பசுமையே. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் வாஷிங்டன் டி.சி (Washington District of Columbia) வேறு இந்த வாஷிங்டன் மாநிலம் வேறு. வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவின் தலைநகரம், வாஷிங்டன் மாநிலத்தின் தலைநகரம் ஒலிம்பியா.

இந்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் downtown என்று ஒரு இடம் உண்டு, அது தான் அந்த நகரத்தின் மையப்பகுதி, வர்த்தகப் பகுதி. சியாட்டலில் அனைத்து விதமான போக்குவரத்தும் உள்ளது. துறைமுகம், விமான நிலையம், தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளன. பொதுவாக பல அமெரிக்க நகரங்களில் பேருந்து வசதிகள் அவ்வளவு அதிகமா இருக்காது காரணம் இங்கு ஆளாளுக்கு குறைந்தது ஒரு car (மகிழுந்தி) வைத்திருக்கிறார்கள். நம்மூரில் தான் கார் மகிழுந்தி, இங்கு சாதா உந்தியாகத்தான் கருதப்படுகிறது. சியாட்டலில் பேருந்து வசதிகள் நன்றாகவே இருக்கிறது. நாலைந்து பேருந்து பிடித்தாவது தொலைவாக போக வேண்டிய இடத்துக்கு கூட போய் விடுகிறோம். இங்கு இணையத்தளத்தில் நாம் செல்லும் பேருந்தை track செய்ய வசதியுண்டு. பேருந்தில் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் ஒரே டிக்கெட் தான் , ஒரு டிக்கெட் மூன்று மணி நேரத்திற்கு செல்லும், அதற்குள் எந்த பேருந்திலும் ஏறி கொள்ளலாம். தற்போது ஒரு டிக்கெட்டின் விலை 1.75$. மாதம் மாதம் பஸ் பாஸ் விற்கிறார்கள், அதை வாங்கிக்கொண்டால், ஒரு மாதத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம்.

சியாட்டல் டெளன்டவுன் புகைப்படம் கீழே.


இங்கு ஃபெர்ரி (சின்ன கப்பல்) வசதியும் உண்டு, பக்கத்தில் உள்ள தீவுகளுக்கு செல்ல இதை பயன்படுத்துகிறார்கள். இங்கிருந்து கனடாவுக்கு செல்ல கப்பல் வசதி உள்ளது.

சியாட்டல் விமான நிலையத்தின் பெயர் சி-டக் (sea-tac) விமான நிலையம், அதில் சி -சியாட்டல், டக் - டகோமா. டகோமா என்பது சியாட்டலுக்கு பக்கத்தில் இருக்கும் நகரம்.

தொடர்வண்டி போக்குவரத்தும் ஓரளவுக்கு உபயோகப்படுதப்படுகிறது. புதிதாக சியாட்டல் டெளன்டவுனிலிரிந்து விமான நிலையத்திற்கு தொடர் வண்டி சேவை தொடங்கியிருகிறார்கள்.

வாஷிங்டன் மாநிலத்தில் வரி கொஞ்சம் அதிகம், 9%. செருப்பு வாங்கினாலும், லேப்டாப் வாங்கினாலும் இதே வரி தான், 100$க்கு ஒரு பொருள் வாங்கினால் 109$ பணம் செலுத்த வேண்டும். இந்த வரி வாஷிங்டன் மாநிலத்திற்கு மட்டும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரி வரி. பக்கத்தில் இருக்கும் போர்ட்லேண்டில் வரியே இல்லை. பல இடங்களில் நம்மவர்களை காணலாம் குறிப்பாக பெல்வியுவ், ரெண்டன் போன்ற பகுதிகளில் பலர் இருக்கிறார்கள். பல இந்திய உணவகங்களும், கடைகளும் உள்ளன, என்ன, ஒரு தோசைக்கு சுமாராக 5$ செலவாகும்.

சியாட்டளின் சிறப்பாக சில விசையங்கள் உள்ளன.
1. மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் சியாட்டல் பக்கத்தில் உள்ள ரெட்மண்டில் உள்ளது, பில் கேட்ஸ், ஸ்டீவ் பல்மோர் ஆகியோர் வீடுகள் கூட இங்கு தான் இருக்கிறது.

2. Starbucks Coffee தலைமையகம் இங்கு தான் இருக்கிறது. வாஷிங்டன் மாநிலம் காஃபி அதிகமாக குடிக்கும் மாநிலமாகும்.

3. போயிங் அலுவலகங்கள், தளங்கள் மற்றும் விமான assembly மையங்கள் இங்கு இருகின்றன. சியாட்டலை சுற்றி பல இடங்களில் போயிங் அலுவலகங்களும், தளங்களும் உள்ளன. எவரட்டில் உள்ள விமான assembly மையத்தில் போயிங் 747, 767, 777 மற்றும் 787 ரக விமானங்கள் assemble செய்யப்படுகின்றன (ஒன்றிணைக்கபடுகின்றன). பொது மக்கள் இந்த இடத்தை பார்க்க வாரத்தில் ஏழு நாளும் அனுமதி உண்டு. போயிங் இருப்பதால் இந்நகரத்திற்கு ஜெட் சிட்டி (Jet City) என்ற பெயரும் உண்டு.

4. Space Needle - சியாட்டளின் உயரமான டவர். 605 அடி, இதன் 520ஆவது அடியில் SkyCity என்ற ரெஸ்டாரெண்ட் உள்ளது, இதன் சிறப்பு, அவ்வளவு உயரத்தில் அந்த ரெஸ்டாரெண்ட் சுற்றிக் கொண்டிருக்கும். இரவில் Space Needle எப்படி இருக்குமென்று கீழே பாருங்கள்.


இது சியாட்டல் பற்றிய ஒரு மைக்ரோ குறிப்பு. இவை தவிர இங்கு சுற்றி பார்க்க அருவிகளும், பனி மலைகளும், ரெயின் பாரஸ்ட்களும், கடற்கரைகளும் பல இருக்கின்றன. இவை பற்றியும், சியாட்டளின் வாழ்க்கை முறை, வேலை போன்ற மற்ற விசையங்கள் பற்றியும் அடுத்த பதிவுகளில்.

1 comment:

Ananya Mahadevan said...

very informative.. I was expecting more natural sceneries pictures of seattle because it is known for its scenic beauty. Nice post.