Friday 1 January 2010

பூக்களிலிருந்து புத்தகங்களில் என் படைப்பு

இந்த வருட புத்தகத் திருவிழாவில், திரு. மாதவராஜ் அவர்கள் முயற்சியில் பவா.செல்லதுரை அவர்களின் ஒத்துழைப்பில் வலைப்பூக்களில் இருந்து சில சிறந்த படைப்புகளை நான்கு புத்தகங்களாக தொகுத்து வம்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தகங்கள் பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக்கவும். இதில் ஒரு புத்தகம், வலைப்பதிவர்களின் அனுபவங்களின் தொகுப்பான "பெருவெளிச் சலனங்கள்". இத்தொகுப்பில் அடியேனின் இந்தப்பதிவு தேர்வு செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. என் எழுத்தை தேர்வு செய்த மாதவராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். என் படைப்பை புத்தகத்தில் பார்ப்பதற்கு நான் இன்னும் சில வாரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது, என் நண்பர்களை வாங்க சொல்லியிருக்கிறேன். சென்னை சென்றவுடன் பெருவெளிச் சலனங்களை படித்துவிட்டுத்தான் அடுத்தவேலை.

நான் இந்த வலைப்பூ முகவரியை பதித்து மூன்று வருடம் ஆனாலும், நான் எழுத ஆரம்பித்தது 2008 டிசம்பரில், இந்த டிசம்பருடன் ஒரு வருடம் ஆகிறது. முதல் மூன்று பதிவு எழுதியபின் பின்னூட்டம் ஏதும் இல்லாததால் யாரும் என் பதிவை படிப்பதில்லை என்று கருதி தொடர்ந்து எழுதவில்லை (இருந்தும் இவ்வளவு ஆசை இருந்திருக்ககூடாதுன்னு இப்ப புரியுது). பிறகொருநாள் எதச்சையாக என் வலைப்பூவை பார்த்த போது மகேஸ்வரன் என்பவர் பின்னூட்டம் இட்டிருந்தார் (மார்ச்சில் இட்டிருந்த பின்னூட்டத்தை ஜூனில் தான் பார்த்தேன்) , முகம் தெரியாத ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டது மகிழ்ச்சியை தந்தது, அது ஒரு வகையில் யாரோ நாம் எழுதியதைகூட படிக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியது. எழுதுவதில் ஆர்வத்தை அதிகப்படுத்தினேன், இனி தொடர்ச்சியாக எழுதவேண்டும் என்று முடிவு செய்தேன், என்னால் முடிந்தளவு அதை நிறைவு செய்தேன். நான் படித்த புத்தகம் பற்றி, பார்த்த திரைப்படம் பற்றி, பொது விசையங்கள், மனிதர்கள் என எல்லாம் எழுதினேன். கிளிஞ்சல்கள் என்ற தலைப்பில் என்னை பாதித்த மனிதர்களை பற்றி எழுதிக்கொண்டிருப்பது அதில் முக்கியமானது. பெருவெளிச் சலனங்கள் புத்தகத்தில் வந்திருப்பதும் கிளிஞ்சல்களில் எழுதிய மாரி என்கிற மொட்ட தாத்தா என்ற பதிவு தான். இப்போது என் வலைப்பூவில் 41 பதிவுகள் இருக்கிறன, எண்ணிக்கை அதிகமில்லை என்றாலும், சில நேரங்களில் இவ்வளவு எப்படி எழுதினேன் என்று ஆச்சர்யமாகவும் இருக்கிறது. இதை ஒரு ஆரம்பமாகவே எண்ணுகிறேன். இந்த வருடம் என் வலையுலக வாழ்க்கையை பொறுத்தவரை சோம்பலாக ஆரம்பித்தாலும் மிக பிரகாசமாக முடிந்திருக்கிறது, இதை அடுத்த வருடத்திற்கு அச்சாரமாக வைத்துகொள்ளலாம் என்றே கருதுகிறேன்.

நான் எழுதுகிறேன் என்று சொன்னதும் என் அப்பா, அம்மா இருவரும் மகிழ்ந்து உற்சாகமூட்டினர். தன் அலுவலக நண்பர்களுக்கு என் வலைப்பூ முகவரியெல்லாம் கொடுத்து படிக்க சொன்ன என் அப்பா, எங்கள் ஊரில் இருந்த அந்தியூர் அண்ணனை பற்றி எழுதியதை படித்து கண் கலங்கியதாக கூறிய என் அம்மா, பின்னூட்டம் மூலம் தொடர்புகொண்டு பிறகு நேரில் சந்தித்து பேசி, நான் எழுதுவதை உற்சாகப்படுத்தி, அவருடைய வலையில் என் வலைப்பூவை பற்றியும் எழுதிய மகேஸ்வரன் (இவர் வலையில் என் வலைப்பூவை பற்றி குறிப்பிட்டிருந்த அடுத்தநாள் என் வலைப்பூவின் ஹிட் கவுன்ட் 300-400 என்று எகிறியது, தலை கால் புரியவில்லை அன்று, இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கம்போல் ஒற்றை படைக்கும் இரட்டை படைக்கும் நடுவில் திண்டாடிய போதுதான் சகஜமானேன்), நான் எழுதுவதையெல்லாம் படித்துவிட்டு "ரொம்ப நல்ல இருக்கு" என்று ஊக்கப்படுத்திய என் கல்லூரி, அலுவலக, வலைப்பூ மற்றும் என் அறை நண்பர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

புது வருடத்தில் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

3 comments:

மாதவராஜ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி... தங்களின் எழுத்துக்கள் மென்மேலும் பரவட்டும்...

Annamalai Swamy said...

நன்றி மாதவராஜ் அண்ணா. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Unknown said...

Vazhthukkal Nanbane... un ezhuthu pani todarattum.