குறிப்பு 1: முதல் கதை பதிவில் குறிப்பிட்டிருக்கும் போட்டிக்கு முதலில் எழுத நினைத்த கதை இது தான்.
குறிப்பு 2: முதல் கதை பதிவில் குறிப்பிட்டிருக்கும் "Machine Life" கதை முதல் பரிசுக்கு தேர்வாகியிருக்கிறது.
அதிகாலை நேரம், சூரியன் இன்னும் ஒளிந்து கொண்டிருந்தது, பூங்காவில் அதிக கூட்டம் இல்லை, இனிமையான நாள், ஒரு கனவு போல் நடந்து கொண்டிருந்தேன். 'ராம்' என்று யாரோ பின்னாலிருந்து அழைத்தார், திரும்பி பார்த்தால் அட, யார் இவள்?, ஜாகிங் உடையில் ஒரு அழகான பெண் என்னை பார்த்து நின்று கொண்டிருந்தாள்.
"நீங்க ராம் தானே?"
"அமாம், நீங்க?" என்றேன் கேள்விக்குறியுடன்
"என்னை தெரியலையா உங்களுக்கு?" என்றாள் ஒரு சிரிப்புடன், இப்போது இன்னும் அழகாக இருந்தாள்.
"உங்கள பார்த்ததில்லையே" என்றேன் அவளை ரசித்து கொண்டே
"நல்ல ஞாபகப்படுத்தி சொல்லுங்க என்றாள்" மறுபடியும் அதே சிரிப்பு, ஜெராக்ஸ் எடுத்தார் போல்.
"உங்கள மாதிரி தேவதைய ஒருதடவ பார்த்தா யாரவது மறப்பாங்களா? உங்கள இப்பத்தான் பார்க்கிறேன்"
"இப்பத்தான் பாக்கறீங்க, ஆனா இதுக்கு முன்னாடி பேசியிருக்கீங்க" என்றாள்.
என் ஞாபத்தில் எவ்வளவு தேடியும், இந்த குரலை யாருக்கும் பொறுத்த முடியவில்லை.
சலிப்புடன் "ஏதாவது, பேங்க், கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்டதா?"
"என்ன நக்கலா?" என்று பொய் கோபம் காட்டினால், அப்பவும் அழகாக இருந்தாள்.
"சரி, இன்னொரு clue தரேன், நாம கடைசியா பேசினது, ரெண்டு மாசம் முன்னாடி"
"ஹே, சாருலதாவா நீ?" என்றேன் ஆச்சர்யத்துடன்.
"அப்பாடா, ஞாபகம் வச்சிருக்கியே, சந்தோசம்"
சாருலதா!, ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி, நல்ல விசயங்களை மட்டும் பகிர்ந்து கொண்டு, பிறகு சாட்டில் எழுதி, படித்து, பேசி, நன்றாக பழகினோம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முந்தைய ஆறு மாதங்களில் நடந்த எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம். இவள் அப்போது ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருந்தாள், இரண்டு மாதம் முன்பு, ப்ராஜெக்ட் மற்றும் பரீட்ச்சை இருப்பதால் இன்னும் கொஞ்ச நாள் chat பண்ண முடியாது என்று சொன்னாள், எப்பவாவது மெயில் அனுப்புவாள், அதற்கு பிறகு இப்போதுதான் சந்திக்கிறோம்.
ஃபேஸ்புக்கில் என் போட்டோவை பார்த்திருக்கிறாள், அவள் போட்டோ வைத்து கொண்டதில்லை.
"ப்ராஜெக்ட் எப்படி போச்சு? "
"ப்ராஜெக்ட், பரீட்ச்சை எல்லாம் நல்லா முடிஞ்சுது" என்றாள்.
"கோவிச்சுக்காத, ரெண்டு வாரம் முன்னாடி தான் எல்லாம் முடிஞ்சுது, நிறைய நண்பர்கள் அவுங்க வீட்டிற்கு கூப்பிட்டிருந்தார்கள், அங்கெல்லாம் போயிட்டு அப்படியே டைம் போயிருச்சு, சென்னை வந்ததும் உன்னை எங்கயாவது மீட் பண்ணனும்னு நினைச்சிட்டு இருந்தேன், அதுக்குள்ள எதேச்சையா இங்கயே பார்த்துட்டேன்."
"பரவாயில்லை, நீயே மெயில் பண்ணுவன்னு காத்துகிட்டு இருந்தேன், நானும் ரெண்டு மாசம் பிசி தான் வொர்க் கடினமா போயிட்டிருந்தது" சமாளித்தேன்.
"இங்க தான் உன் வீடு இருக்கா?"
"இல்ல, அக்கா வீடு இங்க இருக்கு, அவங்க வீட்ல தான் இப்ப இருக்கேன்." அடிக்கடி சந்திக்கலாம் என்று நினைத்து கொண்டேன்.
"காபி குடிக்கலாமா?" என்று கேட்டு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றோம்.
காபியை வாங்கி அவளிடம் கொடுத்த போது, முதல் முறையாக விரல்கள் தொட்டுக் கொண்டன, நான் மெய் மறந்து கொண்டடிருந்த போது மறுபடியும் யாரோ கூப்பிட்டார்கள்
"டேய் ராம், எந்திரிடா, என்ன இன்னும் தூக்கம்"
அம்மா கத்தியதில் சட்டென்று எழுந்த்தேன், "ச்சே, எல்லாம் கனவா? சாரு, நெஜமாலும் இவ்வளவு அழகா இருப்பாளோ, இன்னைக்கு கண்டிப்பா போட்டோ அனுப்ப சொல்லணும்".
"ஏம்மா, அதுக்குள்ளே எழுப்பிட்ட?'
"டேய், அப்பா ஊரில் இல்ல, ஜிம்மி எந்திரிச்சதலிரிந்து கத்திகிட்டே இருக்கு, அத பக்கத்து பார்க் வரைக்கும் வாக்கிங் கூட்டிட்டு போடா."
"அப்பாவுக்குதான், வேலையில்ல நீயுமாம்மா?"
"அது கத்திகிட்டே இருக்கும், இன்னைக்கு ஒரு நாள் கூட்டிட்டு போடா"
"சரிம்மா"
சிறிது நேரத்தில், பல் தேய்த்து, முகம் கழுவி ஜிம்மியுடன் பார்க்கிற்கு கிளம்பினேன்.
அதிகாலை நேரம், சூரியன் இன்னும் ஒளிந்து கொண்டிருந்தது, பூங்காவில் அதிக கூட்டம் இல்லை, இனிமையான நாள், ஒரு கனவு போல் நடந்து கொண்டிருந்தேன். 'ராம்' என்று யாரோ பின்னாலிருந்து அழைத்தார், திரும்பி பார்த்தால், அட!
கதை பிடித்திருந்தால் தமிலிஷில் ஓட்டளிக்கவும்.