Sunday, 9 August 2009

இலக்கியமும் சினிமாவும் - பாலு மகேந்திரா உரை

எழுத்தாளர் பத்திரிக்கையாளர் ஞாநி கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அவர் வீட்டில்அவருடைய நண்பர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுடன் இணைந்து கேணி என்ற இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த இரண்டு மாதமாக நடத்தி வருகிறார். பிரதி மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமைகளில் இந்த சந்திப்பு நடக்கிறது. மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை நடக்கும் இந்த சந்திப்பில் எதாவது ஒரு படைப்பாளியோ வசாகரோ இலக்கியம் தொடர்பாக பேசுகின்றனர். முதல் இரண்டு மாதங்கள் எஸ் ராமகிருஷ்ணனும் பிரபஞ்சனும் பேசினார். இது எனக்கு முதல் மாதத்தில் இருந்தே தெரிந்தாலும் முதல் இரண்டு சந்திப்புக்கு செல்ல இயலவில்லை. இந்த மாதம் சென்றேன், அதாவது இன்று. இன்று "இலக்கியமும் சினிமாவும்" என்ற தலைப்பில் இயக்குனர் பாலு மகேந்திரா பேசினார்.

இதற்க்கு முன் நான் கலைஞர் கருணாநிதி நகர் சென்றதில்லை என்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஞாநியின் வீட்டை கண்டுபிடிக்க முடிந்தது. அவர் வீட்டின் பின்புறம் ஒரு கேணியை சுற்றி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நானும் என் நண்பன் அசோக்கும் ஒரு இடத்தில் அமர்ந்தோம். சரியாக எங்கள் தலைக்கு மேல ஒரு தென்னை மரத்தில் காய்ந்த மட்டை அபாயகரமாக தொங்கிகொண்டிருந்தது.கூட்டம் சரியாக மாலை 4:40 மணிக்கு தொடங்கியது. முதலில் பேசிய ஞாநி முன்னதாக இன்று பேசவிருந்த அசோகாமித்ரனுக்கு உடல் நிலை சரி இல்லாததால் வர இயலவில்லை என்றும் அதனால் அடுத்த மதம் பேசவிருந்த திரு. பாலு மகேந்திரா இந்த மாதம் பேச சம்மதித்து வந்ததிற்கு நன்றி தெரிவித்தார். அசோகாமித்ரனுக்கு இப்போது உடல் நிலை நலமாக இருப்பதாகவும் கூறினார். பிறகு திரு. பாலு மகேந்திரா "இலக்கியமும் சினிமாவும்" என்ற தலைப்பில் பேச தொடங்கினார். நான் இந்த கூட்டதிற்கு ஒரு பேனா பேப்பர் எடுத்து செல்லவில்லை, ஆகவே கொஞ்சம் சிரமப்பட்ட என்னுடைய கைபேசியில் குறிப்பெடுத்தேன். நானெடுத்த குறிப்பில் இருந்து சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

1. எந்த ஒரு கலைப்படைப்பிலும் இருக்கும் இரண்டு முக்கியமான விசையங்கள்
அ. உருவம் (form)
ஆ. உள்ளடக்கம் (Content)
2. உருவம் எனபது என்ன வடிவில் அந்த படைப்பு படைக்கப்படுகிறது. உருவம் தான் அவருடைய ஆற்றலை, அந்த கலையின் மீதி அவருகிருக்கும் ஆளுமையை காட்டுகிறது (ஒரு எழுத்தாளருக்கு மொழி ஆளுமையை போல).
3. உள்ளடக்கம் என்பது என்ன பொருளை என்ன கருத்தை சொல்கிறது. உள்ளடக்கம் ஒரு படைப்பாளியின் சார்புகளை, அவர் படைக்கும் படைப்பின் மீதிருக்கும் அவர் பார்வையை காட்டுகிறது.
4. ஒரு சிறு கதையை அல்லது நாவலை படமாக்கும் போது அதன் உள்ளடக்கத்தை மட்டுமே எடுத்து படமாக்க வேண்டும், அந்த படைப்பின் உருவத்தை எடுக்கக்கூடாது.
5. ஒரு படைப்பை படமாக்க முதல் தேவை எந்த விசையம் அந்த படைப்பை உருவாக்க படைப்பாளியை தூண்டியது அதை உணர வேண்டும். (We should understand/Feel the point which triggered the author to write that story and we should start from there)
6. எழுதிய எல்ல வற்றையும் அப்படியே படமாக்க முடியாது. எழுத்தில் கிடைக்கும் சில பரவசங்களை காட்சிகளாக்க முடியாது. உதாரனமாக சுஜாதா ஒரு கதையில் "வீட்டில் இருப்பவரிடம் பிணங்கிகொண்டு பின்புறம் முகத்தை தொங்கப்போட்டு அமர்ந்திருக்கும் ஒரு சிறுமியை போல் அந்த வீடு மற்ற வீடுகளில் இருந்து தனித்திருந்தது" என்கிறார் இதை அப்படியே யாராலும் படமாக்க முடியாது. ஒரு எழுத்தில் கிடைக்கும் பரவசம் படிப்பவரின் கற்பனையை பொறுத்து மாறுகிறது (படிப்பவரை co-creator என்கிறார்). இது படத்தில் சாத்தியமில்லை. எழுத்தில் சிலவற்றை படிப்பவரின் கற்பனைக்கு விட்டு விடலாம், படங்களில் அப்படியில்லை.
7. நான் ஒரு போதும் ஒரு படைப்பாளியின் Master Piece ஐ தொட மாட்டேன்.
8. ஒரு படைப்பு சாக வரம் பெறுவது காலத்தின் கையில் இருக்கிறது.
9. நாம் சிறு வயதில் இருந்து கேட்டு வரும் பாட்டி வடை சுட்ட கதை ஒரு Master Piece. பல லட்சம் குழந்தைகள் கேட்ட, கேட்டு கொண்டிருக்கும், கேட்க போகும் கதை. (முதன் முதலில் இதை சொன்னவர் யாரோ?)
10. ஒரு படைப்பாளியை அவருடைய சிறந்த படைப்பை வைத்து எடைபோட வேண்டும். (Judge a creator by his master piece).
11. ஒரு கதையை படமாக்கும் முன், அதன் உள்ளடக்கத்தை மட்டும் (Synopsis) எடுத்துக்கொள்ள வேண்டும், அது வரைக்கும் தான் அந்த கதைக்கும் நமக்குமான தொடர்பு, பிறகு நமது படைப்பாற்றலை வைத்து அதற்க்கு உருவம் கொடுக்க வேண்டும். இந்த ஊடகமாற்றத்திற்கு நமது படைப்பாற்றலை மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதற்க்கான சுதந்திரத்தை நாம் எடுத்துகொள்ள வேண்டும், அதன் மூலத்தில் இருப்பதுபோல் அப்படியே இருக்கவேண்டிய அவசியமில்லை.
12. இந்த கூடத்தில் கலந்து கொண்டவர்களில் குறைந்த பட்சம் ஒருவர் கதாசிரியர் ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதிற்க்கான பலனை அடைந்ததாக கருதுவேன் என்றார். தமிழ் திரையுலகில் கதாசிரியருக்கு பெரிய பஞ்சம் இருப்பதாக கூறினார்.

என்னால் முடிந்த வரை திரு. பாலு மகேந்திரா கூறிய கருத்துக்களை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். அவர் பேசிய பிறகு மாலனின் தப்பு கணக்கு என்கிற சிறுகதையை குரும்படமாக்கிய முறையை விளக்கினார். முதலில் அந்த சிறுகதை படிக்கப்பட்டது. பிறகு அந்த கதையை அடிப்படையாக வைத்து அவர் இயக்கிய குறும்படம் காட்டப்பட்டது (சன் தொலைக்காட்சியில் பாலு மகேந்திரா கதை நேரத்தில் ஒளிபரப்பானது). அந்த குறும்படத்தில் அவர் என்னென்ன மாறுதல்கள் செய்தார் எதையெதை அப்படியே மூலத்தில் இருந்து அப்படியே வைத்துக்கொண்டார் என்று விளக்கினார். இந்த கதை நேரத்தில் ஒரு சுஜாதாவின் சிறுகதையை படமாக்கும் போது அதன் முடிவை மாற்றி அமைத்ததையும் கூறினார்.

இதற்க்கு நடுவில் கேள்வி பதில் பகுதியும் இருந்தது. அதில கேட்கப்பட்ட கேள்விகள் சில

கேள்வி: நீங்கள் இப்போது பரிந்துரைக்கும் புத்தகம்?
பாலு: மாலனின் சிறுகதைகள்.

கேள்வி: உங்களின் படைப்புகளில் சிறந்ததாக நீங்கள் கருதுவது?
பாலு: வீடு, சந்தியா ராகம் (இந்த இரு படத்திருக்கும் இப்போது நெகடிவ் இல்லையாம்)

கேள்வி: உங்களின் படைப்புகளில் மோசமானதாக நீங்கள் கருதுவது?
பாலு: நீங்கள் கேட்டவை.

கேள்வி: நீங்கள் பார்த்தவைகளில் சிறப்பாக படமாக்கப்பட்ட நாவல்? (அடியேன் கேட்டது)
பாலு: பதேர் பாஞ்சலி.

நான் இந்த மாதிரி கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறை.முதல் இரண்டு நிகழ்ச்சிகளை தவறவிட்டதற்கு வருத்தப்படுகிறேன். ஒரு ஞாயிற்று கிழமை மாலை உன்னதமாக கழிந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.அடுத்த சந்திப்பு செப்டம்பர் 13 அன்று நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

1 comment:

Unknown said...

முதல் இரண்டு கேள்விகளும் அடியேன் கேட்டது...

கிருஷ்ணபிரபு,
சென்னை.