Sunday, 13 September 2009

ஈரம் - திரைப்பார்வை


இயக்குனர் சங்கரின் அடுத்த தயாரிப்பு ஈரம். அவருடன் பணியாற்றிய உதவி இயக்குனர் அறிவழகன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். மிருகம் படத்தில் நடித்த ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். தன்னுடைய ஒவ்வொரு தயாரிப்பும் எதாவது ஒரு வகையில் புதுமையாக அல்லது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக சங்கர் இருப்பார் போல, அந்த வகையில் ஈரம் படமும் ஒரு புதுமையான அனுபவம் கொடுக்கிறது. சங்கர் தயாரிப்பு என்பதால் கொஞ்சம் எதிர்ப்பபுடன் படத்துக்கு சென்றேன், படம் சிறப்பாக இருந்தது. தமிழில் திரில்லர் வகை படங்கள் மிக குறைவு, அந்த குறையை போக்க வைத்திருக்கிறது ஈரம்.

பெரிய அப்பார்ட்மென்டில் ஒரு பெண்ணின் மரணம் நிகழ்கிறது, அதை விசாரிக்கும் காவல் துறை, கிடைக்கும் ஆதாரங்களை வைத்து அது ஒரு தற்கொலை என்று வழக்கை மூட நினைக்கையில், ACP வாசுதேவன் அந்த வழக்கில் சில மர்மங்கள் இருப்பதாக தோன்றுவதால் தானே அந்த வழக்கை மேலும் விசாரிக்க விரும்புவதாக கூறி, அந்த வழக்கு விசாரணையை தொடங்குகிறார். இந்த வழக்கை விசாரிக்க அவர் ஆர்வம் காட்ட முக்கிய காரணம் இறந்த பெண்ணும் இவரும் பழைய காதலர்கள். முதல் கட்ட விசாரணையில் அந்த மரணம் ஒரு தற்கொலை போலவே தோன்றுகிறது, அந்த சமயத்தில் அடுத்தடுத்து அந்த அப்பார்ட்மென்டில் வசிக்கும் இருவர் இறக்க, விசாரணை சூடு பிடிக்கிறது. நான்காவதாக நடக்கும் கொலையை நேரில் பார்க்கும் ACPயால் அந்த கொலைகாரனை பிடிக்க முடியாமல் போகிறது. இடைவேளைக்குப் பிறகு இந்த தொடர் கொலைகளுக்கான காரணங்கள் தெரிய வரும் போது சில ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் காத்திருக்கிறது.

ACPயாக ஆதி, பிசினஸ் மேனாக நந்தா, அவர் மனைவியாக சிந்து நடித்திருக்கிறார்கள். ஒரு காவல் அதிகாரிக்கான கம்பீரம் மற்றும் மிடுக்குடன் குறையுமில்லாமல் மிகையுமில்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் ஆதி, நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் அவருக்கு சிறப்பான இடம் காத்திருக்கிறது, வாழ்த்துக்கள் ஆதி. கல்லூரி மாணவியாகவும், பின்னர் மனைவியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் சிந்து. நந்தாவும் தன் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். சரண்யா மோகன், ஸ்ரீ நாத் என்று துணை பாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று மிக சிறப்பாக நடித்திருக்கும் மற்றொரு நடிகர் தண்ணீர்.

படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஈரமாக இருக்கிறது, தண்ணீர் இடம் பெறாத காட்சிகள் மிக குறைவு. இந்த காட்சிகள் எதுவும் திணிக்கப்படாமல் இயல்பாக வந்து போகிறது. படத்தில் எனக்கு பிடித்த மற்றொரு அம்சம் பாடல், ஒரே ஒரு பாடல் தான் அதுவும் காட்சிகளுக்கு பின்னணியில் ஒலிக்கிறது, மழையே! மழையே! என்ற அந்த பாடல் சிறப்பாக இருந்தது. படத்திற்கு இசை தமன், பாய்ஸ் படம் பார்த்தீர்களா? அதில் குண்டாக வருவரே, அவரேதான். இசை நன்றாக இருந்தது, ஒரு திர்ல்லர் படத்திற்க்கான இசையை சிறப்பாக அமைத்திருக்கிறார் தமன், அவருக்கு ஒரு பூங்கொத்து. முதல் பாதியில் கொலை விசாரணயின் போது நடு நடுவே ஆதி சிந்து காதல் காட்சிகள் வந்து போகின்றன, இந்த காட்சிகளில் எடிட்டிங் சிறப்பாக இருந்தது. கேமரா மழையில் நனைந்தது போல் ஈரமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமகம்சா, காட்சிகள் அணைத்தும் அழகு + திரில், இவருக்கும் ஒரு பூங்கொத்து. மேல் குறிப்பிட்ட அனைத்தும் படத்திற்கு பக்க(கா) பலமாக அமைந்திருக்கிறது. இத்தனையும் சிறப்பாக அமைய முக்கிய காரணம் இயக்குனர் அறிவழகன், தன் குருவிடம் சிறப்பாக பாடம் பயின்று வந்திருக்கிறார், சங்கரின் எந்த சாயலும் தெரியாமல் ஒரு புதுவிதமான அனுபவமாக இந்த படத்தை இயகியிருகிறார். மனதில் ஈரமில்லாதவர்களை பற்றிய இப்படத்திற்கு ஈரம் என்ற தலைப்பிட்டதற்கு ஒரு பூங்கொத்து, . திரில்லர் படம் என்பதற்காக திடீர் இசை, க்ளோஸ் அப் சாட், கதாபாத்திரங்கள் அனைவரையும் திகிலாக பேசவைப்பது என்றில்லாமல் சிறப்பான திரைக்கதை அமைத்து திகிலூட்டியிருகிருக்கும் இயக்குனர்அறிவழகனுக்கு ஒரு பொக்கே.இந்த படத்தின் மூலம் நம்பிக்கையான இயக்குனர் என்று பெயர் பெற்றுவிடுவீர்கள், இனி எடுக்க போகும் படங்களும் இதே போல் அல்லது இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். தொடர்ந்து தனது தயாரிப்பில் புதுமையையும், புதியவர்களையும் அறிமுகப்படுத்தி சிறந்த தயாரிப்பாளராக வெற்றிநடை போடும் இயக்குனர் சங்கருக்கும் ஒரு பொக்கே.

இந்த வருடத்தின் சிறந்த படங்கள் வரிசையில் ஈரம் படத்திற்கும், சிறந்த இயக்குனர் வரிசையில் அறிவழகனுக்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு. இந்த விமர்சனம் எழுதிகொண்டிருக்கும் போது என் வீட்டு குளியல் அறையின் கதவிடுக்கிளிரிந்து ஈரம் கசிந்து கொண்டிருக்கிறது, அது போல் நம் மனங்களிலும் ஈரம் கசியட்டும்.

1 comment:

Unknown said...

Ennama vmarsanam ezhuthara....nee yen assistant director aaga koodathu?