Thursday, 1 October 2009

சியாட்டல் - காலத்தை துரத்தும் பயணம்


அதோ இதோ என்றிருந்த என் சியாட்டில் பயணம் ஒரு வழியாய் உறுதியாகி 29 செப்டம்பர் இரவு கிளம்பி 30 அன்று காலை 10 மணியளவில் சியாட்டில் வந்தடைந்து மதியம் இரண்டு மணியளவில் இந்த பதிவை எழுதி கொண்டிருக்கிறேன். சியாட்டலில் இருந்து என் முதல் பதிவு. அலுவல் காரணமாக வெளிநாடு செல்வது மென்பொருள் துறையில் அன்றாடம் நிகழ்வது, அந்த வகையிலே இந்த பயணமும். இதற்கு முன்னரும் சியாட்டில் வந்திருக்கிறேன்.

சென்னையில் செப்டம்பர் 30 ௦௦:25AM மணிக்கு விமானம் ஏறி செப்டம்பர் 30 9:45AM மணிக்கு சியாட்டலில் வந்திறங்கினேன். தாய்லாந்து, ஜப்பான் வழியாக பயணம் செய்தோம், செய்தோம்? இதே ப்ரொஜெக்டில் என்னுடன் இணைந்து (அல்லது நான் அவருடன் இணைந்து) செயல் பட இன்னொருவரும் வந்தார். தாய்லாந்து சுவர்ணபூமி விமான நிலையத்தை வந்தடைந்த போது தாய்லாந்தில் மணி செப்டம்பர் 30 05:30AM. அங்கிருந்து டோக்கியோவுக்கு 07:00AM மணிக்கு கிளம்பிய விமானம் ஐந்தரை மணி நேர பயணத்துக்கு பிறகு டோக்கியோ நரிட்டா விமான நிலையம் வந்தடைந்த போது மணி 03:40PM. தாய்லாந்திலிருந்து டோக்கியோ வந்த விமானத்தில் ஒரு பனி பெண் (பாட்டி) வாயில், டிரகுலவிற்கு இருக்கும் பல் போல ஏதோ கட்டியிருந்தார், பார்ப்பதற்கே பயமாக இருந்தது. அங்கிருந்து 05:30PM மணிக்கு சியாட்டில் விமானம், எட்டு மணி நேர பயணத்துக்கு பிறகு சியாட்டில் அடைந்த போது மணி செப்டம்பர் 30 09:45AM. ஜப்பானில் 30ஆம் தேதி மாலை கிளம்பி சியாட்டலை 30ஆம் தேதி காலை வந்தடைந்தோம், என்ன ஒரு விந்தையான பயணம்? காலத்தை துரத்தி பிடிக்கும் பயணம். இந்தியாவுக்கும் சியாட்டளுக்கும் 11:30 மணி நேர வித்தியாசம், இந்தியாவில் செப்டம்பர் 30 இரவு 10 மணி என்றால், சியாட்டலில் செப்டம்பர் 30 காலை 9:30 மணி. இன்னும் கொஞ்ச நாளைக்கு இதுவரை வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் தூங்கவும், தூங்கிய நேரத்தில் வேலை செய்யவும் வேண்டும்.

பயண சமயத்தில் அதிகமாக தூங்கினேன், மிக கொஞ்சம் நேரம் படித்தேன் (இரா.முருகனின் "நெம்பர் 40 ரெட்டை தெரு") The Proposal ஆங்கிலப்படம் பார்த்தேன் நள தமயந்தி மாதிரியான படம், கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தது, இரண்டு மணி நேரம் போனது. அவ்வப்போது அவர்கள் எழுப்பி கொடுத்த இலை, தழைகளை மென்ற நேரம் தவிர பெரும்பாலான நேரம் தூங்கியே கழிந்தது.

கிளம்புவதற்கு முன் என் நண்பர்களிடம் சியாட்டில் நாட்கள் என்று என் வலைப்பூவில் எழுதுவேன் என்று கூறியிருந்தேன், வேலை அதிகமாக இருக்கும் உன்னால் அதெல்லாம் முடியாது என்று கூறினர். இங்கு வேலை பளு எப்படி இருக்கும் என்று இன்னும் தெரியவில்லை, எப்படி இருந்தாலும் குறைந்த பட்சம் வாரம் ஒரு பதிவாவது சியாட்டல் நாட்களின் கீழ் வெளியிட வேண்டும் நினைத்திருக்கிறேன், பார்க்கலாம்.