Thursday 13 August 2009

கிளிஞ்சல் 2 - மாரி என்கிற மொட்ட தாத்தா

என்னுடைய நினைவு தெரிந்த நாளிலில் இருந்து என்னுடைய 15 வயது வரையில் எங்கள் வீட்டுக்கு எதிரில் குடியிருந்தவர் மாரி. பெயர் மாரியாயிருந்தாலும் நான் என் அம்மா அப்பா அக்கா அனைவரும் மொட்டதாத்தா என்று தான் அழைப்போம். பல காலம் நான் காலை வீட்டை விட்டு வெளியில் வந்ததும் அவரை தான் முதலில் பார்ப்பேன்.எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த எங்கள் இடத்தில் ஒரு குடிசை அமைத்து அவரும் அவரது மனைவியும் வாழ்ந்துவந்தனர். அவர் வீட்டிற்கும் எங்கள் வீட்டிற்கும் நடுவில் ஒரு தார் ரோடு மட்டுமே. அவருக்கும் அவர் மனைவிக்கும் பல வருடமா பேச்சு வார்த்தை கிடையாது, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நான் பார்த்ததே இல்லை. அந்த குடிசையில் இரண்டு அறைகள் இருந்தன, எங்கள் வீட்டை நோக்கி இருந்த அறையில் அவரும் அதன் பக்கத்துக்கு அறையில் அவர் மனைவியும் குடியிருந்தனர். மாரி ஒரு சவரத் தொழிலாளி. கொஞ்சம் திக்கி திக்கி பேசுவார். அந்த ஒரு அறையே தான் அவர் உறங்கும் இடமும் உழைக்கும் இடமும். நான் 12வது முடிக்கும் வரை அவரை தவிர நான் வேற யாரிடமும் முடி வெட்டிக்கொண்டதாக ஞாபகம் இல்லை. அவரிடம் தலையை கொடுத்தல் என் அம்மாவின் ஆணைப்படி ஒண்ட வெட்டிவிடுவார், கிட்ட தட்ட மொட்டை அடித்து 15 நாள் ஆனா மாதிரி இருக்கும். மறுபடியும் முடிவெட்ட இரண்டு மாதம் ஆகிவிடும்.

மாரி சமைக்கவெல்லாம் மாட்டார், யாராவது வீட்டில் வாங்கி சாப்பிட்டு கொள்வார். தனது பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சில வீடுகளுக்கு சென்று வந்தால் அவர் பாத்திரம் நிறைந்து விடும் பின்பு அவர் வயிறும். தினமும் உணவு சாப்பிடுகிறரோ இல்லையோ கண்டிப்பாக மருந்து (சரக்கு) சாப்பிட்டாக வேண்டும். தினமும் மாலை எங்கள் ஊரிலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவுந்தப்பாடிக்கு கிளம்பிவிடுவார். மளிகை கடை, மருந்துக்கடை, திரை அரங்கு என்று கிட்டத்தட்ட எல்ல அத்யாவசியமான பொருளும் கிடைக்கும் இடம் கவுந்தப்பாடி. மாரி தினமும் மாலை பேருந்துலேயோ இல்லை மிதி வண்டியலேயோ கிளம்பி விடுவார். அவர் வாகனத் தேர்வு நேரத்தையும் கையிருப்பையும் பொறுத்தது. கையில் காசு கொஞ்சம் கம்மியாக இருந்தால் யாரிடமாவது வாங்கிக்கொண்டு கிளம்பிவிடுவார். தண்ணி அடித்துவிட்டு வரும்போது மிகவும் அமைதியாக இருப்பார் அல்லது அவர் நம்மை பார்த்து பேசாமல் அமைதியாக இருந்தால் அன்று அவர் தன்னியடித்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். தண்ணியடித்துவிட்டு அவர் யாரிடமும் பிரச்சனை செய்வதோ, உலறுவதோ இருக்காது. ஓரிருமுறை அவர் மனைவியுடன் சின்ன தகராறு செய்ததாக ஞாபகம்.

அவருக்கு எப்போதும் என் மேலும் என் அக்கா மேலும் தனிப்பிரியம் உண்டு. எப்போது கவுந்தப்பாடியில் இருந்து வரும்போதும் எங்களுக்கு கண்டிப்பாக எதாவது மிக்சர் அல்லது பக்கோடா பொட்டலம் வாங்கிவருவார். அவர் கையிருப்பை பொறுத்து ஒன்றோ இரண்டோ வாங்கி வருவார். பல நாட்கள் அவர் கிளம்பும் போதே நானும் என் அக்காவும் "எங்களையும் கவனிச்சுக்க மொட்டத் தாத்தா" என்று சொல்லியிருக்கிறோம். கண்டிப்பாக அவர் எங்களுக்கு எதாவது வாங்கி வருவார், அவர் வாங்கி வராத நாட்கள் மிக சொர்ப்பமே. அந்த மிக்சர்களுக்கு தனி சுவை இருக்கும், இப்போதும் அந்த சுவை தூரத்து உறவினரை போல எப்பவாவது மனதில் வந்து போகும். அவருக்கும் எங்களுக்கும் எப்போதும் நல்ல புரிதல் இருந்தது, அவருடன் பழகுவதை எங்கள் வீட்டில் யாரும் தடுத்தது இல்லை.

அந்த காலங்களில் மொட்டதாத்தா கிட்ட தட்ட எங்களில் ஒருவராக இருந்தார், எங்கள் வீட்டிலிருந்து அவருக்கு சுவீட், காரம், காபி எல்லாம் தருவோம். அவர் கடையில் எதிரஎதிரக இரண்டு கண்ணாடிகள் இருக்கும், ஒரு கண்ணாடியின் பிம்பம் மற்றொரு கண்ணாடியில் பல ஆயிரம் பிம்பங்களாக தெரியும். கண்ணாடிக்குள் கண்ணாடிகள் இருப்பதாக தெரியும், அந்த வயதில் அது ஒரு ஆச்சர்யம். அவர் முடி வெட்டுபவர்களுக்கு தலையில் தண்ணியடிக்க ஒரு கண்ணாடி ஜாரில் தண்ணீர் நிறைத்து வைத்திருப்பார், அதன் தலையில் நீட்டிக்கொண்டிருக்கும் பைப்பை கீழ் நோக்கி அழுத்தினால் தண்ணீர் வரும், அதையெல்லாம் வைத்துக்கொண்டு விளையாடியது உண்டு. நாங்கள் செய்யும் குறும்புகளை பொறுத்துக்கொள்வார், திட்ட மாட்டார்.அவர் எங்கள் ஊரை விட்டு அதிகம் வெளியேபோனதாக தெரியவில்லை, அவருக்கு எங்கள் ஊரு தான் உலகம் போல இருந்தார். அவரை பார்க்க உறவினர்கள் எப்பவாவது வருவார்கள்.

என் வாழ்க்கையில் நான் அனுபவித்த தாத்தா பாசம் மிக குறைவு தான். என் அப்பாவின் அப்பா என் அப்பாவின் சிறு வயதிலேயே இறந்துவிட்டார், நான் பார்த்ததேயில்லை, புகைப்படத்தில் கூட. என் அம்மாவின் அப்பா எங்கள் மேல் மிகவும் பாசமாக இருப்பார் ஆனால் அவர் வீட்டுக்கு எப்பவாவது தான் செல்லுவோம், வருடா வருடம் முழு பரீட்ச்சை விடுமுறையின் போது கண்டிப்பாக செல்லுவோம், அந்த சமயத்தில் பல சொந்தங்கள் அங்கு வருவார்கள், ஒரே திருவிழா கோலமாக இருக்கும். எங்கள் தாத்தாவின் மீது எங்களுக்கு பாசம் கொஞ்சம் பயம் கலந்துதான் இருக்கும், அவரை அந்த ஊரே மரியாதை கலந்த பயத்துடன் தான் பார்க்கும், நாங்கள் பயம் கலந்த பாசத்துடன். கிட்டத்தட்ட ராஜ்கிரண் போல இருப்பார். அவர் நாங்கள் அங்கே இருக்கும் சமயத்தில் தினமும் எங்களுக்கு எதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவார், ஒவ்வொருவராக அவரிடம் ஒரு முத்தம் பெற்றுக்கொண்டும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டும் அந்த தின்பண்டங்களை வாங்கி வருவோம். அவர் முத்தம் கொடுக்கும் போது அவர் மீசை குத்தும் அது ஒரு சுகம், இப்போதும் என்னால் அதை உணரமுடியும். இப்படி வருடத்தில் ஒரிருமுறையே தாத்தா பாசம் கிடைக்கும் எங்களுக்கு மொட்டதாத்தாவின் பாசம் அந்த குறையை கொஞ்சம் குறைத்தது அந்த வகையில் எங்களுக்கு அவரும் ஒரு தாத்தாவே.

சுமூகமாக இருந்த எங்கள் உறவில் விஷம் வைத்தனர் சிலர். எங்கள் வீட்டின் மேல் இருந்த கோபத்தில் எங்கள் இடத்தில் குடியிருந்த மொட்டதாத்தாவின் மனைவியின் மனதை கெடுத்து, 14 வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் வாடகைக்கு இருந்தால் அது அங்கிருந்தவர்களுக்கே சொந்தம் என்று சில விசமிகள் சொல்லிவிட அதனால் சில பிரச்சனைகள் வந்தன. மொட்டதாத்தா இதற்க்கு உடந்தையில்லை என்றாலும் அவரால் அதை எதிர்க்க முடியாமல் ஒதுங்கிவிட்டார். பிறகு பஞ்சாயத்து அது இது என்று கிட்ட தட்ட 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்டிவிட்டு எங்கள் இடத்தை மீட்டார் என் அப்பா. அந்த சம்பவத்துக்கு பிறகு மொட்ட தாத்தாவின் மனைவி ஊரை காலி செய்துவிட்டார். மொட்டதாத்தா எங்கள் ஊரிலே ஒரு பெட்டி கடை வைத்து தன சவரத்தொழிலை தொடர்ந்து வந்தார் அப்போதும் அவருடன் ஓரளவு பேசி கொண்டுதான் இருந்தோம். சிலகாலங்கள் கழித்து கடையை எங்கள் ஊரிலிரிந்து பக்கத்து ஊருக்கு மாற்றி விட்டார். அவருடனான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமக குறைந்தது.

நான் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நான் எங்கள் ஊரிலிருந்த நாட்கள் குறைவு தான், அதனால் நாள் பட நாள் பட எனக்கும் அவருக்கும்மான இடைவெளி அதிகரித்தது. கல்லூரி படிக்கும் போது ஒரு சமயத்தில் அவரிடம் நான் முடி வெட்டிக்கொள்ள சென்ற போது அவர் நினைவில் நான் மங்கிப்போயிருந்தது தெரிந்தது. முடிவெட்டி முடிக்கும் வரை நான் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை, கடைசியாக தான் கண்டு பிடித்தார் அதற்காக கொஞ்சம் விசாரித்தார். இப்பவெல்லாம் நான் ஊருக்கு போகும் சமயங்களில் அவர் எங்கள் ஊர் பக்கம் வந்தாலோ இல்லை நான் அவர் ஊர் பக்கம் போனாலோ பார்ப்பேன், பேசுவது மிக குறைவு.எங்களுக்கு இடையில் இருந்த ஈர்ப்பு இப்போது ஏனோ ஏற்ப்படுவதில்லை.

இப்போதெல்லாம் யாரும் மிக்சர் போன்றவற்றை காகிதத்தில் கட்டி தருவதில்லை எல்லாம் கண்ணாடி காகிதங்கள் ஆகிவிட்டன, இப்போதும் கூம்பு வடிவிலான காகித பொட்டலங்கள் மொட்டதாத்தாவையும் அவர் வாங்கி தந்த மிகசரின் சுவையையும் நினைவுபடுத்தி கொண்டு தான் இருகின்றன.

5 comments:

தம்பி... said...

அருமை.. அருமை..

என் பசுமையான நினைவுகளை மீண்டும் மீட்டி பார்க்கின்றேன்..

Balamurugan Loganathan said...

பிரிந்த உறவுகளை பல வருடங்கள் கழித்து நினைக்கும் போது நெஞ்சில் ஆணி அடித்த வலியை உணர்கிறேன்...

Unknown said...

உன்னுடைய எழுத்தில் fact-ஐ fact-ஆகவே சொல்லி இருக்கிறாய்... அதனால் தானோ என்னவோ படித்து முடிக்கும் போது என் நெஞ்சில் ஒரு பாரம் ஏற்படுவதை உணரமுடிகிறது... பல உறவுகள் இப்படி தான் காலத்தால் நிர்தாட்சனியமாக சிதறடிக்கப்படுகிறது... எனக்கே மொட்டத்தாத்தா ரொம்ப பரிச்சயமானவராக தோன்றுகிறாற். அடுத்த முறை ஊருக்கு போகும்போது மொட்டத்தாத்தாவை பார்த்துவிட்டு எனக்கு தெரிவிக்கவும்....

இராஜசேகரன். க. said...

இதை படித்து முடிக்கும்போது தோன்றிய பெருமூச்சிற்கு காரணம் தேட நான் முற்படவில்லை.

நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து நகரத்தில் வாழ்ந்து வரும் ஒரு சாமான்யன்.

Ananya Mahadevan said...

அருமை,அருமை.ரொம்ப மனதைத்தொடும்படியா இருக்கு.